என் மலர்
உலகம்
- நேபாளத்தின் காத்மண்டுவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இது ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானது.
காத்மண்டு:
நேபாளத்தின் காத்மண்டுவில் இன்று அதிகாலை 4.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது 4.1 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் தரைப்பகுதியில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
- இஸ்ரேல் - ஹமாஸ் போரில் பொதுமக்கள், குழந்தைகள் உயிரிழப்பு.
- ஹமாஸ் நடத்திய டிரோன் தாக்குதல் முறியடிப்பு.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த சில வாரங்களாக போர் நடைபெற்று வருகிறது. இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த போரில், பொது மக்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், காசா எல்லை அருகில் இருக்கும் இஸ்ரேல் ராணுவ நிலைகளை குறிவைத்து ஹமாஸ் டிரோன் தாக்குதல் நடத்தியது. ஹமாஸ்-இன் ஆயுத பிரிவு அல் குவாசம் பிரிகேடிஸ் இந்த டிரோன் தாக்குதலை நடத்தி இருக்கிறது. இஸ்ரேலின் ஹிட்சிரம் நகரில் உள்ள விமானப்படைத்தளம், தஸ்லிம் நகரில் உள்ள ராணுவப்படை தளத்தை குறிவைத்தே ஹமாஸ் இந்த தாக்குதலை நடத்தியது.
அதன்படி ஹமாஸ் நடத்திய டிரோன் தாக்குதலை முறியடித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்து இருக்கிறது. காசாவில் இருந்து ஏவப்பட்ட இரண்டு டிரோன்களும் நிர் ஒஸ் மற்றும் என் ஹபிசர் பகுதியில் சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து இருக்கிறது.
- புறப்பட்ட சில நிமிடங்களில் மாற்று தண்டவாள பாதைக்காக மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
- இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம்புரண்டன.
வங்காளதேசத்தில் இரண்டு ரெயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
வங்காளதேசத்தின் டாக்கா மாகாணத்தின் கிஷோர்கஞ்ச் மாவடத்தில் இருந்து டாக்கா நோக்கி சென்று கொண்டிருந்த இகரொசிந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், புறப்பட்ட சில நிமிடங்களில் மாற்று தண்டவாள பாதைக்காக மாற்றப்பட்டு இருந்தது. எக்ஸ்பிரஸ் ரெயில் மெல்ல தண்டவாளம் மாறிக் கொண்டிருந்த போது, திடீரென வேகமாக வந்த சரக்கு ரெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மோதியது.
இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம்புரண்டன. இதன் காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தவர்களில் இதுவரை 15 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர். விபத்து குறித்த தகவல் அறிந்ததும், மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ரெயில் விபத்துக்குள்ளான பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. விபத்து தொடர்பான விசாரணையும் துவங்கி நடைபெற்று வருகிறது.
- பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
- அங்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நவாஸ் ஷெரீப் சொந்த நாடு திரும்பியுள்ளார்.
லாகூர்:
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் கடந்த 4 ஆண்டுக்கு முன் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி லண்டனில் குடியேறினார். இதற்கிடையே வாடகை விமானம் மூலம் நவாஸ் ஷெரீப் சொந்த நாடு திரும்பினார்.
பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. பொருளாதார சிக்கலில் தவித்து வரும் நிலையிலும், பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையிலும் நவாஸ் ஷெரீப் சொந்த நாடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் லாகூரில் நடந்த பேரணியில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
பல வருடங்களுக்குப் பிறகு இன்று உங்களைச் சந்திக்கிறேன், ஆனால் உங்களுடனான எனது அன்பு உறவும் அதேதான். இந்த உறவில் எந்த வித்தியாசமும் இல்லை.
இந்தியாவின் அணுகுண்டு சோதனைக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க விரும்பியபோது, வெளிநாட்டு அரசாங்கங்கள் பெரும் அழுத்தங்களைக் கொடுத்தன.
அணு ஆயுத சோதனை நடத்தாமல் இருப்பதற்காக முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் நமக்கு 5 பில்லியன் டாலர் தருவதாக கூறினார்.
