என் மலர்tooltip icon

    உலகம்

    • ஆயுதங்கள், கூட்டணிகளின் எண்ணிக்கை பாதுகாப்பை அளித்துவிடாது.
    • மக்கள் மீது அழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து பாலஸ்தீன வெளியுறவு துறை மந்திரி ரியாத் அல் மாலிக் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றும் போது, "நிர்வாகிகள் இன்றைய உரையை முடிப்பதற்குள் 60 குழந்தைகள் உள்பட 150 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு இருப்பர். கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 5 ஆயிரத்து 700-க்கும் அதிக பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 2 ஆயிரத்து 300-க்கும் அதிகமானோர் குழந்தைகள், 1300-க்கும் அதிகமானோர் பெண்கள்."

    "அதிகளவு அநீதி மற்றும் கொலை இஸ்ரேலை பாதுகாப்பாக மாற்றிவிடாது. ஆயுதங்கள் மற்றும் கூட்டணிகளின் எண்ணிக்கை அவர்களுக்கு பாதுகாப்பை அளித்துவிடாது. அமைதி மட்டுமே அவர்களுக்கு பாதுகாப்பை கொடுக்கும். பாலஸ்தீனர்கள் மற்றும் அந்நாட்டு மக்களுடன் அமைதியாக இருப்பது மட்டுமே பாதுகாப்பை அளிக்கும்."

    "இதனை அடைவதற்கு ஒரே வழி, காசா எல்லையில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக துவங்கப்பட்ட இஸ்ரேலின் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவது மட்டும் தான். அதிகளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டால் அவற்றை மனிதாபிமான உதவிகளால் சரி செய்துவிட முடியாது. காசாவில் உள்ள எங்களது மக்களின் மீது அழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது," என்று தெரிவித்து உள்ளார்.

    • போர் நிறுத்தம் குறித்து பேச முன் வருவதாக அறிவித்தது
    • இறையாண்மையை காக்கும் உரிமை ஓவ்வொரு நாட்டிற்கும் உள்ளது என தெரிவித்தார்

    இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க போவதாக உறுதி எடுத்துள்ள இஸ்ரேலை, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் ஆதரிக்கின்றன. பாலஸ்தீன பொதுமக்களுக்காக ஹமாஸ் போராடுவதாக கூறி ஈரான், கத்தார், ஜோர்டான், ஏமன் உள்ளிட்ட சில அரபு நாடுகள் ஹமாஸ் ஆதரவு நிலையை எடுத்துள்ளன.

    இப்பிரச்சனையில் நீண்ட நாட்களாக எந்த கருத்தும் கூறாமலிருந்து வந்தது சீனா. பிறகு கடந்த வாரம் "உடனடி போர் நிறுத்தம் தேவை" என வலியுறுத்தியது. மேலும், எகிப்து உள்ளிட்ட அரபு நாடுகளுடன் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் குறித்து பேச முன் வருவதாகவும் அறிவித்தது. ஹமாஸ் அமைப்பினரை குறித்து கண்டனமோ, ஆதரவோ அதன் அறிக்கையில் இடம் பெறவில்லை.

    தங்களை ஆதரிக்காத சீனாவின் நிலைப்பாட்டை இஸ்ரேல் விமர்சித்தது. சீனா சரியான முடிவை எடுக்கும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்து வந்தது.

    இதற்கிடையே, நாளை மறுநாள், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வேங் யி (Wang Yi), 3 நாள் நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்லவிருக்கிறார். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவிக்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு நலிவடைந்ததால், சீனாவிற்கு பெருமளவு வர்த்தக இழப்பு ஏற்பட்டது. அது மட்டுமின்றி தற்போது அதிநவீன தொழில்நுட்ப துறையில் சீனாவின் வளர்ச்சிக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்து வருவதால், சீனா, அமெரிக்காவுடன் சுமூக உறவுக்கு முயன்று வருகிறது.

    இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வேங்க் யி, "சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு ஒவ்வொரு நாடும் தன் சுயபாதுகாப்பிற்காகவும் இறையாண்மையை காக்கவும் எந்த நடவடிக்கை எடுக்கவும் முழு உரிமை உள்ளது" என இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹனிடம் (Eli Cohen) தான் தொலைபேசியில் தெரிவித்துள்ளதாக அறிவித்தார்.

