என் மலர்tooltip icon

    வழிபாடு

    • ஒருவர் இறந்த பிறகு, அவரது ஆன்மா உடலில் இருந்து பிரிந்து முன்னோர்களின் உலகமான பித்ருலோகத்தை சென்றடையும்.
    • முன்னோர்களுக்கு பிடித்தமான உணவுகள், பழங்கள் போன்றவற்றை படையல் இட்டு வழிபடலாம்.

    இந்து மதத்தில், அமாவாசை தினம் என்பது மிகவும் 'முக்கியத்துவம் வாய்ந்தது. முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த நாளாக அமாவாசை கருதப்படுகிறது. முன்னோர்களை வழிபடுவதற்கு அனைத்து மாதங்களில் வரும் அமாவாசையும் முக்கியமானது என்றாலும், தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

    மாதந்தோறும் வரும் அமாவாசைகளில் விரதம் இருந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தவறி இருந்தாலும், இந்த மூன்று அமாவாசைகளில் கண்டிப்பாக முன்னோர் வழிபாட்டை முறையாக மேற்கொள்ள வேண்டும். அதிலும் தை அமாவாசைக்கு, மற்ற இரண்டு அமாவாசைகளை காட்டிலும் கூடுதல் சிறப்பு உண்டு.

    தமிழ் மாதங்களில் பத்தாவதாக தை மாதம் வருகிறது. இந்த மாதத்தில் வரும் தை அமாவாசையானது, தை தொடங்கி ஆனி மாதம் வரையிலான உத்திராயண காலத்தில் வரும் முதல் அமாவாசையாகும். முன்னோர்களின் சாபங்கள், தோஷங்கள் போன்றவற்றில் இருந்து விடுபடுவதற்கும், நம்முடைய தலைமுறை துன்பம் இல்லாத வாழ்க்கையை பெறுவதற்கும், முன்னோர்களின் ஆசியை பெறுவதற்கும் ஏற்ற நாளாக தை அமாவாசை உள்ளது. தை அமாவாசை தினத்தில் புனித நதியில் நீராடுவதும், வழிபாடுகளை மேற்கொள்வதும், தான தர்மங்கள் செய்வதும் சிறந்த பலன்களை தரும்.

    ஒருவர் இறந்த பிறகு, அவரது ஆன்மா உடலில் இருந்து பிரிந்து முன்னோர்களின் உலகமான பித்ருலோகத்தை சென்றடையும். அவர்களின் கர்ம வினைக்கு ஏற்ப அடுத்த பிறவி எடுக்கும் வரை ஆன்மா அங்கேயே தங்கி இருக்கும். பித்ருலோகத்தில் இருக்கும்போது, ஆன்மாவுக்கு பசி, தாகம் ஏற்பட்டால், அவர்கள் முந்தைய வாழ்விடமான பூமிக்கு வருவார்கள். அப்போது இங்கு இருக்கும் அவர்களது சந்ததியினர், முறையாக மந்திரங்களை உச்சரித்து, சடங்குகளை செய்து, தண்ணீர், எள் ஆகியவற்றை தெளித்து தர்ப்பணம் செய்வதன் மூலம் அவர்களுக்கு தேவையான உணவும், தண்ணீரும் கிடைத்து, பசி நீங்கப் பெறுவார்கள். இதனால் அவர்கள் மனம் மகிழ்ந்து, தங்க ளது சந்ததியினரை வாழ்த்தி செல்வதாக நம்பிக்கை.

    ஆடி அமாவாசை அன்று நமது முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு புறப்பட்டு வருவார்கள். புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையில் நாம் படைக்கும் உணவுகளையும், தர்ப்பணங்களையும் ஏற்றுக் கொள்வார்கள். பின்னர், தை அமாவாசையில் மீண்டும் பித்ருலோகத்திற்கு புறப்பட்டு செல்வதாக ஐதீகம்.

