என் மலர்
அமெரிக்கா
- உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி இரண்டும் சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும்
- யோகாவினால் மன அழுத்தம் பெருமளவு குறைகிறது என்றார் அர்னால்ட்
உலகெங்கும் மக்களை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று, நீரிழிவு (Diabetes).
வழக்கத்தில் "சர்க்கரை நோய்" என அழைக்கப்படும் நீரிழிவு நோயினால் தாக்கப்படுபவர்களுக்கு மருந்து, ஊசி, உணவு கட்டுப்பாடு ஆகியவற்றுடன் உடற்பயிற்சியும் பரிந்துரைக்கப்படுகிறது.
இந்நிலையில், ஹாலிவுட் ஹீரோவும், உடற்பயிற்சி ஆர்வலருமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (Arnold Schwarzenegger) நீரிழிவு நோயிலிருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
யோகா, நீரிழிவிலிருந்து தற்காத்து கொள்ள ஒரு நல்ல வழிமுறை.
நீரிழிவு நோயின் மீது யோகா ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்து கொள்ள 16 ஆய்வுகள் நடத்தப்பட்டன. அவற்றில் யோகா சிறப்பான பலனை வெளிப்படுத்தின.
யோகா பயிற்சியில் தசைகளுக்கும், உடல் இயக்கங்களுக்கும் சவாலோடு கூடிய பயிற்சி கிடைக்கிறது.
மேலும், யோகா பயில்பவர்களின் மனம் அமைதியடைகிறது. இதன் மூலம் மன அழுத்தம் பெருமளவு குறைகிறது.
யோகா மட்டுமின்றி நடைபயிற்சி கூட பயனுள்ள வழிமுறைதான்.
இரண்டு வழிமுறைகளையும் உள்ளடக்கிய ஒரு திட்டத்தை ஏற்படுத்தி கொண்டு அதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
இவ்வாறு அர்னால்ட் கூறினார்.

76-வயதிலும் ஆரோக்கியமாக வாழும் அர்னால்ட் பரிந்துரைத்திருக்கும் வழிமுறைகள் கடைபிடிக்க எளிதானவை என சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
2018 ஆகஸ்ட் மாத அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தில் (National Library of Medicine) பதிவான ஒரு ஆய்வறிக்கையில் தவறாமல் யோகா பயிற்சி செய்து வருபவர்களுக்கு உணவு உண்ணும் முறைகளிலும் ஒரு கட்டுப்பாடு வருவதாகவும், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் பெருமளவு குறைவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
- சுமார் 5 ஆண்டுகளாக அவர் வீட்டிலேயே படுத்த படுக்கையில் இருந்துள்ளார்.
- உடனடியாக அவரது மருத்துவரை அணுகி நடந்த சம்பவங்களை கூறினார்.
அமெரிக்காவின் மிக்சிகன் பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்றார். பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்தும் அவரால் கோமாவில் இருந்து மீள முடியவில்லை. சுமார் 5 ஆண்டுகளாக அவர் வீட்டிலேயே படுத்த படுக்கையில் இருந்துள்ளார்.
அவரை கோமாவில் இருந்து குணமாக்கி சாதாரண நிலைக்கு கொண்டு வர அவரது தாய் பல முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். எனினும் அதற்கு சரியான பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜெனிபரின் தாய் வீட்டில் தனது மகனுடன் பேசி கொண்டிருந்த போது காமெடி செய்துள்ளார். அதை கேட்ட, ஜெனிபர் சிரித்துள்ளார். இதை கவனித்த அவரது தாய் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.
5 ஆண்டுகளாக கோமாவில் இருந்த தனது மகன் தனது காமெடியை கேட்டு கோமாவில் இருந்து சற்று மீண்டதை அவரால் நம்பமுடியவில்லை. உடனடியாக அவரது மருத்துவரை அணுகி நடந்த சம்பவங்களை கூறினார். இதைத்தொடர்ந்து அவரை பேச வைப்பதற்கும், சாதாரணமாக இயங்க வைப்பதற்குமான நடவடிக்கைகளை மருத்துவ குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி 1.5 லட்சம் லைக்குகளை குவித்தது. பயனர்கள் பலரும் தாங்கள் அந்த நகைச்சுவையை கேட்க வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.
