என் மலர்
அமெரிக்கா
- ஹண்டர் பைடனின் காரில் இருந்து கோல்ட் ரிவால்வர் துப்பாக்கியையும், கோகைன் உள்ளிட்ட பொருட்களைக் கண்டெடுத்தார்.
- எங்களது குடும்பம் நிறைய கஷ்டங்களை சந்தித்துள்ளது, ஒரு தந்தையாக எனது மகனுக்கு எப்போதும் பக்கத்துணையாக நிற்பேன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கி வைத்திருந்த வழக்கில் சிக்கி நீதிமன்றத்துக்கு நடையாக நடந்து வருகிறார். மூளை கேன்சரால் கடந்த 2015 ஆம் ஆண்டு உயிரிழந்த ஜோ பைடனின் இளைய மகன் பீயு பைடனின் மாணவி கடந்த 2018 ஆம் ஆண்டு ஹண்டர் பைடனின் காரில் இருந்து கோல்ட் ரிவால்வர் துப்பாக்கியையும், கோகைன் உள்ளிட்ட போதைப்பொருட்களையும் கண்டெடுத்தார்.
இதுதொடர்பாக அவர் போலீசுக்கு வாக்குமூலம் அளித்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. போதைப்பழக்கத்துக்கு அடிமையான அதிபரின் மகன் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தார் என்பதே இந்த வழக்கு ஊடக வெளிச்சம் பெற போதுமான காரணாமாக அமைந்தது.
அதன்படி அமெரிக்காவில் அதிகம் பேசப்பட்டு வரும் இந்த வழக்கில் ஹண்டர் பைடன் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டால் அவரை மன்னிக்கப் போவதில்லை என்று ஹண்டரின் தந்தையும் அமெரிக்க அதிபருமான ஜோ பைடன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நான் அதிபராக இருந்தாலும் ஒரு தந்தையாக, எனது மகன் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளேன், எங்களது குடும்பம் நிறைய கஷ்டங்களை சந்தித்துள்ளது, ஒரு தந்தையாக எனது மகனுக்கு எப்போதும் பக்கத்துணையாக நிற்பேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் உள்ள அதிபரின் மகன் மீது குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும். நவம்பர் மாதம் அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதர்க்கனா தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இளம்பெண் ஒருவர் பழுப்பு நிறத்திலான குட்டி நாய் ஒன்றை தூக்கி கொண்டு சாலையில் வேகமாக நடந்து வருகிறார்.
- வெள்ளை நிறத்திலான நாய்குட்டி ஒன்றும் பின்தொடருகிறது.
அமெரிக்காவின் லூசியானா மாகாணம் செயின்ட் லான்ட்ரி பாரிஸ் என்ற நகரத்தில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சி ஒன்று வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சியில் இளம்பெண் ஒருவர் பழுப்பு நிறத்திலான குட்டி நாய் ஒன்றை தூக்கி கொண்டு சாலையில் வேகமாக நடந்து வருகிறார். அவரோடு வெள்ளை நிறத்திலான நாய்குட்டி ஒன்றும் பின்தொடருகிறது.
பின்னர் கண்இமைக்கும் நேரத்தில் சாலையோரத்தில் உள்ள குப்பை தொட்டியில் தான் வைத்திருந்த நாய்குட்டியை தூக்கி வீசுகிறார். மேலும் தன் காலடியில் இருந்த மற்றொரு நாயையும் குப்பை தொட்டியில் தூக்கி வீசிவிட்டு திரும்பி பார்க்காமல் நடந்து செல்கிறார்.
மனதை பதை பதைக்க வைக்கும் இந்த காட்சி இணையத்தில் வெளியான நிலையில் அந்த நாய் குட்டிகளின் நிலைமை என்ன ஆனதோ? என்று கேள்விகளை எழுப்பி வேகமாக பரப்பி வருகிறார்கள்.
- ஸ்டார்லைனர் பயணம் இரண்டு முறை தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது.
- இன்று பயணத்தை தொடங்கிய நிலையில் நாளை விண்வெளி நிலையத்தை அடையும்.
போயிங் நிறுவனம் ஸ்டார்லைனர் விண்கலத்தை வடிவமைத்தது. இந்த விண்கலத்தில் நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல இருந்தனர்.
