search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தேரோட்டம்
    X

    திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தேரோட்டம்

    • கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.
    • 16 வகையான மங்கல பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடாக திகழும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், வெள்ளி பூத வாகனம், ஆட்டுக்கிடாய் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை கோவில் ஆறுகால் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலை கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் 16 கால் மண்டபம் பகுதியில் உள்ள தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார்.

    அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை ரத வீதிகள் வழியாக வடம் பிடித்து இழுத்து வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை திருப்பரங்குன்றம் மலை மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதையொட்டி கோவில் மலைமேல் மூன்றரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் உள்ள தாமிரக் கொப்பரையில் 300 கிலோ நெய், 150 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரம் கொண்டு திருவண்ணாமலையிலிருந்து வந்த சிறப்பு குழுவினர் மூலம் மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

    இதற்காக மாலை 6 மணி அளவில் கோவில் மூலஸ்தானத்தில் பாலதீபம் ஏற்றப்பட்டு, மலை மேல் மகாதீபம் ஏற்றப்படும்.

    தொடர்ந்து இரவு 16 கால் மண்டபம் பகுதியில் சொக்கனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமை யில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    தேரோட்டம் மற்றும் கார்த்திகை மகாதீபம் ஏற்று வதை தரிசிக்க தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்துள்ளனர்.

    Next Story
    ×