- டிரம்ப், தனது பதவிக்காலத்தில் சீனாவிற்கு 25 சதவீத இறக்குமதி விதித்திருந்தார்
- என் பதவிக்காலத்தில் அவருடன் இணைந்து செயல்பட முடிந்தது என்றார் டிரம்ப்
இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்பொதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் ஒருவரையொருவர் எதிர்த்து களம் இறங்கியுள்ளனர்.
நாட்டின் முன் நிற்கும் சவால்கள் மற்றும் அவற்றிற்கு தாங்கள் பரிந்துரைக்கும் தீர்வுகள் குறித்து இருவரும் பல மாநிலங்களில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
2018ல், தனது பதவிக்காலத்தில் டொனால்ட் டிரம்ப், சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு 25 சதவீத இறக்குமதியை விதித்தார்.
இதற்கு பதிலடியாக சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்காவிலிருந்து தங்கள் நாட்டில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக வரி விதித்தார்.
உலக வர்த்தகத்தில் மிக பெரும் பொருளாதாரங்களான அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே நிலவிய வரிவிதிப்பு போட்டியால் இரு நாட்டு உறவில் சிக்கல் நிலவியது.

இந்நிலையில், டொனால்ட் டிரம்பின் பிரசாரத்தின் போது அவரிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் சீன வர்த்தகம் குறித்து கேட்கப்பட்டது.
அப்போது டிரம்ப் பதிலளித்ததாவது:
தேவைப்பட்டால், அமெரிக்காவிற்கு சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட வேண்டும் என்பதே என் விருப்பம்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை எனக்கு பிடிக்கும். எனது பதவிக்காலத்தின் போது அவர் எனக்கு நல்ல நண்பராகத்தான் இருந்தார். அவருடன் என்னால் இணைந்து செயல்பட முடிந்தது.
ஆனால், சீனாவிற்கு எதிராக நான் எடுத்த சில முடிவுகளை அவர் விரும்பியிருக்க வாய்ப்பில்லை.
3 வருடங்களுக்கு முன்பு வரை, அயல்நாட்டு தலைவர்கள், நம் நாட்டை மிகவும் மதிப்புடன் பார்த்தார்கள். ஆனால், இன்று (பைடன் ஆட்சிக்காலத்தில்) நமது நாட்டை ஒரு கேலிப்பொருளாக எண்ணுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தனது பிரசாரங்களின் போது, தற்போது சீனாவிற்கு "அதிக முன்னுரிமை தரப்படும் நாடு" (most favored nation) எனும் அந்தஸ்து தரப்படுவதை, திரும்ப பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஒலிம்பிக்கில் 2 முறை அமெரிக்கா தங்கம் வெல்ல காரணமாக இருந்தவர் ஜோர்டன்
- ஜோர்டனின் 6 ஜோடி ஷூக்கள் சோத்பி'ஸ் ஏல நிறுவனத்தில் விற்பனைக்கு வந்தது
அமெரிக்காவில் மிகவும் பிரபலமான விளையாட்டு, "பாஸ்கெட் பால்" (basketball) எனும் கூடைப்பந்து. கூடைப்பந்து விளையாட்டில் மிகவும் புகழ் பெற்ற அமெரிக்க சாதனையாளர், மைக்கேல் ஜோர்டன்.
1980களிலும், 90களிலும் கூடைப்பந்து விளையாட்டு பிரபலம் அடைய மைக்கேல் ஜோர்டன் ஒரு முக்கிய காரணம்.
1984 தொடங்கி 2003 வரை ஆண்டுதோறும் நடைபெறும் என்பிஏ ஃபைனல்ஸ் (NBA Finals) எனப்படும் அந்நாட்டின்"தேசிய கூடைப்பந்து சங்கம்" (National Basketball Association) நடத்தும் போட்டித் தொடரில் 6 முறை "சிகாகோ புல்ஸ்" அணிக்காக சாம்பியன்ஷிப் வென்றார் ஜோர்டன்.