    சீனாவின் ஆரம்ப நிலைப்பாட்டுடன் தற்போதைய இந்த கருத்தை ஒப்பிடும் அரசியல் விமர்சகர்கள், இது பெருமளவு இஸ்ரேல் ஆதரவு நிலையென்றும், இதன் பின்னணியில் அமெரிக்கா உள்ளதாகவும் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • அனுமதிக்கும் திட்டத்தை இலங்கை அரசு துவங்கி இருக்கிறது.
    • இலங்கை நாட்டிற்கு விசா எடுக்காமல் பயணம் செய்ய முடியும்.

    ஒரு நாட்டின் குடிமக்கள் மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு விசா எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். சில நாடுகளில் விசா எடுப்பதற்கான வழிமுறைகள் மிகவும் எளிமையாகவும், சில நாடுகளில் இந்த வழிமுறைகள் மிகவும் கடுமையாகவும் இருக்கின்றன.

    அந்த வகையில், இந்தியாவில் இருந்து இலங்கை செல்வதற்கு இந்தியர்கள் இனி விசா எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இலங்கை அரசு அறிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பின் மூலம் இந்தியர்கள் விசா எடுக்காமலேயே இலங்கைக்கு சென்றுவர முடியும். விசா இன்றி வெளிநாட்டவரை அனுமதிக்கும் திட்டத்தை இலங்கை அரசு சோதனை முறையில் துவங்கி இருக்கிறது.

    அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை இந்தியர்கள் மட்டுமின்றி சீனா, ரஷியா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா என ஆறு நாடுகளை சேர்ந்த குடிமக்கள் இலங்கை நாட்டிற்கு விசா எடுக்காமல் பயணம் செய்ய முடியும். இலங்கை அமைச்சரவையில் ஒப்புதலை பெற்ற பிறகே, இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பதாக தெரிகிறது.

    இலங்கை அரசின் இந்த அறிவிப்பு காரணமாக அடுத்த ஐந்து மாத காலத்திற்கு இந்தியா உள்பட உலகின் ஏழு நாடுகளை சேர்ந்த குடிமக்கள், இலங்கைக்கு விசா எடுக்காமலேயே பயணம் செய்ய முடியும். அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு பிறகும், இந்த நடைமுறை அமலில் இருக்குமா என்ற கேள்விக்கு தற்போது வரை இந்த பதிலும் இல்லை.

    • இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.
    • பிணைகளை மீட்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு இன்று சந்தித்தனர். சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடையே உரையாற்றிய பெஞ்சமின் நெதன்யாகு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    அப்போது பேசிய அவர், "அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது போர் தொடுத்தது. உலக வரலாற்றிலேயே 9/11 தாக்குதலுக்கு பிறகு நடைபெற்ற மிகக் கொடூர தாக்குதலாக இது அமைந்தது. இந்த தாக்குதல் கிட்டத்தட்ட இருபது 9/11 தாக்குதல்களுக்கு சமமான ஒன்று ஆகும். ஹாலோகாஸ்ட்-ஐ தொடர்ந்து யூதர்களுக்கு எதிரான நடத்தப்பட்ட மிகக் கொடூர தாக்குதல் இது."

    "ஹமாஸ் குழந்தைகளை கொன்று, அவர்களின் தலையை துண்டாக்கினர், பாலியல் ரீதியிலான குற்றங்களில் ஈடுபட்டனர். மேலும் பிணைகளை கடத்திச் சென்றுள்ளனர். காசாவில் உள்ள ஹமாஸ்-ஐ அழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்வோம். ஹமாஸ்-ஐ முழுமையாக வேரறுப்போம்."

    "ஹமாஸ்-இன் பயங்கரவாதத்தை அழித்து, அதன் அரசியல் கட்டமைப்பை உடைத்தெறிவோம். எங்களின் பிணைகளை மீட்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்," என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமன் நெதன்யாகு தெரிவித்து உள்ளார்.

    • லூசியானாவில் இன்டர்ஸ்டேட் 55 105 கிலோமீட்டர் வரை நீள்கிறது
    • நேரம் செல்லச்செல்ல அப்பகுதி முழுவதும் மூடுபனியால் சூழப்பட்டது

    அமெரிக்காவில் மெக்சிகோ வளைகுடா பகுதியை ஒட்டியுள்ள மாநிலம், லூசியானா.

    அம்மாநிலத்தின் லாபிளேஸ் நகரிலிருந்து இல்லினாய்ஸ் மாநில சிகாகோ நகர் வரை சுமார் 1500 கிலோமீட்டர் நீண்டு செல்வது இன்டர்ஸ்டேட் 55 (Interstate 55) எனும் விரைவுவழிச்சாலை. இது லூசியானா மாநிலத்தில் மட்டும் சுமார் 105 கிலோமீட்டர் செல்கிறது.

