என் மலர்
பிரிட்டன்
- கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியடைந்து தேர்தலிலிருந்து முற்றிலுமாக துடைத்தெறியப்படும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.
- ரிஷி சுனக்கின் செயல்பாடுகள் மீதான அதிருப்தி இந்த தேர்தலில் எதிரொலிப்பதை தேர்தல் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன
பிரிட்டனில் வரும் ஜூலை 4 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியடைந்து தேர்தலிலிருந்து முற்றிலுமாக துடைத்தெறியப்படும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.
பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் தொழிலாளர் கட்சிக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த வாரம் இரு கட்சிகளும் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருந்தன. பிரிட்டனில் 40 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் முந்தைய பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 2022 ஆம் ஆண்டு பதிவு விலகிய நிலையில் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்த்த வலதுசாரியான ரிஷி சுனக் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
அவரின் செயல்பாடுகள் மீதான அதிருப்தி இந்த தேர்தலில் எதிரொலிப்பதை தேர்தல் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. கடந்த ஜூன் 12 முதல் 14 வரை Savanta நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு சண்டே டெல்கிராப் இதழில் வெளியானது. அதில் தொழிலாளர் காட்சியைச் சேர்ந்த கெயர் ஸ்டாமருக்கு 46 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 21 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சண்டே டைம்ஸ் இதழில் வெளியயான SURVATION நிறுவனம் மே31 முதல் ஜூன் 13 வரை நடத்திய கருத்துக்கணிப்பில், மொத்தம் 650 இடங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் தொழிலாளர் கட்சி 456 இடங்களைப் பிடிக்கும்(46%) என்றும், ரிஷி சுனக்கின் கன்செர்வேட்டிவ் கட்சி வெறும் 72 இடங்களைப் பிடிக்கும் (24%) எனவும் தெரியவந்துள்ளது. கடந்த காலங்களில் கன்சர்வேட்டிவ் கட்சி 200 இடங்கள் வெற்றி பெற்றிருந்ததே குறைந்த பட்ட எண்ணிக்கை என்பது கவனிக்கத்தக்கது.
சண்டே அப்சர்வர் இதழில் வெளியான OPINIUM நிறுவனம் ஜூன் 12 முதல் 14 வரை நடத்திய கருத்துக்கணிப்பில், தொழிலாளர் கட்சி 40% இடங்களைப் பிடிக்கும் எனவும் கன்சர்வேட்டிவ் கட்சி 23% இடைகளைப் பிடிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

- பிரிட்டனைச் சேர்ந்த 39 வயதாகும் பாட்ரிஸ் பெஞ்சமின் டேஸ்ட் நன்றாக இருக்கிறதென சிமிண்ட் செங்கலை நொறுக்குதீனியாக தினமும் சாப்பிட்டு வருகிறார்.
- இதனால் தனது உடலில் ஏற்படும் பாதிப்புகள் தெரிந்தும் தனது பழக்கத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதற்கு அடிமையாகியுள்ளார் பாட்ரிஸ்.
மனிதர்கள் பல்வேறு விஷயங்களுக்கு அடிமையாக இருப்பது தெரிந்ததே. வினோதமான விஷயங்களை செய்பவர்களைக் குறித்து நாம் கேள்விப்படும்போது அது நமக்கு ஆச்சரியம் அளிக்கத் தவறுவதில்லை. அந்த வகையில் பெண் ஒருவர் கடந்த 20 வருடங்களாக சிமெண்ட், செங்கல், கல், மண் ஆகியவற்றை தின்பண்டமாக தினமும் சாப்பிட்டு வருகிறார் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம், பிரிட்டனைச் சேர்ந்த 39 வயதாகும் பாட்ரிஸ் பெஞ்சமின் டேஸ்ட் நன்றாக இருக்கிறதென சிமிண்ட் செங்கலை நொறுக்குதீனியாக தினமும் சாப்பிட்டு வருகிறார்.
