என் மலர்
அமெரிக்கா
- மாணவர்களின் பெற்றோர் இந்தியாவில் அச்சத்தில் உள்ளதாக அஜய் தெரிவித்தார்
- தாக்குதல்களை தடுக்க ஒருங்கிணைந்து செயல்படுகிறோம் என்றது வெள்ளை மாளிகை
கடந்த சில வாரங்களில் அமெரிக்காவில், அடுத்தடுத்து இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நிகழ்ச்சிகள் நடப்பது உலகெங்கும் உள்ள இந்தியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கடந்த ஜனவரியில் ஜியார்ஜியா மாநில லித்தொனியாவில், விவேக் சாய்னி எனும் மாணவர் போதை பழக்கத்திற்கு அடிமையானவரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
பிப்ரவரி மாத தொடக்கத்தில் சையத் மசாஹிர் அலி எனும் இந்தியாவை சேர்ந்த அமெரிக்க பல்கலைக்கழக மாணவர் தாக்கப்பட்டார்.
ஒகையோ மாநிலத்தில் நிர்வாக மேலாண்மை பட்டம் படித்து வந்த இந்தியாவை சேர்ந்த ஸ்ரேயஸ் ரெட்டி பெனிகேரி உயிரிழந்தார்.
இந்திய அமெரிக்க சமூகத்திற்கான தலைவர் அஜய் ஜெயின் புடோரியா இது குறித்து தெரிவித்ததாவது:
வெவ்வேறு சம்பவங்களில் பல இந்திய மாணவர்கள் உயிரிழப்பது, இந்தியர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை கோடிட்டு காட்டுகிறது. கல்லூரிகளும், காவல்துறையும் இணைந்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இத்தகைய சம்பவங்களினால் மாணவர்களின் பெற்றோர்களும், உறவினர்களும், இந்தியாவில் மிகுந்த மன வருத்தத்திலும் அச்சத்திலும் உள்ளனர். அவர்களின் கவலையை போக்கும் வகையில் அனைத்து கட்டமைப்புகளையும் வலுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு ஜெயின் கூறினார்.
இது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கான வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்ததாவது:
இனம், மதம், பாலினம் உள்ளிட்ட எந்த காரணங்களுக்காகவும் வன்முறை சம்பவங்கள் நடப்பதை அமெரிக்கா ஒரு போதும் சகித்து கொள்ளாது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம், அமெரிக்காவில் தங்கி படித்து வரும் இந்திய மாணவர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களை தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அதிபர் ஜோ பைடன் தீவிரமாக உள்ளார்.
மாநில அரசுகளுடனும், உள்ளூர் நிர்வாகத்துடனும் மத்திய அரசு கலந்தாலோசித்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தங்கள் செயலுக்கு பொறுப்பேற்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இவ்வாறு கிர்பி தெரிவித்தார்.
- ஏ.சி. அல்லது ஹீட்டரில் இருந்து விஷவாயு கசிந்து 4 பேரும் இறந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.
- 4 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் சுஜித் ஹென்றி(வயது38). இவரது மனைவி அலைஸ் பிரியங்கா(37). இவர்கள் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பணிபுரிந்து வந்தனர். சுஜித் ஹென்றி பிரபல நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்திருக்கிறார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அலைஸ் பிரியங்காவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. கணவன்-மனைவி இருவரும் தங்களது மகன்கள் நோவா மற்றும் நாதன் ஆகியோருடன் கலிபோர்னியாவில் சான்மேட்டியோ பகுதியில் வசித்து வந்தார்கள்.
விடுமுறை கிடைக்கும் போது சொந்த ஊருக்கு வந்து சென்றிருக்கின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு அலைஸ் பிரியங்காவுக்கு, கேரளாவில் உள்ள அவரது தாய் போனில் அழைத்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.
இதனால் கலிபோர்னியாவில் உள்ள தங்களது உறவினர் ஒருவருக்கு போன் செய்து, அலைஸ் பிரியங்கா வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியிருக்கிறார். அதன்படி அவர்களும், அங்கு சென்றனர். அங்கு வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப் பட்டிருந்தது.