    லூசியானாவின் பெரும்பகுதியில் தற்போது வறட்சி நிலவுகிறது. இதனால் அங்குள்ள வறண்ட பகுதிகளில் காய்ந்த சருகுகளில் தீப்பிடித்தல் அடிக்கடி நிகழ்கிறது.

    அப்பகுதியில் உள்ள பான்ச்சர்ட்ரெய்ன் (Pontchartrain) எனும் ஏரிக்கு அருகில் உள்ள ஒரு குட்டை வழியாக இச்சாலை நீண்டு செல்லும் இடத்தில் ஏதோ பொருள் எரிந்ததால், புகை கிளம்பியது. அத்துடன் வெப்பத்தின் தாக்கத்தால் அந்த ஏரியிலிருந்து கிளம்பிய நீராவியும் கலந்து கொண்டது.

    இதனால் அப்பகுதி முழுவதும் மூடுபனி உருவெடுத்தது. இது நேரம் செல்லச்செல்ல அதிகரித்து அப்பகுதி முழுவதும் பெரும் மூடுபனியால் சூழப்பட்டது.

    இதன் காரணமாக இன்டர்ஸ்டேட் 55 விரைவுச்சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகளுக்கு சாலை தெரியவில்லை. இதனால், அங்குள்ள செயின்ட் ஜான் தேவாலயத்திற்கு அருகே "பைல் அப்" (pile-up) எனப்படும் முன்னால் செல்லும் வாகனத்தின் மீது பின்னால் வரும் வாகனம் மோதி, அந்த வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் மோதும் சங்கிலித்தொடர் விபத்து நடந்தது.

    இதில் 158 கார்கள் மோதிக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர்; பத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

    இந்த நிகழ்வை குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கண்டு அதிர்ந்த சமூக வலைதள பயனர்கள், இது பிரபல ஹாலிவுட் திரைப்படமான "ஃபைனல் டெஸ்டினேஷன் 2" படத்தில் வருவதை போன்றே உள்ளதாக கருத்து தெரிவித்தனர்.




     


    • லண்டன் சென்ற நவாஸ் சுமார் 4 வருடங்கள் அங்கேயே வசித்து வந்தார்
    • அவரை மீண்டும் பிரதமராக்க அவர் கட்சியினர் தீவிரமாக செயலாற்றுகின்றனர்

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்.

    இவர் கடந்த 2018ல், "அவென்ஃபீல்ட் பிராபர்டீஸ்" (Avenfield Properties) எனும் வழக்கில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அந்நாட்டு பஞ்சாப் நீதிமன்றம், 10 வருட சிறை தண்டனையும், இவ்வழக்கில் தேசிய பொறுப்புக்கூறல் பணியகத்துடன் (National Accountability Bureau) ஒத்துழைக்காதற்காக 1 வருட சிறை தண்டனை என மொத்தம் 11 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டிருந்தது. அதே வருடம் அல்-அசிசியா எக்கு தொழிற்சாலை ஊழல் வழக்கில் 7 வருட சிறை தண்டனையும் அவருக்கு வழங்கப்பட்டது.

    ஆனால் 2019ல், மருத்துவ சிகிச்சை பெற வெளிநாடு செல்ல வேண்டி அனுமதி கேட்ட கோரிக்கை ஏற்கப்பட்டு அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போதிலிருந்து நவாஸ் ஷெரீப் அங்கேயே வசித்து வந்தார்.

    சுமார் 4 வருடங்கள் கழித்து நவாஸ் ஷெரீப், கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானுக்கு திரும்பினார். அடுத்த வருடம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அவரை முன்னிறுத்த அவரது கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று, அவருக்கான தண்டனையை செயலாக்குவதை அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பாகிஸ்தானின் காபந்து அரசாங்க கேபினெட் நிறுத்தி வைத்துள்ளதாக அந்நாட்டின் செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சர் ஆமிர் மிர் தெரிவித்துள்ளார்.

    இது நவாஸ் ஷெரீப்பின் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவர்களுக்கு பரிசு தொகையாக சுமார் ரூ.20 லட்சம் கிடைக்கும்
    • எத்தியோப்பியாவில் பிறந்து, பின் 4 வயதிலேயே ஹேமன் அமெரிக்கா வந்து விட்டான்