    அதன்படி, தை அமாவாசை அன்று பித்ருலோகத்துக்கு புறப்படும் முன்னோர்களுக்கு தாகம் அதிகமாக இருக்கும். அதனால், அன்றைய தினம் புனித நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு எள், தண்ணீர் தெளித்து தர்ப்பணம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு, நமக்கும், நமது சந்ததியினருக்கும் ஆசி வழங்குவார்கள்.

    இந்த ஆண்டு தை அமாவாசை 18-1-2026 ஞாயிற்றுக்கிழமை நாளை வருகிறது. அன்றைய தினம் காசி, கயா, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் போன்ற புனித தீர்த்தங்களில் தர்ப்பணம் கொடுத்து சூரிய பகவானை வழிபட வேண்டும். முடியாதவர்கள், வீட்டின் அருகே உள்ள புனித நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுத்து வழிபடலாம். பின்னர், வீட்டில் முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, அதற்கு சந்தனம், குங்குமம் அணிவித்து, பூமாலை சாற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான உணவுகள், பழங்கள் போன்றவற்றை படையல் இட்டு வழிபடலாம். முன்னோர்கள் காகத்தின் வடிவில் வீட்டிற்கு வருவதாக ஐதீகம். எனவே, அன்றைய தினம் காகத்துக்கு உணவு அளிப்பது அவசியம்.

    தை அமாவாசை தினத்தில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதில் கலந்துகொண்டு இறைவனை மனதார வழிபட வேண்டும். தை அமாவாசையில் முன்னோர் வழிபாடு செய்வதன் மூலம், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும், நோய்கள் நீங்கி நீண்ட ஆயுள் பெறலாம், முன்னோர்களின் ஆசியுடன் வீட்டில் நல்ல பலன்கள் ஏற்படும் என்பது நம்பிக்கை.

    • சூரியன் தன் தோஷம் போக்க பல சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டார்.
    • சிவனின் பின்புற கோஷ்டத்தில் மகாவிஷ்ணுவும், ஆஞ்ச நேயரும் அருகருகே காட்சி தருவது சிறப்பாகும்.

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்த பகுதியில் அமைந்துள்ளது, பாஸ்கரேஸ்வரர் திருக்கோவில். இது, சூரிய பகவான் வழிபட்ட தலம் என்பதால், சிவபெருமான் எதிரில் சிவ தரிசனம் செய்யும் நிலையில் சூரிய பகவான் சிலை உள்ளது. இது மிகவும் அரிய அமைப்பாகும். இத்தல இறைவன், பரிதியப்பர், பரிதீசர், பாஸ்கரேஸ்வரர் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். இறைவி, மங்களநாயகி, மங்களாம்பிகை என்று போற்றப்படுகிறார்.

    ஒரு சமயம் தட்சன் யாகம் நடத்தியபோது, சிவபெருமானின் அனுமதியின்றி சூரிய பகவான் அந்த யாகத்தில் கலந்து கொண்டான். இதனால், சூரிய பகவானுக்கு தோஷம் ஏற்பட்டது. இதையடுத்து, சூரியன் தன் தோஷம் போக்க பல சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டார். அந்த சிவாலயங்களில் ஒன்றாக இக்கோவில் உள்ளது.

    இக்கோவில் இரண்டு கோபுரங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும், இரண்டாம் கோபுரம் மூன்று நிலைகளுடனும் உள்ளது. முதல் கோபுரம் வழியே உள்ளே நுழைந்ததும், கொடிமரம், விநாயகர், நந்தி, பலி பீடம் ஆகியவற்றை தரிசிக் கலாம். வெளிப்பிரகாரத்தில் அம்பாள் சன்னிதி தெற்கு நோக்கி உள்ளது.