எவ்வளவு அழைத்தும் யாரும் கதவை திறக்க வில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள், அது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றனர்.
அப்போது அங்கு சுஜித் ஹென்றி, அவரது மனைவி அலைஸ் பிரியங்கா மற்றும் அவர்களது 2 மகன்கள் உள்ளிட்ட 4 பேரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். ஏ.சி. அல்லது ஹீட்டரில் இருந்து விஷவாயு கசிந்து 4 பேரும் இறந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.
ஆனால் சுஜித் ஹென்றி, அலைஸ் பிரியங்கா ஆகிய இருவரின் உடலிலும் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்கள் இருந்தன. மேலும் அவர்களது வீட்டில கைத்துப்பாக்கி ஒன்றும் கிடந்துள்ளது. இதனால் சுஜித் ஹென்றி தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருக்காலம் என்று கருதப்படுகிறது.
ஆனால் குழந்தைகளின் உடலில் துப்பாக்கி குண்டு காயங்கள் எதுவும் இல்லை. ஆகவே அவர்களது மரணத்துக்கான காரணம் தெரியவில்லை. கணவன்-மனைவி இருவரின் உடலிலும் துப்பாக்கி குண்டு காயங்கள் இருப்பதால், அவர்கள் தங்களின் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுத்து கொலை செய்துவிட்டு, அவர்களும் உயிரை மாய்த்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
4 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிவில் குழந்தைகள் எப்படி இறந்தன என்பது தெரியவரும். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பூட்டிய வீட்டுக்குள் இறந்துகிடந்த சம்பவம் கலிபோர்னியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த வருடம், புளோரிடா மாநிலத்திற்கு பெசோஸ் குடி பெயர்ந்தார்
- வாஷிங்டனில் பங்கு விற்கும் வருவாயில் 7 சதவீதம் வரி செலுத்த வேண்டும்
1994ல் அமெரிக்காவில் ஜெப் பெசோஸ் (Jeff Bezos) உருவாக்கிய நிறுவனம், அமேசான் (Amazon).
2021ல் இந்நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து ஜெப் பெசோஸ் விலகினார். பெசோஸ் விலகியதை தொடர்ந்து ஆண்டி ஜாசி (Andy Jassy) தலைமை செயல் அதிகாரியாக அமேசானை நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது 60 வயதாகும் ஜெப் பெசோஸ், தன் வசமிருந்த அமேசான் நிறுவன $4 பில்லியன் மதிப்புடைய பங்குகளை விற்று விட்டார்.
கடந்த வருடம், பெசோஸ், வாஷிங்டன் மாநிலத்திலிருந்து புளோரிடா மாநிலத்திற்கு குடி பெயர்ந்தார்.
வாஷிங்டன் மாநிலத்தில் $250,000 மதிப்பிற்கு மேல் நிறுவனத்தின் பங்குகளை விற்றால், அதற்கு 7 சதவீதம் மாநில வரி செலுத்த வேண்டும். ஆனால், புளோரிடா மாநிலத்தில் பங்குகள் விற்பனையில் ஈட்டும் வருவாய்க்கு மாநில வரி கட்ட தேவையில்லை.
இதன் மூலம் $280 மில்லியன் மதிப்பிலான தொகையை பெசோஸ் சேமிக்க முடியும்.
2021ல் தனது பங்குகளில் கணிசமானவற்றை விற்ற பெசோஸ், தற்போது பெருமளவு மீண்டும் விற்றுள்ளார். தனது பங்குகளை விற்பனை செய்த நிலையிலும் அமேசானின் பிரதான பங்குதாரராக ஜெப் பெசோஸ் உள்ளார். அவரது நிகர மதிப்பு சுமார் $190 பில்லியனுக்கும் மேல் உள்ளது.
1994ல் நியூயார்க் நகரில் இருந்து சியாட்டில் நகருக்கு செல்லும் ஒரு பயணத்தின் போது பெசோஸ், இணையதளம் வழியாக புத்தகங்களை வாங்கவும், விற்கவும் ஒரு நிறுவனத்தை தொடங்க எண்ணி உடனடியாக செயல்பட தொடங்கினார்.
