என் மலர்
அமெரிக்கா
- ஆப்பிள் "தானியங்கி கார்கள்" தயாரிப்பில் பல பில்லியன் டாலர்கள் செலவிட்டது
- சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவு திட்டத்திற்கு மாற்றப்பட்டனர்
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க உலகம் முழுவதும் கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், உலகின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள், மின்சார வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இதில், ஐபோன் (iPhone) எனும் உயர் தொழில்நுட்ப ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனமும் களம் இறங்கியது.
"அட்டானமஸ் வெஹிகிள்" (autonomous vehicle) எனப்படும் ஓட்டுனர் இன்றி தானாக இயங்கும் கார்களை உற்பத்தி செய்யும் திட்டத்தில் ஆப்பிள் ஈடுபட்டு பல பில்லியன் டாலர்கள் முதலீடு செய்தது.
சுமார் 2 ஆயிரம் வல்லுனர்கள் இதில் பணியாற்றி வந்தனர்.
இத்தகைய வாகனங்களில் பிற கார்களில் உள்ளதை போல் "ஸ்டியரிங் வீல்" மற்றும் "பிரேக்", "கிளட்ச்", "ஆக்சிலரேட்டர்" போன்ற பெடல்கள் இருக்காது. இதன் இயக்கம் "குரல்" மூலம் இருக்குமாறு உருவாக்கப்பட்டு வந்தது.
ஆனால், இதுவரை இத்திட்டம் எதிர்பார்த்த பலனை தரவில்லை. தானியங்கி காரை உருவாக்க மேலும் பல வருடங்கள் ஆகலாம் என தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, இந்த தானியங்கி கார் உருவாக்க திட்டத்தை ஆப்பிள் நிறுவனம் கைவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) துறை வளர்ச்சி அடைந்து வருவதால், அதில் முதலீடுகளை செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இது குறித்து தற்போது வரை அதிகாரபூர்வ கருத்து தெரிவிக்கவில்லை.
அமெரிக்காவின் டெஸ்லா நிறுவன கார்களுக்கு சீனாவின் பிஒய்டி (BYD) நிறுவனம் போட்டியாக உள்ளதால், டெஸ்லா, மின்சார கார்களின் விலையை குறைத்தது குறிப்பிடத்தக்கது.
அதிகரிக்கும் உற்பத்தி செலவு மற்றும் எதிர்பார்த்த அளவு அதிகரிக்காத தேவை ஆகிய காரணங்களால் மின்சார கார் சந்தையில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆப்பிள் சரியான முடிவைத்தான் எடுத்துள்ளதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்.
- பாலஸ்தீனத்தை விடுதலை செய்ய வேண்டும்.
- படுகாயமடைந்த அரோன் புஷ்னெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு அமெரிக்க விமானப்படை வீரர் அரோன் புஷ்னெல் (வயது 25) காசா மீதான போருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார். பாலஸ்தீனத்தை விடுதலை செய்ய வேண்டும், இனப்படுகொலைக்கு துணைபோகமாட்டேன் என்று கோஷம் எழுப்பியபடி அவர் திடீரென்று தீக்குளித்தார்.
அதை சமூகவலைதளத்தில் அரோன் நேரடியாகவும் ஒளிபரப்பு செய்தார். படுகாயமடைந்த அரோன் புஷ்னெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி விமானப்படை வீரர் அரோன் புஷ்னெல் உயிரிழந்தார்.
- இஸ்ரேல், அமாஸ் அமைப்பினர் இடையிலான போரில் காசா மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
- காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவர அமெரிக்கா, கத்தார் உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன.
வாஷிங்டன்:
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரில் காசாவில் உள்ள மக்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலியானோர் எண்ணிக்கை 29 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச்சென்ற இஸ்ரேல் பிணைக்கைதிகளை மீட்க 7 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன்பின் இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே, காசாவில் போர் நிறுத்தத்தைக் கொண்டுவர அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் முயற்சித்து வருகின்றன.
