என் மலர்
வழிபாடு
- அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
- கோவில் வளாகத்தில் சரியாக மாலை 6 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை நேரங்களில் பிரகாரத்தில் சாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.
10-ம் திருநாளான இன்று அதிகாலை அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை, சிறப்பு ஹோமம் ஆகியவை நடந்தது.
இதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர்.
பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப மலைக்கு காட்டப்பட்டது. பிறகு, பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் பரணி தீபம் மூலம் 5 விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு சன்னதியாக கொண்டு செல்லப்பட்டு அங்கு தீபம் ஏற்றப்பட்டது.
மூலவர் சன்னதி வழியாக உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா "என்று கோஷம் விண்ணதிர எழுப்பி வணங்கினர்.
இதைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் விண்ணை பிளக்கும் பக்தர்களின் கோஷம் முழுங்க மகாதீபம் ஏற்றப்பட்டது.
முன்னதாக, கோவில் வளாகத்தில் சரியாக மாலை 6 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதே நேரத்தில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
அப்போது கோவில் கொடிமரம் எதிரே உள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும். 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.
கோவில் வளாகம் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவில் வளாகத்தில் செய்யப்பட்டு இருந்த மின்விளக்கு அலங்காரமும் பக்தர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.
- ஐயப்ப பக்தர்கள் இரவு நேர பயணத்தை எச்சரிக்கையுடன் மேற்கொள்ள வேண்டும்.
- பம்பை திரிவேணியிலும் குளிக்க தடை விதிக்கப்படும்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்துவருவதை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய திருவிதாங்கூர் தேவசம்போர்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதன் காரணமாக மண்டல பூஜை தொடங்கியதில் இருந்தே பக்தர்கள், நெரிசலில் சிக்கி அவதிக் குள்ளாகாமல் சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிகிறது. விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் சன்னிதானம் அருகே உள்ள வலிய நடைப் பந்தலில் பெரும்பாலான நேரங்களில் பக்தர்கள் நீண்டநேரம் காத்து நிற்பதை காண முடிவதில்லை.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கேரள மாநி லத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சபரிமலையிலும் அவ்வப் போது மழை பெய்தது. இருந்தபோதிலும் மழையை பொருட்படுத்தாமல் யாத்திரை மேற்கொண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள்.
இந்தநிலையில் சபரி மலையில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது. கனமழை மற்றும் மூடுபனியை பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அங்கு இன்றும் மழை பெய்தது. பக்தர்கள் மழையை பொருட்படுத்தா மல் மலையேறி சென்றபடி இருந்தனர்.

ஏராளமான பக்தர்கள் மழை கோர்ட்டு அணிந்தபடி வந்து சாமி தரிசனம் செய்தார்கள். மேலும் சில நாட்களுக்கு மழை தொடரும் என்பதால் சபரிமலை வரக்கூடிய பக்தர்கள் கவனமுடன் யாத்திரையை தொடருமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
ஐயப்ப பக்தர்கள் இரவு நேர பயணத்தை எச்சரிக்கையுடன் மேற்கொள்ள வேண்டும் என்று பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பம்பை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் திரிவேணி பகுதியை தவிர மற்ற இடங்களில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பம்பை ஆற்றில் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் பம்பை திரிவேணியிலும் குளிக்க தடை விதிக்கப்படும்.
மழை தொடர வாய்ப்பு இருப்பதால் பத்தினம்திட்டா மாவட்டத்தில் வருகிற 18-ந்தேதி வரை அனைத்து குவாரிகள் மற்றும் மலை உச்சியில் இருந்து மண் வெட்டுதல், ஆழமாக தோண்டுதல், மண் அள்ளுதல் உள்ளிட்ட பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
- வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஆயிரக்கணக்கான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா 5-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாக போற்றப்படும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா 4-ம் தேதி புதன்கிழமை இரவு 7 மணிக்கு அணுகை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி மறுநாள் 5-ம் தேதி வியாழக்கிழமை திருக்கார்த்திகை திருவிழா கொடியேற்றம் விநாயகர், வள்ளி, தேவசேனா, சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி பரிவாரங்களுடன் மலைக்கோயிலில் இருந்து உற்சவ மண்டபம் எழுந்தருலுதல் நிகழ்ச்சியும், இரவு யாகசாலை பூஜை சுவாமி திருவீதி உலா திக் பந்தனம் நிகழ்ச்சியும் நடை பெற்றது.