இவைகளை உண்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கும் பாட்ரிஸ், வீட்டில் உள்ள சுவர்களை உடைத்து அதில் உள்ள செங்கல் சிமெண்ட் உதிரிகளையும் சாப்பிட்டு வருகிறாராம். அவரது கணவர் எவ்வளவோ கெஞ்சியும் பாட்ரிஸால் இந்த பழக்கத்தை கைவிட முடியவில்லை.

இதனால் தனது உடலில் ஏற்படும் பாதிப்புகள் தெரிந்தும் தனது பழக்கத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதற்கு அடிமையாகியுள்ளார் பாட்ரிஸ். சாப்பிடக் கூடாதவற்றை சாப்பிடத்தூண்டும் இந்த குறைபாட்டுக்கு பிக்கா என்பது மருத்துவப்பெயர். தனது 18 வது வயதில் பிக்கா குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பாட்ரிஸ் கடந்த 20 ஆண்டுகளாக இந்த பழக்கத்தில் இருந்து விடுபடமுடியாமல் தவித்து வருகிறார்.

தமிழில் சரத்குமார் நடித்த 'ஏய்' படத்தில் வரும் ஒரு காமெடி சீனில் டியூப்லைட்டை உடைத்து சாப்பிடும் ஒருவரிடம் வடிவேலு மாட்டிக்கொளவார். காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் அவர் லைட் பல்புகளை சாப்பிடுவதாக சொல்வது காமெடியாக நாம் எடுத்துக்கொண்ட நிலையில் உண்மையிலேயே அதுபோன்ற நபர்கள் உலகத்தில் இருப்பது ஆச்சரியமளிப்பதாக உள்ளது.
- இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் பொரூஸியா டார்முண்ட் அணியும் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணியும் மோதின.
- டோர்முண்ட் அணியின் டிபெண்டர் டானி கார்வஜால் அசந்த நேரத்தில் ரியல் மாட்ரிட் அணி ஆட்டத்தின் 74ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தியது.
UEFA சாம்பியன் ஷிப் லீக் என்று அழைக்கப்படும் ஐரோப்பிய கோப்பை கால்பந்து 69 வது சீசன் போட்டிகள் கடந்த வருடம் ஜூன் மாதம் தொடங்கி நடந்து வந்த நிலையில் சாம்பியன் லீக் பட்டத்தை வெல்வதற்காக இறுதிப்போட்டியானது நேற்று (ஜூன் 1) சனிக்கிழமை லண்டனில் உள்ள வெம்ப்லே மைத்தனத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் பொரூஸியா டார்முண்ட் அணியும் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின. இந்த லீக் தொடர் முழுவதிலும் இரண்டாவது சிறந்த அணியாக விளங்கிய டொர்முண்ட் அணி ஆட்டத்தின் முதல் பாதியில் வாய்ப்பு கிடைத்தும் 3 கோல்களை தவறவிட்டது.
டோர்முண்ட் அணியின் டிபெண்டர் டானி கார்வஜால் அசந்த நேரத்தில் ரியல் மாட்ரிட் அணி ஆட்டத்தின் 74ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தியது. தொடர்ந்து ரியல் மத்ரித் வீரர் வினீசியஸ் ஜூனியர், 9 நிமிட இடைவெளியில் ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இதன்மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியின் பொரூஸியா டார்முண்ட் அணியை வீழ்த்தி ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்ஷிப் லீக் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. ஐரோப்பிய லீக் கோப்பையை ரியல் மாட்ரிட் அணி வெல்வது இது 15 ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- தனது மகன் இன்பநிதியுடன் இருக்கும் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- உதயநிதி ஸ்டாலின் நாளை சென்னை திரும்புவார் என்று தகவல்.
தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலின் போது 24 நாட்களாக பிரசாரம் மேற்கொண்டார்.
பின்னர், தேர்தலின் போது தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் மனைவியுடன் வந்து அவர் வாக்களித்தார்.
தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் முழுமையாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ள முடியாத நிலை உள்ளது.
இதன் காரணமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 10 நாள் பயணமாக லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
சென்னையில் இருந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காலை 9.50 மணிக்கு விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து லண்டன் சென்றார்.

அப்போது, விமானத்தில் பயணத்தின்போது தனது மகளுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தின் கேப்சனில் ரியல் ரவுடி என்று அவர் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், தனது மகன் இன்பநிதியுடன் இருக்கும் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீபகாலமாக மலையாள படமான ஆவேஷம் படத்தில் பகத் பாசில் வீடியோ போன்று உதயநிதியுடம், இன்பநிதியும் ரீல்ஸ் செய்தனர்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் நாளை சென்னை திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
- சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
- பதிலடியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது.
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எங்கள் நாட்டின் இரண்டு தளபதிகள் உயிரிழந்ததால் அதற்கு பதிலடி கொடுப்போம் என ஈரான் சூளுரைத்தது. சூளுரைத்ததுபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் ஈரானுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்தியது. அதேபோல் ஈரான் நேரடியாகவும் தாக்குதல் நடத்தியது.
ஈரான் தாக்குதலை எதிர்பார்த்த இஸ்ரேல் அமெரிக்கா உதவியுடன் அனைத்து ஏவுகணைகளையும் வான் எல்லையிலேயே எதிர்த்து வெற்றிகரமாக அழித்து தாக்கியது. இதனால் இஸ்ரேல் நாட்டில் பெரும் சேதம் ஏற்படுவது தடுத்து நிறுத்தப்பட்டது. தாங்களும் தயார் என நேதன்யாகு தெரிவித்திருந்தார்.
அதேவேளையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஈரான் தாக்குதலுக்கு பதிலடியாக ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படாது எனத் தெரிவித்துள்ளார்.
ஈரான் தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல்- ஈரான் மோதல் காரணமாக உலகப்போர் மூளும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடம் டெலிபோன் மூலம் பேசினார். அப்போது ஈரான் தாக்குதலை தொடர்ந்து நிதானத்த கடைபிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஈரான் தவறான கணக்கு போட்டுள்ளது. உலகளாவிய அளவில் தனிமைப்படுத்துதலை அதிகப்படுத்தியுள்ளது. பதற்றம் அதிகரிப்பு யாருக்கும் நலன் இல்லை மற்றும் மத்திய கிழக்கில் பாதுகாப்பின்மையை மேலும் தீவிரமாக்கும். நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய தருணம் இது" எனத் தெரிவித்துள்ளார்.
ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் இங்கிலாந்தின் விரைவான மற்றும் வலுவான ஆதரவு நன்றி என நேதன்யாகு ரிஷி சுனக்கிடம் தெரிவித்துள்ளார்.
- அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருப்பது வழக்கம்.
- இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
காசா போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று வேல்ஸ் இளவரசர் வில்லியம் வலியுறுத்தி உள்ளார். பொதுவாக அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருப்பது வழக்கமாக இருந்து வந்தது.
இந்த நிலையில், 41 வயதான வேல்ஸ் இளவரசர் வில்லியம் மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருவதை அடுத்து இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் மத்திய கிழக்கில் நடத்திய தாக்குதல் மற்றும் அதன் பிறகு அங்கு நடைபெறும் சம்பவங்களால் மனித குலம் எதிர்கொள்ளும் இழப்புகளை கண்டு பெரிதும் வருந்துகிறேன். இதில் பலர் கொல்லப்பட்டு விட்டனர்."
"நான், மற்றவர்களை போன்றே, இந்த சண்டை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றே நினைக்கிறேன். காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் அதிகளவில் தேவைப்படுகிறது. உதவிகள் அதிவேகமாக சென்றடைய வேண்டியதும், பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டியதும் அவசியம் ஆகும்," என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
- மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டபோது புற்றுநோய் பாதிப்பு தெரியவந்தது.