ஆனால் அவற்றையும் மீறி 1998-ம் ஆண்டு நாம் அணு ஆயுத சோதனையை நடத்தி இந்தியாவின் அணு ஆயுத சோதனைக்கு தகுந்த பதிலடி கொடுத்தோம் என தெரிவித்தார்.
- இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
- ஹிஸ்புல்லா அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல் அவிவ்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய 16-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலுடன் போர் தொடுக்க முற்பட்டால் அதுதான் ஹிஸ்புல்லாவின் மிகப் பெரிய தவறாகும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நேதன்யாகு கூறுகையில், தற்போது ஹிஸ்புல்லா அமைப்பு போரில் முழுமையாக ஈடுபடுமா என்பதை என்னால் கணிக்க முடியாது. ஹிஸ்புல்லா அவ்வாறு முடிவெடுத்தால், அது வருத்தப்படும். ஹிஸ்புல்லா அமைப்பை நினைத்துக்கூட பார்க்க முடியாத சக்தியுடன் நாங்கள் தாக்குவோம். அது ஹிஸ்புல்லா மற்றும் லெபனான் அரசு ஆகிய இரண்டிற்கும் அழிவை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
- நெய்பிடாவில் இருந்து 90 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம்.
- நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை.
மியான்மரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 6.29 மணியளவில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், நெய்பிடாவில் இருந்து 90 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை.
- இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
- எகிப்து மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல் அவிவ்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா மீது ஏவுகணைகளை வீசி வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய 16-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேல் நாட்டின் பீரங்கியில் இருந்து வந்த குண்டுகள் நேற்று எகிப்து நாட்டில் தாக்கியது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடந்து வரும் நிலையில் திடீரென ஏவுகணை எகிப்தைத் தாக்கியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
உலகின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் சுமார் 12 சதவீதம் சூயஸ் கால்வாய் வழியாக நடக்கிறது. இந்த சண்டையில் சூயஸ் கால்வாய் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டால் அது சர்வதேச அளவில் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் எகிப்து மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் பரபரப்பைக் கிளப்பியது.
இந்நிலையில், இது திட்டமிடப்பட்ட தாக்குதல் இல்லை. தவறுதலாக எகிப்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு இஸ்ரேல் ராணுவம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேல் ராணுவம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கெரெம் ஷாலோம் பகுதியில் எல்லையை ஒட்டிய எகிப்திய போஸ்ட் மீது பீரங்கி ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வருத்தம் தெரிவிக்கிறது என பதிவிட்டுள்ளது.
- எண்ணிக்கையில் சுமார் 18,000 பேர் மட்டுமே உள்ளனர்
- 16லிருந்து 20 வயது முடிவதற்குள் மகளை திருமணம் செய்து கொடுக்கின்றனர்
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடு பல்கேரியா. இதன் தலைநகர் சோஃபியா.
இந்நாட்டில் எண்ணிக்கையில் சுமார் 18 ஆயிரம் பேரை கொண்ட கலாய்ழி ரோமா (Kalaidzhi Roma) எனும் இனத்தவர் வசிக்கின்றனர்.
இவர்களிடையே ஒரு விசித்திரமான பழக்கம் நிலவுகிறது.
இந்த இனத்தவர்கள் தங்கள் இன இள வயது திருமணமாகாத பெண்கள், பிற ஆண்களுடன் 'டேட்டிங்' அல்லது காதல் போன்ற அந்த பருவத்திற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஆதரிப்பதில்லை. மேலும் இவர்கள் இனத்தை சேர்ந்தவர்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் பலர் தங்களுடன் இணைத்து கொள்ள தயங்குகின்றனர். அதனால் இவர்கள் சமுதாயத்தில் அன்னியப்படுத்தப்பட்டு விட்டதாகவும் உணர்கிறார்கள்.
எனவே, இவர்கள் திருமண சம்பந்தத்தையும் பிற இனத்தவர்களுடன் செய்து கொள்வதில்லை.
தங்கள் இன பெண்களை 16லிருந்து 20 வயதிற்குள் தங்கள் இனத்திலேயே உள்ள ஆண் மணமகனுக்கு திருமணம் செய்து கொடுத்து விட விரும்புகிறார்கள்.
