என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • காசா மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்.
    • அங்கு நடக்கும் நிலை மனிதாபிமானமற்றவை.

    ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் தொடங்கப்பட்டு 5 மாதங்கள் நிறைவடைய இருக்கும் நிலையில், இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    காசாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில் 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காமல் உள்ளது. ஒரு முறை மட்டுமே ஒருவாரம் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    அதன்பின் இரு தரப்பிற்கிடையில் போர் நிறுத்தத்திற்கு முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியில் முடியவில்லை.

    கடந்த சில தினங்களுக்கு முன் உணவு வாங்க கூடியிருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடனடி போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தினார். மேலும், நிவாரணப் பொருட்கள் அமெரிக்க விமானங்கள் மூலம் வான்வழியாக காசா மக்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தார்.

    இந்த நிலையில் உடனடி போர் நிறுத்தம் தேவை என அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில் "காசா மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். அங்கு நடக்கும் நிலை மனிதாபிமானமற்றவை. நமது மனிதநேயம் நம்மைச் செயல்படத் தூண்டுகிறது. இஸ்ரேல் அரசு நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியை இன்னும் அதிகரிக்க வேண்டும். இதில் விதிவிலக்கு என்பதே கிடையாது.

    உடனடியாக போர் நிறுத்தம் தேவை. பிணைக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆறு வாரம் போர் நிறுத்தம் இன்னும் அதிகமான உதவிப்பொருட்கள் காசா மக்களுக்கு சென்றடைய உதவியாக இருக்கும்." என்றார்.

    • ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் சூப்பர் பவுல் இறுதிப்போட்டி நடைபெறும்
    • ஸ்கவுட்களின் கடுமையான தேர்வுகளில் "40-யார்ட் டேஷ்" போட்டியும் ஒன்று

    இந்தியாவில் கிரிக்கெட் பிரபலமாக இருப்பது போல் அமெரிக்காவில் பிரபலமானது, கால்பந்து விளையாட்டு.

    ஆண்டுதோறும் நடைபெறும் "சூப்பர் பவுல்" (Super Bowl) எனப்படும் கால்பந்து போட்டிகள் அமெரிக்கர்களால் விரும்பி பார்க்கப்படும் போட்டித் தொடர் ஆகும்.

    இந்த சூப்பர் பவுல் போட்டித் தொடருக்கு "தேசிய கால்பந்தாட்ட லீக்" (National Football League) எனும் அமைப்பில் உள்ள 32 அணிகள் ஒன்றுடன் ஒன்று மோதுவது வழக்கம்.

    ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் சூப்பர் பவுல் இறுதிப்போட்டி நடைபெறும்.

    ஆண்டுதோறும், தேசிய ஃபுட்பால் லீக் சார்பில், அணிகளுக்கு வீரர்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு "தேசிய கால்பந்தாட்ட லீக் டிராஃப்ட்" (National Football League Draft) எனப்படும்.

    இதில் வீரர்களின் திறனையும், ஆடும் நுணுக்கங்களையும் கண்டறிந்து, அவர்களை தரவரிசைப்படுத்தி, தேர்ந்தெடுப்பவர்கள் "ஸ்கவுட்" (Scout) என அழைக்கப்படுவார்கள்.

    ஸ்கவுட்களால், வீரர்களை தேர்வு செய்ய வைக்கப்படும் கடுமையான பரிசோதனைகளில் "40-யார்ட் டேஷ்" (40-yard dash) போட்டியும் ஒன்று.

    இந்த தேர்வில் 40 யார்ட் (36.576 மீட்டர்) எனப்படும் 120 அடி தூரத்தை குறைந்த நேரத்தில் வேகமாக ஓட வேண்டும்.

    நேற்று, இண்டியானாபொலிஸ் (Indianapolis) நகரில் நடைபெற்ற இவ்வருடத்திற்கான 40-யார்ட் டேஷ் தேர்வு போட்டியில் "டெக்சாஸ் லாங்ஹார்ன்ஸ்" (Texas Longhorns) அணி வீரர் சேவியர் வொர்த்தி (Xavier Worthy) 4.21 நொடிகளில் கடந்து புதிய சாதனை புரிந்துள்ளார்.