தொடர்ந்து 8 நாட்கள் படிச்சட்டத்தில், ஆட்டுக்கிடா வாகனம், பஞ்சமூர்த்திகள் சப்பரம், யானை வாகனம், காமதேனு வாகனம், வெள்ளிக் குதிரை வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக இன்று 13-ம் தேதி வெள்ளிக்கிழமை திருக்கார்த்திகையை முன்னிட்டு காலை 9 மணிக்கு மேல் திருத்தேர் திருவிழா நிகழ்ச்சி நடைபெற இருந்தது.
திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாக திருத்தேர் அலங்கரிக்கப்பட்டு இன்று தேரோட்ட நிகழ்ச்சிக்காக தயார் நிலையில் இருந்தது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இந்த பகுதியில் பெய்த மழையின் காரணமாக சுவாமிமலை தேர் முழுவதும் நனைந்து விட்டது. இதைத் தொடர்ந்து சுவாமிமலை சுவாமிநாத சாமி திருக்கார்த்திகை தேரோட்டம் நடத்துவதா இல்லையா என்று அதிகாரிகள் மற்றும் கோவில் சிவாச்சாரியார்கள் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் 9.15 மணிக்கு தேரோட்டம் நடை பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.
- மலைக்குச் செல்ல இன்று அனுமதி ரத்து.
திருப்பரங்குன்றம்:
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 5-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் அன்ன வாகனம், வெள்ளி பூத வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் 8-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று மாலை சுப்பிரமணிய சுவாமிக்கு நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை கார்த்திகை தேரோட்டம் நடைபெற இருந்த நிலையில் மழை காரணமாக சிறிய பல்லக்கில் சுவாமி ரத வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முன்னதாக உற்சவர் சந்தையில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், சந்தனம், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் 16 கால் மண்டபம் அருகே உள்ள சகடை தேரில் சுப்பிர மணியசுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு சுவாமி ரத விதிகள் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இன்று மாலை 6 மணிக்கு கோவிலில் பாலதீபம் ஏற்றப்பட்டு மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக திருவண்ணாமலை இருந்து நிபுணர் குழுவினர் வந்து தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
மலை மேல் 3½ அடி உயரம் 2½ அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரையில் 150 லிட்டர் நெய் 100 மீட்டர் காடா துணி 5 கிலோ கற்பூரம் கொண்டு மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
விழாவில் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை தீர்த்த உற்சவம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணி செல்வம், பொம்ம தேவன், ராமையா மற்றும் கோயில் துணை ஆணையர் சூரிய நாராயணன், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் பழைய படிக்கட்டு பாதை, புதிய படிக்கட்டு பாதை, கோவில் வாசல்,பேருந்து நிலையம் என நகர் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மலைக்குச் செல்ல இன்று அனுமதி ரத்து செய்யப்பட்டு உரிய அனுமதி சீட்டு இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அத்து மீறி யாரும் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக மலையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- பரணி நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும் விழா என்பதால் பரணி தீபம் என்று கூறுவார்கள்.
- ஐந்து அகல் விளக்கில் ஐந்து விளக்குகளாக தோற்றிவிப்பார்கள்.
கார்த்திகை தீபம் என்றாலே உலகில் உள்ள சிவபக்தர்களின் நினைவில் தோன்றுவது திருவண்ணாமலை. கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும் விழா என்பதால் ஏற்றப்படும் தீபத்தை பரணி தீபம் என்று கூறுவார்கள்.
கார்த்திகை தீபத்தன்று காலையில் அருணாசலேஸ்வரர் ஆலயத்தில், மூலஸ்தானத்தில் ஓர் விளக்கை ஏற்றி அதை ஐந்து அகல் விளக்கில் ஐந்து விளக்குகளாக தோற்றிவிப்பார்கள்.

ஓர் விளக்கை தத்துவரீதியாக ஏகன் என்றும், பரம்பொருள் என்றும், அதுவே ஐந்தாக வடிவம் எடுக்கும்போது அநேகன் என்றும் பரம்பொருளில் (ஒளிவடிவம்) ஐந்து பஞ்சபூதங்களால் உருவாகும் மனித உடலை, பஞ்ச தீபங்களாக உருவாக்கி அதன் பின் அன்று மாலையே அர்த்தநாரீஸ்வரர் நிகழ்ச்சியில் ஐந்து தீப விளக்குகள் ஒன்றாக ஏகனாக மக்களுக்கும் மாலை கொடிமரத்தின் முன் ஐந்து பஞ்சமூர்த்திகள் முன்பாக ஒற்றை தீபமாக ஏற்றப்படுகிறது.