- சிகிச்சை அளிக்கப்படுவதால் பொதுவெளி நிகழ்வில் பங்கேற்க வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரை.
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்படுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் "கடந்த மாதம் மூன்று நாட்கள் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது மன்னர் சார்லஸ்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அவருக்கு மருத்துவ சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதால், பொதுவெளியில் நடைபெறும் நிகழ்வுகளில் அவர் பங்கேற்க வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதே நேரத்தில் தனது வழக்கமான மற்ற பணிகளை மன்னர் மேற்கொள்வார்.
ஊகங்களைத் தடுக்கவும், தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் அறிவித்துள்ளார்" என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் (கோப்புப்படம்)
75 வயதான மன்னர் சார்லஸ் கடந்த 2023-ம் ஆண்டு இங்கிலாந்து மன்னராக முடிசூடிக் கொண்டார். இரண்டாம் எலிசபெத் ராணி, 2022-ல் உயிரிழந்ததை அடுத்து மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். மன்னர் சார்லஸ்க்கு வில்லியம், ஹாரி என இரண்டு மகன்கள் உள்ளனர். ஹாரி குடும்பத்தில் இருந்து பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
- இங்கிலாந்தில் எல்பி ரெகார்டுகளின் விற்பனை மிகவும் அதிகரித்துள்ளது
- ஹெச்எம்வி (HMV) ஷோரூமில் புதிய தலைமுறையினரும் அதிகம் வாங்குகின்றனர்
திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி பிரபல பாடகர்களின் ஆல்பங்கள் 1970-80களில் எல்பி ரெகார்ட் (LP Record) எனப்படும் வட்டவடிவ கிராமபோன் தட்டுக்களில் பதிவாகி விற்கப்பட்டு வந்தது. 1990களிலும், பிறகு 2000 தசாப்த தொடக்கங்களிலும் கேசட் (cassette) வடிவிற்கு வரவேற்பு அதிகம் இருந்தது.
அதற்கு பிந்தைய காலகட்டத்தில் இசைப்பிரியர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியால் கணினி மற்றும் மொபைல் போன்களில், "ஸ்ட்ரீமிங்" செய்யப்பட்ட பாடல்களை நேரடியாக பதிவிறக்கம் செய்து கேட்க முடிந்தது.
இதனால் அனைத்து வடிவ இசைத்தட்டுக்களும் விற்பனையாவது குறைய தொடங்கி, அவற்றை தயாரிப்பதும் படிப்படியே நின்று போனது.

இந்நிலையில், இங்கிலாந்தில் சமீப காலங்களில் எல்பி ரெகார்டுகளுக்கு தேவை அதிகரித்துள்ளது.
எல்பி ரெகார்டுகளை விற்பனை செய்பவர்களின் கூட்டமைப்பு (British Phonographic Industry trade group), கடந்த வருடத்தை காட்டிலும் 11.7 சதவீதம் - சுமார் 60 லட்சம் (5.9 மில்லியன்) - எல்பி ரெகார்டுகள் விற்றிருப்பதாக தெரிவித்தது.
அதிக விற்பனையான ரெகார்டுகளில், புகழ் பெற்ற அமெரிக்க பாடகி டேலர் ஸ்விஃப்ட்-டின் (Taylor Swift) 1989 ஆல்பம், ரோலிங் ஸ்டோன்ஸ் (Rolling Stones) குழுவினரின் ஹேக்னே டயமண்ட்ஸ் (Hackney Diamonds) ஆல்பம் ஆகியவை முன்னணியில் உள்ளன.
இசை ரசிகர்களின் கேட்கும் முறையில், ஐந்தில் ஒரு பங்கு, கணினி மற்றும் இணையவழியில் இருந்தாலும், "எல்பி", "கேசட்", மற்றும் "சிடி" விற்பனை பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வேகம் பிடித்துள்ளது.