மேலும், ஒலிம்பிக் பந்தயங்களிலும் 2 முறை ஜோர்டன் தங்க பதக்கம் வென்றார்.
2003ல் கூடைப்பந்து விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெற்ற ஜோர்டனுக்கு தற்போது 60 வயது ஆகிறது.

இந்நிலையில், மைக்கேல் ஜோர்டன் பயன்படுத்திய "ஸ்னீக்கர்ஸ்" (sneakers) எனப்படும் விளையாட்டுக்கான காலணிகள் ஏலத்தில் விற்பனைக்கு வந்தன. பருமனான கேன்வாஸ் துணியால் தயாரிக்கப்பட்டு ரப்பரில் செய்யப்பட்ட ஸோல்கள் அமைந்த ஜோர்டன் அணிந்த ஸ்னீக்கர்களின் ஏலம் பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது.
பிரபல சோத்பி'ஸ் (Sotheby's) ஏல நிறுவனம் நடத்திய இந்த ஏலத்தில் ஜோர்டன் பயன்படுத்திய 6 ஜோடி ஸ்னீக்கர்கள், ரூ.66,39,96,400.00 ($8 மில்லியன்) தொகைக்கு ஏலம் போனது.
இந்த ஷூக்களை, ஜோர்டன், 1991, 1992, 1993, 1996, 1997 மற்றும் 1998 ஆண்டுகளில் சாம்பியன்ஷிப் போட்டிகளில் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இவற்றை ஏலத்தில் வாங்கியவரின் விவரங்களை ஏல நிறுவனம் தற்போது வரை வழங்கவில்லை.
ஜோர்டன் அணிந்திருந்த ஜெர்ஸி, 2022ல், சுமார் 10 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விலை போனது குறிப்பிடத்தக்கது.
- ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் களமிறங்க தற்போதைய அதிபர் ஜோபைடன் திட்டமிட்டுள்ளார்.
- அதிபர் தேர்தலில் மீண்டும் ஜோபைடன்-டிரம்ப் மோத உள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் களமிறங்க தற்போதைய அதிபர் ஜோபைடன் திட்டமிட்டுள்ளார்.
இதையடுத்து அக்கட்சியின் வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இதில் தெற்கு கரோலினா மாகாணத்தில் நடந்த தேர்தலில் ஜோபைடன் வெற்றி பெற்றார்.
அவர் டீன் பிலிப்ஸ், மரியன்னே வில்லியம்சன் உள்ளிட்டோரை தோற்கடித்தனர். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இதனால் அதிபர் தேர்தலில் மீண்டும் ஜோபைடன்-டிரம்ப் மோத உள்ளனர்.
- கார்ல் வெதர்ஸ் ஒரு தொழில்முறை கால்பந்து வீரராக திகழ்ந்தவர்
- ஸ்டாலோன் மற்றும் ஸ்வார்ஸ்னேக்கர் ஆகியோருடன் இணையாக நடித்தவர்
1976ல் ஹாலிவுட்டின் ஹீரோ சில்வெஸ்டர் ஸ்டாலோன் கதாநாயகனாக நடித்து வெளிவந்த திரைப்படம், ராக்கி (Rocky).
ஸ்டாலோனை புகழேணியின் உச்சாணிக் கொம்பில் நிறுத்திய இத்திரைப்படத்தில், அப்போல்லோ க்ரீட் எனும் பிரபல ஹெவிவெயிட் குத்துச்சண்டை வீரரை, ராக்கி பல்போவா எனும் உள்ளூர் வீரர் போட்டியிட்டு வெல்வார். இதில் ராக்கி பல்போவா கதாபாத்திரத்தில் சில்வெஸ்டர் ஸ்டாலோன் நடித்திருந்தார்.