ஆனால் தொழில் நுட்ப கோளாறு காரணமாக போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் பயணம் தடைபட்டது. தொழில் நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட நிலையில் இன்று போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் புட்ச் வில்மோர், சுனிதா வில்லியம்ஸை சுமந்து கொண்டு விண்வெளி நிலையம் நோக்கி புறப்பட்டது.
25 மணி நேர பயணத்திற்குப் பிறகு வியாழக்கிழமை (நாளை) அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் ஒரு வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு மேற்கொண்டு ஜூலை 14-ந்தேதி பூமிக்கு திரும்புகிறார்கள்.
சுனிதா வில்லியம்ஸ் இதற்கு முன்னதாக இரண்டு முறை விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது 3-வது முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஸ்டார்லைனர் விண்கலத்தின் முதன் பயணம் இதுவாகும். கடந்த 2019-ம் ஆண்டு விண்வெளி வீரர்கள் இல்லாமல் ஸ்டார்லைனர் சோதனைக்கு உட்படுத்தபட்டது. அப்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பலமுறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 2022-ல் சோதனை வெற்றி பெற்ற நிழையில் பாராசூட் உள்ளிட்ட சில பிரச்சனைகள் உருவாகின.
இந்த நிலையில்தான் இரண்டு முறை முயற்சி தோல்வியடைந்த நிலையில் 3-வது முயற்சியில் வெற்றிகரமாக பறந்துள்ளது.
- பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
- பிரதமர் மோடி 3-வது முறை பிரதமராக விரைவில் பதவியேற்க உள்ளார்.
வாஷிங்டன்:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றது. இதையடுத்து, நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் என இரு பெரும் தேசிய கட்சிகளும் தனித்தனியே கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன.
இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை முழு விவரங்கள் இன்று வெளிவந்தன.
பா.ஜ.க. 240 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதனால் ஆட்சி அமைக்க தேவையான 272 என்ற எண்ணிக்கையை விட 32 தொகுதிகள் குறைவாக பெற்றுள்ளது. ஆனாலும் தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது.
இதற்கிடையே, பிரதமர் மோடி 3-வது முறை பிரதமராக விரைவில் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கவுள்ள மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷிய அதிபர் புதின், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தென் கொரியா அதிபர் யூன் சுக் ரியோல், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட், ஜெர்மன் அதிபர் ஒலாப் ஸ்கால்ப்ஸ், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் ஒன்றாகப் பணிபுரிய விருப்பம் உள்ளதாக உலக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
- சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை மோதின.
- 7 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க்:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று அரங்கேறும் 8-வது லீக்கில் இந்திய அணி, அயர்லாந்தை சந்திக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார்.
அதன்படி, அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்திய அணி விவரம் வருமாறு:
ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், பும்ரா, அர்ஷ்தீப் சிங், சிராஜ்
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை மோதியுள்ளன. 7 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
- கடந்த வாரம் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் டிரம்ப் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
- டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என கூறி டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (வயது 77). குடியரசு கட்சி தலைவரான இவர் இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் அங்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இதனை முன்னிட்டு நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே கடந்த வாரம் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அவர் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இந்தநிலையில் சீன செயலியான டிக் டாக்கில் டிரம்ப் புதிய கணக்கு துவங்கினார். அவரை டிக் டாக்கில் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இவர் ஜனாதிபதியாக இருந்தபோது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என கூறி டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தார்.
இந்தநிலையில் தற்போது அவரே டிக் டாக்கில் இணைந்துள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் தேர்தல் பிரசார உத்திக்காக டிக் டாக்கில் இணைந்து இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
- கலைஞர் மு.கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- பிரசித்தி பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் வகையில் கலைஞரின் புகைப்படம் பிரதிபலிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
மறைந்த தி.மு.க தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாரின் வழிவந்த அண்ணாவின் திராவிட அரசியலை 1969 இல் அவரது மறைவுக்குப் பின் தமிழகத்தில் தீவிரமாக முன்னெடுத்துச் சென்ற கலைஞர் கருணாநிதி பழமைவாதத்தை வேரறுக்கும் பல மகத்தான திட்டங்களை கொண்டுவந்தவர் ஆவார்.