இதற்காக வருடாவருடம் ஒரு குறிப்பிட்ட நாளில் ஸ்டாரா ஜகோரா (Stara Zagora) எனும் பகுதியில் அந்த பெண்கள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பெற்றோருடன் அழைத்து வரப்படுகின்றனர். அவர்களை தேர்வு செய்ய அங்கு அதே இனத்து ஆண்கள் தங்கள் பெற்றோருடன் வருகின்றனர்.
இளைஞர்கள் தங்களுக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்தவுடன் அப்பெண்ணின் பெற்றோரின் சம்மதத்தை கேட்கின்ற சம்பிரதாயம் நடைபெறுகிறது.
தங்கள் பெண்ணை மணமுடித்து கொடுப்பதற்கு ஈடாக அப்பெண்ணின் பெற்றோர் கேட்கும் தொகையை அவர்களிடம் அந்த இளைஞன் கொடுத்து திருமண பந்தத்தை ஏற்படுத்தி கொள்கிறார். இதற்கென இந்த இளைஞர்கள் தங்களின் வாழ்வில் சிறு வயதிலிருந்தே சேமிக்க தொடங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மணப்பெண்ணின் தோற்றம், உருவம், மணமகனின் வளமை போன்ற அம்சங்களை பொறுத்து பெண்ணின் பெற்றோர் பெறும் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. அனேக பெண்கள் பள்ளி படிப்பை முடிப்பதற்கு கூட பெற்றோர் விடுவதில்லை.
"ஜிப்சி பிரைட் மார்கெட்" என வட்டார மொழியில் அழைக்கப்படும் இந்த பழக்கத்தை குறித்தும், அம்மக்களின் வாழ்வை குறித்தும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
- அரசு அனுமதி பெற்றுத்தான் கிராஃபைட் ஏற்றுமதி இனி நடைபெற முடியும்
- 65 சதவீத கிராஃபைட் சீனாவிலிருந்துதான் கிடைக்கிறது
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் தொழில்நுட்பங்களுக்கு அவசிய தேவையான செமிகண்டக்டர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்கா பலவித கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இத்துறையில் சீனா நுழைவதை தடுக்கும் விதமாக இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, மின்சார வாகனங்கள், மொபைல் போன்கள் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருளான 'கிராஃபைட்', தன் நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு செல்வதை தடுக்கும் விதமாக, சீனா, அதன் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
"தேசிய பாதுகாப்பு மற்றும் தேச நலனுக்காக 2 வகையான கிராஃபைட்களை ஏற்றுமதி செய்ய சீன ஏற்றுமதியாளர்கள் இனி அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும். இந்த கொள்கை மாற்றம் எந்த குறிப்பிட்ட தேசத்தையும் குறி வைத்து கொண்டு வரப்படவில்லை" என சீனாவின் வர்த்தக துறை அறிவித்துள்ளது.
அரசு அனுமதியை கோரும் போது எந்த நாடுகளுக்கு அவை செல்கின்றன என்பதை சீனா தீவிரமாக கண்காணிக்க முடியும்.
வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மின்சார வாகன உற்பத்தியை அதிகரித்து வருகின்றன. அவற்றில் உள்ள பேட்டரிகளுக்கு தேவைப்படும் முக்கிய மூலப்பொருளான கிராஃபைட்டின் உற்பத்தி தன் வசம் உள்ளதால் சீனா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. உலகிற்கு தேவைப்படும் கிராஃபைட் உற்பத்தியில் 65 சதவீதத்திற்கும் அதிகமான பங்கு சீனாவிலிருந்துதான் கிடைக்கிறது.
வேறு நாடுகளில் கிராஃபைட் கிடைக்கும் வரை சீனாவின் இந்த நடவடிக்கை கண்டிப்பாக மாற்று எரிசக்தி துறையில் அந்நாட்டின் ஆதிக்கம் அதிகரிக்கவே வழி செய்யும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- இங்கிலாந்து அரச குடும்பத்தினர் இவர்களின் வாடிக்கையாளர்கள்
- 20 நிமிடங்களில் கணக்கிலிருந்து ரூ. 16,18,31,197.92 காணாமல் போனது
ஒப்பனை சாதனங்களில் உயர்ரக தலை வாரும் சீப்புகள் மற்றும் பிரஷ் போன்ற 250க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கும் பிரபல இங்கிலாந்து நிறுவனம், கென்ட் பிரஷஸ் (Kent Brushes). 1777ல் தொடங்கபட்ட இந்நிறுவனம், இத்தொழிலில் 245 வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தை தற்போது நடத்தி வருபவர் ஸ்டீவ் ரைட் (Steve Wright).