அப்போல்லோ க்ரீட் கதாபாத்திரத்தில் கார்ல் வெதர்ஸ் (Carl Weathers) எனும் அமெரிக்க தொழில்முறை கால்பந்து வீரர் சிறப்பாக நடித்திருந்தார்.
ராக்கி திரைப்பட நடிகர்களுக்கான தேர்வின் போது (audition), கார்ல் வெதர்ஸ், அங்கு உடன் நடித்த ஸ்டாலோனின் நடிப்பில் உள்ள குறைகளை வெளிப்படையாகவும், துணிச்சலாகவும் விமர்சித்தார்.
கார்ல் வெதர்ஸின் விமர்சனங்களை நேர்மறையாக எடுத்து கொண்ட சில்வெஸ்டர் ஸ்டாலோன், கார்ல் வெதர்ஸ்தான் "அப்போல்லோ க்ரீட்" கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என அவரை தேர்ந்தெடுத்தார். அப்படத்தில் இருவருக்குமான குத்து சண்டை காட்சிகளில் சில இடங்களில், ஒருவரையொருவர் நிஜமாக தாக்கி கொள்ள நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து ராக்கி-2, ராக்கி-3 மற்றும் ராக்கி-4 என 4 பாகங்களிலும் கார்ல் வெதர்ஸ், ஸ்டாலோனுடன் நடித்து புகழ் பெற்றார்.
மேலும், 1987ல் வெளியான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் கதாநாயகனாக நடித்த ப்ரிடேட்டர் (Predator) திரைப்படத்தில் அர்னால்டுக்கு இணையான கதாபாத்திரத்திலும் நடித்து புகழ் பெற்றார்.

கார்ல் வெதர்ஸ், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், தனது 76-வது வயதில் பிப்ரவரி 1 அன்று கார்ல் வெதர்ஸ் காலமானார்.
"பிப்ரவரி 1 அன்று உறக்கத்திலேயே கார்ல் வெதர்ஸின் உயிர் பிரிந்தது. அவர் ஒரு நல்ல குடும்ப தலைவனாக வாழ்ந்தார். விளையாட்டிலும், கலைத்துறையிலும் தனி முத்திரையை பதித்ததை தாண்டி ஒரு மிகச் சிறந்த மனிதராக திகழ்ந்தார்" என கார்ல் வெதர்ஸின் குடும்பம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலோன் உட்பட பல ஹாலிவுட் பிரபலங்கள் கார்ல் வெதர்ஸ் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்து சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- 2021லிருந்து தற்போது வரை 6.3 மில்லியன் அகதிகள் நுழைந்துள்ளனர்
- தாக்கிய அகதிகளில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்; ஒருவர் சிறையில் உள்ளார்
தினந்தோறும் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆண்டுதோறும், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் நாடுகளில் இருந்து கடல் மற்றும் தரை வழியாக ஆபத்தான நீண்ட பயணங்களை மேற்கொண்டு, சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்து சில ஆண்டுகள் தங்கியிருந்து, குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முயல்வது தொடர்கதையாகி வருகிறது.
2021லிருந்து தற்போது வரை மட்டுமே 6.3 மில்லியன் அகதிகள் சட்டவிரோதமாக உள்ளே நுழைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு வரும் அகதிகளால் அமெரிக்காவில் சமீப சில வருடங்களாக சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியின் மையத்தில் உள்ள புகழ் பெற்ற டைம்ஸ் ஸ்கொயர் (Times Square) பகுதியில் ஒரு சிறிய அகதிகள் குடியிருப்பில், கும்பலாக கூடியிருந்த அகதிகள் சிலரை கலைந்து போகுமாறு சில காவல் அதிகாரிகள் கூறினர்.
அவர்கள் அதற்கு மறுத்து, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்களை கைது செய்ய காவல் அதிகாரிகள் முயன்றனர்.