கை ரிக்ஷா ஒழிப்புத்திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டங்களை கொண்டுவந்தது, எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள், கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை நிறுவியது, இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தி, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், 3 விழுக்காடு அருந்ததியருக்கும், 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கும், 1 விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் அளித்து அனைத்து சமூகத்தினருக்கும் சம உரிமை கிடைக்க வழிவகை செய்தது, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைத்தது, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அளித்தது, விதவைகளுக்கு மறுமண உதவித் திட்டங்களை அளித்தது, கலப்பு திருமணங்களை ஊக்குவிக்க நிதியுதவி அளித்தது என கலைஞர் கொண்டுவந்த திட்டங்களின் பட்டியல் நீளும்.

குமரிக்கடலில் திருவள்ளுவர் சிலையை நிறுவி உலக செம்மொழி மாநாட்டை நடத்திக்காட்டினார். கலைஞரின் சாதனைகளுக்காக இன்றளவும் அவர் நினைவுகூறப்டும் நிலையில் அவரின் 101 வது பிறந்தநாளை திமுக தொண்டர்களும் அவரது அபிமானிகளும் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரும் நியூ யார்க் தமிழ் சங்கத் தலைவருமான கதிர்வேல் குமாரராஜா தனது குடும்பத்துடன் சேர்ந்து கலைஞருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தனது காசை செலவுசெய்து, நியூ யார்க் டைம்ஸ் சதுக்கத்தில் முழு அளவிலான விளம்பரப் பலகையில் கலைஞரின் புகைப்படத்தை இடம்பெறச் செய்துள்ளார். அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கதிர்வேல் ராஜாவின் குடும்பத்தினர் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. பிரசித்தி பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் வகையில் கலைஞரின் புகைப்படம் பிரதிபலிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்த பாகிஸ்தான், அமெரிக்காவை ஜூன் 6-ம் தேதி சந்திக்கிறது.
- கடந்த ஆண்டு பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிவரை முன்னேறியது.
நியூயார்க்:
டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் அணி முதல் லீக் ஆட்டத்தில் ஜூன் 6-ம் தேதி அமெரிக்க அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இதையடுத்து, ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டம் ஜூன் 9-ம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது.
இந்நிலையில், டி 20 உலகக் கோப்பை தொடருக்காக பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அமெரிக்கா வந்திறங்கியது. அப்போது, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரைச் சந்தித்தார். அவர்கள் இருவரும் சிறிது நேரம் உரையாடினர். இதுதொடர்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்தது.
கடந்த தொடரில் இறுதிப்போட்டிவரை முன்னேறிய பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Babar Azam interacts with cricketing icon Sunil Gavaskar ??#T20WorldCup pic.twitter.com/YZMRkDBXWV
— Pakistan Cricket (@TheRealPCB) June 1, 2024
- கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையிலும் சிறப்பாக செயல்பட்டார்.
- விராட் கோலி 4-வது முறையாக சிறந்த வீரருக்கான ஐசிசி விருது வென்றுள்ளார்.
நியூயார்க்:
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது.
விராட் கோலி கடந்த ஆண்டில் 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,377 ரன்கள் குவித்தார். இதில் 6 சதம், 8 அரை சதம் அடங்கும்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையிலும் சிறப்பாக செயல்பட்டார்.
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி விளையாடிய 11 போட்டிகளில் மொத்தம் 765 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 2023-ம் ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெட் சிறந்த வீரருக்கான விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. விருதுக்கான கோப்பை மற்றும் தொப்பியை அவர் பெற்றுக் கொண்டார்.
விராட் கோலி 4-வது முறையாக சிறந்த வீரருக்கான ஐசிசி விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இறுதிப்போட்டியில் பங்கேற்ற 8 பேரில் 6 பேர் தெற்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
வாஷிங்டன்:
உலகப்புகழ் பெற்ற ஸ்பெல்லிங் பீ' எனப்படும் சொற்களை சரியாக உச்சரிக்கும் போட்டி 1925-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.
இந்த ஆண்டு நடந்த போட்டியில் 1.1 கோடி பேர் பங்கேற்றனர். அவர்களில் இருந்து தகுதிச்சுற்றுக்கு 228 பேரும், இறுதிப்போட்டிக்கு 8 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள நேஷனல் ஹார்பர் பகுதியில் ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ-2024 இறுதிப்போட்டி நேற்று நடந்தது.