இவர்களின் வாடிக்கையாளர்களில் இங்கிலாந்து அரச குடும்பத்தினர் முதன்மையானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் வங்கி கணக்கை பார்க்லே வங்கி கையாண்டு வந்தது.
கடந்த ஜூலை மாதம், அந்நிறுவன நிதி நிர்வாக அதிகாரிக்கு, வங்கியிலிருந்து அழைப்பதாக தொலைபேசி அழைப்பு வந்தது. வங்கி பணம் களவாடப்படும் சூழல் இருப்பதாகவும் அதனை தடுக்க சில தரவுகள் தேவை எனவும் அந்த அழைப்பில் கேட்கப்பட்டது. அதை நம்பிய அவர், கேட்கப்பட்ட விவரங்களை தொலைபேசியிலேயே வழங்கினார். கடவுச்சொல் உட்பட முக்கிய தகவல்கள் கேட்கப்பட்டதால் அதனையும் தெரிவித்தார்.
இதையடுத்த 20 நிமிடங்களில் அந்நிறுவன வங்கி கணக்கிலிருந்து ரூ.16,18,31,197.92 (1.6 மில்லியன் பவுண்ட்) தொகை காணாமல் போனது.
அதிர்ச்சியடைந்த அந்த அதிகாரி ஸ்டீவ் ரைட்டிற்கு தகவல் தர, அவர்கள் வங்கியை தொடர்பு கொண்டு அங்குள்ள சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
இது குறித்து ஸ்டீவ் ரைட் கூறியதாவது:
பார்க்லே வங்கி எங்கள் பணத்தை மீண்டும் வழங்கி விடும் என நம்பினோம். ஆனால், இதுவரை வங்கி எங்கள் இழப்பிற்கு ஈடு எதுவும் தரவில்லை; காவல்துறையும் எவரையும் கைது செய்யவில்லை. இதுவரை இவ்வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. மிக பெரும் குற்றத்தை துப்புதுலக்க இது வழிமுறை அல்ல. புகார் அளித்த ஒரு மாதம் கடந்து "வழக்கு முடிந்து விட்டது" (case closed) என வங்கியிலிருந்து ஒரு கடிதம் வந்தது; அவ்வளவுதான். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர்களுக்கு கடுமையான குற்றங்கள் தரப்பட வேண்டும்.
இவ்வாறு ஸ்டீவ் தெரிவித்தார்.
"எந்த வாடிக்கையாளரிடமும் கடவு சொல் உட்பட முக்கிய விவரங்களை எந்த வங்கியும் கேட்பதில்லை. இது போன்ற மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்" என்பது மட்டுமே பார்க்லே வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் அதிக அளவில் இத்தகைய மோசடிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது இங்கிலாந்திலும் போலி தொலைபேசி அழைப்பு மூலம் இது போன்ற மோசடிகள் நடைபெறுவது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.
- இரு நாடுகளும் ஒரு நல்ல உறவு அமைய அடித்தளம் அமைத்து வந்தன
- நல்லுறவு வருவதை ஹமாஸ் விரும்பவில்லை என பைடன் கூறினார்
சுமார் 75 வருடங்களுக்கு முன் தனி நாடாக உருவானது இஸ்ரேல். ஆனால் பல அரபு நாடுகள், இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்காமல் இருந்தன. அவற்றில் சவுதி அரேபியாவும் ஒன்று. இதன் காரணமாக இஸ்ரேலுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே நீண்ட காலமாக சுமூகமான உறவில்லை.
ஆனால், சமீப காலங்களில் இரு நாடுகளும் தங்களுக்கு இடையே ஒரு நல்ல உறவு அமைய அடித்தளம் அமைத்து வந்தன. இந்த இரு நாடுகளும் ஒன்றையொன்று நெருங்கி வருவதற்கான முயற்சிகளில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
கடந்த செப்டம்பர் மாதம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த போது, சவுதி அரேபியாவுடன் அமெரிக்க அதிபரின் தலைமையில் அமைதியை நிலைநாட்ட முடியும் என தாம் நம்புவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இம்மாதம் 7 அன்று, இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இஸ்ரேலை அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரிக்க, பாலஸ்தீனத்தை ஈரான், கத்தார், லெபனான் உள்ளிட்ட அரபு நாடுகள் ஆதரிக்கின்றன.