    இந்த சாதனை குறித்து பேசிய வொர்த்தி, "நான் ஒரு பழைய சாதனையை உடைத்து புதிய சாதனையை படைத்துள்ளேன். எனக்கு இது நிஜமா என்பதே தெரியவில்லை. என் சக வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த சாதனையை படைத்ததை ஒரு ஆசிர்வாதமாக பார்க்கிறேன்" என கூறினார்.

    2017ல், "வாஷிங்டன் ஹஸ்கீஸ்" (Washington Huskies) அணியை சேர்ந்த ஜான் ராஸ் (John Ross) என்பவர் 4.22 நொடிகளில் 120 அடி தூரத்தை ஓடியதே இதுவரை சாதனையாக இருந்தது.

    • டிரம்பை எதிர்த்து தெற்கு கரோலினா முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே களம் இறங்கினார்
    • நிக்கியை விட பெலோசி அதிக அறிவு கூர்மையுடையவர் என்றார் டிரம்ப்

    இவ்வருடம் நவம்பர் மாதம், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) ஆகியோர் ஒருவரையொருவர் எதிர்த்து தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.

    அமெரிக்க தேர்தல் வழிமுறைப்படி, அதிபர் தேர்தலில் நிற்க விரும்பும் வேட்பாளர்கள் முன்னதாக ஒவ்வொரு மாநிலத்திலும் தங்கள் கட்சியினரிடம் உட்கட்சி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று வென்றாக வேண்டும்.

    குடியரசு கட்சியின் சார்பில் டொனால்ட் டிரம்பை எதிர்த்து தெற்கு கரோலினாவின் முன்னாள் கவர்னர், நிக்கி ஹாலேவும் களம் இறங்கினார். ஆனால், அவருக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை.

    தனது பிரசாரங்களில் டொனால்ட் டிரம்ப், நிக்கி ஹாலேவை குறிப்பிடுவதற்கு பதிலாக, தவறுதலாக, 2007லிருந்து 2011 வரை அமெரிக்க பாராளுமன்றத்தின் சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி (Nancy Pelosi) பெயரை குறிப்பிட்டு பேசியது விமர்சனத்திற்குள்ளானது.


    அதை குறிப்பிட்டு "மனதளவில் டொனால்ட் டிரம்ப் ஆரோக்கியமாக இல்லை" என நிக்கி ஹாலே அவரை விமர்சித்தார்.


    நேற்று இடாஹோ, மிசோரி, மிச்சிகன் ஆகிய மாநிலங்களில் உட்கட்சி தேர்தல்களில் டிரம்ப் வென்றார்.

    இந்நிலையில் தென்கிழக்கு மாநிலமான வர்ஜினியாவில் (Virginia) தனது ஆதரவாளர்களிடம் பேசிய டிரம்ப் தெரிவித்ததாவது:

    நான் வேண்டுமென்றேதான் பைடன் பெயருக்கு பதிலாக ஒபாமா பெயரை குறிப்பிட்டு வந்தேன்.

    அதே போல் ஒரு "பறவை மூளைக்காரர்" (அறிவில் குறைந்தவர்) பெயருக்கு பதிலாக நான்சி பெலோசியின் பெயரையும் மாற்றி குறிப்பிட்டு வந்தேன். உங்களுக்கு யார் அந்த "பறவை மூளைக்காரர்" (நிக்கி) என்பது தெரியும்.

    அவர்கள் இருவரையும் ஒன்றாகத்தான் கருதுகிறேன்.

    ஒரே ஒரு வேற்றுமையை குறிப்பிட வேண்டுமென்றால், நிக்கியை விட பெலோசி அதிக அறிவு கூர்மையுடையவர்.

    இவ்வாறு டிரம்ப் குறிப்பிட்டார்.

    • அமெரிக்க ராணுவம் வான்வழியாக உதவிப் பொருட்களை காசா மக்களுக்கு வழங்கியது.
    • முதல்கட்டமாக 38,000-க்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்களை அனுப்பி வைத்தது.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் காரணமாக காசா மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளது. அங்குள்ள பொதுமக்கள் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். வடக்கு காசாவில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இஸ்ரேல் ராணுவம் அனுமதித்தால் மட்டுமே மனிதாபிமான அடிப்படையிலான உதவிப் பொருட்கள் காசா மக்களுக்கு சென்றடையும் நிலை உள்ளது. காசாவின் மேற்கு பகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்க இஸ்ரேல் ராணுவம் சம்மதம் தெரிவித்தது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உடனடியாக போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தி வந்தன.