    இரண்டாம் கோபுர வாசலை கடந்து உள்ளே சென்றால் உள் பிரகாரத்தில் விநாயகர், முருகன், கஜலட்சுமி சன்னிதிகள் உள்ளன. நடராஜ சபை அருகில் பைரவர், சூரியன், சந்திரன், நவக்கிரகங்கள் காணப்படுகின்றனர். கருவறையில் மூலவர் சதுர வடிவ ஆவுடையுடன் உயர்ந்த பாணத்துடன் லிங்க வடிவில் காட்சி தருகிறார். இவர் எதிரே நந்தி, பலிபீடத்தை அடுத்து சிவனை வழிபடும் நிலையில் சூரியன் காணப்படுகிறார். பிரகாரத்தில் 3 சண்டிகேஸ்வரர் அருள்பாலிக்கிறார்கள். சிவனின் பின்புற கோஷ்டத்தில் மகாவிஷ்ணுவும், ஆஞ்ச நேயரும் அருகருகே காட்சி தருவது சிறப்பாகும்.

    பங்குனி மாதம் 18, 19, 20 ஆகிய தேதிகளில் சூரியக் கதிர்கள், இத்தல இறைவன் மீது விழும் என்பது அற்புத நிகழ்வாகும். தஞ்சாவூரில் இருந்து ஒரத்தநாடு செல்லும் வழியில் 15 கி.மீ. தொலைவில் மேல உளூர் என்ற இடம் உள்ளது. அங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

    • திருப்பதியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பக்தர்கள் குளிரில் நடுங்கியபடி பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
    • நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பொங்கல் பண்டிகை, சங்கராந்தி தொடர் விடுமுறையால் கடந்த சில நாட்களாக பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர்.

    அதிக அளவில் பக்தர்கள் வாகனங்களில் வருவதால் அலிபிரி சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றன. நேரடி இலவச தரிசனத்தில் காத்திருப்பு அறைகள் நிரம்பியது. அதற்கு வெளியே 3 கிலோமீட்டர் தூரம் உள்ள ஷீலா தோரணம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

    திருப்பதியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பக்தர்கள் குளிரில் நடுங்கியபடி பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 78,733 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 31,146 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.41 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான டீ , காபி, பால், உணவு, தண்ணீர் ஆகியவை தன்னார்வல்கள் மூலம் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

    • அன்றைய தினம் காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, முருகப்பெருமானுக்கு பூஜை நடக்கிறது.
    • ஊட்டி திருக்குந்த சப்பை படுகர் இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடக்கிறது.

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே அகத்தியர், தேரையர் சித்தர்கள் வழிபட்ட தோரணமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தைப்பூச திருவிழா பிப்ரவரி 1-ந்தேதி நடக்க இருக்கிறது.

    அன்றைய தினம் காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, முருகப்பெருமானுக்கு பூஜை நடக்கிறது. காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமமும், 8 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி திருக்கல்யாணம் நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்கிறார்கள். திருக்கல்யாணத்தை கணேச சிவாச்சாரியார், ஈஸ்வரன் சர்மா நடத்தி வைக்கின்றனர். அதனைத்தொடர்ந்து, ஊட்டி திருக்குந்த சப்பை படுகர் இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடக்கிறது.

    மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்க உள்ளது. பக்தர்கள் எடுத்து வரும் பால்குடங்கள் மூலம் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலை 6 மணிக்கு கோவில் அடிவாரத்தில் மகா சரவண ஜோதி ஏற்றப்படுகிறது.

    தொடர்ந்து இரவு 7 மணிக்கு முத்துமாலைபுரம் மறைந்த ஆதி நாராயணன்-சந்திராலீலா நினைவு மாலை நேர கட்டணமில்லா படிப்பக மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும், வள்ளியம்மாள்புரம் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளது. காலை முதல் இரவு வரை தொடர் அன்னதானமும் வழங்கப்படுகிறது.


    • முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்ச நாட்கள் உகந்தவை.
    • தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு புத்தாடை படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

    அமாவாசை மிகவும் புனிதமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைப்பிடிப்பர்.

    ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பு வாய்ந்தன. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகும். தை அமாவாசை அன்று ஆறு கடல் போன்ற புனித நீர் நிலையங்களில் குளித்து மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு பூஜை செய்வர்.

    அந்த வகையில் நாளை தை அமாவாசை. குறிப்பாக தை அமாவாசை ஞாயிற்றுக்கிழமை அன்று வருவது இன்னும் விசேஷமானது.

