என் மலர்
நீங்கள் தேடியது "வட இந்தியாவின் மலைக்கோவில்கள்"
- இந்தியாவில் புகழ்பெற்ற மலைக்கோவில்கள் ஏராளம்.
- காமாக்யா கோவிலுக்கு சென்று வழிபட்டால் பிரிந்த தம்பதிகள் சேருவார்கள்.
இந்தியாவில் புகழ்பெற்ற மலைக்கோவில்கள் ஏராளம் அமைந்துள்ளன. அவற்றுள் வட இந்தியாவில் உயரமான இடங்களில் அமைந்துள்ள கோவில்கள் சிலவற்றின் தொகுப்பு உங்களுக்காக...
அமர்நாத்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள முக்கியமான குடைவரை கோவில் அமர்நாத். இது 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. அமர்நாத் ஆசிரமத்தின் உட்புறத்தில் சிவலிங்கம் பனிக்கட்டி வடிவில் அமைந்துள்ளது. இந்த பனி லிங்கம்மே முதல் ஆகஸ்டு வரையான காலகட்டங்களில் உருகி மீண்டும் உருப்பெறுகிறது. இந்து புராணங்களின்படி இங்கு தான், சிவன் வாழ்வின் ரகசியங்களை பார்வதிதேவிக்கு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இக்குகை 3,888 மீட்டர் (12,756 அடி) உயரத்திலும், ஸ்ரீநகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.

காமாக்யா கோவில்
அசாம் தலைநகர் கவுகாத்தியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் நிலாச்சல் என்ற மலையில் கடல் மட்டத்தில் இருந்து 700 அடி உயரத்தில் இந்த கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் பிரிந்த தம்பதிகள் சேருவார்கள், குழந்தைபாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்திய வரலாற்றின் படி இந்த கோவில் 16-ம் நூற்றாண்டில் அழிக்கப்பட்டது. பின்பு 17-ம் நூற்றாண்டில் பீகார் மன்னர் நாராயண் நரசிங்கால் மீண்டும் கட்டப்பட்டது. இங்குள்ள சிறு விளக்கு வெளிச்சத்தில் காமாக்யாவின் பீடத்தை தரிசிக்கலாம். அங்கிருந்து வரும் நீரூற்றின் நீரை பக்தர்கள் தீர்த்தமாகப் போற்றுகின்றனர்.

ஜாகேஷ்வர் கோவில்
உத்தரகாண்டின் மலை மாவட்டமான அல்மோராவில் 6 ஆயிரம் அடி உயரத்தில் ஜட கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளது 'ஜாகேஷ்வர் தாம்' கோவில். இது 125 கோவில்களின் பழமையான தொகுப்பாகும். கி.பி. 7 முதல் கி.பி. 12-ம் நூற்றாண்டு வரையான காலகட்டத்திற்குள் கட்டப்பட்ட இந்த கோவில்கள் சிவன், விஷ்ணு, சூரியன் குபேரன், எமன், சண்டி, விநாயகர், சக்தி ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும்.
இந்த ஜாகேஷ்வர் கோவில்களை இந்திய தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது. சிவ புராணம், லிங்க புராணம், கந்த புராணம் ஆகியவற்றிலும் இந்த கோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் ஏராளமான கேதுரு மரங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் சில மரங்களில் சிவபெருமான், பார்வதி, விநாயகர் ஆகியோரின் உருவங்களை காணலாம்.

படால் புவனேசுவர்
இது சுண்ணாம்பு குகைக் கோவிலாகும். உத்தரகாண்ட் மாநிலத்தில் பிதவுரகர் மாவட்டத்தில் புவனேசுவர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. அழகான மலையில் அமைந்துள்ள இந்த குகைக்கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த குகையில் விநாயகப் பெருமானின் தலை, பாறை வடிவில் உள்ளது. அதன்மேல் 108 இதழ்கள் கொண்ட பிரம்மகமலம் உள்ளது. இந்த வாய் வழியாக கருப்பையில் நுழைந்து வாலை அடைபவர் முக்தி அடைவார் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
இது தவிர, குகையில் ஷேஷ்நாக் சிலையும், கருடன் சிலையும் உள்ளது. குகையில் முக்கியத்துவம் வாய்ந்த பல குளங்களும் உள்ளன. உலக அழிவின் ஆழமான ரகசியமும் மறைந்திருப்பதாக நம்பப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1,350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த குகை கோவிலுக்குள் ஒரே நேரத்தில் 10 முதல் 15 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

பைஜ்நாத் கோவில்
இமாச்சலப் பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தில் பைஜ்நாத் என்னும் சிறிய நகரத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. இங்கு வைத்தியநாதர் என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார். கருவறையில் சிவலிங்கம் உள்ளது. பிரதான மண்டபத்தில் உள்ள கல் பலகைகளில் இரண்டு நீண்ட கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் 8-ம் நூற்றாண்டில் வணிகர்களான மன்யுகா, அகுகா ஆகியோரால் இந்த கோவில் கட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
1905-ம் ஆண்டு. காங்க்ராவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் இந்த வழிபாட்டு தலத்தை சேதப்படுத்தியது. பின்பு தொல்லியல் துறையினர் சீரமைத்துள்ளனர். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3.274 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோவிலின் கட்டுமானத்தைக் கண்டு பக்தர்கள் வியப்படைகின்றனர்.

ஹிடிம்பா தேவி கோவில்
இது இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள மலை வாசஸ்தலமான மணாலியில் அமைந்துள்ளது. மகாபாரதத்தில் பீமனின் மனைவி ஹிடிம்பா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட பழமையான குகைக்கோவிலாக அறியப்படுகிறது. இமயமலை அடிவாரத்தில் துங்கிரி வான்விஹார் என்ற தேவதாரு காடுகளால் இக்கோவில் சூழப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் 1553-ம் ஆண்டு மகாராஜா பகதூர் சிங்கால் கட்டப்பட்டது. மணாலியில் உள்ள மக்கள் ஹிடிம்பா தேவியை தெய்வமாக வழிபடுகின்றனர். நவராத்திரியின் போது நாடு முழுவதும் உள்ள அனைத்து இந்துக்களும் துர்கா தேவியை வழிபடுகிறார்கள். ஆனால் மணாலியில் உள்ள மக்கள் ஹிடிம்பா தேவியை வணங்குகிறார்கள். இது கடல் மட்டத்திலிருந்து 3,360 மீட்டர் உயரத்தில் உள்ளது.






