என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • $430 பில்லியன் டாலர் கடனை பைடன் ரத்து செய்ததை உச்ச நீதிமன்றம் தடுத்தது
    • இதுவரை $138 பில்லியன் மதிப்பிலான மாணவர் கடனை பைடன் ரத்து செய்துள்ளார்

    அமெரிக்காவில் மாணவர்கள் கடன் $1.73 டிரில்லியன் என உள்ளது.

    கடந்த முறை அதிபர் தேர்தலில் இரு கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் மாணவர் கடன் முக்கிய இடம் பிடித்தது.

    முதல் முறையாக அதிபரான ஜோ பைடன், சுமார் $430 பில்லியன் டாலர் மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்ய முயன்று போது உச்ச நீதிமன்றம் அதனை ரத்து செய்தது.

    இதனையடுத்து, "மதிப்புமிக்க கல்விக்கு சேமிப்போம்" (Saving on a Valuable Education) எனும் திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டத்தில் 7.5 மில்லியன் பயனாளிகள் பதிவு செய்துள்ளனர்.

    இன்று, ஜோ பைடன் அரசின் கல்வி துறை, 1,53,000 மாணவர்களின் கல்வி கடனை தள்ளுபடி செய்துள்ளது.

    இன்று தள்ளுபடி செய்யப்படும் கடன் தொகை சுமார் $1.2 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    $12,000 அல்லது அதற்கும் கீழே கடன் பெற்று கடந்த 10 வருடங்களுக்கும் குறையாமல் தவணைகளை செலுத்தி வரும் மாணவர்களில், அதிபர் பைடன் கடந்த வருடம் கொண்டு வந்த "ஸேவ்" (SAVE) திட்டத்தில் பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

    "யாருக்கு மிக அதிக தேவை உள்ளதோ அவர்களுக்கு கடன் நிவாரணம் வழங்கப்படுகிறது. மேலும், இப்பிரச்சனைக்கு அடிப்படை தீர்வு காணவும் நாங்கள் முயன்று வருகிறோம். கல்லூரி படிப்பிற்கான செலவு மிக அதிகமாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும்" என இது குறித்து பேசிய கல்வி துறை செயலர் தெரிவித்தார்.

    பைடன் பதவி ஏற்றதில் இருந்து தற்போது வரை $138 பில்லியன் மதிப்பிலான மாணவர் கடனை ரத்து செய்துள்ளார். இதன் மூலம் இதுவரை 3.9 மில்லியன் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • "8 பாசஞ்சர்ஸ்" எனும் ரூபியின் சேனலுக்கு 2 மில்லியன் பயனர்கள் தேர்ந்தனர்
    • உணவு, குடிநீர், படுக்கை மறுக்கப்பட்டதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்

    மேற்கு அமெரிக்காவில் உள்ள மாநிலம், உடா (Utah). இதன் தலைநகரம் சால்ட் லேக் சிட்டி (Salt Lake City).

    உடா மாநிலத்தில், 42 வயதான ரூபி ஃப்ராங்கி (Ruby Franke) எனும் பெண், தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    கடந்த 2015ல் ரூபி, யூடியூப் வலைதளத்தில் குழந்தைகளை வளர்ப்பது தொடர்பான வீடியோக்களை உருவாக்கி பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோ உருவாக்கத்தில் அவரது குழந்தைகளையும் அவர் பங்கெடுக்க செய்தார்.

    "8 பாசஞ்சர்ஸ்" (8 Passengers) எனும் அவரது யூடியூப் சேனலுக்கு குறுகிய காலத்திலேயே 2 மில்லியன் பயனர்கள் சேர்ந்தனர்.

    2020 காலகட்டத்தில் அவரது மகன்களில் ஒருவர் தனக்கு நேரும் துன்புறுத்தலை குறித்து ஒரு வீடியோ பதிவு செய்திருப்பதை ஒரு பயனர் கண்டு, ரூபியின் முந்தைய வீடியோக்களை கவனமாக ஆய்வு செய்தார். அதில் ரூபி தனது குழந்தைகளை "கட்டுப்பாடு" எனும் பெயரில் துன்புறுத்தும் சான்று கிடைத்தது.