    அமெரிக்காவில் 5-ஆம் வகுப்பிலிருந்து 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர்களின் விஞ்ஞான ஆர்வத்தை ஊக்குவிக்கவும், உலகில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்த கூடிய கண்டுபிடிப்புகளில் அவர்கள் தங்கள் அறிவாற்றலை செலுத்தவும், "3 எம் அண்ட் டிஸ்கவரி எஜுகேஷன்" (3M and Discovery Education) எனும் அமைப்பால் இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலத்தின் அன்னண்டேல் பகுதியை சேர்ந்த 14 வயதான ஹேமன் பெகேல் (Heman Bekele) எனும் 9-ஆம் வகுப்பு மாணவன் கலந்து கொண்டான். ஆப்பிரிக்க நாடான எதியோப்பியாவில் பிறந்து, 4 வயதில் அமெரிக்காவிற்கு பெற்றோருடன் வந்த ஹேமன் அமெரிக்காவிலேயே தொடர்ந்து கல்வி பயின்று வருகிறான். ஹேமன், உயிரியல் மற்றும் தொழில்நுட்ப பாடங்களில் மிகவும் விருப்பமுடையவன்.

    இந்த இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் கலந்து கொள்ள விரும்பிய அவனை டாக்டர். மஹ்ஃபூஸா அலி (Dr. Mahfuza Ali) எனும் விஞ்ஞானி வழிநடத்தினார்.

    இதில் பங்கேற்ற ஹேமன், தனது கண்டுபிடிப்பாக புதிய சோப் ஒன்றை காட்சியில் வைத்தான். இந்த சோப்பிற்கான உற்பத்தி செலவு ஒரு அமெரிக்க டாலருக்கும் (ரூ.80) குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தோல் புற்றுநோயை இந்த சோப் குணமாக்கும் என்பதும் இதன் சிறப்பம்சங்களில் ஒன்று.

    பல இளம் மாணவ மாணவியர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் ஹேமன் முதல் பரிசை வென்றான். இத்துடன் "அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானி" எனும் விருதும் அளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டான்.

    இப்போட்டியில் வெல்லும் மாணவர்களுக்கு பரிசு தொகையாக சுமார் ரூ.20 லட்சம் ($25,000) வழங்கப்படும்.

    2020ல் உலகளவில் சுமார் 15 லட்சம் பேருக்கு தோல் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இப்பின்னணியில் ஹேமனின் இந்த முக்கிய கண்டுபிடிப்பு எல்லோராலும் பாராட்டப்படுகிறது.

    • தலைமையகம் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் உள்ளது
    • ஐ.நா. பொதுசபையின் 10-வது அவசர கூட்டம் அக்டோபர் 26 அன்று நடைபெறும்

    உலகின் 193 நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் (UNO), 6 முக்கிய உறுப்பு அமைப்புகளில் முக்கியமானது, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (UNGA). பொதுசபை, 1945ல் ஐ.நா. கூட்டமைப்பின் கொள்கை முடிவுகளை வகுக்கவும், உலக நாடுகளுக்கிடையே சச்சரவு எழும் போது ஐ.நா. சபையின் பிரதிநிதியாக செயல்பட்டு முக்கிய முடிவுகளை எடுக்கவும் உருவாக்கப்பட்டது.

    இதன் தலைமையகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் இதன் உறுப்பினர் நாடுகளின் வருடாந்திர சந்திப்பு நடைபெறும்.

    உலக நாடுகளுக்கிடையே ஏற்படும் சிக்கல்களால் நெருக்கடி நிலை தோன்றும் போது, அவசியம் ஏற்பட்டால் அவசர சந்திப்புகளுக்கு தன் உறுப்பினர் நாடுகளுக்கு அழைப்பு விடுத்து பொதுசபை கூடுவதுண்டு.

    கடந்த அக்டோபர் 7-லிருந்து பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து அவர்கள் பாலஸ்தீன காசா பகுதியில் ஒளிந்திருக்கும் இடங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுசபையின் 10-வது அவசர சந்திப்பு அக்டோபர் 26 அன்று நடைபெறும் என அதன் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் (Dennis Francis) அறிவித்துள்ளார்.

    "உறுப்பினர் நாடுகள் அவசர சந்திப்பிற்கு ஐ.நா. பொதுசபைக்கு கோரிக்கை வைத்தன. இக்கோரிக்கையை ஏற்று 10-வது அவசர கூட்டம் வரும் 26 அன்று நடத்தப்படும்" என தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் டென்னிஸ் பதிவிட்டுள்ளார்.

    கடந்த 2022 பிப்ரவரி மாதம் தனது அண்டை நாடான உக்ரைனை ரஷியா ஆக்ரமித்ததையடுத்து அவசர கூட்டம் நடைபெற்றது.

    உலக சூழலுக்கு ஏற்ப 24 மணி நேரத்திலேயே அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க ஐ.நா. பொதுசபைக்கு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



    • இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது.
    • அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் இஸ்ரேல் சென்றிருந்தனர்.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

    நேற்றைய 17-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது.

    இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் இன்று இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் சென்றடைந்தார். அவரை தூதரக அதிகாரிகள் அவரை வரவேற்றனர். இஸ்ரேல் பிரதமரை சந்திப்பதுடன், பாலஸ்தீன தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.

    ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் இஸ்ரேல் சென்று அந்நாட்டி தலைவர்களை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விண்கலத்தில் 3 பேர் பயணம் செய்து சீன விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றார்.
    • குழுவினர் விண்வெளியில் ஆய்வை முடித்துவிட்டு அடுத்த மாதம் பூமிக்கு வர உள்ளனர்.

    பீஜிங்:

    அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் இணைத்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளது. அதே போல் சீனா, சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளது. விண்வெளியில் டியாங்காங் என்ற ஆய்வு மையத்தை உருவாக்கி ஆய்வு செய்து வருகிறது. இதற்காக சீன விண்வெளி வீரர்கள் அங்கு தங்கி உள்ளனர்.

    கடந்த மே மாதம் 30-ந்தேதி, ஷென்சோ-16, விண்கலத்தில் விண்வெளி வீரர்களான ஜிங்ஹைபெங், ஜூ யாங்சு மற்றும் சீனா ஏரோனாட்டிக்ஸ் பல்கலைகழகத்தின் பேராசிரியர் குய் ஹைச்சாலோ ஆகிய 3 பேர் பயணம் செய்து சீன விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றார். அங்கு அவர்கள் காய்கறிகள் பயிரிட்டனர்.

    கீரை, சின்ன வெங்காயம், செர்ரி, தக்காளி செடிகளை வளர்த்தனர். பூமியில் தேவையான சூரிய வெளிச்சம், தண்ணீர் இருப்பதால் செடிகள் எளிதில் வளரும். ஆனால் விண்வெளியில் இந்த சாத்தியகூறுகள் இல்லாததால் சீனா சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருந்த செடிகளை பயிரிடுவதற்கான சிறப்பு சாதனத்தை உருவாக்கி இருந்தது.

    தாவர வளர்ச்சிக்கு தேவையான வெப்பநிலை, ஈரப்பதம், ஆக்சிஜன், கார்பன் டை-ஆக்சைடு உள்ளிட்டவை சரியான அளவில் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது. அவர்கள் பயிரிட்ட கீரை, செர்ரி, தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவை நன்கு வளர்ந்துள்ளது. இதையடுத்து அவற்றை அவர்கள் அறுவடை செய்துள்ளனர். இந்த குழுவினர் விண்வெளியில் ஆய்வை முடித்துவிட்டு அடுத்த மாதம் பூமிக்கு வர உள்ளனர். முன்னதாக விண்வெளியில் காய்கறி செடிகளை வளர்த்து அறுவடை செய்யும் முயற்சியில் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி வீரர்கள் சாதனை படைத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர்.
    • அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக இஸ்ரேலை அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரிக்க, பாலஸ்தீனத்தை ஈரான், கத்தார், லெபனான் உள்ளிட்ட அரபு நாடுகள் ஆதரிக்கின்றன.

    இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயல்திட்ட தொடர்புகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, ஈரான் பல ஆண்டுகளாக ஆதரவளித்து வருகிறது. இரு தசாப்தங்களாக இந்த ஆதரவு உள்ளது. ஈரான் இன்றி ஹமாஸ் அமைப்பினரால் இயங்கவோ அல்லது தொடர்ந்து செயல்படவோ முடியாது.

    உலகில் கெட்ட நபர்களுடன் சேர்ந்து கெட்ட விஷயங்களை ஈரான் செய்து வருகிறது என்ற உண்மையில் இருந்து, ஒருவரும் விலகிச் சென்று விட முடியாது. அதில் யாரும் சந்தேகம் கொள்ள முடியாது என தெரிவித்தார்.

    • இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது.
    • பிணைக் கைதிகளை விடுவித்தால் மட்டுமே போர் நிறுத்தம் என்றார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

    நேற்றைய 17-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது.

    இஸ்ரேலுடனான தாக்குதலின்போது பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர் ஹமாஸ் பயங்கரவாதிகள். பிணைக் கைதிகளை விடுவித்தால் மட்டுமே போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தி இருந்தார்.

    இந்நிலையில், மேலும் 2 இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர். அவர்கள் எகிப்து வழியாக மீட்கப்பட்டனர். மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்படுவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே கடந்த 21-ம் தேதி 2 அமெரிக்க பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது.

    ×