அவ்வாறு உருவான அமேசான், இன்று இணையவழி சில்லறை வணிகத்தில் உலகின் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக அமேசான் நிறுவன பங்குகள் அமெரிக்க பங்கு சந்தையில் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தானில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
- நவாஸ் ஷெரீப்- பிலாவல் பூட்டோ கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன.
பாகிஸ்தானில் கடந்த வாரம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இம்ரான் கான், நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ ஆகியோர் கட்சிகளுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவி வருகிறது.
பாகிஸ்தானை காப்பாற்ற நவாஸ் ஷெரீப்- பிலாவல் பூட்டோ ஆகியோர் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து இரு கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே தனிப்பட்ட முறையில் நாங்கள்தான் அதிக இடம் பெற்றுள்ளோம். அதனால் எங்களைத்தான் ஆட்சி அமைக்க அழைப்பார்கள் என இம்ரான் கான் கட்சி தெரிவித்து வருகிறது.
இதனால் இரண்டு பக்கத்தில் இருந்தும் வெற்றி பெற்றவர்களை இழுப்பதற்கான குதிரை பேரம் நடைபெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் எந்த அரசு அமைந்தாலும் அதனுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தேர்தலின்போது முறைகே நடைபெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மொத்தமுள்ள 264 இடங்களில் ஆட்சியை பிடிக்க 133 இடங்கள் தேவை. தனிப்பட்ட கட்சி அளவில் எடுத்துக் கொண்டால் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது. நாவஸ் ஷெரீப் மற்றும் பிலாவல் பூட்டோ கட்சியை தவிர்த்து மற்ற கட்சிகளுடன் சேர்த்து பார்த்தால் இம்ரான் கானுக்கு சரியாக 135 இடங்கள் வரும். இது ஆட்சி அமைக்க போதுமானது.
நவாஸ் ஷெரீப் பிலாவல் பூட்டோ கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளார். இவர்களுக்கு (75+54) 129 இடங்கள் உள்ளன. இன்னும் 4 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. சுயேட்சை வேட்பாளர்களை இழுக்க வாய்ப்புள்ளது. அல்லது சிறிய கட்சிகளை இணைத்துக் கொள்ளலாம்.
- 27 சதவீத வாக்காளர்கள் ஜோ பைடனை அதிக வயதின் காரணமாக நிராகரித்தனர்
- 62 சதவீத வாக்காளர்கள் டிரம்பை அதிக வயதின் காரணமாக நிராகரித்தனர்
2024 நவம்பர் மாதம், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.
தேர்தலையொட்டி பல்வேறு கேள்விகளுடன் மக்களை சந்தித்து கருத்து கணிப்புகளையும், புள்ளி விவரங்களையும் பல அமைப்புகள் தெரிவிக்கினறன.
வேட்பாளர்களின் வயது குறித்து கருத்து கேட்கப்பட்ட ஒரு கருத்து கணிப்பின் முடிவு நேற்று வெளியானது.
அமெரிக்கர்களில் 86 சதவீத வாக்காளர்கள், ஜோ பைடனுக்கு 81 வயதாவதால், அப்பதவிக்கு அவர் பொருத்தமானவர் அல்ல என தெரிவித்தனர். தற்போது 77 வயதாகும் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன், இருவருமே இப்பதவியில் அமர பொருத்தமற்றவர்கள் என கூறிய 59 சதவீதம் பேரும் இப்பட்டியலில் அடங்குவர்.
27 சதவீத வாக்காளர்கள் அதிபர் பதவியில் அமர ஜோ பைடனை மட்டுமே அதிக வயதுடையவராக கருதுகின்றனர்.
62 சதவீத வாக்காளர்கள் அதிபராக பணியாற்ற டொனால்ட் டிரம்பை மட்டுமே அதிக வயதுடையவராக கருதுகின்றனர்.