    நாளை திதி கொடுக்க உகந்த நேரம்: அதிகாலை 01.20 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 02.31 வரை தை அமாவாசை திதி இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புண்ணிய நதிகளில் நீராடி நண்பகல் 12 மணிக்குள் தர்ப்பணம் செய்து முடிக்கலாம்.

    பிதுர்களுக்கு திதி கொடுப்பதை ஏதோ செய்யக் கூடாத செயலாகப் பலரும் கருதுகிறார்கள். திதியன்றும் அமாவாசை நாளிலும் வாசலில் கோலமிடுவது கூடாது என்பதால் அசுபமான நாளாக சிலர் எண்ணுகின்றனர். முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்திலேயே பிதுர்க்கடன் நாளன்று கோலமிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்க சொல்லியுள்ளனர்.

    முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்ச நாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும். கேளிக்கை, சுப நிகழ்ச்சிகளை இந்நாட்களில் தவிர்க்க வேண்டும் என்பது விதி. இதன் காரணமாக இந்த நாளை ஆகாத நாளாக எடுத்துக்கொள்ளக்கூடாது. தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு புத்தாடை படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

    அந்த ஆடை, உணவை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும். தடைபட்ட திருமணம், நீண்ட நாள்பட்ட நோய் நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும் மனநிறைவும் நம் இல்லத்திலும், உள்ளத்திலும் ஊற்றெடுக்கும்.

    காகத்திற்கு உணவிடுங்கள்

    காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று தெரியும். ஆனால் பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு.

    காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை. காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்து போன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாக கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

    பிதுர் தர்ப்பணத்திற்குரிய கயாவில் உள்ள பாறைக்கு காக சிலை என்று பெயர். அந்த பாறையில்தான் பிண்டம் வைத்து வணங்குவர். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்த பின்னரே. காகம் உணவு உண்ணும். அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்.

    • திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலை கருட வாகனத்திலும், இரவு அனுமன் வாகனத்திலும் பவனி.
    • கல்லிடைக்குறிச்சி, திருவாவடுதுறை தலங்களில் சிவபெருமான் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு தை-3 (சனிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : இன்று முழுவதும் சதுர்த்தசி

    நட்சத்திரம் : இன்று காலை 9.40 வரை மூலம் பின்பு பூராடம்.

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : 9.00 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : 1.30 மணி முதல் 3.00 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

    கல்லிடைக்குறிச்சி, திருவாவடுதுறை தலங்களில் சிவபெருமான் பவனி

    காணும் பொங்கல், உழவர் திருநாள், கரிநாள். சிவராத்திரி, மதுரை செல்லத்தம்மன் விருட்சப சேவை. திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலை கருட வாகனத்திலும், இரவு அனுமன் வாகனத்திலும் பவனி. கல்லிடைக்குறிச்சி, திருவாவடுதுறை தலங்களில் சிவபெருமான் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நோய்

    ரிஷபம்-சாந்தம்

    மிதுனம்-ஆதரவு

    கடகம்-பெருமை

    சிம்மம்-சினம்

    கன்னி-நிறைவு

    துலாம்- ஈகை

    விருச்சிகம்-அன்பு

    தனுசு- முயற்சி

    மகரம்-தனம்

    கும்பம்-இன்பம்

    மீனம்-உறுதி

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வரும். அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

    ரிஷபம்

    விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். குடும்பச் சுமை கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நட்பு பகையாகலாம்.

    மிதுனம்

    தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். வருமான பற்றாக்குறை ஏற்படும். தொழில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்ச்சி தேவை. உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    கடகம்

    பேச்சு திறமையால் சூழ்ச்சியிலிருந்து விடுபடுவீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு காரணமாக நீண்ட தூரத்திற்கு மாறுதலாகும் வாய்ப்பு உண்டு.

    சிம்மம்

    நினைத்தது நிறைவேறும் நாள். பிள்ளைகளின் நலன் கருதி ஒரு தொகையை செலவிடுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

    கன்னி

    எதிர்பார்த்த இனிய மாற்றங்கள் ஏற்படும் நாள். மகிழ்ச்சிக்குரிய விதத்தில் வருமானங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

    துலாம்

    நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். உறவினர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும்.