    இதற்கிடையே, காசாவில் அமெரிக்க ராணுவம் வான்வழியாக உதவிப் பொருட்களை காசா மக்களுக்கு வழங்கும். ஜோர்டான் மற்றும் சில நாடுகளுடன் இணைந்து இந்த பணியில் ஈடுபட உள்ளோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

    இந்நிலையில், அமெரிக்கா ராணுவம் வான் வழியாக காசா மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தது. முதல்கட்டமாக 38,000-க்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்களை அனுப்பியது.

    • தனது காலணிகள் அழுக்காகி விடும் என்பதற்காக தன்னை கச்சேரி நடைபெறும் மேடை வரை தூக்கி செல்லுமாறு பாதுகாவலர்களிடம் கூறி உள்ளார்.
    • 2 பாதுகாவலர்கள் அவரை தூக்கி ஒரு வண்டியின் பின்புறத்தில் ஏற்றி மேடைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல இசை கலைஞர் கலீத் முகம்மது காலித். 48 வயதான இவர் ஆல்பம் பாடல்கள் தயாரிப்பது மட்டுமின்றி ஏராளமான இசை துறை நிறுவனங்களுக்கு இசைப்பதிவும் செய்து கொடுத்து வருகிறார்.

    சமீபத்தில் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள சவுத் பீச் பகுதியில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்றார். அப்போது காரில் இருந்து இறங்கிய கலீத் மேடைக்கு நடந்து சென்றார். தனது காலணிகள் அழுக்காகி விடும் என்பதற்காக தன்னை கச்சேரி நடைபெறும் மேடை வரை தூக்கி செல்லுமாறு பாதுகாவலர்களிடம் கூறி உள்ளார். அதன்படி 2 பாதுகாவலர்கள் அவரை தூக்கி ஒரு வண்டியின் பின்புறத்தில் ஏற்றி மேடைக்கு அழைத்து சென்றுள்ளனர். பாதுகாவலர்கள் அவரை தூக்கி சென்ற காட்சிகள் வீடியோவாக இன்ஸ்டாகிராமில் வெளியானது.

    இந்த வீடியோ சுமார் 29 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்த நிலையில், நெட்டிசன்கள் பலரும் கலீத்தின் செயலுக்கு கடும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். அவரது இந்த செயல் மிகவும் அபத்தமானது எனவும், முட்டாள்தனமானது எனவும் விமர்சித்துள்ளனர்.


    • ஜோஸ் அன்டோனியோ இபார்ரா என்பவரை காவல்துறை கைது செய்தது
    • பைடனை போன்ற ஒரு திறமையில்லாத அதிபரை அமெரிக்கா கண்டதில்லை என்றார் டிரம்ப்

    அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் ஜியார்ஜியா. இதன் தலைநகரம், அட்லான்டா.

    பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த லேக்கன் ஹோப் ரைலி (Laken Hope Riley) எனும் 22 வயது மாணவி காலையில் உடற்பயிற்சி ஓட்டத்திற்கு சென்றவர் திரும்பவில்லை.

    இதையடுத்து அவருடன் தங்கி இருந்த மாணவிகள், புகார் செய்ததையடுத்து, காவல்துறை அவரை தேடி வந்தது. அவர்கள் தேடலில் மரங்களடர்ந்த பகுதியில் ரைலியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

    விசாரணையில், கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து ஜோஸ் அன்டோனியோ இபார்ரா (Jose Antonio Ibarra) என்பவரை சந்தேகத்தின் பேரில் காவல்துறை கைது செய்து விசாரித்தனர்.

    தீவிர விசாரணையில் ஜோஸ், லேக்கனை தாக்கி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

    ஜோஸ் தாக்கும் போது, சமாளித்த லேக்கன், உடனடியாக 911 எனும் அவசர உதவிக்கான எண்ணை லேக்கன் அழைக்க முயன்றதாகவும், அதில் பதட்டமடைந்த ஜோஸ் அவரை கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    லேக்கனின் பிரேத பரிசோதனையில் உயிரிழப்பதற்கு முன்பாக அவர் ஜோசுடன் தீவிரமாக போராடிய அறிகுறிகள் தெரிந்தன.