இந்த போட்டியின் இறுதியில் நடந்த டை பிரேக்கர் சுற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 12 வயது மாணவர் புருகத் சோமா 90 விநாடிகளில் 29 வார்த்தைகளைச் சரியாக உச்சரித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
வெற்றி பெற்ற புருகத் சோமாவிற்கு 50,000 டாலர் ரொக்கம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த பைஜன் ஜகி என்ற மாணவர் 2-வது இடமும், கலிபோர்னியாவைச் சேர்ந்த ஷ்ரேய் பரேக் 3-வது இடமும் பிடித்தனர்.
இறுதிப்போட்டியில் பங்கேற்ற 8 பேரில் 6 பேர் தெற்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- மொத்தம் 322 நாட்கள் விண்வெளியில் தங்கி உள்ள சுனிதா வில்லியம்ஸ் அங்கு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்.
- தற்போது 3-வது முறையாக மீண்டும் அவர் விண்வெளி பயணம் மேற்கொள்ள இருந்தார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58). இவர் கடந்த 1998-ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவில் இணைந்தார்.
இதனையடுத்து அங்கு விண்வெளிக்கு சென்று பல்வேறு ஆய்வுகளை அவர் மேற்கொண்டுள்ளார். அதன்படி இவரது முதல் பயணம் 2006-ம் ஆண்டிலும், 2-வது விண்வெளிப் பயணம் 2012-ம் ஆண்டிலும் வெற்றிகரமாக அமைந்தது.
இதன் மூலம் மொத்தம் 322 நாட்கள் விண்வெளியில் தங்கி உள்ள அவர் அங்கு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். தற்போது 3-வது முறையாக மீண்டும் அவர் விண்வெளி பயணம் மேற்கொள்ள இருந்தார். இவருடன் ஸ்டார்லைனர் வில்லியம்ஸ் (58), புல்ச் வில்மோர் ஆகியோரும் செல்ல இருந்தனர்.

இதற்காக, போயிங் நிறுவனம் தயாரித்துள்ள விண்கலம் மூலம் கடந்த மே மாதம் 7-ந்தேதி சர்வதேச விண்வெளிக்கு புறப்படுவதாக இருந்தது. ஆனால், விண்கலம் ஏவப்படுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன் தொழில்நுட்ப பிரச்சனையால், இந்த பயணம் திடீரென நிறுத்தப்பட்டதாக நாசா அறிவித்தது.
இதையடுத்து மீண்டும் நேற்று புறப்படுவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இதன் மூலம் மூன்றாவது முறையாக விண்வெளிக்கு மேற்கொள்ளவிருந்த சுனிதா வில்லியம்ஸின் சாதனை பயணம் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- இது அரசியல் சூனிய வேட்டை என்று தெரிவித்துள்ள டொனால்டு டிரம்ப், தான் நிரபராதி என்றும் அரசியல் கைதியாக ஆக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புடன் இருந்த ரகசிய உறவவை மறைக்க ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு (இந்திய மதிப்பில்) ரூ.1.07 கோடி டிரம்ப் மூலம் வழங்கப்பட்டது. இந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று குறிப்பிடப்பட்டது.
இதையடுத்து அவர் மீது தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்கில் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என நேற்று (மே 31) நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அமெரிக்காவில் ஒரு முன்னாள் அதிபர் குற்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்படுவது இது முதல் முறையாகும்.
இது அரசியல் சூனிய வேட்டை என்று தெரிவித்துள்ள டொனால்டு டிரம்ப், தான் நிரபராதி என்றும் அரசியல் கைதியாக ஆக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அமரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜோ பைடனுக்கு எதிராக வலுவான போட்டியாளராக டிரம்ப் பார்க்கப்படுகிறார். தற்போது வெளியாகியுள்ள தீர்ப்பு காரணமாக டிரம்ப் தேர்தலில் போட்டியிடுவதில் எவ்வித சிக்கலும் இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், இந்த மோசடியான தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்தார். தான் நிரபராதி என நிரூபிக்க முக்கியமான சாட்சிகளை நீதிமன்றத்துக்கு அழைத்து வர அனுமதிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பான தண்டனை விபரங்கள் வரும் ஜூலை 11ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.