சேகரித்து வைத்து கொண்டு மீண்டும் மீண்டும் கேட்கும் வசதி இருப்பதாலும், "ஸ்ட்ரீமிங்" இசையை விட மிக துல்லிய இசை வடிவத்தை கேட்க முடிவதாலும் இசைப்பிரியர்கள் இவற்றில் ஆர்வம் செலுத்துவதாக சொல்லப்படுகிறது.
லண்டன் நகரின் ஆக்ஸ்போர்டு தெருவில், சுமார் 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட ஹெச்எம்வி (HMV) ரெகார்டு ஷோ ரூம், புதிய தலைமுறையினரும் எல்பி மற்றும் கேசட்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிவித்துள்ளது.

விற்பனையில் புது பாடல்கள் மட்டுமின்றி பழைய பாடல்களும் அதிகம் விரும்பப்படுகின்றன.
மென்பொருள் வடிவில் இல்லாமல் எளிதில் கையாளப்பட கூடிய வடிவில் இருப்பதால் இசைப்பிரியர்கள் சிடி போன்றவற்றை அதிகம் வாங்குவது ஒரு வரவேற்கதக்க மாற்றம் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மாற்றம் பிற நாடுகளுக்கும் பரவலாம் என சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- அதிகாரி ஒருவரின் உயிரை ‘ஸ்மார்ட் வாட்ச்’ காப்பாற்றிய சம்பவம் இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.
- நிலைகுலைந்தவர் தனது கையில் கட்டியிருந்த ‘ஸ்மார்ட் வாட்ச்’ மூலம் மனைவி லாராவுக்கு போன் செய்து சம்பவத்தை கூறினார்.
இன்றைய காலத்தில் 'ஸ்மார்ட் வாட்ச்' அணிவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெறுமனே நேரம் பார்ப்பதற்காக மட்டுமின்றி நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்டுபிடித்து 'அலார்ட்' செய்யும் உயிர்காக்கும் கருவியாகவும் 'ஸ்மார்ட் வாட்ச்' செயல்படுகிறது.
அந்த வகையில் அதிகாரி ஒருவரின் உயிரை 'ஸ்மார்ட் வாட்ச்' காப்பாற்றிய சம்பவம் இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது. பிரிட்டனில் உள்ள ஸ்வான்சியின் மோரிஸ்டன் பகுதியை சேர்ந்தவர் பால்வபாம். இவர் அங்குள்ள ஒரு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். தினமும் அதிகாலை நடைபயிற்சி செல்லும் இவர் சம்பவத்தன்று நடைபயிற்சி சென்ற போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் நிலைகுலைந்த அவர் தனது கையில் கட்டியிருந்த 'ஸ்மார்ட் வாட்ச்' மூலம் மனைவி லாராவுக்கு போன் செய்து சம்பவத்தை கூறினார்.
உடனடியாக விரைந்து சென்ற அவர், கணவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவரது இதயத்துக்கான ரத்தக்குழாயில் ஏற்பட்ட அடைப்பு சரி செய்யப்பட்டு தற்போது நலமாக உள்ளார். தனது 'ஸ்மார்ட் வாட்ச்' மூலம் உயிர் பிழைத்ததாக பால்வபாம் கூறி உள்ளார்.
- இங்கிலாந்து அரச குடும்பத்தினர் இவர்களின் வாடிக்கையாளர்கள்
- 20 நிமிடங்களில் கணக்கிலிருந்து ரூ. 16,18,31,197.92 காணாமல் போனது
ஒப்பனை சாதனங்களில் உயர்ரக தலை வாரும் சீப்புகள் மற்றும் பிரஷ் போன்ற 250க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கும் பிரபல இங்கிலாந்து நிறுவனம், கென்ட் பிரஷஸ் (Kent Brushes). 1777ல் தொடங்கபட்ட இந்நிறுவனம், இத்தொழிலில் 245 வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தை தற்போது நடத்தி வருபவர் ஸ்டீவ் ரைட் (Steve Wright).
