என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • "முதற்கட்டமாக 6 வார கால போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க வேண்டும்"
    • அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இஸ்ரேல்- ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் ஜோ பைடன் உள்ளார்

    பாலஸ்தீன பகுதிகளின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் 8 மாதங்களாக நீடித்து வரும் நிலையில் பெண்கள் குழந்தைகள் உட்பட இதுவரை 36 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் ஆயிரத்திற்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஹமாஸை முற்றிலுமாக துடைத்தெறிவதாக சூளுரைத்த இஸ்ரேல்,பாலஸ்தீனிய மக்கள் அதிகம் வாழும் காஸா மீது தாக்குதல் நடந்தி வந்த நிலையில் சமீபத்தில் ரஃபா நகரம் மீதும் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.

     

    கடந்த மே 26 ஆம் தேதி நடத்திய ரஃபா அகதிகள் முகாம் மீது நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இதற்க்கிடையில் ஹமாஸிடம் இஸ்ரேலிய பிணைக்கைதிகளும், இஸ்ரேலிடம் பாலஸ்தீனிய பிணைக்கைதிகளும் அதிக அளவில் உள்ள நிலையில் தங்கள் நாட்டவரை விடுவித்தால் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள பலஸ்தீனியர்களை விடுவிப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    ஐரோப்பிய நாடுகள் பல பலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வரும் நிலையில்,  இந்த போரில் ஆரம்பம் முதல் இஸ்ரேலுக்கு ஆதரவாக அனைத்து வகை உதவிகளையும் செய்து வரும் அமெரிக்கா சார்பில் போர் நிறுத்ததுக்கு அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

    8 மாதங்களை கடந்து நடந்துகொண்டிருக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். நேற்று (மே 31) வெள்ளை மாளிகையில் செய்தி நேரலையில் பேசிய ஜோ பைடன், இஸ்ரேலின் இந்த உடன்படிக்கையை ஹாமாஸ் ஏற்று இந்த போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு முதற்கட்டமாக 6 வார கால போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் தற்போது வரை இஸ்ரேல் நடத்தியுள்ள வலுவான தாக்குதலில் ஹமாஸால் இனிமேல் பெரிய அளவில் செயல்பட முடியாது என்றும் தெரிவித்தார்.

     

    "இந்த தருணத்தை நேதன்யாகு விட்டுவிடக் கூடாது. 6 வார கால போர் நிறுத்தத்துக்கு ஏற்பட்டு ஹமாஸுடன் பேச்சுவார்த்தை வெற்றி பெரும் பட்சத்தில் அதை மேலும் நீட்டித்து போரை முடிவுக்கு கொண்டுவருவோம். அதன்பிறகு உலக நாடுகள் சேர்ந்து போரில் ஏற்பட்ட சேதங்களை சரி செய்யும் பணியில் ஈடுபவோம்" என்று பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இஸ்ரேல்- ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் ஜோ பைடன் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

    • கேண்டியாக் பார்க் மைதானத்தில் போதுமான வசதிகள் இல்லை.
    • இதனால் இந்திய வீரர்கள் பயிற்சிகள் செய்வதில் சிரமம் ஏற்பட்டது.

    நியூயார்க்:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.

    இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.

    டி20 உலகக் கோப்பை தொடருக்காக நியூயார்க், டல்லாஸ், புளோரிடா உள்ளிட்ட பகுதிகளில் கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. பயிற்சி செய்வதற்காகவும் சில மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை தற்காலிக ஏற்பாடுகளாக மட்டுமே உள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    இதற்கிடையே, இந்திய அணி வீரர்கள் அமெரிக்காவில் 4 நாட்களாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பயிற்சி செய்வதில் சிரமம் ஏற்படுவதாக இந்திய அணி வீரர்கள் குற்றம் சாட்டினர்.

    கேண்டியாக் பார்க் பகுதியில் பயிற்சி மேற்கொள்ளும் பகுதிக்கும், இந்திய அணி விளையாட உள்ள மைதானத்திற்கும் இடையில் நீண்ட தூரம் இருக்கிறது.

    பயிற்சிக்கு ஏற்றவாறு மைதானங்களில் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. எல்லாமே தற்காலிக ஏற்பாடுதான். பிட்சில் இருந்து அனைத்துமே தற்காலிகமானது என இந்தியா சார்பில் கூறப்பட்டுள்ளது.

    • தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் டொனால்டு டிரம்பின் அதிகாரப்பூர்வ நிதி திரட்டும் இணைய பக்கத்தில் (FUNDRISING PAGE) தான் ஒரு 'அரசியல் கைதி' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
    • "நான் இப்போது அரசியல் சூனிய வேட்டையில் குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளேன். நான் எந்த தவறும் செய்யவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புடன் இருந்த ரகசிய உறவு குறித்து ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதையடுத்து இவ்விவகாரத்தை ஸ்டார்மி பேசாமல் இருக்க அவருக்கு (இந்திய மதிப்பில்) ரூ.1.07 கோடி டிரம்ப் மூலம் வழங்கப்பட்டது. இந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று குறிப்பிடப்பட்டது.

    இதையடுத்து அவர் மீது தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என அறிவித்த நீதிபதி மெர்க்கன், ஜூலை 11-ம் தேதி டிரம்ப்புக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

     

    விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இது ஒரு மோசடியான அவமானகரமான வழக்கு. இதற்கு உண்மையான தீர்ப்பு நவம்பர் 5 (அமெரிக்க அதிபர் தேர்தலில்) மக்களால் வழங்கப்படும். உண்மை என்னவென்று மக்களுக்கு தெரியும். நான் நிரபராதி, நமது தேசத்துக்காகவும் அரசியலமைப்புக்காகவும் போராடி வருகிறேன்" என்று தெரிவித்தார்.

     

    தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் டொனால்டு டிரம்பின் அதிகாரப்பூர்வ நிதி திரட்டும் இணைய பக்கத்தில் (FUNDRISING PAGE) தான் ஒரு 'அரசியல் கைதி' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அதில், "நான் இப்போது அரசியல் சூனிய வேட்டையில் குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளேன். நான் எந்த தவறும் செய்யவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

    தனது சமூக வலைதள பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், "நான் உண்மையை பேசியதற்கு அரசியல் சூழ்ச்சியால் அவர்கள் என்னை சிறையில் அடைக்க விரும்பினால் நான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்று நாவீன காலத்தின் நெல்சன் மண்டேலாவாக மாறுவேன். அது எனக்கு மிகப்பெரிய மரியாதையாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

     

    இந்நிலையில் இந்த தீர்ப்பு காரணமாக டிரம்ப் தேர்தலில் போட்டியிடுவதில் எவ்வித சிக்கலும் இல்லை என கூறப்படுகிறது. அமெரிக்காவில் ஒரு முன்னாள் அதிபர் குற்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்படுவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப் சிக்கினார்.
    • இதுதொடர்பான வழக்கு விசாரணை நியூயார்க் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

    நியூயார்க்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்சுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் சிக்கினார். கடந்த 2016-ம் ஆண்டு டிரம்ப் அதிபர் தேர்தல் போட்டியின்போது அவருடன் இருந்த ரகசிய உறவு குறித்து ஸ்டார்மி டேனியல்ஸ் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

    தேர்தல் பிரசார சமயத்தில் ஆபாச நடிகை ஸ்டார்மி வெளியிட்ட தகவலால் டிரம்புக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது. இதையடுத்து இவ்விவகாரத்தை ஸ்டார்மி பேசாமல் இருக்க அவருக்கு ரூ.1.07 கோடி டிரம்ப் மூலம் வழங்கப்பட்டது. இந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று குறிப்பிடப்பட்டது.

    அமெரிக்காவில் பொய்யாக வணிக செலவை காட்டுவது சட்ட விரோதம் என்பதால் டிரம்ப் மீது விசாரணை நடந்து வந்த நிலையில் அவர் மீது சமீபத்தில் தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனால் டிரம்ப் கைது செய்யப்பட்டார். அவர்மீது 34 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    இதுதொடர்பான வழக்கு விசாரணை நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என அறிவித்த நீதிபதி மெர்க்கன், ஜூலை 11-ம் தேதி டிரம்ப்புக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். இந்த அறிவிப்பு காரணமாக டிரம்ப் தேர்தலில் போட்டியிடுவதில் எவ்வித சிக்கலும் இல்லை என கூறப்படுகிறது.