இதில் ஹமாசின் கோரிக்கைகளை ஏற்க இஸ்ரேல் மறுத்தது. இதனால் போர் நிறுத்தம் ஏற்படுவதில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில், காசாவில் மார்ச் 4-ம் தேதிக்குள் போர் நிறுத்தம் ஏற்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், காசாவில் போர் நிறுத்தம் ஏற்படுவதில் நெருக்கமாக இருக்கிறோம் என்று எனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்னிடம் தெரிவித்தார். அடுத்த திங்கட்கிழமைக்குள் (மார்ச் 4-ம் தேதி) போர் நிறுத்தம் ஏற்படும் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டார்.
- பேராசிரியரான அசோக் வீரராகவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- பொறியியல் துறையில் சாதனை படைத்தற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
டெக்சாஸ்:
அமெரிக்காவில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெக்சாசின் மிக உயரிய கல்வி விருதான எடித் மற்றும் பீட்டர் ஓடோனல் விருது இந்திய வம்சாவளியை சேர்ந்த கணிணி பொறியாளர் மற்றும் பேராசிரியரான அசோக் வீரராகவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பொறியியல் துறையில் சாதனை படைத்தற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
- அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது.
- இஸ்ரேல் தூதரக அலுவலகம் உள்ளது. விமான படை வீரர் உடை அணிந்த ஒருவர் இந்த அலுவலகத்துக்கு வந்தார்.
வாஷிங்டன்:
பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் படையினர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இந்த சண்டை நடந்து வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் என 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.
காசாவில் நடந்து வரும் போரை நிறுத்துமாறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வந்த போதிலும் அதனை இஸ்ரேல் நிராகரித்து வருகிறது. தொடர்ந்து காசாவில் குண்டுகளை வீசி வருகிறது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக அமெரிக்காவில் விமான படையை சேர்ந்த வீரர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரக அலுவலகம் உள்ளது. நேற்று பிற்பகல் விமான படை வீரர் உடை அணிந்த ஒருவர் இந்த அலுவலகத்துக்கு வந்தார். திடீரென அவர் உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது. இதனால் அவர் அலறி துடித்தார். இதைபார்த்த அங்கிருந்தவர்கள் அவர் மீது பற்றிய தீயை அணைத்து அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அவர் எதற்காக இந்த முடிவை மேற்கொண்டார் என தெரியவில்லை. இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அவர் தீக்குளிப்பதற்கு முன்பு பேசியது இடம் பெற்றுள்ளது. அவர் இனிமேலும் நான் இனப்படு கொலைக்கு (காசாவில்)உடந்தையாக இருக்க மாட்டேன். நான் ஒரு தீவிர எதிர்ப்பு செயலில் ஈடுபட உள்ளேன் என கூறி உள்ளதாக தெரிகிறது.
இந்த தீக்குளிப்பு சம்பவத்தை தொடர்ந்து இஸ்ரேல் தூதரகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பினர் நாடுகள் உள்ளன
- 2 வருடங்களாக பலர் பல துன்பங்களை அனுபவிக்கின்றனர் என்றார் பொதுச்செயலாளர்
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு மீண்டும் உலக நாடுகளுக்கிடையே போர்கள் தோன்றாமல் இருக்க அமெரிக்காவின் தலைமையில் பல உலக நாடுகளை உள்ளடக்கி உருவான சர்வதேச அமைப்பு, ஐக்கிய நாடுகள் (United Nations) அமைப்பு.
ஐ.நா. சபையின் முக்கிய அங்கம் ஐ.நா. பாதுகாப்பு சபை (UN Security Council).
இதில் 15 உறுப்பினர் நாடுகள் உள்ளன. இவற்றில் நிரந்தர உறுப்பினர் நாடுகள் 5.
2022 பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர் நேற்றுடன் 2-வருட காலகட்டத்தை நிறைவு செய்துள்ளது.
உலக நாடுகள் மற்றும் ஐ.நா. சபை ஆகியவற்றின் போர்நிறுத்த கோரிக்கையை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் புறக்கணித்து விட்டார்.

இப்பின்னணியில், ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில், நேற்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் (Antonio Guterres) உரையாற்றினார்.
அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது:
2 வருடங்களாக நடக்கும் இப்போரினால் ஐரோப்பிய மக்களின் இதயத்தில் ஒரு திறந்த, ஆறாத காயம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச நாடுகளுக்கு இடையேயான சச்சரவுகள் அமைதியான வழிமுறையிலேயே தீர்க்கப்பட வேண்டும்.