சில மாதங்களாகவே, 75 வயதை கடந்தும், உலகிலேயே நம்பர் 1 பதவியான அமெரிக்க அதிபர் பதவிக்கு முன்னணி வேட்பாளர்களாக களமிறங்கி உள்ள இருவரின் அதிக வயதும், பல வாக்காளர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2023 செப்டம்பர் மாதம், பைடனின் அதிக வயது காரணமாக அப்பதவிக்கு அவர் தகுதியானவர் அல்ல என 74 சதவீதம் பேரும், 49 சதவீதம் பேர் டிரம்ப் தகுதியானவர் அல்ல என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- அமெதிலியா எம் டண்டன் ஆன்லைன் மூலம் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
- கோவிட் 19 பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தாம்பத்தியம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட பாஸ்டன் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் அமெதிலியா எம் டண்டன் ஆன்லைன் மூலம் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
இது குறித்து ஜன்னல் ஆப் செக்ஸ்வல் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரையில், கோவிட் 19 பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தாம்பத்தியம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக நீண்ட நாட்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியலில் அதிக அளவில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களுக்கு பாலியல் நல்வாழ்வில் உடலில் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆன்லைன் ஆய்வில் பங்கேற்ற பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் கொரோனா பாதிப்பு இல்லை என தெரிவித்தனர். மீதி பெண்கள் ஆசை தூண்டுதல் உணர்வு மற்றும் திருப்தி இல்லை என தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
- நேட்டோ அமைப்பிடம் உதவி கோரி வருகிறது உக்ரைன்
- நிதி பங்களிப்பை செலுத்துங்கள் என கூறியதாக டிரம்ப் தெரிவித்தார்
2022 பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர் தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் உக்ரைன் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது.
சில மாதங்களாக ராணுவ தளவாட கையிருப்பு குறைந்துள்ளதாக கூறி மேற்கத்திய நாடுகளிடமும், நேட்டோ (NATO) அமைப்பிடமும் உக்ரைன் உதவி கோரி வருகிறது.
ரஷியாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் உக்ரைனுடன் நிற்காமல் மேலும் பல நாடுகளுக்கு பரவலாம் என அரசியல் விமர்சகர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தனது பிரசாரத்தில் குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இது குறித்து பேசினார்.
அதில் டிரம்ப், தனது பதவிக்காலத்தில் நேட்டோ அமைப்பில் இருந்த ஒரு உறுப்பினர் நாட்டின் தலைவருடன் (பெயர் குறிப்பிடாமல்) அவர் நிகழ்த்திய கலந்துரையாடலை தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
ஒரு பெரிய நாட்டின் அதிபர் என்னிடம், நாங்கள் நேட்டோ அமைப்பிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காத நிலையில், ரஷியா எங்களை தாக்கினால் நீங்கள் எங்களை காப்பீர்களா? என கேட்டார்.
நீங்கள் செலுத்த வேண்டிய நிதியை செலுத்த தவறும் பட்சத்தில் நான் உங்களை காக்க முடியாது. இன்னும் சொல்ல போனால், இவர்களை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என ரஷியாவிடம் கூறி விடுவேன்.
நிதி பங்களிப்பில் உங்கள் பங்கை நீங்கள் செலுத்தியாக வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தேன்.
இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.
ரஷிய-உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை $110 பில்லியன் மதிப்பிற்கு அமெரிக்கா உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.
- குடியரசு கட்சியில் டிரம்ப் முன்னிலை வகித்தாலும் நிக்கி பின்வாங்கவில்லை
- என்னுடன் நேரடியாக விவாதித்து முகத்திற்கு நேராக கேளுங்கள் என்றார் நிக்கி
2024 வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.
குடியரசு கட்சியிலேயே டிரம்பிற்கு மாற்றாக தென் கரோலினா மாநில முன்னாள் கவர்னராகவும், ஐ.நா. சபையின் முன்னாள் அமெரிக்க தூதராகவும் பணிபுரிந்த நிக்கி ஹாலே (Nikki Haley) ஆதரவு கோரி பிரசாரம் செய்து வருகிறார்.
தற்போதைய நிலவரப்படி குடியரசு கட்சியில் டிரம்ப் முன்னிலை வகித்தாலும், நிக்கி போட்டியிலிருந்து பின்வாங்கவில்லை.