பாலஸ்தீன பொதுமக்களுக்கு ஆதரவான நிலையை சவுதி அரேபியா எடுத்துள்ளது. இதனால் இஸ்ரேலுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே மீண்டும் உறவு நலிவடைய தொடங்கி விட்டது.
இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாவது:
திடீரென இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு காரணம், சவுதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட கூடாது என ஹமாஸ் எண்ணியதுதான். இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்க வழி செய்து, நல்லுறவை ஏற்படுத்த முயன்றேன். இஸ்ரேலை தனி நாடாக சவுதி அரேபியா அங்கீகரிக்கவும் முன் வந்தது. ஆனால் வரலாற்று சிறப்புமிக்க அத்தகைய நிகழ்வு நடந்து விட கூடாது என ஹமாஸ் விரும்புகிறது. இதனால் திடீர் தாக்குதலை நடத்தியது.
இவ்வாறு பைடன் கூறினார்.
- இப்பகுதியில் பெருமளவில் உலக வர்த்தக கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது
- பல நாடுகளுடன் சீனாவிற்கு கடல் எல்லை சச்சரவு நீடிக்கிறது
மேற்கு பசிபிக் கடலில், கடல்வழி போக்குவரத்திற்கு மிக அத்தியாவசியமான இடமாக கருதப்படுவது வட சீன கடல் பகுதி.
இந்த கடற்பகுதி வழியாக உலகின் 21 சதவீதத்திற்கும் அதிகமான உலக வர்த்தக கப்பல் போக்குவரத்து கையாளப்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. மீன் வளம் அதிகமுள்ள பகுதியாக கருதப்படுவதால் உலகின் 50 சதவீத மீன்பிடி கப்பல்கள் இங்கு நிலைநிறுத்தப்படுவது வழக்கம்.
இந்த வட சீன கடல் பகுதியில் இரண்டாம் தாமஸ் ஷோல் (shoal) எனும் நீர்மட்டம் குறைவான கடல் பகுதி உள்ளது. இப்பகுதி மீது சீனாவும் பிலிப்பைன்ஸும் உரிமை கொண்டாடுவதால் சர்ச்சைக்குரிய பகுதியாக கருதப்படுகிறது.
பிலிப்பைன்ஸ் இப்பகுதியில் தன் நாட்டு கப்பல்களை நிலைநிறுத்தும். இக்கப்பல்களுக்கு மாதாந்திர அத்தியாவசிய பொருட்கள், சிறிய படகுகளில் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், இரு வெவ்வேறு சம்பவங்களில் பிலிப்பைன்ஸிற்கு சொந்தமான ஒரு சரக்கு வினியோக படகின் மீதும், ஒரு கடலோர கப்பற்படை கப்பல் மீதும், சீனாவின் கடலோர கப்பற்படை கப்பல், வேண்டுமென்றே மோதியதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால் இதனை மறுத்துள்ள சீனா, "பிலிப்பைன்ஸ் வேண்டுமென்றே சர்ச்சையை உருவாக்குகிறது" என தெரிவித்துள்ளது.
"எங்கள் நாட்டு கடல்வழி போக்குவரத்தை சீனா தடுக்க நினைக்கிறது. இதற்காக அந்நாடு ஆபத்தான வழிமுறைகளை கையாண்டு வருகிறது. இதனால் கடல் பயணம் மேற்கொள்ளும் எங்கள் நாட்டினரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது" என இது குறித்து பிலிப்பைன்ஸ் தெரிவித்தது.
இக்கடல் பகுதியில் பிலிப்பைன்ஸை தவிர மேலும் பல நாடுகளின் பல பகுதிகளுக்கு, சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக வியட்னாம், தைவான், மலேசியா மற்றும் புரூனே ஆகிய நாடுகள் சீனாவுடன் சுமூக உறவில்லாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.