    வெனிசுயலா நாட்டை சேர்ந்த ஜோஸ், 2022ல் அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

    இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் ஒருவரையொருவர் எதிர்த்து தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.

    இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த பைடன் ரைலி மரணம் குறித்து ஏதும் பேசவில்லை.


    பைடனை குற்றம்சாட்டி டெக்சாஸ் மாநில பிரச்சார உரையில் பேசிய டிரம்ப் தெரிவித்ததாவது:

    நிலைகுலைந்து போயிருக்கும் ரைலியின் பெற்றோர்களுடன் தொலைபேசியில் பேசினேன். சட்டவிரோதமாக குடியேறுபவர்களை பைடன் தடுக்க தவறியதால்தான் இது போன்ற குற்றங்கள் நடைபெறுகின்றன.

    பைடனை போன்ற ஒரு திறமையில்லாத அதிபரை அமெரிக்கா இதுவரை கண்டதில்லை.

    தனது பிரச்சாரத்தில் பைடன், ரைலியின் பெயரை கூட உச்சரிக்கவில்லை.

    ஆனால், நான் ரைலியை மறக்க மாட்டேன்."

    இவ்வாறு டிரம்ப் கூறினார்.

    ஜியார்ஜியா மக்களை ரைலியின் கொலைச் சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களினால் தோன்றும் பிரச்சனைகள், அமெரிக்காவில் தீவிர விவாதத்தை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நிவாரணப் பொருட்கள் வாங்க கூடியிருந்த மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு.
    • இந்த துப்பாக்கிச்சூட்டில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர்.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் காரணமாக காசா மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளது. அங்குள்ள பொதுமக்கள் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். வடக்கு காசாவில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். பட்டினியால் உயிரை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இதனால் அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இஸ்ரேல் ராணுவம் அனுமதித்தால் மட்டுமே மனிதாபிமான அடிப்படையிலான் உதவிப் பொருட்கள் அங்குள்ள மக்களுக்க சென்றடையும் நிலை உள்ளது.

    இந்த நிலையில்தான் காசாவின் மேற்கு பகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்க இஸ்ரேல் ராணுவம் சம்மதம் தெரிவித்தது. லாரிகளில் நிவாரணப் பொருட்கள் சென்றது. அப்போது லாரிகளை முற்றுகையிட்டு உணவுப் பொருட்களை வாங்க மக்கள் முண்டியடித்தனர்.

    அப்போது பாதுகாப்பிற்கான நின்றிருந்த இஸ்ரேல் ராணுவத்தை நோக்கி மக்கள் வந்ததாகவும், தங்களுக்கு எதிராக தாக்குதல் மிரட்டல் என நம்பியதாகவும் கூறி கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதா இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இதனால் 100-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இச்சம்பவத்திற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உடனடியாக போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் காசாவில் அமெரிக்க ராணுவம வான்வழியாக உதவிப் பொருட்களை காசா மக்களுக்கு வழங்கும். மேலும் என்னென்ன வழிகள் இருக்கிறது. அவைகள் அனைத்தும் ஆராயப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜோர்டான் மற்றும் சில நாடுகளுடன் இணைந்து இந்த பணியில் ஈடுபடப்போவதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    • கீர்த்தன் எனப்படும் பக்தி பாடல்கள் பாடுவதில் திறன் கொண்டவர் ராஜ் சிங்
    • அடையாளம் தெரியாதவர்கள் சுட்டதில் துப்பாக்கி குண்டு சிங்கின் வயிற்றில் பாய்ந்தது

    அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் அலபாமா. இதன் தலைநகரம் மோன்ட்கோமரி (Montgomery).

    இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் பிஜ்னோர் மாவட்ட டண்டா சகுவாலா (Tanda Sahuwala) கிராமத்தை சேர்ந்த "கோல்டி" (Goldy) என அழைக்கப்படும் 29 வயதான ராஜ் சிங் (Raj Singh) சுமார் ஒன்றரை வருட காலமாக அமெரிக்காவில் தங்கியிருந்தார்.

