என் மலர்
வழிபாடு

ஐம்புலன்களை அடக்கும் ஆற்றல் தரும் மதங்கீஸ்வரர்
- சிவகாஞ்சி பகுதியில் ஆறு கலைநயமிக்க கோவில்கள் இருக்கின்றன.
- மணல் கற்களால் கட்டப்பட்டது மதங்கீஸ்வரர் ஆலயம்.
மகாகவி காளிதாசரால் `நகரேஷீ காஞ்சி' என்று போற்றப்பட்ட பெருமை கொண்ட நகரம், காஞ்சி மாநகரம். `நகரங்களில் சிறந்தது காஞ்சி' என்பது இதன் பொருள். காஞ்சிபுரத்தில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட ஏராளமான கலைநயமிக்க கற்றளி வகைக்கோவில்கள் அமைந்துள்ளன. காஞ்சிபுரம் நகருக்குள்ளேயே பெரிய காஞ்சிபுரம் என தற்போது அழைக்கப்படும் சிவகாஞ்சி பகுதியில் ஆறு கலைநயமிக்க கோவில்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் மதங்கீஸ்வரர் திருக்கோவில்.
பல்லவமன்னரான ராஜசிம்ம பல்லவன் (கி.பி.700 முதல் கி.பி. 728 வரை) தொடங்கப்பட்ட இந்தக் கோவிலின் கட்டிடப்பணி, இரண்டாம் நந்திவர்மன் (கி.பி.731 முதல் கி.பி.796 வரை) காலத்தில் முடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. சுமார் 1400 வருடங்கள் பழமையான இக்கோவில் பல அற்புதமான சிற்பங்களைக் கொண்டு இன்று வரை காண்போரை வியக்க வைத்துக் கொண்டிருக்கிறது. காஞ்சி புராணத்தில் இத்தலத்தின் சிவலிங்கமானது, மதங்கி முனிவரால் நிறுவப்பட்டு வழிபடப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
மதங்கி முனிவர் இத்தலத்து ஈசனை வழிபட்டு ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் ஆற்றலைப் பெற்றதாக ஐதீகம்.
இவ்வாலயத்தின் சிறிய நுழைவு வாசல் வழியாக உள்ளே நுழைந்தால், முதலில் தென்படுகிறது, ஒரு சிறிய மேடையில் அமைந்த நந்தி சிற்பம். வலதுபுறத்தில் சற்று தொலைவில் ஆலயம் காட்சி தருகிறது. மணல் கற்களால் கட்டப்பட்ட மதங்கீஸ்வரர் ஆலயம், அளவில் மிகச்சிறியதாகக் காணப்படுகிறது. ஆனால் இத்தலத்திலுள்ள சிற்பங்கள், வியக்க வைக்கும் அளவிற்கு கலை நுணுக்கத்துடன் அமைந்துள்ளன.
மேற்கு திசை நோக்கி அமைந்துள்ள இக்கோவிலின் கருவறைக்குள் அமைந்துள்ள ஈசனை வழிபட, கோவிலின் முன் புறத்தில் ஒன்பது படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலின் நான்கு பக்க முனைகளிலும் சிம்மத்தின் மீது அமர்ந்துள்ள வீரனின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன் மண்டபத்தில் பல்லவர்களுக்கே உரிய சிம்மத்தூண்கள் அழகுற காட்சி தருகின்றன. முகமண்டபம் மற்றும் கருவறை என்ற அமைப்போடு திகழும் இத்தலத்தின் கருவறைக்குள் 16 பட்டைகளுடன் அமைந்த சிவலிங்கம் உள்ளது. லிங்கத்தின் முன்னால் நந்தியின் சிற்பம் அமைந்துள்ளது.
லிங்கத்தின் பின்புறச்சுவற்றில் சோமாஸ்கந்த வடிவம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முகமண்டபத்தின் கருவறை நுழைவாயிலின் இருபுறமும் இரு துவாரபாலர்கள் அமைந்துள்ளனர். முக மண்டபத்தின் உட்புறச் சுவர்களில் கயிலாய மலையை அசைக்கும் ராவணனின் புடைப்புச் சிற்பம் அற்புதமாக காட்சி தருகிறது. மேலும் கஜசம்ஹாரமூர்த்தி, கங்காதர மூர்த்தி மற்றும் ஊர்த்துவதாண்டவ மூர்த்தி முதலான சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆலயத்தின் வெளிப்புறச் சுவர்களில் யோக நிலையில் அமர்ந்த சிவபெருமான், லிங்கோத்பவர், நடனமாடும் சிவபெருமான், பிரம்மன், திருமால், துர்க்கை, சண்டேஸ்வர அனுக்கிரஹ மூர்த்தி முதலான கலைநயமிக்க சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றில் பல சிற்பங்கள் காலஓட்டத்தால் சிதைந்த நிலையில் காட்சி அளிக்கின்றன.
கோவிலின் நான்கு மூலைகளிலும் கீழ்ப்புறத்தில் யானை ஒன்று அமர்ந்து இக்கோவிலைத் தாங்கி உள்ளதைப் போன்ற சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இத்தலத்தில் தினமும் காலை ஒருகால பூஜை நடைபெறுகிறது.
மதங்கீஸ்வரர் திருக்கோவில் பெரிய காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது.