    அமெரிக்காவில் ஒரு முன்னாள் அதிபர் குற்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்படுவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • காங்கோவில் ஐ.நா. குழுவில் பணியாற்றி வருபவர் இந்திய வீராங்கனை மேஜர் ராதிகா சென்.
    • மேஜர் ராதிகா சென் ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டரெசிடம் இருந்து மதிப்புமிக்க விருதை பெற்றார்.

    நியூயார்க்:

    ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் வீரர்களின் சர்வதேச தினம் மே 30-ம் தேதி அன்று கடைப்பிடிக்கப்பட்டது.

    காங்கோவில் ஐ.நா. பணியில் பணியாற்றி வரும் இந்திய வீராங்கனை மேஜர் ராதிகா சென்னுக்கு மதிப்புமிக்க 2023 ஐக்கிய நாடுகளின் ராணுவ பாலின வழக்கறிஞர் விருது அறிவிக்கப்பட்டது.

    காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியாளராக பணியாற்றினார் மேஜர் சென்.

    அவர் மார்ச் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் பட்டாலியனுக்கான படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றினார். மேஜர் சுமன் கவானிக்கு பிறகு இந்த மதிப்புமிக்க விருதைப் பெறும் 2-வது இந்திய அமைதி காக்கும் வீரர் மேஜர் சென் ஆவார்.

    மேஜர் சென்னின் சேவையைப் பாராட்டிய குட்டரெஸ், அவர் ஒரு உண்மையான தலைவர் மற்றும் முன்மாதிரி. அவரது சேவை ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு உண்மையான வரவு. வடக்கு கிவுவில் அதிகரித்து வரும் மோதல் சூழலில், அவரது துருப்புக்கள் பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட மோதலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் தீவிரமாக ஈடுபட்டன. பணிவு, இரக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார் என குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, மேஜர் ராதிகா சென் கூறுகையில், விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி. சவாலான சூழலில் பணியாற்றும் அனைத்து அமைதி காக்கும் படையினரின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் அளிப்பதால் இந்த விருது எனக்கு சிறப்பு வாய்ந்தது. மேலும் சமூகத்தில் ஒரு நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவர தங்களால் இயன்றதை வழங்குகிறது என தெரிவித்தார்.

    இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேற்று நடந்த விழாவில் ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெசிடம் இருந்து மதிப்புமிக்க 2023 ஐக்கிய நாடுகளின் ராணுவ பாலின வழக்கறிஞர் விருதை மேஜர் ராதிகா சென் பெற்றார்.

    • அமெரிக்காவின் போர்ப்ஸ் நிறுவனம் உலகின் டாப் 10 பெண் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது.
    • 4-வது ஆண்டாக உலகின் பணக்கார பெண்மணி என்ற பட்டத்தை மேயர்ஸ் பெற்றுள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் போர்ப்ஸ் நிறுவனம் உலகின் டாப் 10 பெண் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. உலகளவில் உள்ள 2,781 பில்லியனர்களில் 2024-ம் ஆண்டில் மொத்த பில்லியனர் எண்ணிக்கையில் 13.3 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். இது முந்தைய ஆண்டில் 12.8 சதவீதமாக இருந்தது.

    இந்தப் பட்டியலில் தொடர்ந்து 4-வது ஆண்டாக உலகின் பணக்கார பெண்மணி என்ற பட்டத்தை பிரான்சுவா பெட்டன்கோர்ட் மேயர்ஸ் பெற்றுள்ளார். இவர் லாரியல் நிறுவனரின் பேத்தி ஆவார். இவரது சொத்து மதிப்பு 98.2 பில்லியன் டாலராகும். அவரின் சொத்து லாரியல் குழுமத்தின் கிட்டத்தட்ட 35 சதவீத பங்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    அவரை தொடர்ந்து, 2-வது இடத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆலிஸ் வால்டன் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 77.2 பில்லியன் டாலராகும்.

    இந்தப் பட்டியலில் 3-வது இடத்தில் ஜூலியா கோச் 66.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார். கோச் இண்டஸ்ட்ரீசில் 42 சதவீத பங்குகளைப் பெற்ற அவர் எண்ணெய் சுத்திகரிப்பு, மருத்துவத் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

    தனியார் நிறுவனமான மார்ஸ் இன்க்கின் வாரிசான ஜாக்குலின் மார்ஸ் 39.4 பில்லியன் டாலர் மதிப்புடன் 4-வது இடத்தில் உள்ளார்.