தென் கரோலினாவில் இருவரும் தங்கள் பிரசாரத்தில் ஒருவரையொருவர் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில், தனது பிரசாரத்தில் டொனால்ட் டிரம்ப், நிக்கி ஹாலேவை விமர்சிக்கும் வகையில், "அவரது கணவருக்கு என்ன ஆனது? எங்கிருக்கிறார்? அவர் ஏன் நிக்கிக்கு ஆதரவாக பிரசாரத்திற்கு வரவில்லை?" என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்து நிக்கி தெரிவித்திருப்பதாவது:
தென் கரோலினா பிரசாரத்தில் டிரம்ப் எனது கணவரின் ராணுவ சேவையை கேலி செய்தார். என் கணவருக்காக நான் பெருமைப்படுகிறேன். ராணுவத்தில் பணியாற்றும் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் அந்த தியாகம் புரியும்.
டொனால்ட் டிரம்ப் அவர்களே, மைக்கேல் (என் கணவர்) நாட்டிற்கு சேவை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்படி என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியாது.
உங்களுக்கு என்னை பற்றி ஏதாவது கருத்து கூற வேண்டுமென்றால் என்னுடன் நேருக்கு நேராக விவாதத்திற்கு வாருங்கள். அங்கு என் முகத்திற்கு நேராக கேள்விகளை கேளுங்கள்.
போர்க்களத்தில் நாட்டிற்காக போராடுபவரை நீங்கள் கேலி செய்வீர்கள் என்றால் நீங்கள் – அமெரிக்க அதிபர் பதவிக்கு மட்டும் அல்ல - அமெரிக்க ஓட்டுனர் உரிமம் பெற கூட தகுதியற்றவர்.
இவ்வாறு நிக்கி கூறினார்.
- பம்பார்டியர் சேலஞ்சர் ரக சிறு விமானத்தில் 5 பேர் பயணித்தனர்
- இன்டர்ஸ்டேட்-75 நெடுஞ்சாலையில் பைன் ரிட்ஜ் சாலையில் விமானம் விழுந்தது
அமெரிக்காவின் ஓகையோ (Ohio) மாநில பல்கலைக்கழக விமான நிலையத்தில் இருந்து பம்பார்டியர் சேலஞ்சர் 600 ரக சிறிய விமானம் ஒன்று புறப்பட்டு, புளோரிடாவின் நேபிள்ஸ் (Naples) விமான நிலையத்தில் தரையிறங்கி, மீண்டும் அங்கிருந்து ஃபோர்ட் லாடர்டேல் எக்ஸிக்யூடிவ் விமான நிலையத்திற்கு செல்வதாக இருந்தது.
இந்த விமானத்தில் 5 பேர் பயணித்தனர்.
புளோரிடா விமான நிலையத்தை நெருங்கும் போது இரு எஞ்சின்களும் செயலிழந்ததாக விமானி தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.
அவர்கள் விமானத்தை ஓடுபாதையில் அவசரமாக தரையிறக்கும்படி அறிவுறுத்தி, அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
ஆனால், கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம், நேபிள்ஸ் நகர இன்டர்ஸ்டேட்-75 (Interstate-75) நெடுஞ்சாலையில், பைன் ரிட்ஜ் சாலை பகுதியில் விழுந்தது.
கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம், நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு பிக்-அப் டிரக் வாகனத்தின் மேல் இடித்து, நெடுஞ்சாலையை தொட்டு, சுமார் 30 அடி தூரம் அங்குமிங்கும் ஓடி, பெரிய கான்க்ரீட் சுவற்றின் மீது மோதியது.

இதை தொடர்ந்து அந்த விமானம் தீப்பிடித்து எறிந்தது. இந்த விமானத்தில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர்.
விமானம் மோதியதில் டிரக்கின் மேற்பகுதி உடைந்தது. மோதிய அதிர்ச்சியில் அந்த டிரக் நிலைதடுமாறி ஓடி, சாலையில் கவிழ்ந்தது.
ஆனால், அதிர்ஷ்டவசமாக அதன் ஓட்டுனர் உயிர் தப்பினார்.
விமானம் விழுவதை கண்டு உதவ முன் வந்த பொதுமக்கள், அது தீப்பிடித்ததை கண்டு அங்கிருந்து ஓடிச் சென்றனர்.