இவர்களின் வாடிக்கையாளர்களில் இங்கிலாந்து அரச குடும்பத்தினர் முதன்மையானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் வங்கி கணக்கை பார்க்லே வங்கி கையாண்டு வந்தது.
கடந்த ஜூலை மாதம், அந்நிறுவன நிதி நிர்வாக அதிகாரிக்கு, வங்கியிலிருந்து அழைப்பதாக தொலைபேசி அழைப்பு வந்தது. வங்கி பணம் களவாடப்படும் சூழல் இருப்பதாகவும் அதனை தடுக்க சில தரவுகள் தேவை எனவும் அந்த அழைப்பில் கேட்கப்பட்டது. அதை நம்பிய அவர், கேட்கப்பட்ட விவரங்களை தொலைபேசியிலேயே வழங்கினார். கடவுச்சொல் உட்பட முக்கிய தகவல்கள் கேட்கப்பட்டதால் அதனையும் தெரிவித்தார்.
இதையடுத்த 20 நிமிடங்களில் அந்நிறுவன வங்கி கணக்கிலிருந்து ரூ.16,18,31,197.92 (1.6 மில்லியன் பவுண்ட்) தொகை காணாமல் போனது.
அதிர்ச்சியடைந்த அந்த அதிகாரி ஸ்டீவ் ரைட்டிற்கு தகவல் தர, அவர்கள் வங்கியை தொடர்பு கொண்டு அங்குள்ள சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
இது குறித்து ஸ்டீவ் ரைட் கூறியதாவது:
பார்க்லே வங்கி எங்கள் பணத்தை மீண்டும் வழங்கி விடும் என நம்பினோம். ஆனால், இதுவரை வங்கி எங்கள் இழப்பிற்கு ஈடு எதுவும் தரவில்லை; காவல்துறையும் எவரையும் கைது செய்யவில்லை. இதுவரை இவ்வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. மிக பெரும் குற்றத்தை துப்புதுலக்க இது வழிமுறை அல்ல. புகார் அளித்த ஒரு மாதம் கடந்து "வழக்கு முடிந்து விட்டது" (case closed) என வங்கியிலிருந்து ஒரு கடிதம் வந்தது; அவ்வளவுதான். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர்களுக்கு கடுமையான குற்றங்கள் தரப்பட வேண்டும்.
இவ்வாறு ஸ்டீவ் தெரிவித்தார்.
"எந்த வாடிக்கையாளரிடமும் கடவு சொல் உட்பட முக்கிய விவரங்களை எந்த வங்கியும் கேட்பதில்லை. இது போன்ற மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்" என்பது மட்டுமே பார்க்லே வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் அதிக அளவில் இத்தகைய மோசடிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது இங்கிலாந்திலும் போலி தொலைபேசி அழைப்பு மூலம் இது போன்ற மோசடிகள் நடைபெறுவது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.
- வேக கட்டுப்பாட்டை மீறி 3 மடங்கு வேகத்தில் கேரி சென்றார்
- என் ஒரே அழகான மகளை இழந்து விட்டேன் என்றார் லட்சுமிதாஸ்
கடந்த 2019 ஆகஸ்ட் மாதம், இங்கிலாந்து தலைநகரான லண்டன் நகரின் மேற்கில் உள்ள கென்சிங்டன் பகுதியில் ஜேட் முடுவா (22) எனும் இளம் பெண் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஒரு பெண்ணை கத்தியை காட்டி எவரோ பயமுறுத்துவதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்ததின் பேரில், அப்பெண்ணை காக்க சம்பவ இடத்திற்கு பெருநகர காவல்துறை வாகனத்தில் கேரி விட்கின்சன் (Gary Witkinson) எனும் காவலர் விரைந்து சென்று கொண்டிருந்தார்.
