என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துளசி பிறந்த கதை"

    • பிரியமானவளாக கருதப்படுபவள் பிருந்தா என்னும் துளசி தேவி.
    • கார்த்திகை மாதம் சுக்கில பட்ச துவாதசி திதியன்று பகவானை வந்தடைந்தாள்.

    மகாவிஷ்ணுவின் பிரியமானவளாக கருதப்படுபவள் பிருந்தா என்னும் துளசி தேவி. இவள் கார்த்திகை மாதம் சுக்கில பட்ச துவாதசி திதியன்று பகவானை வந்தடைந்தாள். ஒரு சமயம் கிருஷ்ண பகவான் ராதையுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த துளசி, கிருஷ்ண பகவானுக்கு பணிவிடை செய்ய நினைத்தாள். `நாங்கள் இருவரும் அமர்ந்திருக்கும் பொழுது இத்தனை கோபிகா ஸ்ரீகள் வராத பொழுது நீ ஏகாந்த வேளையில் உள்ளே வந்தாய். இங்கிருக்கும் தகுதியை நீ இழந்து விட்டாய்' என்று கூறி பூலோகத்தில் மானிடப் பெண்ணாய் பிறப்பாய் என்று ராதை சபித்தாள்.

    உடனே கிருஷ்ண பகவான் ''நீ வருந்தாதே, என் தேகத்திலிருந்து தோன்றிய சுதர்மன் என்ற கோபாலனும், ராதையின் சாபத்திற்கு ஆளாகி பூமியில் மானிடனாக பிறக்கப் போகிறான். அவன் பல்லாயிரம் வருடம் தவம் செய்து பிரம்மன் அருள் பெற்று உன்னை மணம் செய்வான்' எனக் கூறினார்.

    பூலோகத்தில் தர்மதுஜன் என்ற மன்னனின் மனைவி மாதவி தனக்கு குழந்தை வேண்டும் என்று 100 வருட காலம் தவம் செய்தாள். அந்த தவத்தின் பயனாக மகாலட்சுமி அம்சமாக துளசி தேவி கார்த்திகை மாதம், வெள்ளிக்கிழமை, பவுர்ணமி அன்று பிறந்தாள். `துள' என்றால் `ஈடு', `சி' என்றால் `இல்லாதது' என்று பொருள். அவளது அழகுக்கு ஈடு இணை இல்லை என்பதால் துளசி என்று பெயரிட்டார்கள். துளசி தனக்கு நல்ல கணவனாக கிருஷ்ண பகவான் வர வேண்டுமென்று எண்ணி 20 ஆயிரம் ஆண்டு காலம் தண்ணீர் பழம் மட்டும் சாப்பிட்டும், 30 ஆயிரம் ஆண்டுகள் இலைகளை மட்டும் உண்டும், 40 ஆயிரம் ஆண்டுகள் வெறும் காற்றை மட்டும் சுவாசித்தும், 16 ஆயிரம் ஆண்டுகள் ஆகாரம் எதுவும் இன்றியும், கடுந்தவம் புரிந்தாள். இதனால் பிரம்மதேவன் தோன்றி, நீ எதிர்பார்த்த நல்ல கணவனை அடைவாய் என்று வரம் கொடுத்தார்.

    மானிடப் பெண்ணாக பிறந்த துளசி கிருஷ்ணனையே கணவனாக அடைய வேண்டும் என்று எண் ணினாள். ஆனால் சங்கு சூடனை கண்டவுடன் மதி மயக்கத்தால் காந்தர்வ விவாகம் செய்து கொண்டாள்.

    சங்கு சூடன் சிறந்த சிவ பக்தன். சிவபெருமானால் மட்டுமே தன்னை அழிக்க முடியும் என்ற வரம் பெற்றவன். சிவன் அருளால் மந்திர கவசத்தையும் பெற்றிருந்தான். தான் பெற்ற செல்வம், செல்வாக்கு, தவப்பயன், அவற்றைக் கொண்டு எதை செய்யக்கூடாதோ அதை செய்தான். தேவர்களையும் மூன்று உலகங்களையும் ஆட்டிப் படைக்க எண்ணினான். எவராலும் அவனை வெல்ல முடியவில்லை.

    சிவபெருமானிடம் முறையிட அவர் தன் சேனைகளுடன் வந்து சங்கு சூடனுடன் யுத்தம் புரிந்தார். சூலாயுதத்தால் எவ்வளவு முறை தாக்கியும் அவன் இறக்கவில்லை. அப்பொழுதுதான் துளசி தேவியின் பதிவிரதா தன்மை அவனை காப்பாற்றுகிறது என்று புரிந்து கொண்டனர்.

    தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட, அவர் ஒரு வயோதிகர் வடிவத்தில் உருமாறி போர்க்களத்திற்கு வந்து சங்கு சூடனிடம் தானம் கேட்டார். சங்கு சூடன் தனது மந்திர கவசத்தை தானமாக கொடுத்தான். பின் அந்த மந்திர கவசத்தை அணிந்து கொண்டு (இதில் கவனிக்க வேண்டியது சங்கு சூடனாக உருமாறினால் கூட மந்திர கவசம் இல்லாவிட்டால் சங்கு சூடனாக மாறியது பரிபூரணம் அடையாது) யுத்த களத்தில் இருந்து துளசி தேவி இருக்கும் இடத்திற்கு சென்றார். சங்குசூடன் உருவில் வந்துள்ள மகாவிஷ்ணுவை சங்கு சூடன் வந்துள்ளார் என எண்ணி அவருக்கு துளசி பாத பூஜை செய்தாள்.