    மார்ஸ் இன்க் உலகின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றாகும்.

    இந்தியாவின் பணக்காரப் பெண்மணியான சாவித்ரி ஜிண்டால் 38 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் 5-வது இடம்பிடித்துள்ளார். ஜிண்டால் குழுமம் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் ஒன்றாகும். இதன் வருவாய் 15 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது.

    6-வது இடத்தில் ரஃபேலா அபோன்டே-டயமண்டும், 7வது இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் முன்னாள் மனைவியான மெக்கென்சி ஸ்காட்டும், 8-வது இடத்தில் ஜினா ரைன்ஹார்ட்டும், 9-வது இடத்தில் அபிகாயில் ஜான்சனும், 10-வது இடத்தில் மிரியம் அடெல்சனும் உள்ளனர்.

    • டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
    • வரும் 9-ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறுகிறது.

    நியூயார்க்:

    9-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.

    இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை வரும் 5-ம் தேதி சந்திக்கிறது.

    உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 9-ம் தேதி நியூயார்க்கில் நடக்கிறது.

    இந்நிலையில், அச்சுறுத்லை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன் டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்து இருந்ததாக தகவல் வெளியானது. பாகிஸ்தானில் இருந்து அச்சுறுத்தல் வந்ததாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதன் எதிரொலியாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறும் நியூயார்க்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் மைதானம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல் வெளியிட்டுள்ள அறிக்கையில், உளவுத்துறையின் தகவல்படி இந்த நேரத்தில் நம்பகமான பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. ஆனாலும் அதிகப்படியான கண்காணிப்பு, முழுமையான சோதனைகள் உள்ளிட்ட உயர்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பொது பாதுகாப்பே எனது முதன்மையான முன்னுரிமை. உலகக் கோப்பை போட்டி பாதுகாப்பான, மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருப்பதை உறுதி செய்வதில் உறுதியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ம் தேதி தொடங்குகிறது.
    • தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    புளோரிடா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ம் தேதி தொடங்குகிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் இந்த தொடர் நடைபெற உள்ளது. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்திய நேரப்படி நேற்று இரவு 8 மணிக்கு நடந்த பயிற்சி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இலங்கை அணி நெதர்லாந்தை சந்தித்தது.

    முதலில் பேட் செய்த நெதர்லாந்து 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மைக்கேல் லெவிட் 55 ரன் எடுத்தார்.

    இலங்கை சார்பில் தில்ஷன் மதுஷன்கா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 182 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி நெதர்லாந்தின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில், இலங்கை அணி 18.5 ஓவரில் 161 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வனிந்து ஹசரங்கா 43 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் நெதர்லாந்து 20 ரன்க்ள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டி20 உலகக் கோப்பை 'ஏ'பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது.
    • பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.

    நியூயார்க்:

    9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.

    'ஏ'பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ம் தேதி எதிர்கொள்கிறது. பாகிஸ்தானுடன் 9-ம் தேதியும், அமெரிக்காவுடன் 12-ம் தேதியும், கனடாவுடன் 15-ம் தேதியும் மோதுகிறது.

    உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணி அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குச் சென்றடைந்தது. இந்திய வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கி உள்ளனர். அவர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பயிற்சியின்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

    இந்திய அணி வரும் 1-ம் தேதி நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்துடன் மோதுகிறது.

    டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 15 வீரர்கள் விவரம்:

    ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஜடேஜா, அக்சர் படேல், பும்ரா, அர்ஷ்தீப் சிங், சாஹல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

    மாற்று வீரர்களாக சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    • காங்கோவில் ஐ.நா. பணியில் பணியாற்றி வருபவர் இந்திய வீராங்கனை மேஜர் ராதிகா சென்.
    • உண்மையான தலைவர் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பாராட்டினார்.

    நியூயார்க்:

    ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் வீரர்களின் சர்வதேச தினம் மே 30-ம் தேதி அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

    இந்நிலையில், காங்கோவில் ஐ.நா. பணியில் பணியாற்றி வரும் இந்திய வீராங்கனை மேஜர் ராதிகா சென், மதிப்புமிக்க 2023 ஐக்கிய நாடுகளின் ராணுவ பாலின வழக்கறிஞர் விருது பெறுகிறார்.

    காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியாளராக பணியாற்றினார் மேஜர் சென். இங்குள்ள உலக அமைப்பின் தலைமையகத்தில் நாளை நடைபெறும் விழாவில் குட்டரெசிடம் இருந்து மதிப்புமிக்க 2023 ஐக்கிய நாடுகளின் ராணுவ பாலின வழக்கறிஞர் விருதை பெறுகிறார்.

    அவர் மார்ச் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் பட்டாலியனுக்கான படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றினார். மேஜர் சுமன் கவானிக்கு பிறகு இந்த மதிப்புமிக்க விருதைப் பெறும் 2-வது இந்திய அமைதி காக்கும் வீரர் மேஜர் சென் ஆவார்.

    மேஜர் சென்னின் சேவையைப் பாராட்டிய குட்டரெஸ், அவர் ஒரு உண்மையான தலைவர் மற்றும் முன்மாதிரி. அவரது சேவை ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு உண்மையான வரவு. வடக்கு கிவுவில் அதிகரித்து வரும் மோதல் சூழலில், அவரது துருப்புக்கள் பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட மோதலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் தீவிரமாக ஈடுபட்டன. பணிவு, இரக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார் என குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, மேஜர் ராதிகா சென் கூறுகையில், விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி. சவாலான சூழலில் பணியாற்றும் அனைத்து அமைதி காக்கும் படையினரின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் அளிப்பதால் இந்த விருது எனக்கு சிறப்பு வாய்ந்தது. மேலும் சமூகத்தில் ஒரு நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவர தங்களால் இயன்றதை வழங்குகிறது என தெரிவித்தார்.

    • தனது மகளை பூங்காவிற்கு அழைத்து சென்று விளையாடி உள்ளார்.
    • தேடிய போது அவர் டிக்கெட் வாங்கிய கடைகளிலேயே அதனை வைத்து விட்டு வந்தது தெரியவந்தது.

    லாட்டரியில் ஜாக்பாட் பரிசு கிடைப்பதற்கு அதிர்ஷ்டம் வேண்டும் என்பார்கள். அந்த அதிர்ஷ்டம் எல்லோருக்கும் சரியான நேரத்தில் கிடைப்பது இல்லை. ஆனாலும் சிலருக்கு அதிர்ஷ்டம் எதிர்பாராத வகையிலும் கிடைத்து விடும்.

    அந்த வகையில் அமெரிக்காவில் விர்ஜீனியா பகுதியை சேர்ந்த டியாரா என்ற இளம்பெண் ஒருவர் லாட்டரி டிக்கெட்டை வாங்கி உள்ளார். பின்னர் அவர் தனது மகளை பூங்காவிற்கு அழைத்து சென்று விளையாடி உள்ளார்.

    இந்நிலையில் திடீரென அவர் தான் வாங்கிய லாட்டரி சீட்டை தேடிய போது அதனை காணவில்லை. தொடர்ந்து அந்த சீட்டை தேடிய போது அவர் டிக்கெட் வாங்கிய கடைகளிலேயே அதனை வைத்து விட்டு வந்தது தெரியவந்தது. ஒரு வழியாக தொலைந்து போன டிக்கெட் மீண்டும் கிடைத்த சந்தோசம் ஒருபுறம் என்றால் அந்த டிக்கெட்டிற்கு 50 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.41.5 லட்சம்) பரிசு விழுந்தது அவருக்கு மேலும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    • பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
    • புயல் காரணமாக அங்கு ஏராளமான மரங்கள், மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மத்திய பகுதியில் சக்திவாய்ந்த புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி டெக்சாஸ், ஓக்லஹோமா, ஆர்கன்சாஸ் ஆகிய மாகாணங்களை புயல் பந்தாடியது.

    அப்போது வெளியில் நின்று கொண்டிருந்த பல கார்களை புயல் கவிழ்த்து போட்டது. மேலும் அங்குள்ள ஏராளமான வீடுகளும் சேதம் அடைந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக்கொண்டனர்.

    இதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர் மீட்கும் பணியில் இறங்கினர். அப்போது கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்தில் பச்சிளம் குழந்தைகள் உள்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே புயல் காரணமாக அங்கு ஏராளமான மரங்கள், மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எனவே சுமார் 5 லட்சம் பேர் இருளில் மூழ்கி தவித்தனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

    ×