என் மலர்
உலகம்
- இப்பகுதியில் பெருமளவில் உலக வர்த்தக கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது
- பல நாடுகளுடன் சீனாவிற்கு கடல் எல்லை சச்சரவு நீடிக்கிறது
மேற்கு பசிபிக் கடலில், கடல்வழி போக்குவரத்திற்கு மிக அத்தியாவசியமான இடமாக கருதப்படுவது வட சீன கடல் பகுதி.
இந்த கடற்பகுதி வழியாக உலகின் 21 சதவீதத்திற்கும் அதிகமான உலக வர்த்தக கப்பல் போக்குவரத்து கையாளப்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. மீன் வளம் அதிகமுள்ள பகுதியாக கருதப்படுவதால் உலகின் 50 சதவீத மீன்பிடி கப்பல்கள் இங்கு நிலைநிறுத்தப்படுவது வழக்கம்.
இந்த வட சீன கடல் பகுதியில் இரண்டாம் தாமஸ் ஷோல் (shoal) எனும் நீர்மட்டம் குறைவான கடல் பகுதி உள்ளது. இப்பகுதி மீது சீனாவும் பிலிப்பைன்ஸும் உரிமை கொண்டாடுவதால் சர்ச்சைக்குரிய பகுதியாக கருதப்படுகிறது.
பிலிப்பைன்ஸ் இப்பகுதியில் தன் நாட்டு கப்பல்களை நிலைநிறுத்தும். இக்கப்பல்களுக்கு மாதாந்திர அத்தியாவசிய பொருட்கள், சிறிய படகுகளில் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், இரு வெவ்வேறு சம்பவங்களில் பிலிப்பைன்ஸிற்கு சொந்தமான ஒரு சரக்கு வினியோக படகின் மீதும், ஒரு கடலோர கப்பற்படை கப்பல் மீதும், சீனாவின் கடலோர கப்பற்படை கப்பல், வேண்டுமென்றே மோதியதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால் இதனை மறுத்துள்ள சீனா, "பிலிப்பைன்ஸ் வேண்டுமென்றே சர்ச்சையை உருவாக்குகிறது" என தெரிவித்துள்ளது.
"எங்கள் நாட்டு கடல்வழி போக்குவரத்தை சீனா தடுக்க நினைக்கிறது. இதற்காக அந்நாடு ஆபத்தான வழிமுறைகளை கையாண்டு வருகிறது. இதனால் கடல் பயணம் மேற்கொள்ளும் எங்கள் நாட்டினரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது" என இது குறித்து பிலிப்பைன்ஸ் தெரிவித்தது.
இக்கடல் பகுதியில் பிலிப்பைன்ஸை தவிர மேலும் பல நாடுகளின் பல பகுதிகளுக்கு, சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக வியட்னாம், தைவான், மலேசியா மற்றும் புரூனே ஆகிய நாடுகள் சீனாவுடன் சுமூக உறவில்லாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
- தரைவழி தாக்குதலுக்கு முன் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டம்
- மேற்கு கரை பகுதியிலும் தாக்குதலை நடத்தியுள்ளது
இஸ்ரேலுக்கும்- பாலஸ்தீனத்தின் காசா முனைப் பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலையடுத்து போர் பிரகடனத்தை இஸ்ரேல் அறிவித்தது.
காசா மீது தொடர்ந்து 16-வது நாளாக இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சண்டையில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். காசாவுக்குள் தரைவழி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இஸ்ரேல் எல்லையில் வீரர்களை குவித்து உள்ளது.
இதையடுத்து வடக்கு காசாவில் இருந்து பொது மக்களை தெற்கு காசாவுக்கு செல்லுமாறு இஸ்ரேல் அறிவுறுத்தியது. லட்சக்கணக்கானோர் வடக்கு காசாவில் இருந்து வெளியேறினர். இதற்கிடையே தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது.
இந்த நிலையில் காசா மீதான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. தரைவழி தாக்குதலுக்கு முன்பாக காசாவில் வான்வழி தாக்குதல்களை முடுக்கிவிட போவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப்படைகளின் செய்தித்தொடர்பாளர் டேனியல் ஹகரி கூறும்போது, காசாவில் பாதுகாப்பு ஆட்சியை மாற்றுவதற்கான, மூன்று கட்ட நடவடிக்கையின் 2-ம் கட்டத்துக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது.