    இதனை தொடர்ந்து ரூபியை விசாரிக்க உடா மாநில குழந்தைகள் நல அதிகாரிகளிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன.

    குற்றச்சாட்டுகளை மறுத்த ரூபி, 2022ல் தனது யூடியூப் சேனலை நிறுத்தி விட்டார். ரூபியும், அவரது கணவரும் பிரிந்தனர். 


    தொடர்ந்து "ஜோடி ஹில்டெப்ராண்ட்" என்பவரின் "கனெக்ஷன்ஸ் க்ளாஸ்ரூம்" (ConneXions Classroom) எனும் சேனலில் ரூபி தனது வீடியோக்களை பதிவேற்றினார்.

    2022ல் அவரது 12-வயது மகன் ஒருவன் வீட்டை விட்டு தப்பி, அண்டை வீட்டாரிடம் உணவு கேட்கும் போது அவன் உடலெங்கும், பல காயங்கள் இருப்பதும், அவை அச்சிறுவனை பலமாக கயிற்றினால் கட்டி வைத்ததால் ஏற்பட்டவை என்பதும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்களும், காவல்துறையினரும் விரைந்து வந்து ரூபியின் வீட்டை ஆய்வு செய்தனர்.

    அங்கு அவர்களுக்கு ரூபி தனது குழந்தைகளுக்கு உணவு, குடிநீர் வழங்காமல் சித்திரவதை செய்ததற்கான தடயங்கள் காவல் அதிகாரிகளுக்கு கிடைத்தது.

    இதனை தொடர்ந்து விசாரணை நடைபெற்று, ரூபி ஃப்ராங்கி மற்றும் அவரது தொழில் கூட்டாளி ஹில்டெப்ராண்ட்" (54) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

    விசாரணையின் போது நீதிமன்றத்தில் உடா மாநில அரசு தரப்பு வழக்கறிஞர், "ஃப்ராங்கியின் குழந்தைகள் நாஜி படையினர் நடத்திய சித்திரவதை கூடங்களை போன்ற சூழலில் வீட்டில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு உணவு, குடிநீர், படுக்கை, பொழுதுபோக்கு என அனைத்தும் மறுக்கப்பட்டு வந்தது" என தெரிவித்தார்.

    இந்நிலையில், அவர்கள் இருவருக்கும் தலா 60 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    • ராபினெட் ராணுவத்தில் பணியாற்றிய ஒரு கால்நடை மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர்
    • சுமார் 160 வருடங்களுக்கு பிறகு இந்த தொடர்பு வெளிவந்திருக்கிறது

    அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன் (81).

    பைடனின் மூதாதையர்களில் ஒருவர் மோசஸ் ஜே. ராபினெட் (Moses J. Robinette). கால்நடை மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணரான அவர் ராணுவத்தில் பணியமர்த்தப்பட்டார்.

    1864 மார்ச் 21 அன்று அமெரிக்காவின் வர்ஜினியாவில் உள்ள ஒரு ராணுவ தளத்தில், ராபினெட்டுக்கு, ஜான் அலெக்சாண்டர் (John J. Alexander) எனும் சக பணியாளர் ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியதில், ராபினெட் தன்னிடம் இருந்த சிறிய கத்தியால் அலெக்சாண்டரை சரமாரியாக தாக்கினார். அங்கிருந்தவர்கள், சண்டையை நிறுத்தி, அலெக்சாண்டரை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    ராணுவ கட்டுப்பாட்டை மீறியதாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

    தற்காப்புக்காக அலெக்சாண்டரை தாக்கியதாகவும், தாக்காமல் இருந்திருந்தால் தன்னை அவர் கொன்றிருப்பார் என்றும் ராபினெட் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

    ஆனால், ராபினெட்டின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், அவருக்கு 2-வருட கடுங்காவல் தண்டனை வழங்கியது.

    ராபினெட், தன்னை விட மிக அதிக எடை மற்றும் வலிமையுடைய பலசாலி ஒருவருடன் சண்டையிட நேர்ந்ததால் தற்காப்பிற்காக கத்தியால் தாக்க நேரிட்டதாகவும், இதனை கருத்தில் கொண்டு மருத்துவரான அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யுமாறும் 3 ராணுவ அதிகாரிகள் ராபினெட்டுக்கு ஆதரவாக அப்போதைய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனிடம் கருணை மனு அளித்தனர்.