    விருச்சிகம்

    முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும் நாள். தொகை எதிர்பார்த்தபடி வந்து சேரும். அலுவலக பணிகள் துரிதமாக நடைபெறும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    தனுசு

    தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். மாற்று இனத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியை தருவர். உத்தியோகத்தில் மேலிடத்திற்கு நெருக்கமாவீர்கள்.

    மகரம்

    பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். செய்யும் தொழிலை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். குடும்பத்தாருடன் குதூகலப் பயணம் ஒன்று ஏற்படும்.

    கும்பம்

    செல்வந்தர்களின் உதவியால் சிந்தை மகிழும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டம் தீட்டுவீர்கள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.

    மீனம்

    யோகமான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு.

    • அதிகாலை பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
    • நந்தி சிலை முன்பு 108 பசுமாடுகள், கன்றுக்குட்டிகளுடன் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது. உலக பாரம்பரிய சின்னமாக விளங்கிவரும் பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பெரிய கோவிலுக்கு வருகை தருகின்றனர்.

    பிரசித்தி பெற்ற பெரிய கோவிலில் மிகப்பெரிய நந்தியெம்பெருமான் சிலை உள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த நந்தி 20 டன் எடை கொண்டது.

    பொங்கல் பண்டிகையான நேற்று நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட மங்கள பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, மாட்டு பொங்கலான இன்று மகர சங்கராந்தி விழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு அதிகாலை பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் நந்தியெம்பெருமானுக்கு 2 டன் எடையிலான காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கத்தரிக்காய், முட்டைக்கோஸ், பூசணிக்காய், சவ்சவ், கேரட், உருளைக்கிழங்கு, வாழைக்காய், பாகற்காய், வெண்டைக்காய் போன்ற அனைத்து வகையான காய்கறிகளாலும், ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை, கொய்யா உள்பட பலவகையான பழங்கள், பால்கோவா, ஜாங்கிரி, அதிரசம் உள்பட பல வகையான இனிப்புகள் மற்றும் பல்வேறு வகையான மலர்களாலும் நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மகா நந்திக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நந்தி சிலை முன்பு 108 பசுமாடுகள், கன்றுக்குட்டிகளுடன் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவற்றின் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுத்துணி போர்த்தப்பட்டு கோ-பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோ-பூஜை செய்தனர்.

    இதையடுத்து நந்தியெம்பெருமானுக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இன்று மாலை 5 மணியளவில் தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம்பெருமானுக்கு மகா அபிஷேகம், தீபாரதனை நடைபெற உள்ளது.

    • மாலை திருவூடல் தெருவில் சிவனும், பார்வதியும் ஊடல் கொள்ளும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
    • கணவன்- மனைவி தம்பதியராக இந்த விழாவை கண்டுகளித்தால் அவர்கள் இடையே ஒற்றுமை பலப்படும்.

    உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கிரிவலம் வருவதை போலவே, ஆண்டுக்கு 2 முறை அண்ணாமலையாரும் கிரிவலம் வந்து அருள்பாலிப்பது வழக்கம். அதில், ஒன்று கார்த்திகை தீபத் திருநாளின் மறுநாள், மற்றொன்று தைப் பொங்கல் திருநாளின் மறுநாள்.

    கணவன் - மனைவி உறவில் ஊடலும், கூடலும் தவிர்க்க முடியாதவை. திருவண்ணாமலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மனும் கூட இத்தகைய ஊடலை நடத்தி இருக்கிறார்கள். இதனை 'திருவூடல் விழா' என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறார்கள். தை மாதம் பொங்கல் திருவிழாவுக்கு மறுநாள் இந்த விழா நடத்தப்படுகிறது.