தரைவழி தாக்குதலுக்கு முன்பாக சிறந்த சூழ்நிலையை உருவாக்க காசா மீதான தாக்குதல்கள் முடுக்கி விடப்பட உள்ளது. சிறந்த சூழ்நிலையில் அடுத்த கட்ட போரில் நுழைய இருக்கிறோம்.
வான்வழி தாக்குதல்களை அதிகரிக்கிறோம். இதன் மூலம் காசாவுக்குள் நுழையும் போது ஆபத்தை குறைக்கிறோம். நாங்கள் காசா பகுதிக்குள் நுழைவோம், ஹமாஸ் அமைப்பினரின், உள்கட்டமைப்புகளை அழிப்பதற்காக செயல்பாட்டு மற்றும் தொழில்முறை பணியை தொடங்குவோம் என்றார்.
இதன் மூலம் காசா மீதான வான்வழி தாக்குதல் தீவிரமடையும் சூழல் உள்ளது.
பாலஸ்தீனத்தின் மேற்கு கரையிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் அங்கு இஸ்ரேல் ராணுவம் சோதனை நடத்தி பலரை கைது செய்துள்ளது.
இந்த நிலையில் மேற்கு கரையில் உள்ள மசூதி மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வடக்கு மேற்கு கரை நகரமான ஜெனினில் உள்ள அல்-அன்சார் மசூதி மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
மசூதியில் ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனிய இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பினர் தஞ்சமடைந்து இருந்தனர். அவர்கள் தாக்குதல்கள் நடத்த திட்டமிடுவதற்கு அங்கு இருந்தனர் என்றும், இதனால் மசூதி வளாகத்தின் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.
- கடந்த 16-ந்தேதி 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது
- 2015-ல் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் சுமார் 9 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்
நேபாளத்தில் உள்ள காத்மாண்டு பள்ளத்தாக்கில் இன்று காலை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடித் தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
அக்டோபர் 16-ந்தேதி நேபாளத்தின் சுதுர்பாசிம் மாகாணத்தில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த 2015-ல் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர் அதிர்வுகளால் சுமார் 9 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் 11-வது நாடாக நேபாளம் உள்ளது. நேபாளம் திபெத்- இந்திய டெக்டோனிக் பிளேட் சந்திக்கும் முகட்டில் அமைந்துள்ளது. இந்த பிளேட்டுகள் நூற்றாண்டிற்கு ஒருமுறை இரண்டு மீட்டர்கள் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக நகருகின்றன. இந்த அழுத்தம் காரணமாக நிலநடுக்கம் ஏற்படுகிறது.
- பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த இரண்டு அமெரிக்க பெண்களை ஹமாஸ் விடுவித்தது
- இந்த நடவடிக்கையால் காசா மீதான தாக்குதலில் எந்த பாதிப்பும் ஏற்படாது என இஸ்ரேல் பதில்
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். சிலரை கொலை செய்ததாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது.
அதன்பின் இஸ்ரேல் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையே பிணைக்கைதிகள்- கைதிகள் பரிமாற்றம் செய்து கொள்ள கத்தார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஒருபக்கம் பேச்சுவார்த்தை நடத்தியபோதிலும், மறுபக்கம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிடித்துவைத்துள்ள பிணைக்கைதிகளில் தாய் மற்றும் மகள் என இரண்டு அமெரிக்கர்களை ஹமாஸ் விடுவித்தது.
இந்த நிலையில் மேலும் இரண்டு பேரை அதன்அடிப்படையில் விடுவிக்க தயாராக இருந்தோம். ஆனால், இஸ்ரேல் அவர்களை பெற மறுத்துவிட்டது என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், ஹமாஸின் பொய் பிரசாரத்தை நாங்கள் குறிப்பிடமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும், கடத்தப்பட்ட மற்றும் காணாமல் போன மக்களை மீட்க அனைத்து வழிகளிலும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவோம் எனத் தெரிவித்துள்ளார்.
- போரை நிறுத்தும்படி ஐ.நா.சபை மற்றும் உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன.
- பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன.
நேட்டோ கூட்டமைப்பில் இணைய முயன்றதால் உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா போர் தொடுத்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த போரானது 20 மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார உதவியால் போரில் உக்ரைனும் பதிலடி தாக்குதல் நடத்துகின்றது. இந்த போரை நிறுத்தும்படி ஐ.நா.சபை மற்றும் உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. எனினும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை.
சமீப காலமாக உக்ரைனின் பகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரமாக களமிறங்கி உள்ளது. எனவே தாக்குதலை தீவிரப்படுத்தும்படி ராணுவத்தினருக்கு ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டார். இதனால் உக்ரைனுக்கு சொந்தமான குபியன்ஸ்க், லைமன் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவ்யிரி மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
குடியிருப்பு பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் முதியவர் உள்பட இருவர் கொல்லப்பட்டனர். பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. அதேபோல் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ராணுவ முகாம் மீது டிரோன் தாக்குதல் மற்றும் பீரங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த 155 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷிய ராணுவ செய்தித்தொடர்பாளர் வாடிம் அஸ்டாபியேவ் கூறினார். எனினும் உக்ரைன் தரப்பில் இதுகுறித்து எவ்வித தகவலும் அளிக்கப்படவில்லை.
- மருத்துவமனையில் 400-க்கும் கூடுதலான நோயாளிகள் உள்ளனர்.
- புலம்பெயர்ந்த 12 ஆயிரம் மக்கள் உள்ளனர்.
டெல் அவிவ்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7-ந்தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லைக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதுடன், பலரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. பணய கைதிகளை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.
இந்த சூழலில், வடக்கு காசாவில் உள்ள அல்-குத்ஸ் மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை வெளியேற்ற வேண்டும் என பாலஸ்தீனத்தின் செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த மருத்துவமனையில் 400-க்கும் கூடுதலான நோயாளிகள் உள்ளனர். புலம்பெயர்ந்த 12 ஆயிரம் மக்கள் உள்ளனர்.
அல் ஆலி மருத்துவமனையில் நடந்த தாக்குதலை போன்று வேறு சம்பவம் நடந்து விடாமல் தடுக்கவும், அல்-குத்ஸ் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை பாதுகாக்க, அவர்களை வெளியேற்ற வேண்டும் என பாலஸ்தீனத்தின் செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதில், சர்வதேச சமூகம் உடனடியாக செயல்பட வேண்டும் என அச்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அது 2 பயங்கரவாதிகள் இடையே நடைபெறும் உரையாடல் என கூறப்படுகிறது. அதில், மருத்துவமனை மீது ஏவப்பட்ட ராக்கெட் அவர்களுடைய குழுவினருடையது என அவர்கள் ஒப்பு கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று, இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறும்போது, முதல்கட்ட விசாரணையின்படி, மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேலை நோக்கி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. ஆனால் அது தவறுதலாக மருத்துவமனை மீது விழுந்தன என தெரிய வந்துள்ளது என்று கூறினார். இந்த தாக்குதலில், 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிரிழந்தனர் என அப்போது தெரிவிக்கப்பட்டது.
- 4 மாணவர்களை கீழே தள்ளி விட்டனர்; ஒருவரை முகத்தில் குத்தினர்
- பள்ளியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ளது ஆபர்ன் ரிவர்சைடு (Auburn Riverside) உயர்நிலை பள்ளி.
கடந்த திங்கட்கிழமையன்று மதியம் 01:00 மணியளவில் 6 முகமூடி அணிந்த நபர்கள், அப்பள்ளியின் பக்கவாட்டில் உள்ள கதவுகளின் வழியாக அப்பள்ளிக்குள் திடீரென உள்ளே நுழைந்தனர். அவர்கள் வேக வேகமாக அப்பள்ளியின் பல இடங்களுக்கு ஓடி, பல பள்ளி மாணவர்களை தாக்க தொடங்கினர்.
4 மாணவர்களை கீழே தள்ளிய அவர்கள், ஒரு மாணவனின் முகத்தில் குத்து விட்டனர். இதையடுத்து அங்குள்ள மாணவர்கள் பயத்தில் அங்குமிங்கும் ஓட தொடங்கினர்.