அப்பொது அந்த அகதிகளில் சிலர் காவல் அதிகாரிகளை தாக்கினர். இதில் அந்த அதிகாரிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
சுமார் 12 பேர் ஈடுபட்டதாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பாக 6 அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 5 பேர் பிணையில் விடப்பட்டனர்; ஒருவர் சிறையில் உள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்ட பிறரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவர்கள் ஒரு பேருந்தில் ஏறி தப்பி விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவியதால், இரு கட்சிகளை சேர்ந்த வாக்காளர்களில் பலர், கட்சி பேதம் இன்றி சமூக வலைதளங்களில் இத்தாக்குதலுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.
காவல் துறையினர் மீதான தாக்குதலுக்கு நியூயார்க் காவல்துறையும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், தீவிரமாக களம் இறங்கியுள்ள ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கும், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் "சட்டவிரோத அகதிகள்" பிரச்சனை, வாக்காளர்களை ஈர்க்கும் அம்சமாக மாறி உள்ளது.
- ராக்கெட்டை தானம் செய்ய விரும்புவதாக அருங்காட்சியகத்திற்கு அழைப்பு வந்தது
- 1962 காலகட்டத்திலேயே டக்ளஸ் ஏர்-2 ஜீனி ரக ராக்கெட் தயாரிப்பு நிறுத்தப்பட்டது
பல வருடங்களுக்கு முன், அமெரிக்காவின் வாஷிங்டன் மாநில பெல்லவ்யூ (Bellevue) நகரில் ஒருவர் மிக பெரிய எஸ்டேட் ஒன்றை விலைக்கு வாங்கினார். அதை வாங்கிய போது அதில் ஒரு பழமையான பொருளும் கிடைத்தது.
அவர் காலமானதும், அவரது பக்கத்து வீட்டுக்காரர் ஒஹையோ (Ohio) மாநில டேடன் (Dayton) பகுதியில் உள்ள அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான அருங்காட்சியகத்திற்கு அழைப்பு விடுத்து, தனது வீட்டின் வாகன பழுதுபார்க்கும் இடத்தில் உள்ள ஒரு "ராக்கெட்டை" அருங்காட்சியகத்திற்கு தானமாக வழங்க விரும்புவதாகவும், அது வெடிக்க கூடிய ஆபத்தான நிலையில் உள்ளதா என ஆய்வு செய்து கூறவும் அருங்காட்சிய அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து உடனடியாக அந்த அருங்காட்சியக அதிகாரிகள், பெல்லவ்யூ காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு விவரத்தை கூறினர்.

தொடர்ந்து பெல்லவ்யூ காவல் நிலைய அதிகாரிகள், அழைப்பு விடுத்தவரின் இல்லத்திற்கு சென்றனர். தகவல் தெரிவிக்கப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு விரைந்து வந்தனர்.

அங்கு வெடிகுண்டு நிபுணர்கள், "டக்ளஸ் ஏர்-2 ஜீனி" (Douglas AIR-2 Genie) ரக வான்வழி ராக்கெட் ஒன்றின் பாகத்தை கண்டனர்.
துருப்பிடித்த நிலையில் இருந்த அந்த பாகம், சுமார் 1.5 கிலோ டன் எடையுள்ள அணு ஆயுதத்தை தாங்கி செல்லும் திறன் வாய்ந்த ராக்கெட்டின் பாகமாகும்.
1962ல் இத்தகைய ராக்கெட்டுகளின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இவை அமெரிக்க ராணுவத்தின் விமானப்படையால் ரஷிய-அமெரிக்க பனிப்போர் காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டன. அப்போது இருந்த டக்ளஸ் விமான தயாரிப்பு நிறுவனத்தால் இவை தயாரிக்கப்பட்டன.

1997ல் அந்நிறுவனம் பிரபல விமான உற்பத்தி நிலையமான போயிங் (Boeing) நிறுவனத்துடன் இணைந்தது.
மிக பழமையான அப்பொருளை பரிசோதித்த நிபுணர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்ததாவது:
அந்த துருப்பிடித்த பழமையான பாகம், ராக்கெட்டின் எரிபொருளுக்கான "கேஸ் டாங்க்" பகுதி. அதில் எந்த எரிபொருளும் மிச்சம் இல்லை. அதில் ஏவுகணை ஏதும் இணைக்கப்படவும் இல்லை. அது எந்த வகையிலும் ஆபத்தில்லாதது.