பரம்பொருளில் இருந்து தோன்றி அனைத்து பொருட்களும் இறுதியில் அடைவது பரம்பொருளிலே என்பதை விளக்கின் நிகழ்ச்சி மூலமாக இந்த தத்துவத்தை விளக்குகிறது.

மாலையில் ஏற்றப்படும் தீபம் மகாதீபம் என்று அழைக்கப்படுகிறது ஏன் என்றால் மலை மீது மிகப்பெரிய தீபம் என்பதாலும் இத்தகைய புண்ணியம் வாய்ந்த இந்த திருத்தலத்தில் கூடுதல் புண்ணியமாக விசிறி சாமியார் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் யோகிராம் சுரத்குமார், ரமண மகரிஷி, குகை நமச்சிவாயர், அருணகிரி நாதர், ஈசான்ய ஞான தேசிகர், மகான் சேஷாத்திரி சுவாமிகள், மூக்குப்பொடி சித்தர் போன்ற ஞானிகள் இத்திருத்தலத்தில் வாழ்ந்து மக்களுக்கு பல நல்ல நெறிகளை போதித்துள்ளனர்.
- தவம் செய்த அம்பிகை என்பதால், அருந்தவநாயகி என பெயர் பெற்றாள்.
- பிரிந்த தம்பதியரை இணைக்கும் ஆலயம்.
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் என்ற இடத்தில் இருக்கிறது, அருந்தவ நாயகி உடனாய ஆலந்துறையார் திருக்கோவில். இந்த ஆலயம் சோழ நாட்டின் காவிரி வடகரையில் அமைந்த 63 ஆலயங்களில் 55-வது தலமாக போற்றப்படுகிறது.
இவ்வாலய இறைவன், 'ஆலந்துறையனார்', 'வடமூலேஸ் வரர்', 'யோகவனேஸ்வரர்' என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். இவ்வாலய அம்மன் 'அருந்தவநாயகி', 'யோகதபஸ்வினி' என்ற பெயர்களில் புகழப்படுகிறார்.
பார்வதி தேவி தவம் செய்த இடம், பிரம்மன், திருமால், அகத்தியர், இந்திரன், சூரியன், வசிஷ்டர், காசியபர், வியாசர், பரசுராமர் ஆகியோர் வழிபாடு செய்த தலம், மாத்ருஹத்தி தோஷம், திருமணத்தடை நீக்கும் தலம், பிரிந்த தம்பதியரை இணைக்கும் ஆலயம், மிகப்பெரிய சோமாஸ்கந்த திருமேனி கொண்ட ஆலயம் போன்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக இந்த திருக்கோவில் திகழ்கிறது. இக்கோவிலின் தல விருட்சமாக ஆலமரமும், தல தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும் உள்ளன.

தல வரலாறு
ஒரு முறை கயிலாயத்தில் இருந்த போது, பார்வதி தேவி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூடினாள். இதனால் சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரியன்- சந்திரன் இருவரும் ஒளி இழந்தனர். இதனால் உலக இயக்கம் நின்றது. முனிவர்களும், தேவர்களும் கலங்கினர்.
அப்போது சிவபெருமான் தனது தேவியிடம், "விளையாட்டாக தவறு செய்தாலும் மற்றவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமானால், அது பாவமே. எனவே இந்த பாவத்திற்கு பரிகாரமாக, நீ என்னைப் பிரிந்து பூலோகம் செல்.
அங்கு பல தலங்களில் தவம் செய்து இறுதியாக அங்குள்ள யோகவனத்தில் தங்கி இரு. நான் அங்கு வந்து உன்னுடன் சேர்வேன்" என்றார்.
அதன்படி பார்வதியும் யோகவனத்தில் புற்று மண்ணால் சிவலிங்கம் அமைத்து தவம் செய்தாள். தவம் இருந்த அம்பிகைக்கு உறுதுணையாக சப்த மாதர்களும், வீரபத்திரரும் உடனிருந்தனர். தவம் முற்று பெற்றவுடன் இறைவன் தோன்றி உமையுடன் இணைந்தார்.