இதை கண்ட பள்ளி நிர்வாகத்தினர் அந்த முகமூடி மனிதர்களை துரத்த தொடங்கினர். அவர்களை கண்டதும் அந்த முகமூடிகள் பின்வாங்கி பள்ளியை விட்டு ஓடி விட்டனர்.
அவர்கள் சென்றதும் உடனடியாக அந்த பள்ளியின் அனைத்து கதவுகளும் அடைத்து பூட்டப்பட்டு, பாதுகாப்பான முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன.
அன்றிலிருந்து பள்ளியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இச்சம்பவம் மாணவர்கள் மற்றும் மாணவிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் மனதளவில் பாதிப்படைந்துள்ள அவர்களில் பெரும்பாலானோர் ஒட்டு மொத்தமாக வகுப்பிற்கு வரவில்லை.
செவ்வாய்கிழமையிலிருந்து மொத்தம் 532 மாணவ மாணவியர் பள்ளியிலிருந்து விடுப்பில் உள்ளதாக அம்மாவட்ட கல்வி துறை அறிவித்துள்ளது. மாணவர்களின் பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சப்படுகின்றனர் என தெரிய வந்துள்ளது.
மாணவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் அந்த முகமூடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போவதாக அப்பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. யார் அந்த முகமூடி அணிந்து வந்த நபர்கள் என்பதும் அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதற்கான காரணமும் இதுவரை தெரியவில்லை.
- 2019-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்ற நவாஸ் ஷெரீப் அதன்பின் நாடு திரும்பவில்லை
- ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் சொந்த நாடு திரும்பியுள்ளார்
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி லண்டனில் குடியேறினார். இந்த நிலையில் இன்று வாடகை விமானம் மூலம் சொந்த நாடு திரும்பியுள்ளார்.
73 வயதாகும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவரான ஷெரீப் துபாயில் இருந்து இஸ்லாமாபாத் வந்தடைந்தார். அவருடன் அவரது குடும்ப உறுப்பினர்கள், மூத்த கட்சித் தலைவர்கள், நண்பர்கள் உடன் வந்தனர்.
முன்னதாக, பாகிஸ்தான் நீதிமன்றம் நவாஸ் ஷெரீப்புக்கு பல்வேறு ஊழல் வழக்குகளில் சிறைத் தண்டனை விதித்தது. சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல கோர்ட்டு ஜாமின் வழங்கியது. இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்ற நவாஸ் ஷெரீப், அங்கு சிகிச்சை பெற்றார். ஜாமின் காலம் முடிந்த பிறகும் அவர் பாகிஸ்தான் திரும்பவில்லை. 2019-ம் ஆண்டு முதல் லண்டனிலேயே தங்கிவிட்டார்.
இதற்கிடையே இந்த ஆண்டு தொடக்கத்தில் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது. நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் ஆனார். இதையடுத்து நவாஸ் ஷெரீப் லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஷெபாஸ் ஷெரீப் கூறும்போது, "நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நவாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்பார்" என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. பொருளாதார சிக்கலில் பாகிஸ்தான் தவித்து வரும் நிலையிலும், பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையிலும் நவாஸ் ஷெரீப் சொந்த நாடு திரும்பியுள்ளார்.
- நியூ அயர்லேண்டர்ஸ் ஒன்லீ முகநூல் பக்கத்தில் புகைப்படம் வெளியிடப்பட்டது
- சமீபத்தில் "தி லிட்டில் மெர்மெய்ட்" திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது
கடலுக்கடியில் புதைந்துள்ள பல ரகசியங்கள் படிப்பதற்கும், கேட்பதற்கும் சுவாரசியம் தருபவை. அதே போல கதைகள், திரைப்படங்கள் வழியாக கடற்கன்னிகள் குறித்தும் நாம் அறிந்திருக்கிறோம்.
கடற்கன்னிகள் போன்ற உயிரினங்கள் உண்மையா, பொய்யா என்பதை தாண்டி குழந்தைகளுக்கு இது போன்ற கடற்கன்னிகளும், அவை மனிதர்களுக்கு ஆபத்து காலங்களில் உதவுவது குறித்த தகவல்களும் மிகவும் பிடித்தமானவை.