இவ்வாறு நிபுணர்கள் உறுதிபட கூறினர்.
தொடர்ந்து அதன் உரிமையாளர், தனக்கு விருப்பமான அருங்காட்சியகத்திற்கு அதை வழங்கிட காவல் மற்றும் வெடிகுண்டு அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.
- ஜோர்டான் எல்லைப் பகுதியில் நடைபெற்ற டிரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- அமெரிக்க வீரர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது.
ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள், கிளர்ச்சி குழுக்கள் ஈராக், சிரியா போன்ற நாடுகளில் உள்ளன. இந்த குழுக்கள் அமெரிக்கப்படைகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு அமெரிக்காவும் பதிலடி கொடுத்து வருகிறது.
சில தினங்களுக்கு முன் ஜோர்டானில் உள்ள அமெரிக்க வீரர்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 அமெரிக்கா வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது. ஒருமுறை மட்டும் தாக்குதல் நடத்தப்படாது. பதிலடியாக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது.
இந்த நிலையில ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஆயுதக்குழுக்கள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்களை குறிவைத்து 12-க்கும் மேற்பட்ட இடங்களில் அமெரிக்கா அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. நீண்டதூரம் சென்று தாக்கும் குண்டுகளை பயன்படுத்தி இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில் "அமெரிக்க வீரர்களுக்கு தீங்கி விளைவித்தால், அதற்கு சரியான பதில் கொடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் இந்த தாக்குதல் இறையாண்மை மீறல் என ஈராக் கண்டனம் தெரிவித்துள்ளது.
- தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை விரைவாக அணைத்தனர்.
- மத்திய புலனாய்வாளர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்வார்கள் என தகவல்.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் அமைந்திருக்கும் மொபைல் ஹோம் பார்க்கில் இன்று ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் இருந்தவர்களும், வீட்டில் இருந்த பலரும் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒற்றை எஞ்சின் கொண்ட பீச்கிராஃப்ட் பொனான்சா வி35 விமானத்தின் பைலட், விமானம் விபத்துக்குள்ளான சிறிது நேரம் முன்பு எஞ்ஜின் செயலிழந்தது என்று அறிவித்ததாக ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்துள்ளது.
வீட்டின் மீது விமானம் விழுந்ததில் மூன்று வீடுகள் தீக்கு இரையானது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை விரைவாக அணைத்தனர்.
இதுகுறித்து கிளியர்வாட்டர் தீயணைப்புத் தலைவர் ஸ்காட் எஹ்லர்ஸ்," விபத்துக்குள்ளான விமானம் ஒரே கட்டமைப்பில் கண்டுபிடிக்கப்பட்டது," என்றார்.
இந்த விபத்தில், எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள் என்ற விபரம் வெளிவரவில்லை. என்றாலும் விமானம் விழுந்த வீட்டிலும், விபத்தில் சிக்கிய விமானத்திலும் பலர் இருந்ததாக தெரியவந்துள்ளது.
மத்திய புலனாய்வாளர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்வார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
- இந்த மாதத்தில் இதுவரை நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் ஒஹியோவில் படித்து வந்த இந்திய மாணவர் மரணம் அடைந்துள்ளார். நேற்று அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், உடல் பரிசோதனைக்கான அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடல் பரிசோதனை முடிவில்தான் அவர் எப்படி இறந்தார் எனத் தெரியவரும்.
இந்த மாதத்தில் இது 4-வது சம்பவம். இதற்கு முன்னதாக மூன்று இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியுட்டுள் செய்தியில் கூறியிருப்பதாவது:-
துரதிருஷ்டவமாக ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகெரி உயிரிழந்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வன்முறை போன்ற செயல்களால் கொலை நடந்திருக்குமா? என்று சந்தேகிக்கப்படவில்லை. அவரது குடும்பத்தினரை தொடர்ந்து தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை செய்ய தூதரகம் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில் கடந்த திங்கட்கிழமை பர்டூ பல்கலைகலைக்கழத்தில் படித்து வந்த நீல் ஆச்சார்யா என்ற மாணவர் மரணம் அடைந்தார். ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன நிலையில் திங்கட்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
ஜனவரி 16-ந்தேதி ஜார்ஜியாவில் உள்ள லிதோனியாவில் அரியானாவைச் சேர்ந்த விவேக் சைனி மரணம் அடைந்தார்.