உமையம்மை தவம் செய்த அந்த யோகவனமே, இன்றைய பழுவூர் ஆகும். தவம் செய்த அம்பிகை என்பதால், இவ்வாலய இறைவி 'அருந்தவநாயகி' என பெயர் பெற்றாள்.
தந்தையின் சொற்படி தாயின் தலையை வெட்டியதற்காக, பரசுராமருக்கு 'மாத்ருஹத்தி தோஷம்' உண்டானது. பல தலங்களில் வழிபட்டும், பரசுராமரின் தோஷம் நீங்கவில்லை.
ஒரு கட்டத்தில் இவ்வாலயம் இருக்கும் இடத்திற்கு வந்த பரசுராமர், அங்கிருந்த ஆலமரத்தின் கீழ் இருந்த புற்று லிங்கத்தை வணங்கியதும், அவரது தோஷம் விலகியது. ஆலமரத்தின் கீழ் தோன்றிய இறைவன் என்பதால் அவருக்கு 'ஆலந்துறையார்' என்ற பெயர் வந்தது.
பரசுராமர் இந்த ஆலய இறைவனை வணங்கியதை நினைவுகூரும் விதமாக, கருவறைக்கு முன்புள்ள உத்திரத்தில் பரசுராமரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

ஆலய அமைப்பு
மருதுடையார் ஆற்றின் தென்பகுதியில் சிறிய வளைவுடன் கூடிய வாசலுடனும், கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடனும், இரண்டு பிரகாரங்களுடனும் இந்த ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது.
கோவிலுக்கு வெளியே தலவிருட்சமான ஆலமரம் பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது. கோவிலின் எதிரில் பிரம்ம தீர்த்தம் உள்ளது. ஆலய நுழைவு வாசலைக் கடந்து முதல் பிரகாரம் செல்ல, அங்கே கொடிமர விநாயகர், கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன.
இடதுபுறத்தில் கிணறும், மடப்பள்ளியும், முன் மண்டபத்தின் வலது புறத்தில், சுவாமிக்கு இடது புறமாக தென்முகம் நோக்கியவாறு அருந்தவநாயகி அம்மன் சன்னிதியும் இடம்பெற்றுள்ளன.
அம்பாள் கருவறைக்கு முன்பாக இச்சா சக்தியும், கிரியா சக்தியும் துவாரபாலகிகளாக இருந்து காவல் புரிகின்றனர். இச்சா சக்தியின் அருகே விநாயகர் அமர்ந்து அருள்பாலிக்கிறார். அதனைத் தொடர்ந்து வாகன மண்டபம் அமைந்துள்ளது.
இரண்டாவது பிரகாரத்திற்குள் சென்றால் 28 தூண்களைக் கொண்ட அழகிய மண்டபம் உள்ளது. இப்பிரகாரத்தில் தெற்கு திருமாளப்பத்தியில் விநாயகர், உமைமங்கைபாகன், கார்த்தியாயினி, சண்டிகேசுவரர், வீரபத்திரர், மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர், சுந்தரர், நாவுக்கரசர், கிருது மகரிஷி, அத்திரி மகரிஷி, ஆங்கீரஸ மகரிஷி, ஞானதட்சிணாமூர்த்தி, பிருகு மகரிஷி, பரீஷி மகரிஷி, புலஸ்திய மகரிஷி, வசிட்ட மகரிஷி, பிராமி, மகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் உள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து மேற்கில் விநாயகர், சோமாஸ்கந்தர், கோடி விநாயகர், காசி விசுவநாதர் - விசாலாட்சி, வள்ளி - தெய்வானையுடன் சுப்பிரமணியர் உள்ளனர். அடுத்து கல்லால் ஆன பெரிய சோமாஸ்கந்தர் திருமேனி, அப்புலிங்கம், வாயுலிங்கம், ஆகாய லிங்கம், கஜலட்சுமி சன்னிதிகள் உள்பட மேலும் பல சன்னிதிகள் இருக்கின்றன.
இரண்டாம் பிரகார வலம் முடிந்து, மகா மண்டபம், அர்த்தமண்டபம் செல்லும் வழியில் இரு புறமும் கங்காதரர், கல்யாணசுந்தரர் திருவுருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது. அடுத்து இடை மண்டபம், அதனையொட்டி கருவறை உள்ளது. கருவறை வாசலின் மேல் சயனக்கோலத்தில் திருமாலின் புடைப்புச் சிற்பம் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளது.