    "கீர்த்தன்" (kirtan) எனப்படும் சீக்கிய மதத்தின் பக்தி பாடல்கள் பாடுவதில் திறன் மிக்கவரான ராஜ் சிங், அலபாமா மாவட்டத்தில் உள்ள ஒரு குர்துவாரா (Gurdwara) எனப்படும் சீக்கிய வழிபாட்டு தலத்திற்கு வெளியே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத சிலர், ராஜ் சிங்கை சுட்டனர். இதில் துப்பாக்கி குண்டு அவரது வயிற்று பகுதியில் பாய்ந்ததில் அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஒரு சில இனத்தவர்கள் மீது வெறுப்புணர்வினால் வேறு சில இனத்தவர்கள் தாக்குதலிலோ அல்லது வன்முறை செயலிலோ ஈடுபடும் வெறுப்புணர்வு குற்றம் (hate crime) எனும் வகையிலான குற்றமாக இது இருக்கலாம் என ராஜ் சிங் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.


    இப்பிராந்தியத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மீது நடத்தப்படும் இரண்டாவது கொலை சம்பவம் இது.

    மேலும், அமெரிக்காவில், 2024 பிப்ரவரியிலும், 2023 ஜூலையிலும் இந்திய வம்சாவளியினர் மீது வெறுப்புணர்வு கொண்ட தனி நபர்களால் வெவ்வேறு சம்பவங்களில் இருவர் சுட்டு கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உயிரிழந்த ராஜ் சிங்கின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர உதவி செய்ய கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு அவரது குடும்பத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.

    தனது தந்தையின் உயிரிழப்பிற்கு பிறகு தனது தாயையும் இரண்டு சகோதரிகளையும் ஒரு சகோதரனையும் காப்பாற்றும் பொறுப்பில் இருந்த ராஜ் சிங் கொல்லப்பட்டது அவரது சொந்த ஊரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிபர், வருடாந்திர மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டார்
    • நான் இளமையுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்றார் பைடன்

    ஒருவரின் உடல்நலன் எவ்வாறு உள்ளது என்பதை அறிய மருத்துவர்கள் செய்யும் முதல்நிலை உடல் பரிசோதனைகள் "ஃபிசிக்கல்" (physical examination) எனப்படும்.

    நேற்று, தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (81) தனது வருடாந்திர மருத்துவ பரிசோதனைகளை (annual physical) செய்து கொண்டார்.

    "வால்டர் ரீட் நேஷனல் மிலிட்டரி மெடிக்கல் சென்டர்" (Walter Reed National Military Medical Centre) எனும் மருத்துவ மையத்தில் ஜோ பைடனுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன.


    வழக்கமான மருத்துவர்களுடன் பல்வேறு மருத்துவத்துறை சார்ந்த வல்லுனர்கள் மற்றும் கண், பற்கள், எலும்பு, தண்டுவடம், நரம்பு, இதயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சிறப்பு சிகிச்சை நிபுணர்கள், ஜோ பைடனை பரிசோதித்தனர்.

    ஜோ பைடனின் உடல்நலம் குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில் அவரது பிரத்யேக மருத்துவரான டாக்டர். கெவின் ஒ'கொனார் (Dr. Kevin O'Connor) தனது குறிப்பை இணைத்துள்ளார்.

    அந்த குறிப்பில், "ஜோ பைடன் பூரண உடல்நலத்துடன் உள்ளார். அவரால் அவரது அனைத்து கடமைகளையும் எந்த சிக்கலோ, விதிவிலக்குகளோ அல்லது சிறப்பான உதவிகளோ இன்றி தானாகவே வழக்கமான முறையில் செய்ய முடியும். நரம்பு மண்டலம் அல்லது நினைவாற்றலை பாதிக்கும் நோய்கள் ஏதும் இருப்பதற்கான அறிகுறிகளே இல்லை. ஓய்விலும், செயலாற்றும் போதும் அவருக்கு எந்த விதமான உடல் நடுக்கங்களும் இல்லை" என டாக்டர். கெவின் பதிவிட்டுள்ளார்.