உக்ரைனில் பலர் தங்கள் குழந்தைகளை எப்போது இழந்து விடுவோமோ என அச்சத்திலேயே வாழ்கின்றனர்.
ரஷிய வீரர்களும் இப்போரினால் உயிரிழக்கின்றனர்.
இரண்டு வருடங்களாக பலர் பல துன்பங்களை அனுபவிப்பதை பார்த்து விட்டோம். போதும்.
சர்வதேச சட்டங்களின்படி அமைதி ஏற்படுத்த இதுவே சரியான தருணம்.
இவ்வாறு குட்டெரஸ் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பாதுகாப்பு சபையின் உறுப்பினர்கள், பல நாடுகளின் அமைச்சர்கள், தூதர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ரஷிய உக்ரைன் போரினால் இதுவரை உக்ரைனில் பொதுமக்களில் 10,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
- பாசில்கான் மரணம் தொடர்பாக அவரது குடும்பத்திற்கு இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
- நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம், பாசில்கானின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் உள்ளது.
இந்தியாவை சேர்ந்தவர் பாசில்கான் (27). இவர் அமெரிக்காவில் தி ஹெச்சிங்கர் ஊடகத்தில் பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார். பாசில்கான், நியூயார்க்கின் ஹார்லெமில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்தார். இந்த நிலையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இ-பைக் பேட்டரியில் ஏற்பட்ட தீ, குடியிருப்பில் பரவியது. இதனால் அங்கு வசிப்பவர்கள் வெளியேற முயன்றனர். ஆனால் சிலர் தீ, புகை மூட்டத்தில் சிக்கி கொண்டனர். தீ விபத்தில் பாசில்கான் சிக்கி உயிரிழந்தார். தீயில் இருந்து தப்பிக்க 17 பேர் ஜன்னல்கள் வழியாக குதித்தனர். காயம் அடைந்த அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பாசில்கான் மரணம் தொடர்பாக அவரது குடும்பத்திற்கு இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய தூதரகம் கூறும்போது, "ஹார்லெமில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான தீ விபத்தில் இந்தியாவின் பாசில்கான் இறந்ததைப் பற்றி அறிந்து வருத்தமடைந்தோம். நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம், பாசில்கானின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் உள்ளது. அவரது குடும்பத்துக்கு உதவிகளை தொடர்ந்து வழங்குவோம்"என்று தெரிவித்தது.
- டிரம்பிற்கு வாய்ப்பு அதிகம் இருந்தும் நிக்கி ஹாலே போட்டியில் பின்வாங்கவில்லை
- இது போன்ற பேச்சுக்கள் கட்சியின் வெற்றி வாய்ப்பை தகர்த்து விடும் என்றார் நிக்கி ஹாலே
2024 வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஆகியோர் களமிறங்கி உள்ளனர்.
குடியரசு கட்சி சார்பில் தெற்கு கரோலினாவின் முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே, டிரம்பிற்கு போட்டியாக, தனக்கு ஆதரவு கோரி பிரசாரம் செய்து வருகிறார்.
தற்போது நிலவும் சூழலில் அமெரிக்காவில் குடியரசு கட்சியினரின் ஆதரவு டொனால்ட் டிரம்பிற்கே அதிகமாக உள்ளது. ஆனால், நிக்கி ஹாலே போட்டியில் இருந்து பின்வாங்கவில்லை.
இந்நிலையில், தெற்கு கரோலினாவில் தனது கட்சியினரிடம் ஆதரவு கோரி பிரசாரம் செய்யும் போது கருப்பின மக்கள் குறித்து டொனால்ட் டிரம்ப் சில கருத்துகளை தெரிவித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
கருப்பின மக்களுக்கு என்னை பிடிக்கும். என்னை போலவே அவர்களும் வஞ்சிக்கப்பட்டனர்.
நான் பாதிக்கப்பட்டது போல அவர்களும் பாதிக்கப்பட்டதால் அவர்கள் என்னை தங்களில் ஒருவனாக பார்க்கின்றனர்.
என்னை காவலில் எடுத்து போது வெளியிடப்பட்ட எனது "மக் ஷாட்" (mug shot) புகைப்படம் அவர்களை மிகவும் கவர்ந்துள்ளது. ஏனெனில், பிறரை காட்டிலும் கருப்பின மக்கள் அதிகமாக அது போல் காவல்துறையினரால் புகைப்படம் எடுக்கப்பட்டவர்கள்.
இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.
ஆனால், டிரம்பின் இந்த கருத்தை நிக்கி ஹாலே விமர்சித்துள்ளார்.
இது குறித்து நிக்கி ஹாலே தெரிவித்ததாவது:
கருப்பின மக்களை இவ்வாறு அருவெறுக்கத்தக்க வகையில் பேசியதை கண்டிக்கிறேன்.
டிரம்பை மனம் போன போக்கில் பேச விட்டால் இதுதான் நடக்கும்.
பொதுத் தேர்தல் முடியும் வரை அவரிடமிருந்து இது போன்ற பேச்சுக்களும், குழப்பங்களும் அதிகம் வரும். இது போன்ற பேச்சுக்கள் குடியரசு கட்சியின் வெற்றி வாய்ப்பை தகர்த்து விடும்.
அதனால்தான் டிரம்பால் ஒரு பொதுத்தேர்தலை கூட வெல்ல முடியாது என கூறி வருகிறேன்.
இவ்வாறு ஹாலே கூறினார்.
நிக்கி ஹாலேவை போல், "தன் மேல் உள்ள வழக்குகளால் கருப்பின மக்கள் அவரை விரும்புவார்கள் என டிரம்ப் கூறுவது அவர்களை அவமானப்படுத்துவது போல் உள்ளது" என ஜனநாயக கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.
- அமெரிக்காவில் மட்டும் கூகுள் பே சேவை வரும் ஜூன் மாதம் முதல் நிறுத்தப்படுகிறது.
- இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் இந்த சேவை பயன்பாட்டில் இருக்கும் என தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:
கூகுள் நிறுவனத்தின் பே ஆப் என்ற செயலி உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. யுபிஐ மூலம் பரிவர்த்தனைகள் நடைபெறுவதால் பயனாளர்களின் செல்போன் எண் இருந்தாலே அவர்களுக்கு பணம் அனுப்பவும், அவர்களிடமிருந்து பணத்தைப் பெறவும் முடிகிறது.
இந்தச் செயலியை உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவிலும் இந்த செயலி இல்லாத செல்போன்களே இல்லை என்னும் அளவுக்கு இதன் பயன்பாடு உள்ளது. டீக்கடை முதல் பெரிய மால்கள் வரை அனைத்து இடங்களிலும் கூகுள் பே பயன்பாடு அதிகரித்துள்ளது. அமெரிக்காவிலும் லட்சக்கணக்கானோர் கூகுள் பே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வரும் ஜூன் மாதம் 4-ம் தேதி முதல் அமெரிக்காவில் கூகுள் பே வசதி நிறுத்தப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் மட்டும்தான் இந்த சேவை நிறுத்தப்படுகிறது. இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் வழக்கம்போல் அந்த சேவை பயன்பாட்டில் இருக்கும். கூகுள் பே செயலி சேவை நிறுத்தப்பட்டாலும் அதில் உள்ள வசதிகளை கூகுள் வாலட்டில் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் பே ஆப்பை விட கூகுள் வாலட்டின் பயன்பாடு அமெரிக்காவில் மிக அதிகமாக இருப்பதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கூகுள் நிறுவனத்தின் இந்த திடீர் அறிவிப்பு அமெரிக்கர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது.
- குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் தேர்தலில் டிரம்ப், நிக்கி ஹாலே இடையே போட்டி நிலவுகிறது.
- தெற்கு மாகாணத்தில் நடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். இந்த ஆண்டு அவரது பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது.
அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும். அதற்கு மாகாணங்கள் தோறும் வாக்குப்பதிவு நடைபெறும். இரு கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள்.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் தேர்தல் களம் களைகட்டத் தொடங்கியுள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. இதில் முன்னாள் அதிபர் டிரம்ப், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரும், தெற்கு கரோலினா மாகாண முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹாலே இடையே போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய தெற்கு கரோலினா மாகாணத்தில் நடந்த தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். தெற்கு மாகாணத்தில் நடந்த வாக்குப்பதிவில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
ஏற்கனவே நியூ ஹாம்ப்ஷையர் மற்றும் லோவா காகசஸ் மாகாணங்களில் நடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைன் போர்-நவால்னி மரணம் விவகாரத்தில் ரஷியா மீது மேலும் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.