கருவறையுள் கருணாமூர்த்தியாய் மூலவர் ஆலந்துறையார் அருள்பாலிக்கின்றார். புற்று வடிவாய், மண் லிங்கமாக சதுர ஆவுடையாரின் நடுவே அபூர்வ தோற்றத்துடன் இவர் வீற்றிருக்கிறார். புற்று மண்ணால் ஆன சிவலிங்கம் என்பதால், இவருக்கு அபிஷேகத்தின்போது குவளை சாற்றப்படுகிறது.
இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
அரியலூர் மாவட்டம், திருமானூர்- அரியலூர் சாலையில் இருக்கிறது, கீழப்பழுவூர். இந்த ஊருக்கு திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திருவையாறு ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
பிரார்த்தனையும்.. பலனும்..
தாம்பத்ய சங்கரர், அர்த்தநாரீஸ்வரர் இருவரும் இத்தலத்தில் இருந்து அருள்பாலிப்பதால், குடும்ப ஒற்றுமைக்கு பிரார்த்தனை செய்துகொள்ளும் தலமாகவும், திருக்கடையூருக்கு நிகராக காலசம்ஹார மூர்த்தியைக் கொண்டிருப்பதால் எமபயம் போக்கும் தலமாகவும், அம்பிகை தவம் செய்து இறைவனை மணந்து கொண்டமையால் திருமணத் தடை நீக்கும் தலமாகவும், பரசுராமரின் வேண்டுதலுக்கேற்ப சகல தேவர்களும் சூட்சும ரூபமாக இத்தலத்தில் உறைவதால், சகல செல்வங்களை அளிக்கும் தலமாகவும், பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலமாகவும் இவ்வாலயம் விளங்குகிறது. வேண்டுதல் நிறைவேறியவர்கள், இவ்வாலயம் வந்து கோவில் தீர்த்தத்தில் நீராடி, இறைவனுக்கும், இறைவிக்கும் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
- அவதாரங்களில் ஆதியில் வெளிப்பட்டது ‘ஹயக்ரீவ அவதாரம்’ என்று சொல்லப்படுகிறது.
- திருமால் எடுத்த முக்கியமான அவதாரமாக ‘ஹயக்ரீவர்’ அவதாரம் பார்க்கப்படுகிறது.
மகாவிஷ்ணுவின் தசாவதாரம் என்று போற்றப்படும் 10 அவதாரங்களில் முதன்மையானதாக மச்ச அவதாரம் இருந்தாலும், திருமால் எடுத்த அவதாரங்களில் ஆதியில் வெளிப்பட்டது 'ஹயக்ரீவ அவதாரம்' என்று சொல்லப்படுகிறது.
பிரம்மதேவனிடம் இருந்த வேதங்களை, மது- கைடபர் என்னும் இரண்டு அசுரர்கள் திருடிச் சென்று விட்டனர். அதனை மீட்பதற்காக, திருமால் எடுத்த முக்கியமான அவதாரமாக 'ஹயக்ரீவர்' அவதாரம் பார்க்கப்படுகிறது.

வேதங்கள், சாஸ்திரங்கள், அறுபத்து நான்கு கலைகள் போன்ற அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குபவர், ஹயக்ரீவர். சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, வியாசர், சுப்பிரமணியர், விநாயகர் ஆகியோரை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.
ஆனால் அவர்களுக்கு அந்த தகுதியானது, கல்விக்கு அதிபதியாக, ஆதாரமாக விளங்கும் ஹயக்ரீவரின் அனுக்கிரகத்தால் கிடைத்தது என்கின்றன புராணங்கள்.
ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில், பவுர்ணமி திதியில் அவதரித்தவர், ஹயக்ரீவர். அவரது பெருமைகளை எடுத்துரைக்காத வேதம், உபநிடதம், கல்பம், புராணம் என்று எதுவும் கிடையாது. அனைத்துமே அவரது புகழ்பாடுகின்றன.
ஹயக்ரீவர் எப்போதும் தனியாக இருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவது அரிதுதான். அவர், தனது மனைவியாக லட்சுமிதேவியை மடியில் அமர வைத்து 'லட்சுமி ஹயக்ரீவர்' தோற்றத்தில்தான் பெரும்பாலான ஆலயங்களில் தரிசனம் தந்து கொண்டிருக்கிறார்.
- இன்று பிரதோஷம்.
- இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் கோவிலில் அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-28 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை.
திதி: திரயோதசி இரவு 6.35 மணி வரை. பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: பரணி காலை 6.50 மணி வரை. பிறகு கார்த்திகை நாளை விடியற்காலை 4.55 மணி வரை. பிறகு ரோகிணி.
யோகம்: சித்த, மரணயோகம்.
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று பிரதோஷம். அண்ணாமலையார் தீபம் திருகார்த்திகை. வள்ளியூர் ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பம், திருநாகேஸ்வரம் ஸ்ரீநாகநாதர் திருவீதியுலா, கணம்புல்ல நாயனார் குருபூஜை. சுவாமிமலை, திருப்பரங்குன்றம், ஸ்ரீமுருகப் பெருமான் கோவில் தேரோட்டம். திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத் சுந்தரசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றி ஸ்ரீகல்யாணவேங்கட்ரமண சுவாமி திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம். லால்குடி ஸ்ரீசப்ரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் கோவிலில் அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-அன்பு
ரிஷபம்-செலவு
மிதுனம்-ஆதரவு
கடகம்-தனலாபம்
சிம்மம்-ஈகை
கன்னி-முயற்சி
துலாம்- உதவி
விருச்சிகம்-சுகம்
தனுசு- பரிவு
மகரம்-சுபம்
கும்பம்-தனம்
மீனம்-பணிவு
- இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கிடையே, இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கார்த்திதை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று அதிகாலை கோவில் கருவறை முன் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தில் இந்த தீபம் காட்டப்படுவதால் `பரணி தீபம்' என்றுபெயர் பெற்றது.
இன்று மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாடவீதி உலாவும் நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
நினைத்தாலே முக்தி தரும் தலமாகக் கருதப்படுவது திருவண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது.
- அதிகாலையில் புராணம் வாசிக்கப்பட்டது.
- ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் சிறப்பு பெற்றதாகும். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசி அன்று நம்பாடுவான் என்ற பக்தனுக்கு பெருமாள் அருள்புரிந்ததை முன்னிட்டும், குளிர் காலம் வருவதால் அதனை பக்தர்களுக்கு அறிவிக்கும் வண்ணமும் இங்கு கோவில் கொண்டு அருள்பாலிக்கும் சுவாமிகளுக்கு 108 வஸ்திரங்கள் சாற்றப்படும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதுபோல் இந்த ஆண்டு இவ்வைபவம் இன்று அதிகாலை நடைபெற்றது. அப்போது இன்று ஒரு நாள் மட்டுமே கருடாழ்வார் சன்னதியிலிருந்து புறப்பட்டு பகல் பத்து மண்டபத்துக்கு அனைத்து தெய்வங்களும் எழுந்தருளுவார்கள். இங்கு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, ஆழ்வார்கள், ஆச்சாரியர்களுக்கு 108 வஸ்திரங்கள் சாற்றப்பட்டது.
இதனை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அதிகாலையில் புராணம் வாசிக்கப்பட்டது. சாரல் மழை, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இவ்விழா விற்கான ஏற்பாடுகளை கோவில் பாலாஜி பட்டர் ஸ்தானிகம் என்ற ரமேஷ் பட்டர், அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா, கோவில் செயல் அலுவலர் சக்கரை அம்மாள் மற்றும் கோவில் அலுவ லர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
- அரிசி தானம் – பாவங்கள் தொலையும்.
- ஆடை தானம் – ஆயுள் விருத்தியாகும்.
மஞ்சள் தானம் – மங்களம் உண்டாகும்.
அன்னதானம் – சகல பாக்கியங்களும் உண்டாகும்.
அரிசி தானம் – பாவங்கள் தொலையும்.
ஆடை தானம் – ஆயுள் விருத்தியாகும்.
எண்ணெய் தானம் – கர்ம வினைகள் அகலும். கடன்கள் குறையும்.
காய்கறிகள் தானம் – பித்ரு சாபங்கள் விலகும். குழந்தைகளின் ஆரோக்யம் வளரும்.
காலணி தானம் – பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும். தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.
குடை தானம் – தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும். குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.
தேன் தானம் – புத்திர பாக்கியம் உண்டாக்கும். சுகம் தரும் இனிய குரல் வரும்.
நெய் தானம் – வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்
தண்ணீர் தானம் – மனசாந்தி ஏற்படும்.