    இதனை ஏற்று கொண்ட அதிபர் ஆபிரகாம் லிங்கன், ராபினெட்டுக்கு மன்னிப்பு வழங்கினார்.

    சுமார் 160 வருடங்களுக்கு பிறகு வெளிவந்திருக்கும் இந்த தகவல் அமெரிக்க தேசிய ஆவண காப்பகத்திலிருந்து கிடைத்துள்ளது.

    அமெரிக்காவின் 16-வது அதிபருக்கும், தற்போதைய 46-வது அதிபருக்கும் உள்ள இந்த இணைப்பை சமூக வலைதளங்களில் பயனர்கள் சுவாரஸ்யமாக விவாதிக்கின்றனர்.

    • விருதை பெறும் ஆசியாவைச் சேர்ந்த முதல் கலைஞர் என்ற பெருமையை ஜியோன் ஜங்குக் பெற்று உள்ளார்.
    • கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ''கோல்டன்' தனி ஆல்பத்தின் மூலம் இவர் அறிமுகமாகி பிரபலம் அடைந்தார்.

    49-வது பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதுகள் விழா கலிபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் நடந்தது. 1975-ம் ஆண்டு முதல் 'மக்கள் தேர்வு' விருது வழங்கும் விழா நடந்து வருகிறது.

    பாப் பாடல், இசை, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் சிறந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த ஆண் கலைஞர்' விருதை 'BTS'இசைக்குழுவை சேர்ந்த ஜங்குக் பெற்றுள்ளார். மக்களின் விருப்பத்தின்பேரில் தேர்வு செய்யப்படும் இவ்விருதை பெறும் ஆசியாவைச் சேர்ந்த முதல் கலைஞர் என்ற பெருமையை ஜியோன் ஜங்குக் பெற்று உள்ளார்.


    தற்போது ஜங்குக் ராணுவத்தில் சேர்ந்துள்ளதால் விருதை நேரில் பெற வர முடியவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ''கோல்டன்' தனி ஆல்பத்தின் மூலம் இவர் அறிமுகமாகி பிரபலம் அடைந்தார். இந்த விருது கிடைத்த செய்தி அறிந்ததும் அவரது ரசிகர்கள் ஜங்குக்வுக்கு இணைய தளத்தில் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

    • ஐஐடி சென்னை மாணவரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ், 3 பேருடன் உருவாக்கியது பெர்ப்லெக்சிடி
    • 300 சதவீதம் ஊதிய உயர்வு ஆச்சரியம் அளிப்பதாக அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்

    இணையவழி உள்ளடக்க தேடலில் உலகின் முன்னணி தேடல் இயந்திரம் (search engine) அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனத்தின் "கூகுள் தேடல் இயந்திரம்".

    கடந்த 2022 இறுதியில் தோன்றிய "ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ்" (Artificial Intelligence) எனும் "செயற்கை நுண்ணறிவு" தொழில்நுட்பம், கூகுள் நிறுவன தேடல் இயந்திரத்திற்கு சவாலாக இருந்து வருகிறது.

    செயற்கை நுண்ணறிவு துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (IIT) முன்னாள் மாணவரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மற்றும் 3 பேர் இணைந்து 2022ல் உருவாக்கிய நிறுவனம், பெர்ப்லெக்சிடி. இந்நிறுவனத்தின் தேடல் இயந்திரம், "பெர்ப்லெக்சிடி ஏஐ" (Perplexity AI).

    பெர்ப்லெக்சிடி நிறுவனத்தில் பணியாற்ற கூகுள் நிறுவன "தேடல்" (search) பிரிவை சேர்ந்த ஊழியர் ஒருவர், கூகுள் மேலதிகாரிகளிடம் தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார்.

    ஆனால், அந்த ஊழியருக்கு கூகுள், அவர் வாங்கி வரும் ஊதியத்தை விட 300 சதவீதம் அதிகம் வழங்கி அவரை தங்களுடனேயே தக்க வைத்து கொண்டது.