தென்மேற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள நாடு, பப்புவா நியூ கினியா. இதன் தலைநகரம் போர்ட் மோர்ஸ்பி (Port Moresby).
நேற்று, அந்நாட்டின் பிஸ்மார்க் கடற்கரையோரம் உள்ள சிம்பேரி தீவு பகுதியில் கடற்கன்னியை போன்ற தோற்றமுடைய விசித்திர உயிரினம் ஒன்றின் உடல், கரை ஒதுங்கியுள்ளது. நியூ அயர்லேண்டர்ஸ் ஒன்லீ (New Irelanders Only) எனும் முகநூல் பக்கத்தில் இது குறித்த தகவல்கள் முதலில் வெளியிடப்பட்டது.
இத்தகைய உயிரினங்கள் "கிளாப்ஸ்டர்" (globster) என அழைக்கப்படுவதாக "லைவ் சைன்ஸ்" எனும் அறிவியல் ஆய்வுகள் குறித்த தகவல் வலைதளம் தெரிவிக்கிறது. தற்போது கரை ஒதுங்கியிருக்கும் இந்த "கிளாப்ஸ்டர்" உயிரினத்தின் உடல் எடை, நீளம், மற்றும் இவை எவ்வாறு உருவாகின்றன என்பது குறித்த தகவல்களை அறிவது கடினம் என்றும் அந்த வலைதளம் தெரிவிக்கிறது.
இவை ஒருவகையான கடற்வாழ் பாலூட்டி உயிரினங்கள் என்பதை தவிர மேற்கொண்டு எதுவும் சொல்வது கடினம் என ஆழ்கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்து கடலிலேயே நீண்ட நாட்கள் பிற மீன்களால் உண்ணப்பட்டு தோல் மற்றும் மாமிசத்தை இழக்கும் திமிங்கிலம், டால்பின் போன்ற உயிரின வகைகள் அடையும் நிறத்தையே தற்போது கரை ஒதுங்கியிருக்கும் "கிளாப்ஸ்டர்" கொண்டிருப்பதால், அனேகமாக இதுவும் ஒரு திமிங்கில வகை உயிரினமாக இருக்கலாம் என சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடற்கன்னி குறித்த "தி லிட்டில் மெர்மெய்ட்" எனும் ஆங்கில திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து உலகெங்கும் வெற்றிகரமாக ஓடியது. இந்நேரத்தில் இந்த "கடற்கன்னி" கரை ஒதுங்கியதும், அதன் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.
- இஸ்ரேல் தொடர் தாக்குதலால் காசாவிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது
- ஜோ பைடன் கேட்டுக்கொண்டதன் பேரில் இஸ்ரேல், தடுக்கமாட்டோம் என உறுதி அளித்தது
ஹமாஸ்- இஸ்ரேல் இடையிலான போர் இன்றுடன் 15-வது நாளை எட்டியுள்ளது. ஹமாஸ்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எகிப்தில் இருந்து காசாவிற்கு செல்லும் ரஃபா பாதை மூடப்பட்டது.
இதன் காரணமாக சுமார் 24 லட்சம் பேர் உணவு மற்றும் மருத்துவ வசதியின்றி தவித்தனர். காசாவின் வடக்குப் பகுதியில் உள்ள மக்களை வெளியேறுமாறு வலியுறுத்திய இஸ்ரேல், தாக்குதலை தொடர்ந்த வண்ணம் இருந்ததால், உதவிப் பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை நீடித்தது.
இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சில தினங்களுக்கு முன் இஸ்ரேல் சென்றிருந்தார். அப்போது இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். காசா மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதேபோல், எகிப்து அதிபரிடமும் இதுகுறித்து பேசினார்.