    தனது மருத்துவ பரிசோதனை முடிந்ததும் ஜோ பைடன், "நான் மிகவும் இளமையுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சென்ற வருடத்தை விட ஏதும் மாறி விடவில்லை. அனைத்தும் சிறப்பாக உள்ளது" என தெரிவித்தார்.

    ஆண்டுதோறும் அமெரிக்க அதிபர்களுக்கு நடக்கும் மருத்துவ பரிசோதனைகளுடன் அவர்களது மருத்துவர்கள் தரும் குறிப்பை பொதுவெளியில் அறிக்கையாக தருவது அமெரிக்க வெள்ளை மாளிகையால் நீண்டகாலமாக கடைபிடிக்கப்படும் ஒரு மரபாகும்.

    அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் வயதான அதிபர் ஜோ பைடன் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகிஸ்தானில் மனித உரிமைகள் சாதனை "உண்மையிலேயே பரிதாபத்திற்குரியது.
    • தனது சொந்த சிறுபான்மையினரை துன்புறுத்தி, உண்மையிலேயே மோசமான மனித உரிமை சாதனைகளைக் கொண்ட ஒரு நாடு.

    காஷ்மீர் விவகாரம் பற்றி பாகிஸ்தான் ஐ.நா.சபையில் அடிக்கடி பேசி இந்தியா மீது குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் 55-வது அமர்வில், இந்தியாவின் செயலாளர் அனுபமா சிங் பேசியதாவது:-

    இந்தியாவைப் பற்றிய விரிவான பாகிஸ்தானின் குறிப்புகளைப் பொறுத்தவரை, சபையின் தளம் மீண்டும் இந்தியாவுக்கு எதிராக வெளிப்படையான பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்க தவறாகப் பயன்படுத்தப்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

    நாங்கள் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய முழு யூனியன் பிரதேசங்களும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சமூக- பொருளாதார மேம்பாடு மற்றும் நல்லாட்சியை உறுதி செய்வதற்காக இந்திய அரசு எடுத்துள்ள அரசியலமைப்பு நடவடிக்கைகள் இந்தியாவின் உள் விவகாரங்கள்.

    இதில் பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை. பாகிஸ்தானில் மனித உரிமைகள் சாதனை "உண்மையிலேயே பரிதாபத்திற்குரியது. தனது சொந்த சிறுபான்மையினரை துன்புறுத்தி, உண்மையிலேயே மோசமான மனித உரிமை சாதனைகளைக் கொண்ட ஒரு நாடு, சாதிப்பதில் பெரும் முன்னேற்றங்களைச் செய்து வரும் இந்தியாவைப் பற்றி கருத்துத் தெரிவிப்பது, வெறும் முரண்பாடானவை அல்ல. மாறாக விபரீதமானவை.

    உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரித்து வருகிறது. பயங்கரவாதம், கடனில் சிக்கித் தவிக்கும் தேசிய இருப்புநிலைகள் மற்றும் தங்கள் நலன்களுக்கு சேவை செய்யத் தவறியதற்காக அதன் மக்கள் உணரும் அவமானம் ஆகியவற்றால் ரத்தம் சிந்தப்பட்ட ஒரு நாட்டிற்கு இந்தியா அதிக கவனம் செலுத்த முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வருவாயில் 11 சதவீதத்திற்கும் மேல் உணவிற்காக செலவிடுகின்றனர் அமெரிக்கர்கள்
    • கேரி பில்னிக் ஆண்டுதோறும் 1 மில்லியன் டாலர்களுக்கு மேல் வருமானம் பெறுகிறார்

    அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான கெல்லாக்'ஸ் (Kellogg's) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிபவர், கேரி பில்னிக் (Gary Pilnick).

    அதிகரிக்கும் உணவு பொருட்களின் விலை குறித்து கேரி பில்னிக் ஒரு பேட்டியில், "இரவு உணவுக்கு கெல்லாக்'ஸ் மற்றும் பால் மற்றும் ஒரு பழம் உண்ண பழகி கொள்ள வேண்டும். இதற்கு ஒரு டாலருக்கும் குறைவாக செலவாகும். " என தெரிவித்தார்.