    ஒரு பேட்டியில் இந்த தகவலை பகிர்ந்து கொண்ட அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மேலும் கூறியதாவது:

    செயற்கை நுண்ணறிவு துறையில் இல்லாமல் தேடல் துறை பணியாளராக இருந்தும் எங்களிடம் பணியாற்ற விரும்பிய நபரை கூகுள் மிக அதிக தொகையை ஈடாக தந்து, தக்க வைத்து கொண்டது.

    இது மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது.

    பணிநீக்கங்களை பொறுத்தவரையில் மென்பொருள் தொழில்நுட்ப மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக ஊதியம் பெறும் ஊழியர்கள்தான் குறி வைக்கப்படுவதாக தெரிகிறது.

    இவ்வாறு அரவிந்த் தெரிவித்தார்.

    கடந்த 2023 ஜனவரி மாதம் சுமார் 12 ஆயிரம் ஊழியர்களையும், சில தினங்களுக்கு முன் 1000 ஊழியர்களையும் கூகுள் நீக்க போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    இப்பின்னணியில், 300 சதவீத ஊதிய உயர்வு அளித்து ஒருவரை தங்களுடனேயே தக்க வைத்து கொண்ட செய்தியை சமூக வலைதளங்களில் பயனர்கள் சுவாரஸ்யமாக விவாதிக்கின்றனர்.

    • அலெக்சி நவால்னி சந்தேகத்திற்கு இடமான சூழலில் சிறையில் உயிரிழந்தார்
    • ரஷிய மக்களை எச்சரிக்கும் அதிபருடன் டிரம்ப் கரம் கோர்க்க விரும்புகிறார் என்றார் நிக்கி

    கடந்த வாரம், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தென் கரோலினா மாநிலத்தில் ஆற்றிய உரையில், அமெரிக்காவை தலைமையாக கொண்டு செயல்படும் நேட்டோ (NATO) உறுப்பினர் நாடுகள் அந்த அமைப்பிற்கு அளிக்க வேண்டிய தங்களின் நிதி பங்களிப்பை அளிக்காத பட்சத்தில் அந்நாடுகளை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தாக்கவோ அல்லது ஆக்கிரமிக்கவோ முற்பட்டால் அதில் தலையிட மாட்டேன் என தெரிவித்தார்.

    இவரது கருத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.

    இந்நிலையில், சில தினங்களுக்கு முன் ரஷியாவில், அதிபர் புதினை தீவிரமாக எதிர்த்து வந்த அலெக்சி நவால்னி (Alexei Navalny) சந்தேகத்திற்கு இடமான சூழலில் சிறையில் உயிரிழந்தார்.

    இப்பின்னணியில், அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட குடியரசு கட்சியின் சார்பில் ஆதரவு கோரி வரும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு போட்டியாக களம் இறங்கி உள்ள தென் கரோலினா மாநில முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே, டிரம்பை விமர்சித்து உரையாற்றினார்.

    அப்போது நிக்கி தெரிவித்ததாவது:

    தங்கள் பங்களிப்பை தராதவர்களை புதின் தாக்கினால் தடுக்க மாட்டேன் என கூறியதன் மூலம் அந்த கணமே புதினின் கரத்தை டிரம்ப் வலுப்படுத்தி விட்டார்.

    தனக்கு உள்ள அரசியல் எதிரிகளை கொல்ல துணியும் புதினை போன்ற ஒருவருடன் டிரம்ப் கை கோர்த்து கொள்கிறார்.

    அமெரிக்க ஊடகவியலாளர்களை சிறை பிடிக்கும் ஒருவரின் பக்கம் டிரம்ப் நிற்க முயல்கிறார்.

    "என்னை எதிர்த்தால் உங்களுக்கும் இதுதான் (நவால்னியின் மரணம்) கதி" என தன் நாட்டு மக்களை எச்சரிக்கும் ஒருவருடன் நட்பாக இருக்க முயல்கிறார்.

    இதுவரை நவால்னியின் மரணம் குறித்து டிரம்ப் கருத்து எதுவும் கூறவில்லை. ஏனென்றால், அவர் தற்போது மீதுள்ள பல வழக்குகளில் கவனமாக உள்ளார்.

    இவ்வாறு ஹாலே கூறினார்.