    தீவிர சிவ பக்தரான பிருங்கி முனிவர், சிவபெருமானை தவிர வேறு யாரையும் வழிபட மாட்டார். ஒரு முறை பிருங்கி முனிவர், சிவனை வழிபடுவதற்கு கயிலாயமலைக்கு சென்றார். அப்போது சிவனும், பார்வதியும் சேர்ந்து அமர்ந்து இருந்தனர். உடனே வண்டு உருவம் கொண்ட முனிவர், சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வழிபட்டுவிட்டு நகர்ந்தார். இதனால் கோபம் கொண்ட பார்வதிதேவி, "என்னை வழிபடாத உனக்கு, உன் உடலை இயங்கச் செய்யும் என்னுடைய சக்தி மட்டும் எதற்கு? எனவே என் சக்தியை திருப்பி கொடுத்துவிடு" என்றார்.

    உடனே பிருங்கி முனிவர், சக்தியை திருப்பி கொடுத்துவிட்டார். இதனால் நிற்கக்கூட முடியாமல் கீழே விழப்போன அவரை சிவபெருமான் கைத்தாங்கலாக பிடித்தார். இதனால் சிவனுக்கும், பார்வதிக்கும் வாக்குவாதம் உண்டாகி, அவர்களுக்குள் ஊடல் ஏற்பட்டது. பார்வதிதேவி, சிவபெருமானை பிரிந்து திருவண்ணாமலை ஆலயத்துக்கு வந்து கதவை பூட்டிக் கொண்டார்.

    பார்வதிதேவியின் ஊடலை தணிக்க சுந்தரமூர்த்தி நாயன்மாரை சிவபெருமான் தூது அனுப்பினார். ஆனால் அது வெற்றி பெறவில்லை. இதனால் சிவபெருமான் தன் பக்தனான பிருங்கி முனிவருக்கு ஊன்றுகோல் கொடுத்து அருள்பாலித்துவிட்டு, ஆலயத்துக்கு திரும்பி அன்னையின் கோபத்தை தணிக்கிறார்.

    இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை தலத்தில் பொங்கலுக்கு மறுநாள் நடக்கிறது. இந்த ஆண்டு இன்று இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பிறகு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், சுந்தரர் ஆகிய மூவரும் மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். பின்னர் மாடவீதிகளில் மூன்று முறை சுற்றி வருவார்கள். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரை குறிக்கும் வகையில் இந்த மூன்று முறை மாடவீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும். அப்போது பக்தர்கள் மண்டகப்படி செய்து அண்ணாமலையாருக்கு சிறப்பு செய்வார்கள்.

    மாலை திருவூடல் தெருவில் சிவனும், பார்வதியும் ஊடல் கொள்ளும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அப்போது, சிவபெருமான் மீது அம்பாள் கோபம் கொள்வது போல் காட்சிகள் அமையும். ஊடல் அதிகமானதும் அம்பாள் கோபத்துடன் புறப்பட்டு சென்று விடுவார். அவர் கோவில் உள்பக்கம் சென்று தனது சன்னிதி கதவுகளை மூடிக்கொள்வார். இதைத்தொடர்ந்து அவரை சமரசம் செய்யும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

    உண்ணாமுலையம்மன் சமரசம் ஆகாததால் அண்ணாமலையார் தனியாக புறப்பட்டு செல்வார். அவர் குமரன்கோவில் சென்று அமர்ந்து விடுவார். அங்கு அவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். இதன் ஒரு பகுதியாக அண்ணாமலையார் கிரிவலம் புறப்படுவார். இந்த கிரிவலம் மிகவும் விசேஷமானது ஆகும். ஆண்டுக்கு 2 தடவை மட்டுமே அண்ணாமலையார் தன்னை தானே சுற்றிக் கொள்ளும் வகையில் கிரிவலம் வருவது உண்டு. அதில் தை மாதம் நடைபெறும் இந்த கிரிவலமும் ஒன்றாகும்.

    அண்ணாமலையார் பின்னால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அணிவகுத்து சென்று கிரிவலத்தை மேற்கொள்வார்கள். கிரிவல பாதையில் அண்ணாமலையாருக்கு சிறப்புகள் செய்யப்படும். பிருங்கி முனிவருக்கு அண்ணாமலையார் காட்சி கொடுத்து அருள்புரிவார். அன்று மாலை அண்ணாமலையார் ஆலயம் திரும்புவார்.