இல்லினாய்ஸ் அர்பானா-சாம்பெய்ன் பல்கலைக்கழகத்தில் படித்த வந்த அகுல் தவான் இந்த மாதத்தின் தொடக்கத்தில் மரணம் அடைந்தார். 18 வயதான அகுல் கடுங்குளிர் காரணமாக உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் பல்கலைக்கழக போலீஸ் துறையின் கவனக்குறைவுதான் அகுல் தவானுக்கு காரணம் என குற்றம்சாட்டினர்.
- செனட்டர் ஜோஷ் ஹாவ்லி, ஜுக்கர்பெர்கிடம் "மன்னிப்பு கேட்பீர்களா?" என கேட்டார்
- டிக்டாக், ஸ்னாப், எக்ஸ் மற்றும் டிஸ்கார்ட் நிறுவனங்களும் விசாரணை வளையத்தில் உள்ளன
உலகின் முன்னணி சமுக வலைதளமான இன்ஸ்டாகிராம் மற்றும் மெட்டா (முன்னர் ஃபேஸ்புக்) நிறுவனர், மார்க் ஜுக்கர்பெர்க் (39).
நேற்று, சமூக வலைதளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் தாக்கம் மற்றும் குழந்தைகள் மீதான தாக்குதல் சம்பந்தமான வீடியோக்கள் குறித்து அந்நிறுவனங்களின் மீது பலர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளின் மீது அமெரிக்க செனட் விசாரணை நடத்தியது.
இதில் ஜுக்கர்பெர்க் நேரில் பங்கேற்று தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார்.
விசாரணை தொடங்கியதும் ஊடகங்களில் குழந்தைகள் மீதான தாக்குதல் குறித்த வீடியோவை விசாரணைக்குழு ஒளிபரப்பியது. இதில் பல உயிரிழப்பு சம்பவங்கள் குறித்தும் நேரடியாக கேள்விகள் கேட்கப்பட்டன.

குடியரசு கட்சியின் செனட்டர் ஜோஷ் ஹாவ்லி (Josh Hawley), ஜுக்கர்பெர்கை நோக்கி, "உங்கள் வலைதள உள்ளடக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்பீர்களா?" என கேட்டார்.
அப்போது, ஜுக்கர்பெர்க் எழுந்து நின்று கொண்டு அக்குடும்பத்தினரை நோக்கி பேசினார்.
அவர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
நீங்கள் அனைவரும் அனுபவித்த கொடுமையான துன்பங்களுக்கு நான் வருந்துகிறேன். உங்கள் குடும்பங்கள் அனுபவித்த துயரங்கள் வேறு எவருக்கும் வர கூடாது. என்னை மன்னியுங்கள்.
இவ்வாறு ஜுக்கர்பெர்க் கூறினார்.
சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்த நிறுவனங்கள் பொறுப்பேற்கும் வகையில் ஒரு சட்டம் வரையறுக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக அமெரிக்க அரசு முயன்று வருகிறது.
இது குறித்து பல வலைதளங்களின் நிறுவனர்கள் செனட் சபைக்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் விவாதம் நடத்தி கருத்துகள் கேட்கப்படுகின்றன.

மெட்டா அதிபர் மட்டுமின்றி, டிக்டாக், ஸ்னாப், எக்ஸ் மற்றும் டிஸ்கார்ட் ஆகிய நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் செனட் சபை விசாரணையில் பங்கேற்றனர்.
அவர்கள் செனட்டின் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி உறுப்பினர்களால் சுமார் 4 மணி நேரங்களுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டனர்.