கம்பளி (போர்வை) தானம் – துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி
பால் தானம் – சவுபாக்கியம்
பழவகைகள் தானம் – புத்ரபவுத்ர அபிவிருத்தி
தயிர் சாதம் / பால் சாதம் – ஆயுள் நீடிக்கும் ஆரோக்கியம் நிலைக்கும்.
தயிர் தானம் – இந்திரிய விருத்தியாகும்.
வெள்ளி தானம் – பித்ருகள் ஆசிகிடைக்கும்.
சொர்ண தானம் (தங்கம்) – கோடிபுண்ணியம் உண்டாகும்
பூமி தானம் – இகபரசுகங்கள்

வஸ்த்ர தானம் (துணி) – சகல ரோக நிவர்த்தி
கோ தானம் (பசுமாடு) – பித்ருசாப நிவர்த்தி. இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும்.
திலதானம் (எள்ளு) – பாப விமோசனம்
குல தானம் (வெல்லம்) – குல அபிவிருத்தி – துக்கநிவர்த்தி
சந்தனக்கட்டை தானம் – புகழ்
விதை தானம் – வம்ச விருத்தியை தரும்
மாங்கல்ய சரடு தானம் – காமக் குற்றங்கள் அகலும். தீர்க்க மாங்கல்ய பாக்யம் உண்டாகும்.
பாய் தானம் – பெற்றவர்களை, பெரியவர்களை புறக்கணித்ததால் வந்த சாபங்கள் தீரும். கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும். அமைதியான மரணம் ஏற்படும்.
தீப தானம் – கண் பார்வையை தீர்க்கமாக்கும். பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரும்.
தேங்காய் தானம் – நினைத்த காரியம் வெற்றி அடையும். பூரணநலன் உண்டாக்கும். நினைத்த காரியத்தில் வெற்றியளிக்கும்.
தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அதாவது நமக்கு மிஞ்சியது போக, மற்றவற்றை தானமாகவும், தர்மமாகவும் செய்யுங்கள் என்று கூறினார்கள்.
அத்தகைய தானங்கள் பல வகைப்படும். கருட புராணத்தில் சொல்லப் பட்டிருக்கும் தான பலன்கள் என்னென்ன தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
அன்னதானம் – விரும்பிய உலகத்தில் சுகித்திருப்பார்.
கோ தானம் – கோலோகத்தில் வாழ்வர்.
பசு கன்றினும் சமயம் தானம் – கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு.
குடை தானம் – 1000 ஆண்டுகள் வருண லோகத்தில் சுகம் அனுபவிப்பார்.
தாமிரம், நெய், கட்டில், மெத்தை, ஜமக்காளம், பாய் தலையணை இவகளில் ஏதேனும் ஒன்றைத் தானமாக செய்தால் சந்திரலோகத்து சுகங்களை அனுபவிப்பார்.
வஸ்திர தானம் – 1000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்.
ஆலயத்துக்கு யானை தானம் – இந்திரனுக்குச் சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பார்.
குதிரையும், பல்லக்கும் தானம் – இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்.
நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பர் –வாயுலோகத்தில் வாழ்வார்.
தானியங்கள், நவரத்தினங்கள் தானம் – மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும், தீர்க்காயுள் கொண்டவராகவும் வாழ்வர்.
பயன் கருதாது தானம் – மரணம் உன்னதமாய் இருப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை.
பண உதவி – ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்.
தாமிரப்பாத்திரத்தில் எள் தானம் – நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்.
சுவையான பழங்களைத் தானம் – ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்.
தண்ணீர் தானம் – கைலாச வாசம் கிட்டும்.
நற்செயலை விரும்பிச் செய்கிறவர்கள் சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்.
தெய்வம் பவனி வரும் வீதிகளைச் செம்மைப்படுத்துபவர் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.
தானங்களும் அதன் பலன்களும் பற்றி தெரிந்து கொண்டு நமக்கு தேவையான பலனை தரக்கூடிய தானத்தை செய்து பலனை பெறுவோம்.
- உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கிடைக்க தன்வந்திரி வழிபாடு செய்யப்படுகிறது.
- திருமாலின் 24 அவதாரங்களில் 17-வது அவதாரம் தன்வந்திரி அவதாரமாகும்.