    இது அமெரிக்க மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    சமூக வலைதளங்களில் கேரிக்கு எதிராக பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    மளிகை பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் ஏறுவதால், தங்கள் வருவாயில் 11 சதவீதத்திற்கும் மேல் உணவிற்காக மட்டுமே செலவு செய்ய வேண்டிய நிலையில் அமெரிக்கர்கள் உள்ளனர்.

    காலை உணவை தாண்டி இரவு உணவிற்கும் கெல்லாக்'ஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 25 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து உள்ளதாக கேரி தெரிவித்தார்.

    கேரி பில்னிக் ஆண்டுதோறும் 1 மில்லியன் டாலர்களுக்கு மேல் வருமானம் பெறுகிறார். இதை தவிர பல ஊக்க தொகைகளும், சலுகைகளும் அவருக்கு நிறுவனம் வழங்கும்.

    மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் போது, மிக அதிக ஊதியம் பெறும் நிறுவனத்தின் தலைவர் ஒருவர் இவ்வாறு கூறியுள்ளது, அவரது அலட்சிய மனப்பான்மையை காட்டுவதாக சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    2021-ஐ ஒப்பிடும் போது 2023 இறுதிக்குள் மளிகை பொருட்களின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கெல்லாக்'ஸ் போன்ற உணவு பண்டங்களில் உள்ள சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை என்பதால் அதனை தவிர்க்குமாறு ஊட்டச்சத்து நிபுணர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் கேரியின் இந்த கருத்து பார்க்கப்படுகிறது.

    • 2000 வாக்காளர்களிடம் டிரம்ப் மற்றும் பைடன் குறித்து கேட்கப்பட்டது
    • ஜென் இசட், டிரம்ப் முன்னர் அதிபராக இருந்த போது வாக்களிக்கும் வயதையே எட்டவில்லை

    வரும் நவம்பர் மாதம், அமெரிக்காவில் 46-வது அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    இரு-கட்சி அரசியல் நிலவும் அந்நாட்டில், ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் (81) மீண்டும் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் (77) டிரம்ப் களம் இறங்கியுள்ளார்.

    தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளதால், மக்களின் எண்ண ஓட்டத்தை கணிக்க பல கருத்து கணிப்புகளிலும், தகவல் சேகரிப்பிலும், பத்திரிகைகளும் தனியார் அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன.

    ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் "சென்டர் ஃபார் அமெரிக்கன் பொலிடிகல் ஸ்டடீஸ்" (CAPS) எனும் அமைப்பு வேறு சில அமைப்புகளுடன் இணைந்து கருத்து கணிப்புகளை நடத்தி வருகிறது.

    இந்த அமைப்பு நடத்திய ஒரு ஆய்வில் கலந்து கொண்ட 2000 வாக்காளர்களிடம் பல்வேறு கேள்விகளுடன் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் குறித்தும் கேட்கப்பட்டது.


    இதில் 57 சதவீத ஜென் இசட் வாக்காளர்கள், குடியரசு கட்சியின் டிரம்ப் அதிபராக விரும்புவதாகவும் 41 சதவீதம் பேர் அவரை ஏற்க மறுப்பதாகவும் தெரிவித்தனர்.

    ஆனால், "ஜென் இசட்" (Gen Z) எனப்படும் 18 வயதிலிருந்து 24 வயதிற்கு உட்பட்டவர்களில் 64 சதவீதம் பேர் டிரம்ப் அதிபராக வருவதை ஆதரித்தனர்.

    2017 முதல் 2021 வரை அதிபராக டிரம்ப் இருந்த போது, இவர்கள் வாக்களிக்கும் வயது நிரம்பாதவர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இளம் வயதினரின் வாக்குவங்கி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால் இந்த ஆய்வின் முடிவுகள் மீண்டும் அதிபராக முயன்று வரும் ஜோ பைடனுக்கு சாதகமான தகவல் அல்ல என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

    மேலும், ஜென் இசட் வயதினருக்கு அடுத்து 55 வயதிலிருந்து 64 வயது வரை உள்ளவர்களும் (60 சதவீதம்), 25 வயதிலிருந்து 34 வயது உள்ளவர்களும் (58 சதவீதம்) மற்றும் 35 வயதிலிருந்து 44 வயது வரை உள்ளவர்களும் (58 சதவீதம்) டிரம்பிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

    ×