அந்த பகுதியில் மணிக்கு சுமார் 50 கிலோமீட்டர் வேகத்தில்தான் செல்ல வேண்டும் என கட்டுப்பாடு இருந்தும் தனது கடமையை ஆற்ற சுமார் 100 கிலோமீட்டர் வேகத்தில் கேரி சென்று கொண்டிருந்தார்.
நடந்து வந்து கொண்டிருந்த முடுவா, சாலையை கடக்க முயன்றார். அப்போது கேரி, முடுவாவை பார்த்ததும் தனது வாகனத்தை நிறுத்த முயன்றார். ஆனால், மிக வேகமாக ஓட்டியதால் அவரால் உடனே நிறுத்த முடியவில்லை. இதனால் துரதிர்ஷ்டவசமாக முடுவா மீது கேரியின் காவல்துறை வாகனம் மோதியது.
இதையடுத்து உடனடியாக கேரி காரை நிறுத்தினார். அங்கிருந்தவர்கள் ஆம்புலன்சை வரவழைத்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முடுவா, பலத்த காயங்களால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்திற்கு காரணமான கேரி மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்தது.
ஆனால், கேரி காவல்துறையினரின் நடத்தை விதிகளின்படியே செயல்பட்டதாக தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, மிகுந்த வேதனையடைந்துள்ள முடுவாவின் தந்தை ஜெர்மைன் லட்சுமிதாஸ் (Jermaine Laxmidas), தெரிவித்ததாவது:
காரால் மோதிய கேரியிடம் கேட்கப்பட்ட போது, "காவல்துறை வாகனங்கள் கடமையை ஆற்ற வேக கட்டுப்பாட்டை தாண்டி 3 மடங்கு அதிகம் செல்லாம்" என கூறியுள்ளார். இது தவறு. இந்த சட்டம் மாற்றப்பட வேண்டும். என் ஒரே அழகான மகளை நான் இழந்துள்ளேன். காவலர்களின் வாகனங்களுக்கும் வேக கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு லட்சுமிதாஸ் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
அவரது இழப்பிற்கு வருத்தம் தெரிவிக்கும் அதே நேரம் இவரது தனிப்பட்ட கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளத்தில் பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- கப்பல்களுக்காக திறந்து மூடும் வகையில் இது கட்டப்பட்டது
- மூடி கொள்ளாமல் இருப்பதை கண்டு பார்வையாளர்கள் கூடி விட்டனர்
இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ளது புகழ் பெற்ற டவர் பிரிட்ஜ் (Tower Bridge).
பாஸ்க்யூல் முறையில் அமைக்கப்பட்ட இந்த தொங்கு பாலம் 1894ல் கட்டி முடிக்கப்பட்டது. லண்டனில் உள்ள புகழ் பெற்ற லண்டன் டவர் சுற்றுலா தலத்திற்கு அருகே தேம்ஸ் நதியின் குறுக்கே டவர்
ஹாம்லெட்ஸ் மற்றும் சவுத்வார்க் ஆகிய இரு பகுதிகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்டது. நதியில் சிறு கப்பல்கள் வரும் போது இது திறந்து மூடும் வகையில் கட்டப்பட்டுள்ளதால், இங்கிலாந்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் காண விரும்பும் இடங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
நேற்று மாலை 01:15 மணியளவில் அதன் கீழ் ஒரு படகு சென்றது. அது சென்றவுடன் வழக்கம் போல் திறந்த அந்த பாலம் மூடி கொள்ளவில்லை. இதனை கண்ட அங்கிருந்த பார்வையாளர்கள் ஆச்சரியமடைந்து நடப்பதை பார்த்து கொண்டிருந்தனர்.
சுமார் அரை மணி நேரம் கழித்துத்தான் அது மீண்டும் மூடி கொண்டது. அந்த பாலத்தின் ஹைட்ராலிக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறினால் அதனால் சிறிது நேரம் மூடி கொள்ள இயலாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் பிரபலமான பாம்பன் பாலமும் இதை போலவே வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