- நவால்னி உடலை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கக்கூடாது.
வாஷிங்டன்:
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடந்து 3-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்தது.
இதற்கிடையே ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி சிறையில் மரணம் அடைந்ததற்கு ரஷிய அதிபர் புதின்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்தது. மேலும் நவால்னி மனைவியை அமெரிக்க அதிபர் ஜோபைடன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது நவால்னியின் மறைவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷியாவின் பொருளாதாரம், தொழில் துறையை பாதிக்கும் வகையில் பல புதிய தடைகள் விதிக்கப்படும் என்று ஜோபைடன் தெரிவித்தார்.
இந்த நிலையில் உக்ரைன் போர்-நவால்னி மரணம் விவகாரத்தில் ரஷியா மீது மேலும் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. ரஷியாவை சேர்ந்த நிறுவனங்கள் தனி நபர்கள் உள்பட 500 இலக்குகள் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது போர் தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் அதிகளவில் ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறும் போது, நாவல்னியின் சிறை வாசத்துடன் தொடர்புடைய நபர்கள், ரஷியாவின் நிதித் துறை, பாதுகாப்பு, தொழில் துறை, உள்ளிட்டவை மீது பொருளாதார தடை விதிக்கப்படுகிறது. ரஷியாவின் போருக்கு ஆதரவாக உள்ள 100 நிறுவனங்களுக்கு புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கிறோம் என்றார்.
இதேபோல் சீனா உள்ளிட்ட சில நாடுகள் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதற்கிடையே ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க ரஷிய அரசு நிபந்தனைகளை விதித்துள்ளது.
நவால்னி உடலை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கக்கூடாது. உடல் அடக்கத்தினை ரகசியமாக நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
- அமெரிக்கா, சோவியத் ரஷியா, சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் நிலவில் கால் பதித்துள்ளன.
- கடந்த 15-ந்தேதி விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் விரைவாக நிலவில் தரையிறக்கம்.
அமெரிக்காவின் ஹூஸ்டனை தலைமையிடமாக கொண்ட தனியார் நிறுவனம் கடந்த 15-ந்தேதி நவீன தொழில்நுட்பத்துடன் விரைவில் நிலவை சென்றடையும் வகையிலான ஐஎம்-௧ விண்கலத்தை ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியது.
இந்த விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து வெற்றிகரமாக நிலவின் சுற்று வட்டப்பாதையில் இணைந்தது. இந்த நிலையில் அமெரிக்க நேரப்படி நேற்று நள்ளிரவு விண்ணில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற ஒடிசியஸ் லேண்டர் தரையிறங்கியதும் முதலில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பின் மெல்லமெல்ல தகவல் பரிமாற்றம் நடைபெற்றதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், நிலவில் லேண்டர் தரையிறங்கியது உறுதிப்படுத்தியது.
அமெரிக்கா கடந்த 1972-ம் ஆண்டு நிலவில் விண்கலத்தை தரையிறக்கியது. அதன்பின் சுமார் 52 ஆண்டுகள் கழித்து தற்போது அமெரிக்காவின் தனியார் நிறுவனம் நிலவில் வெற்றிகரமாக ஐஎம்-௧ விண்கலத்தின் ஒடிசியஸ் லேண்டரை தரையிறக்கியுள்ளது.
இதற்கு முன்னதாக அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கியது. அதன்பின் தனியார் நிறுவனம் தற்போது நிலவில் விண்கலத்தை தரையிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் ஹூஸ்டனைச் சேர்ந்த இன்டியூடிவ் மெஷின்ஸ் (Intuitive Machines) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஐஎம்-1 (IM-1) விண்கலத்தின் ஒடிஸியஸ் லேண்டர் நோவா-சி வகையைச் சேர்ந்தது. ஆறு கால்களை கொண்ட அறுங்கோண வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 15-ம் தேதி, ஒடிஸியஸ் லேண்டர் புளோரிடாவின் கேப் கனாவரலில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
மற்றொரு நிறுவனமான ஆஸ்ட்ரோபோடிக் டெக்னாலஜியின் நிலவு லேண்டர், ஜனவரி 8-ம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே உந்துவிசை கலனில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.