இதை தொடர்ந்து, சாலையின் இருபுறமும் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும், மத்திய வான்வழி போக்குவரத்து நிர்வாகமும் இணைந்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றன.
- அமெரிக்காவுடன் இந்தியா ஒரு கூட்டாளியாக இருக்க விரும்புகிறது.
- அமெரிக்கர்கள் வெற்றி பெறவும், வழி நடத்துவதும் இந்தியா நம்பவில்லை. நாங்கள் பலவீனமாக இருப்பதாக அவர்கள் பார்க்கிறார்கள்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்- இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தெற்கு கரோலினா முன்னாள் கவர்னருமான நிக்கி ஹாலே இடையே போட்டி நிலவுகிறது. இதில் டிரம்ப் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். நிக்கி ஹாலேவுக்கு கட்சி பிரதிநிதிகளிடம் ஆதரவு இல்லை.
இந்தநிலையில் இந்தியா மீது நிக்கி ஹாலே திடீர் குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
அமெரிக்காவுடன் இந்தியா ஒரு கூட்டாளியாக இருக்க விரும்புகிறது. ஆனால் தற்போது அவர்கள் (இந்தியா) அமெரிக்கா தலைமை தாங்குவதை நம்பவில்லை. தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில் இந்தியா புத்திசாலித்தனமாக விளையாடி ரஷியாவுடன் நெருக்கமாக இருக்கிறது. ரஷியாவிடம் இருந்து ராணுவ உபகரணங்களை வாங்குகிறார்கள்.
நான் இந்தியாவை கையாண்டிருக்கிறேன். அமெரிக்கர்கள் வெற்றி பெறவும், வழி நடத்துவதும் இந்தியா நம்பவில்லை. நாங்கள் பலவீனமாக இருப்பதாக அவர்கள் பார்க்கிறார்கள். சீனா, பொருளாதார ரீதியாக நன்றாக இல்லை. அந்த நாடு அமெரிக்காவுடன் பல ஆண்டுகளாக போருக்கு தயாராகி வருகிறது. அது அவர்களுக்கு தவறாக முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் பிரசாரத்தின்போது நிக்கி ஹாலேவை இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்று டிரம்ப் விமர்சனம் செய்தார். இதையடுத்து அதை தவிர்ப்பதற்காக இந்தியா மீது நிக்கி ஹாலே திடீரென்று குற்றச்சாட்டுக்களை கூறியிருப்பதாக கருதப்படுகிறது.
- 2022 அக்டோபர் மாதம், ஈதன் தனது குற்றத்தை ஒப்பு கொண்டான்
- ஜெனிஃபருக்கு 15 வருட சிறைக்கு வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்
அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாநிலத்தின் ஆக்ஸ்போர்டு டவுன்ஷிப் (Oxford Township) பகுதியில் உள்ளது ஆக்ஸ்போர்டு உயர்நிலை பள்ளி.
2021 நவம்பர் மாதம், இப்பள்ளியில் 15-வயது ஈதன் ராபர்ட் க்ரம்ப்லி (Ethan Robert Crumbley) எனும் மாணவன், 9 மில்லிமீட்டர் செமி-ஆட்டோமேடிக் கைத்துப்பாக்கியால் தாறுமாறாக பலரை சுட்டான். இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்; 7 பேர் காயமடைந்தனர்.
காவல்துறையினரால் ஈதன் கைது செய்யப்பட்டு பல்வேறு பிரிவுகளில் அவன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
2022 அக்டோபர் மாதம், நீதிமன்றத்தில் ஈதன் தனது குற்றத்தை ஒப்பு கொண்டான்.
2023 டிசம்பர் மாதம், பரோலில் வெளியே வரமுடியாதபடி ஈதனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
மேலும், ஈதனின் தாய் மற்றும் தந்தை ஆகியோரும் இக்குற்றத்திற்கு மறைமுகமாக உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விசாரணைக்கு அவர்கள் வராமல் தப்பியதால், நீண்ட தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை நிறைவுற்று, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
12 உறுப்பினர்களை கொண்ட ஜூரி 10 மணி நேரத்திற்கும் மேல் விவாதித்து முடிவு எட்டப்பட்ட இந்த தீர்ப்பில், ஈதனின் தாயார் ஜெனிஃபர் க்ரம்ப்லி (45), ஈதன் கைக்கு கிடைக்காதவாறு துப்பாக்கியை பாதுகாப்பாக வைத்து கொள்ள தவறியதே உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம் என்பதால் அவர் குற்றவாளிதான் என தீர்ப்பானது.
