search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவண்ணாமலையில் விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம்
    X

    திருவண்ணாமலையில் விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம்

    • பவுர்ணமியையொட்டி விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம்
    • தெப்பல் உற்சவத்திலும் திரளானவர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் நேற்று இரவு அய்யங்குளத்தில் நடைபெற்ற சந்திரசேகரர் தெப்பல் உற்சவத்திலும் திரளானவர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 17-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் காலையில் விநாயகர், சந்திரசேகரரும், இரவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், பராசக்தி அம்மனும், சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் வலம் வந்தனர். இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்பட்டது.

    மகாதீபத்தை காணவும், கிரிவலம் செல்லவும் கடந்த 25-ந் தேதி இரவில் இருந்தே ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தர தொடங்கினர். நேற்று முன்தினம் அதிகாலை முதல் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். நேரம் செல்ல, செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மாலையில் கட்டுக்குஅடங்காத அளவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றனர்.

    நேற்று முன்தினம் மாலையில் கோவிலில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி முடிந்த பின்னர் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நள்ளிரவு 12 மணியளவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர் ரிஷப வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் தங்க ரிஷப வாகனத்திலும், பராசக்தி அம்மன் ரிஷப வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் நந்தி வாகனத்திலும் மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடி மாட வீதியில் உலா வந்தனர்.

    மேலும் கார்த்திகை மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் மாலை 3.58 மணிக்கு தொடங்கி நேற்று மாலை 3.08 மணியளவில் நிறைவடைந்தது. இதனால் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று பகலில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைய தொடங்கியது. இருப்பினும் இரவு வரை பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.

    மேலும் கிரிவலம் சென்ற பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். அதுமட்டுமின்றி கிரிவலப்பாதையில் காஞ்சி சாலையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் நேற்று கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது.

    மகா தீபம் மற்றும் பவுர்ணமி கிரிவலத்தையொட்டி பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக திருவண்ணாமலையில் 13 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் அங்கு பக்தர்களுக்கு தேவையான சிறப்பு பஸ்கள், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் பெரிய அளவில் சிரமத்திற்கு உள்ளாகாமல் பஸ்களில் வந்து சென்றனர்.

    மேலும் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்களில் ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டு ஏறி இடம் பிடித்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறைகள் அதிகளவில் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு இருந்தது.

    மகா தீபத்தையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வழக்கமாக மகா தீபம் நிறைவடைந்த பின்னர் வெளியூர் போலீசார் கிளம்பி விடுவார்கள். இந்த ஆண்டு மகா தீபத்தின் மறுநாள் பவுர்ணமியும் வந்ததால் 2-வது நாளாக தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கோவிலில் பக்தர்கள் ராஜ கோபுரத்தின் வழியாக மட்டுமே சாமி தரிசனம் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அம்மணி அம்மன், திருமஞ்சன கோபுரத்தின் வழியாக போலீசார் வி.ஐ.பி.களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து சாமி தரிசனம் செய்ய அனுமதித்தனர். மேலும் கோவிலை சுற்றியும் பேரிகார்டு போட்டு அடைத்து வைத்து கொண்டதால் நேற்று அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் மற்றும் கடை வியாபாரிகள் மிகவும் அவதி அடைந்தனர்.

    கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பல் உற்சவம் நேற்று தொடங்கியது. அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் உள்ள அய்யங்குளத்தில் 3 நாட்கள் தெப்பல் திருவிழா நடைபெற உள்ளது. முதல் நாள் விழாவான நேற்று இரவு சந்திரசேகரர் தெப்பல் நிகழ்ச்சி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்பாளுடன் சந்திரசேகரர் 3 முறை வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும், நாளை (புதன்கிழமை) சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெறுகிறது.

    Next Story
    ×