    முக்கியமான ரகசியம் இதில் கவனிக்க வேண்டி உள்ளது. கோபிகாஸ்ரீகளோ, ராதையோ, துளசி தேவியோ, பகவானிடம் உடல் ரீதியாக தொடர்பு வைத்துக் கொண்டது இல்லை என்பதுதான் உண்மை. பரமாத்மா ஜீவாத்மா தொடர்பு மட்டுமே உண்டு என்பதை அறிய வேண்டும். பாகவதத்தை நன்கு படித்தவர்களுக்கு இது நன்கு புரியும்.

    வட தேசத்தில் ஒரு பகுதியில் வசிப்பவர்களும், நேபாளத்திலும், பெண்கள் கணவன்மார்களை தவிர மற்றவர்களின் பாதத்தை தொடுவது இல்லை. பாத பூஜை செய்வதும் இல்லை. குறிப்பாக நேபாளத்தில் கல்யாணத்தின் பொழுது பெண் குழந்தைகளின் பாதத்தை தகப்பனார் தொடுவார். ஆனால் தகப்பனார் பாதத்தை பெண்கள் தொடுவதில்லை. கணவனைத் தவிர மற்றவர்களுக்கு பாத பூஜை செய்தால் பதிவிரதா தர்மம் தவறி விடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

    அதுபோல்தான் துளசி தேவியும் வந்துள்ளது தன் கணவன் சங்கு சூடன் என்று எண்ணி, பாத பூஜை செய்தாள். அதனால் அவள் பதிவிரதா தர்மம் குறைகிறது.ரேணுகாதேவி கதையில் கூட கந்தர்வன் உருவத்தை தண்ணீரில் மட்டும்தான் பார்த்தாள். எந்த நிலையிலும் கந்தர்வனுடன் அவளுக்கு உடல் ரீதியாக தொடர்பு ஏற்படவில்லை என்றாலும் கூட, பதிவிரதா தர்மம் குறைந்துவிட்டது என்று அங்கு கருதப்பட்டது.

    கற்பு என்பது மனம் சம்பந்தப்பட்டது என்பது இங்கு தெளிவாக கூறப்பட்டுள்ளது. மேலும் ராமாயணத்தில் ராமன் சரித்திரத்தால் ஆணுக்கும் கற்பு உண்டு என்று தெளிவாகிறது. பாரதியும் ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பென்பது சமமென்று குறிப்பிடுகிறார். மேலும் சொன்ன சொல் தவறாமையும் கூட கற்பு தான்.

    துளசி தேவி பதிவிரதாத்தன்மையை இழந்தவுடன் சங்கு சூடனின் பலம் மறைகிறது. சிவபெருமான் தன் சூலாயுதத்தால் சங்குசூடனை எரிக்கிறார். எரித்த சாம்பலில் இருந்து சங்குகள் தோன்றுகின்றன. சிவபெருமானின் திரிசூலம் பட்டதால் அத்தனை சங்குகளும் புனிதமாகின்றது. சாம்பலில் இருந்து சுதர்மன் பழையபடி எழுந்து வருகிறார். சங்கில் வைக்கப்பட்ட நீர் புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது. எல்லா பூஜை களிலும் சங்குக்கு முக்கியத்துவம் ஏற்பட்டது.

    நடந்த அனைத்தையும் அறிந்த துளசி தேவி மகாவிஷ்ணுவை நோக்கி ''பகவானே நீ சுவாமியாக இருந்தும் என் கணவன் இறக்க காரணமாக இருந்தாய், உன் மனம் கல்லாய் போனதோ? நீயும் கல்லாய் போக'' என சபித்தாள். அப்போது வந்த ராதை, ``நீ பகவான் கிருஷ்ணனை அடைய வேண்டும் என்று தவம் செய்து, பின் சங்கு சூடனை மணந்தாய். சங்கு சூடன் தவறான செயலால் இறந்தான். பகவானை நீ சபித்த காரணத்தால் நீயும் எதற்கும் உபயோகம் இல்லாத பழம், காய், இல்லாத செடியாய் போவாய்'' என சபித்தாள்.

    பகவான் துளசியை நோக்கி, ``நீ வருந்தாதே, பதி விரதா சாபத்தால் நான் கல்லாய் போவது மாற்ற முடியாது. தாமோதர குண்டில் இருந்து உண்டாகும் கண்டகி என்னும் நதியில் நான் சாளக்கிராம கல்லாய் இருப்பேன். நீ பூலோகத்தில் துளசி என்ற செடியாக தோன்றுவாய். உன்னையும் என்னையும் சேர்த்து பூஜிப்பவர்கள் மோட்சத்தை அடைவார்கள். துளசி நீரை யார் பருகுகிறார்களோ அவர்கள் கங்கை நீரை அருந்திய புண்ணியத்தை அடைவார்கள்.

    யார் துளசி மணியை மாலையாக அணிகிறார்களோ அவர்களை அகால மரணம் அண்டாது. எந்த இடத்தில் உன்னை பூஜிக்கிறார்களோ அந்த இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வாள். எல்லாவிதமான புண்ணிய பூஜைகளுக்கும் கர்மாக்களுக்கும் நீ பயன் தருவாய். எவன் இறக்கும் தருவாயில் துளசி நீரை அருந்துகிறானோ அவன் வைகுண்டத்தை அடைவான்'' என்று பலவிதமான வரங்களை அருளினார்.

    நெல்லி மரம் நடுவது மிக மிகுந்த புண்ணியத்தை தரும். சிலர் நெல்லி மரத்தின் அருகில் துளசி செடி வைத்து பூஜை செய்வார்கள். சிலர் நெல்லிக்கனியில் மகாவிஷ்ணு ஆவாகனம் செய்து துளசி தேவியை பூஜை செய்வார்கள்.

    ×