    அப்போது உண்ணாமுலையம்மனுடன் சமரசம் செய்து கொள்வார். இதனால் அன்னையின் கோபம் தீர்ந்துவிடும். இறுதியில் அண்ணாமலையாரும், உண்ணாமுலையம்மனும் ஒருசேர அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். தன்னையே நம்பி இருக்கும் பக்தனுக்காக சிவபெருமான் எதையும் தியாகம் செய்வார் என்பதை இந்த உலகத்துக்கு உணர்த்தவே இந்த திருவூடல் திருவிழா நடத்தப்படுகிறது.

    "திருவூடல் கண்டால் மறுவூடல் இல்லை" என்பார்கள். திருவூடல் திருவிழாவை ஆரம்பம் முதல் மறுகூடல் வரை பார்ப்பவர்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கும். கணவன்- மனைவி தம்பதியராக இந்த விழாவை கண்டுகளித்தால் அவர்கள் இடையே ஒற்றுமை பலப்படும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். தெய்வீக நாட்டம் அதிகரிக்கும் நாள். இழுபறியாக இருந்த காரியங்கள் இனிதே முடியும்.

    ரிஷபம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எப்படியும் முடிந்துவிடும் என்று நினைத்த காரியம் முடியாமல் போகலாம். மறதியால் சில பணிகளைச் செய்ய இயலாது.

    மிதுனம்

    மனக்கசப்பு மாறி மகிழ்ச்சி கூடும் நாள். மதிய நேரத்திற்குமேல் மங்கல செய்திகள் வந்து சேரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோக பிரச்சனை அகலும்.

    கடகம்

    திட்டமிட்ட காரியங்களைச் செய்து முடிக்கும் நாள். நீங்கள் தேடிச்செல்ல நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வீடு வாங்கும் யோகம் உண்டு.

    சிம்மம்

    வசதிகள் பெருகும் நாள். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உங்கள் பணத்தேவையை பூர்த்தி செய்வர். வரன்கள் வாயில் தேடி வரும்.

    கன்னி

    நிதி நிலை உயரும் நாள். நினைத்த காரியம் நினைத்தபடியே நிறைவேறும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

    துலாம்

    புதிய முயற்சி கைகூடும் நாள். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு. நண்பர்கள் நல்ல தகவலை தருவர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும்.

    விருச்சிகம்

    வருமானம் உயரும் நாள். வரன்கள் வாயிற்கதவை தட்டும். நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டு. குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

    தனுசு

    நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்கு உரிய விதம் நடந்துகொள்வர். உடன்பிறப்புகள் கேட்ட உதவியை செய்வர்.

    மகரம்

    அன்னிய தேசத்திலிருந்து அனுகூல செய்தி வந்து சேரும் நாள். அரசு வழி சலுகைகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிட்டும்.

    கும்பம்

    புதிய பாதை புலப்படும் நாள். வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். மறைமுக எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.

    மீனம்

    விலை உயர்ந்த பொருளை வாங்கி மகிழும் நாள். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தித்து முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் நீண்ட தூரத்திற்கான மாறுதல் கிடைக்கும்.

    • சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி குருவார சிறப்பு அலங்கார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு தை-1 (வியாழக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : துவாதசி இரவு 9.45 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம் : கேட்டை (முழுவதும்)

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று தைப்பொங்கல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை

    இன்று உத்திராயண புண்ணிய காலம். தைப்பொங்கல். பொங்கல் பானை வைக்க உகந்த நேரம்- காலை 7.30 மணி முதல் 8.15 வரை, 9 மணி முதல் 10 மணி வரை, 10.30 மணி முதல் 11.30 மணி வரை.

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவில் கல்யானைக்கு கரும்பு கொடுத்தருளிய காட்சி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சன சேவை. ஆலங்குடி ஸ்ரீ குரு பகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி குருவார சிறப்பு அலங்கார திருமஞ்சன சேவை.

    குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அனுகூலம்

    ரிஷபம்-இன்பம்

    மிதுனம்-சாந்தம்

    கடகம்-சிந்தனை

    சிம்மம்-பாராட்டு

    கன்னி-ஆக்கம்

    துலாம்- மகிழ்ச்சி

    விருச்சிகம்-கவனம்

    தனுசு- நற்செயல்

    மகரம்-உவகை

    கும்பம்-மகிழ்ச்சி

    மீனம்-உயர்வு

    • அய்யப்பன் வருகிற 17-ந்தேதி வரை திருவாபரணங்களுடன் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்.
    • 19-ந்தேதி இரவு மகரவிளக்கு பூஜை முடிந்து கோவில் நடை சாத்தப்படுகிறது.

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகாலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த சீசனுக்கான மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 17-ந்தேதி தொடங்கி டிசம்பர் 27-ந்தேதி வரை நடந்தது.

    அதைத்தொடர்ந்து மகர விளக்கு பூஜை வைபவம் கடந்த மாதம் (டிசம்பர்) 31-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இந்தநிலையில் மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் இன்று (14-ந்தேதி) நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை வழக்கம்போல் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    அதன்பிறகு வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு மதியம் ஒரு மணிக்கு நடை சாத்தப்பட்டது.பின்பு பிற்பகல் 2:45 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பிறகு 3:08 மணிக்கு மகர சங்கிரம பூஜை தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக சிறப்பு அபிஷேகமும் நடை பெறுகிறது.

    இந்தநிலையில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் ஊர்வலம் இன்று மதியம் பம்பை கணபதி கோவிலை வந்தடைந்தது. அங்கிருந்து மாலையில் சன்னிதானத்திற்கு திருவாபரணங்கள் கொண்டு செல்லப்பட்டன.

    மாலை 5:30 மணிக்கு சரங்குத்தியை அடையும் திருவாபரணங்கள், சன்னிதானத்திற்கு 6.15 மணியளவில் கொண்டு வரப்பட்டது. அதனை கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, சபரிமலை மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி ஆகியோர் பெற்றுக் கொள்கிறார்கள்.

    பின்பு அய்யப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு மாலை 6:30 மணியளவில் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. அப்போது பொன்னம்பலமேட்டில் அய்யப்பன் மூன்று முறை ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனை லட்சக் கணக்கான பக்தர்கள் மகரஜோதியை தரிசனம் செய்தார்கள்.

    பம்பை ஹில் டாப், சன்னிதான திருமுற்றம், மாளிகப்புரம் கோவில், அன்னதான மண்டபம், பாண்டித்தாவளம், டோனர் இல்ல முற்றம், ஓட்டல் வணிக வளாக பின்புற மைதானம், தரிசன வணிக வளாக பகுதிகள், பி.எஸ்.என்.எல். அலுவலக பின் பகுதி, தேங்காய் சேகரிக்கும் பகுதி, கற்பூர ஆழியின் சுற்றுப்பகுதி, ஜோதி நகர், வனத்துறை அலுவலக பகுதிகள், நீர்வளத்துறை அலுவலக பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து மகரஜோதியை பக்தர்கள் தரிசித்தனர்.

    மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் சன்னிதானம், பம்பை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    சன்னிதானத்துக்கு திருவாபரணங்கள் கொண்டுவரப்பட்டதை முன்னிட்டு இன்று காலை 10 மணிக்கு பிறகு நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் காலை 11 மணி முதல் பம்பாவில் இருந்து சன்னிதானத்துக்கு பக்தர்கள் செல்ல அனும திக்கப்படவில்லை. முன் அனுமதி சீட்டு வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும் மாலையில் அய்யப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்ட பிறகே சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    அய்யப்பன் வருகிற 17-ந்தேதி வரை திருவாபரணங்களுடன் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். 18-ந்தேதி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். 19-ந்தேதி இரவு மகரவிளக்கு பூஜை முடிந்து கோவில் நடை சாத்தப்படுகிறது.

    ×