திருமால் மக்களுக்காக மருத்துவராக தோன்றிய நாளே தன்வந்திரி ஜெயந்தியாகும். நோய் வராமல் நல்ல உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கிடைக்க தன்வந்திரி வழிபாடு செய்யப்படுகிறது.
ஸ்ரீ தன்வந்திரி, விஷ்ணு அம்சமாக பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும் முன் வலக்கையில் அட்டைப்பூச்சியை ஏந்தியும், இடக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி அளிக்கிறார்.
அக்கால மருத்துவமுறையில் நோயாளியின் உடலிலிருந்து கெட்ட ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப்பூச்சிகள் பயன்படுத்தப்பட்டனவாம்.

திருமாலின் 24 அவதாரங்களில் 17-வது அவதாரம் தன்வந்திரி அவதாரமாகும். இந்து மதத்தில் தன்வந்திரி உடல் நலத்திற்காக வழிபடக்கூடிய கடவுள் ஆவார். தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் கூறலாம்.
அசுரர்கள் எப்போதும் தேவர்களை துன்பப்படுத்தும் சுபாவம் கொண்டவர்கள். தேவர்களது சொகுசு வாழ்வு தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அசுரர்கள் தேவர்களுடன் சண்டை இடுவதும் உண்டு.
தேவர்களைவிட அசுரர்கள் பலசாலிகள். அசுரர்களிடம் இருந்து தங்களைக் காக்குமாறு தேவர்கள் மூம்மூர்த்திகளிடம் சரணடைந்தனர். சாகாவரம் கொண்ட அமிர்தத்தை உண்டால் என்றென்றும் சாவு கிடையாது. அமிர்தத்தை பெற பாற்கடலை தேவர்கள் அசுரர்களின் உதவியுடன் கடைந்தனர்.
பாற்கடலை கடையும்போது ஆலகால விஷம் வந்தது. அதை சிவபெருமான் எடுத்து கொண்டதால் அதனை அடுத்து காமதேனு, கற்பக விருட்சம், ஐராவதம், மூதேவி, மகாலக்ஷ்மி தோன்றினர்.
கடைசியாக அமிர்தத்துடன் விஷ்ணுவின் அவதாரமான தன்வந்திரி தோன்றினார். இவரின் திருக்கரத்தில் உள்ள கலசத்திலிருந்து வழங்கிய அமிர்தத்தை தேவர்கள் உண்டதால் சாகாவரம் பெற்றனர்.
"ஹிமா"என்ற அரசனுக்கு திருமணமான நான்காவது நாள் பாம்பு கடித்து இறக்க நேரிடும் என்ற சாபம் இருந்தது. இதை அறிந்த அவனது 4 வது நாள் அன்று இரவில் கணவனைச் சுற்றிலும் ஏராளமான விளக்கு ஏற்றி, நடுவே ஆபரணங்களையும் வைத்து கணவனுக்கு புராணக் கதை கூறி தூங்காது பார்த்து கொண்டாளாம்.

பாம்பு உருவத்தில் வந்த எமன் தீப எண்ணெயில் ஆபரணங்களின் பிரகாசத்தில் கூசவே, காலை வரை காத்திருந்து விட்டு திரும்பி சென்றதாகவும், மனைவி யமனிடம் இருந்து காப்பாற்றியதாகவும் கருக்கதை உள்ளது.
தன்வந்திரி நாளன்று தன்னை சுற்றிலும் தீபங்கள் ஏற்றி தன் மனைவி காப்பாற்றியது தன்வந்திரி கடவுளே காரணம் என்று மன்னன் நம்பினான். மக்கள் அனைவரையும் தன்திரேயாஸ் தினத்தன்று , இரவில் யமதீபம் ஏற்றி வழிபடவேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஐப்பசி மாத அமாவாசை 2 நாட்களுக்கு முன்பாக வரும் திரியோதசி நாளன்று தீபாவளி திருநாள் துவங்கி விடுகிறது. அன்று தன்வந்திரி ஜெயந்தி தன்திரேயாஸ் என்றும் சொல்வர்.
வைணவ ஆலயங்களில் தன்வந்திரிக்கென்று தனி சந்நிதி உள்ளது. திருவரங்கம் ஆலயத்தில் தன்வந்திரி சந்நிதி பிரசித்தமானது. தன்வந்திரி ஹோமம் செய்வதால் நோய் தீரும். கோவையிலும், கேரளாவிலும் தன்வந்திரி பகவானுக்கு ஆலயம் உள்ளன.