    அடுத்த வாரம், தென் கரோலினா மாநிலத்தில் குடியரசு கட்சியின் சார்பில் டிரம்பும், ஹாலேவும் ஒருவரையொருவர் நேரடியாக எதிர்த்து களம் இறங்கி வாக்குகளை சேகரிக்க உள்ளனர்.

    • நீங்கள் செலுத்த வேண்டிய நிதியை செலுத்த தவறும் பட்சத்தில் நான் உங்களை காக்க முடியாது- டிரம்ப்.
    • டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்வானால் பல விசயங்கள் பற்றி நான் கவலைப்படுகிறேன்- ஹாலே

    அமெரிக்காவில் இந்த வருடம் இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் யார்? என்பதில் டொனால்டு டிரம்ப்- நிக்கி ஹாலே இடையே போட்டி நிலவி வருகிறது.

    இந்த நிலையில் நான் அதிபரானால், இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் கூட்டணியை வலுப்படுத்துவேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நிக்கி ஹாலே கூறியதாவது:-

    டொனால்டு டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்வானால், பல விசயங்கள் பற்றி நான் கவலைப்படுகிறேன். அவற்றில் ஒன்றுதான் மற்ற நாடுகள் இடையிலான கூட்டணி.

    நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால், நேட்டோ உடனான கூட்டணியை மட்டும் வலுப்படுத்த மாட்டேன். இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுடன் உடனான கூட்டணியையும் வலுப்படுத்துவேன். எங்களுடன் அனைவரையும் சேர்த்துக் கொள்வோம். இது அமெரிக்காவின் அதிக நண்பர்களை பற்றியது. குறைப்பதை பற்றி அல்ல."

    இவ்வாறு நிக்கி ஹாலே தெரிவித்தார்.

    முன்னதாக,

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. தங்களுடைய ஆயுத இருப்புகள் குறைந்து வருவதால் நேட்டோ உதவி செய்ய வேண்டும் என உக்ரைன் கேட்டிருந்தது. இதுதொடர்பாக டொனால் டிரம்ப் அளித்த ஒன்றில் அவர் கூறியதாவது:

    ஒரு பெரிய நாட்டின் அதிபர் என்னிடம் நாங்கள் நேட்டோ அமைப்பிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காத நிலையில் ரஷியா எங்களை தாக்கினால் நீங்கள் எங்களை காப்பீர்களா? என கேட்டார்.

     நீங்கள் செலுத்த வேண்டிய நிதியை செலுத்த தவறும் பட்சத்தில் நான் உங்களை காக்க முடியாது. இன்னும் சொல்ல போனால் இவர்களை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என ரஷியாவிடம் கூறிவிடுவேன். நிதி பங்களிப்பில் உங்கள் பங்கை நீங்கள் செலுத்தியாக வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தேன்.

    இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.

    • மார்க் என்பவர் 32.43 அமெரிக்க டாலர் மதிப்பிற்கு சாப்பிட்டுள்ளார்.
    • ஆனால் 10 ஆயிரம் அமெரிக்க டாலரை டிப்ஸாக கொடுத்துள்ளார்.

    அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றில் மார்க் என்பவர் இரவு சாப்பாடு சாப்பிட சென்றுள்ளார். உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் ஆர்டர் செய்துள்ளார்.

    சாப்பிட்டு முடித்த உடன் பெரும்தொகையை டிப்ஸ் ஆக வழங்க முடிவு செய்துள்ளார். சாப்பிட்டு முடித்தபின், ஊழியர் பில் கொடுத்துள்ளார். அதில் டிப்ஸ் ஆக ஒரு பெரும்தொகையை குறிப்பிட்டுள்ளார்.

    அந்த பெரும்தொகை ஊழியர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது. அந்த நபர் 32.43 அமெரிக்க டாலர் மதிப்புக்கு (இந்திய பணமதிப்பில் 2700 ரூபாய்) சாப்பிட்டுள்ளார். ஆனால் டிப்ஸாக 10 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய பண மதிப்பில் 8.3 லட்சம் ரூபாய்) வழங்கியுள்ளார்.

    வழக்கமாக 15 முதல் 25 சதவீதம் வரை டிப்ஸ் பெறுவோம். ஆனால், இந்த நன்றியுணவர்வுக்கு அளவே இல்லை என ஊழியர்கள் நெகிழ்ச்சி தெரிவித்தனர். ரெஸ்டாரன்ட் உரிமையாளர், அப்போது வேலையில் இருந்த 9 பேருக்கு அந்த தொகையை பிரித்து கொடுத்துள்ளார்.