இதையடுத்து, ஏப்ரல் 9 அன்று அவரது தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும்.
குறைந்தது 15 வருட தண்டனையாவது ஜெனிஃபருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க பள்ளிகளில் மாணவர்கள் நடத்தும் துப்பாக்கி சூடு சம்பவங்களில் இதுவரை பெற்றோருக்கு பொறுப்பு உள்ளதாக நீதிமன்றங்கள் கூறி வந்த நிலையில் முதல்முறையாக மாணவனின் தாய்க்கும் தண்டனை வழங்கப்பட்டது விவாத பொருளாக மாறியுள்ளது.
விசாரணையின் போது, "தங்கள் குழந்தைகள் ஈடுபடும் அனைத்து செயல்களுக்கும் பெற்றோர் எவ்வாறு பொறுப்பாக முடியும்" என ஜெனிஃபர் தரப்பு வழக்கறிஞர் ஷெனன் ஸ்மித் கேள்வி எழுப்பினார். ஆனால், அவரது கேள்வி புறக்கணிக்கப்பட்டது.
வரும் மார்ச் மாதம், ஈதனின் தந்தை ஜேம்ஸ் க்ரம்ப்லி மீது வழக்கு விசாரணை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
- கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து 4 இந்திய மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- தற்போது இந்திய மாணவர் மீது கொடூர தாக்குதல் நடந்துள்ளது.
சிகாகோ:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள லங்கார் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் சையத் மசாஹிர் அலி. இவர் அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இண்டியானா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இவர் நேற்று தான் வசிக்கும் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 4 வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்ததால், சையத் மசாஹிர் அலி தனது வீட்டுக்கு வேகமாக ஓடினார்.
உடனே அவரை அக்கும்பல் விரட்டி சென்று பிடித்தது. பின்னர் இந்திய மாணவரை கொடூரமாக அக்கும்பல் தாக்கி அடித்து உதைத்தது. மாணவரிடம் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
Attacks on Indian students are increasing recently in the US. Syed Mazahir Ali from Telangana got injured after 3 men attacked him in Chicago. pic.twitter.com/KGWZVgQ2MN
— Indian Tech & Infra (@IndianTechGuide) February 7, 2024
கொள்ளையர்கள் தாக்கியதில் சையத் மசாஹிர் அலிக்கு நெற்றி, மூக்கு, வாயில் ரத்தம் வழிந்தது. அவர் ரத்தம் வழிந்தபடியே வீடியோவில் பேசினார். அதில் அவர் கூறும்போது, "நான் உணவு வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பிய போது 4 பேர் என்னை துரத்தி வந்தனர். என் வீடு அருகே நான் தவறி விழுந்தேன். அவர்கள் என்னை சரமாரியாக தாக்கினார்கள். எனக்கு உதவி செய்யுங்கள்" என்றார்.
இச்சம்பவம் குறித்து சையத் மசாஹிர் அலியின் மனைவி பாத்திமா ரிஸ்வி, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அமெரிக்காவில் எனது கணவரின் பாதுகாப்பு பற்றி கவலைப்படுகிறேன். அவருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது 3 குழந்தைகளுடன் நான் அமெரிக்காவுக்கு சென்று கணவரை பார்க்க உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.
#WATCH | Telangana: After Hyderabad student chased and attacked in Chicago, his wife says, " My husband Mazahir Ali went to Chicago for his masters. A deadly attack happened on him of February 4 at around 1 am...Around 6 am in the morning I received the attack's Whatsapp… pic.twitter.com/bwNSTzSTmd
— ANI (@ANI) February 7, 2024
தாக்குதலுக்குள்ளான இந்திய மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து 4 இந்திய மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்திய மாணவர் மீது கொடூர தாக்குதல் நடந்துள்ளது.