பின்னர், உதவிப் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் இஸ்ரேல் ரஃபா பாதையை அனுமதிக்கும் எனக் கூறியிருந்தார். ஆனால், ரஃபா பாதையில் உள்ள சாலைகள் சேதமடைந்ததால் எப்போது உதவிப் பொருட்கள் செல்லும் என அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் தற்போது எகிப்தில் இருந்து காசாவிற்கு உதவிப் பொருட்களுடன் கனரக வாகனங்கள் ரஃபா பாதை வழியாக சென்று காசாவை அடைந்துள்ளன. இதன்மூலம் பரிதவித்து வரும் காசா மக்களுக்கு உதவிப் பொருட்கள் வினியோகிக்கப்பட இருக்கிறது.
- பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் தாக்குதலை தாமதப்படுத்த ஜோ பைடன் கேட்டுக் கொண்டதாக செய்தி வெளியானது
- ஜோ பைடன் கேள்வியை சரியாக கேட்கவில்லை என வெள்ளை மாளிகை விளக்கம்
கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்த ஹமாஸ் பயங்கரவாதிகள், கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்றனர். மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். அதில் பலரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது.
பிணைக்கைதிகளின் நிலைமை என்ன? என்ற நிலையில், நேற்று பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த இரண்டு அமெரிக்க பெண்களை ஹமாஸ் விடுவித்தது.
இதற்கிடையே, காசா மீது தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. எப்போது வேண்டுமென்றாலும் தாக்குதலை தொடரலாம்.
ஹமாஸ் பயங்கரவாதிகள் இரண்டு பேரை விடுவித்த நிலையில், மேலும் பலரை விடுவிக்கும்வரை தாக்குதலை சற்று தாமதப்படுத்துங்கள் என இஸ்ரேலிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியானது.
இதனால் காசாவில குண்டுமழை சத்தம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், ஜோ பைடன் அவ்வாறு கேட்கவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் ''ஜோ பைடன் முழு கேள்வியையும் கேட்கவில்லை. மேலும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று பார்க்கிறீர்களா? என்பதுபோல்தான் அவருக்கு கேட்டது. அவர் எதுகுறித்தும் பதில் சொல்லவில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நிருபர் ஒருவர், காசா மீதான தாக்குதலை குறைக்க இஸ்ரேலிடம் வலியுறுத்துவீர்களா? என்று கேட்க, ஜோ பைடன் ஆம் என்று பதில் அளித்ததாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- 41 தூதரக அதிகாரிகளை கனடா அரசு திரும்பப் பெற்றது
- சர்வதேச சட்ட விதியை இந்தியா மீறியதாக கனடா விமர்சனம்
காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியா- கனடா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய புலனாய்வு அமைப்பிற்கு நிஜ்ஜார் கொலையில் தொடர்பு இருப்பதாக தெரிவித்த கனடா, உயர் அதிகாரியை அந்நாட்டில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டது. இந்தியாவும் பதிலடியாக இந்தியாவில் உள்ள தூதரக அதிகாரிகளை வெளியேற்ற காலக்கெடு விதித்தது.
இந்த நிலையில் 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற்றுளளது. இதுபோன்று முன்னதாக நடந்தது இல்லை எனத் தெரிவித்த கனடா, சர்வதேச சட்டத்தை இந்தியா மீறியதாகவும் தெரிவித்தது.
அதேவேளையில் இந்தியா, கனடாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இந்த நிலையில் கனடாவிற்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், இந்தியாவை எந்த வகையிலும் விமர்சிக்கவில்லை.
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில் ''இந்தியாவில் இருந்து கனடா தூதர்கள் வெளியேற்றப்பட்டது எங்களுக்கு கவலை அளிக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் வெளியுறவுத்துறை அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் ''இந்திய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட இந்த முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.
கனடாவின் 41 தூதரக அதிகாரிகள் வெளியேறியுள்ளதால் இந்தியாவின் பல நகரங்களில், கனடா தூதரகம் இயங்காமல் உள்ளது.
இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வரும் வல்லுனர்கள் ''இந்தியாவுடடான உறவை அமெரிக்கா, இங்கிலாந்து மோசமடைய விரும்பாது. ஏனென்னால் ஆசிய கண்டனத்தில் முக்கிய எதிரியாக திகழும் சீனாவிற்கு பதிலடிகொடுக்க இந்தியா அவர்களுக்கு முக்கியமான நாடாக இருக்கும்'' எனத் தெரிவித்துள்ளனர்.