    இதற்கிடையே டிப்ஸ் கொடுத்த மார்க் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் இந்த டிப்ஸ் வழங்கிய பில்லை போஸ்ட் செய்து "நான் அழுகிறேன், நீ அழுகிறாய், நாம் அனைவரும் அழுகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இவ்வளவு தொகையை டிப்ஸ் கொடுப்பதாக எழுதியுள்ளீர்கள். தவறாக எழுதி விட்டீர்களா? என ரெஸ்டாரன்ட் மானேஜர் மார்க்கிடம் கேட்டுள்ளார்.

    அதற்கு அவர் இல்லை. நான் தெரிந்துதான் எழுதியுள்ளேன். எனது நண்பர் சமீபத்தில் இறந்து விட்டார். அவரது இறுதிச் சடங்கு இந்த நகரில்தான் நடந்தது. இது அவரது நினைவாக என்று தெரிவித்துள்ளார்.

    • செகானி என்ற கொரில்லாவிற்கு சிசேரியன் மூலமாக குட்டி கொரில்லா பிறந்துள்ளது.
    • நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு முன்னதாக பிறந்த இந்த கொரில்லாவுக்கு ஜமீலா என பெயர் வைத்துள்ளனர்.

    அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள ஃபோர்ட் வொர்த் உயிரியல் பூங்காவில் (Fort Worth Zoo) கர்ப்பமாக இருந்த செகானி என்ற கொரில்லாவிற்கு சிசேரியன் மூலமாக குட்டி கொரில்லா பிறந்துள்ளது.

    பிரீக்ளம்ப்சியா என்பது கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் தீவிர ரத்த அழுத்த நிலையால் செகானி என்ற கொரில்லா பாதிக்கப்பட்டிருந்தால் தாய் மற்றும் குழந்தையின் உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சை அவசியம் என மருத்துவர்கள் முடிவெடுத்தனர். அதைத் தொடர்ந்து நடந்த அறுவை சிகிச்சையில் இந்த 'குட்டி' கொரில்லா பிறந்தது.

    நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு முன்னதாக பிறந்த இந்த கொரில்லாவுக்கு ஜமீலா என பெயர் வைத்துள்ளனர். தற்போது செகானி மற்றும் ஜமீலா ஆரோக்கியத்துடன் இருப்பதாக ஃபோர்ட் வொர்த் உயிரியல் பூங்கா தெரிவித்துள்ளது. 

    • கடும் நிதி நெருக்கடியால் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவுவதில் சிக்கல் நீடிக்கிறது
    • உக்ரைனுக்கு உதவ மறுப்பது நியாயமற்ற செயல் என பைடன் கூறினார்

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில், தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து, அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், உக்ரைன் போரிட்டு வருகிறது.

    போர் தொடங்கி 2 வருடங்களை நெருங்கும் நிலையில், இரு தரப்பிலும் இதுவரை பலத்த சேதங்கள் நிகழ்ந்துள்ளது.

    பல உலக நாடுகள் மற்றும் ஐ.நா. சபை உள்ளிட்ட அமைப்புகளின் போர் நிறுத்த கோரிக்கைகளை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் புறக்கணித்து விட்டார்.

    இந்நிலையில், உக்ரைனுக்கு பொருளாதார மற்றும் ராணுவ உதவியை பெருமளவு வழங்கி வந்த அமெரிக்காவில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    உக்ரைனுக்கு தொடர்ந்து நிதியுதவி அளிப்பதற்கு அந்நாட்டின் பாராளுமன்றம் ஒப்புதல் தரவில்லை.

    இப்பின்னணியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden), டெலாவேர் (Delaware) மாநில தேவாலய கூட்டத்தை முடித்து வரும் போது உக்ரைன் விவகாரம் குறித்து பேட்டியளித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    நான் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் (Volodymyr Zelensky) தொலைபேசியில் உரையாடினேன். உக்ரைனுக்கு தேவைப்படும் நிதியை வழங்க வழி ஏற்படுத்தப்படும் என அவருக்கு நம்பிக்கை தெரிவித்தேன்.

    அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் உக்ரைன் ராணுவத்திற்கு உதவிட மறுப்பது அறிவற்ற செயல் மட்டுமல்ல; நியாயம் இல்லாததும் கூட.

    நான் இதற்காக உறுப்பினர்களோடு போராடி, உக்ரைனுக்கு தேவைப்படும் தளவாடங்கள் கிடைக்க வழிவகை செய்வேன்.

    அமெரிக்க உதவி இல்லாவிட்டால், உக்ரைன் மேலும் பல பிராந்தியங்களை ரஷியா வசம் இழக்க நேரிடும் என்பதை நாம் நினவில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு பைடன் கூறினார்.

    முன்னதாக, உக்ரைனுக்கான ராணுவ உதவி குறித்து விவாதிக்காமல் இரண்டு வாரங்கள் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டதற்கு பைடன் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    போர் தொடங்கிய காலகட்டத்திலிருந்து மனிதாபிமான உதவி, நிதியுதவி மற்றும் ராணுவ உதவி எனும் வகையில் $75 பில்லியனுக்கும் மேல் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.

    • ரஷியாவில் எதிர்க்கட்சி தலைவர் மரணம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • அதிபர் புதினுக்கு அலெக்சி நவால்னியின் மரணம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    வாஷிங்டன்:

    ரஷிய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி. பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், கோர்ட் அவமதிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவருக்கு மொத்தம் 19 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 2021-ம் ஆண்டு முதல் அவர் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

    இதற்கிடையே, நேற்று அவர் திடீரென சிறையிலேயே மரணமடைந்தார். அவரது உயிரிழப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

    நவால்னி மர்மமான முறையில் சிறையில் மரணம் அடைந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அலெக்சி நவால்னி மரணம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், ரஷிய அதிபர் புதினின் ஊழல்கள், மோசமான செயல்களுக்கு எதிராக துணிச்சலுடன் செயல்பட்ட நவால்னியின் மரணத்தில் சந்தேகம் வலுத்துவருகிறது. இதற்கு புதின் தான் முழு பொறுப்பு ஏற்கவேண்டும் என தெரிவித்தார்.

    உக்ரைன் போர் உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்துள்ள அதிபர் புதினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் மரணம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

    • நியூயார்க் கார்ப்பரேசன் நிறுவனத்தில் அதிகாரி அல்லது இயக்குனராக பணியாற்ற டிரம்புக்கு 3 ஆண்டுகள் தடை விதிப்பதாகவும் அறிவித்தார்.
    • குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் இந்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

    நியூயார்க்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப். இவர் மீது பாலியல், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

    மேலும் தொழில் அதிபரான டிரம்ப் வங்கி மற்றும் நிதி அமைப்புகளிடம் கடன் வாங்குவதற்காக தனது சொத்து மதிப்புகளை மோசடியாக உயர்த்தி காட்டி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நியூயார்க் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. தன் மீதான குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்தார்.

    இந்த நிலையில் நிதி மோசடி வழக்கில் நியூயார்க் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. நீதிபதி ஆர்தர் எங்கோரோன் அளித்த தீர்ப்பில் கடன் வாங்குவதற்காக சொத்து மதிப்புகளை மோசடியாக உயர்த்தி காட்டியதற்காக டிரம்ப் அபராதமாக 364 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3 ஆயிரம் கோடி) செலுத்த வேண்டும் என்றும் நியூயார்க் கார்ப்பரேசன் நிறுவனத்தில் அதிகாரி அல்லது இயக்குனராக பணியாற்ற டிரம்புக்கு 3 ஆண்டுகள் தடை விதிப்பதாகவும் அறிவித்தார்.

    இவ்வழக்கில் டிரம்பின் மகன்களான எரிக் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் ஆகியோருக்கும் தலா 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதமாக செலுத்த உத்தரவிட்டு உள்ளார். அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று டிரம்ப் வக்கீல்கள் தெரிவித்தனர்.

    குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் இந்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார். இதற்கான கட்சி வேட்பாளர் தேர்தலில் அவர் முன்னிலையில் உள்ளார். அவருக்கு கட்சியில் அமோக ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×