என் மலர்
உலகம்
- தீர்ப்பளித்த வில்கின்சன் தன் வீட்டு வாசலில் சடலமாக கிடந்தார்
- சலாசின் மகனை டிரைவர் வேடமணிந்து வந்து ராய் சுட்டு கொன்றான்
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநில நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்தவர் 52 வயதான ஆண்ட்ரூ வில்கின்சன் (Andrew Wilkinson). இவர் கடந்த வாரம் ஒரு விவாகரத்து வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தார். இதன் பிறகு அந்த வழக்கில் சம்பந்தபட்ட பெண்ணுக்கு சாதகமான உத்தரவை பிறப்பித்தார்.
இதையடுத்த சில மணி நேரங்களில் ஹேகர்ஸ்டவுன் பகுதியில் உள்ள வில்கின்சனின் வீட்டு வாசலில் அவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் விசாரித்து வந்த வழக்கில் சம்பந்தபட்ட அப்பெண்ணின் கணவன் பெட்ரோ அர்கோட் (Pedro Argote) என்பவனை காவல்துறையினர் சந்தேகித்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில், மேரிலேண்ட் நீதிபதி ஆண்ட்ரூ வில்கின்சன் உயிரிழந்ததற்கு, நியூ ஜெர்சி மத்திய நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரியும் எஸ்தர் சலாஸ் (Esther Salas), தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
நீதிபதி வில்கின்சனை போன்று, நீதிபதி எஸ்தரும் சில வருடங்களுக்கு முன் ராய் டென் ஹாலேண்டர் (Roy Den Hollander) என்பவரின் வழக்கில் அவருக்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்தார். இதனால் சலாஸ் மீது ஆத்திரத்தில் இருந்த ராய், ஒரு டெலிவரி வாகன ஓட்டுனராக வேடமணிந்து வந்து 20 வயதே ஆன சலாஸின் மகன் டேனியல் ஆண்ட்ரியை சுட்டு கொன்று, சலாஸின் கணவர் மார்க் ஆண்ட்ரியை கடுமையான காயங்கள் ஏற்படும் அளவிற்கு தாக்கி விட்டு ஓடி விட்டான். பிறகு காவல்துறையினரால் தேடப்படும் போது தனக்கு தானே ஏற்படுத்தி கொண்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தான்.
இப்பின்னணியில் நீதிபதி எஸ்தர் சலாஸ் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
வில்கின்சன் குடும்பத்தினரை நன்கு அறிவேன். அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் ஆழ்ந்த இரங்கல்கள். நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்புகளில் எவருக்கோ எங்கேயே அதிருப்தி இருந்து கொண்டுதான் இருக்கும். எனவே அமெரிக்காவின் அனைத்து மாநில நீதிபதிகளுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் வகையில் சட்டங்கள் உருவாக்க வேண்டும். நியூ ஜெர்சியை போல ஒரு சில மாநிலங்களே இதற்காக போராடி வருகின்றன. பிற மாநிலங்கள் தங்களுக்கு உகந்த சட்டதிட்டங்களை நீதித்துறையில் பணியாற்றுபவர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி உருவாக்க வேண்டும். மத்திய, மாநில மற்றும் உள்ளூர் நீதிமன்றங்களில் வில்கின்சனை போன்று எத்தனை நீதிபதிகள் கொல்லப்பட்டனர் என்பது பற்றிய விவரங்கள் சரியான வகையில் இல்லை. நீதிபதிகளின் பாதுகாப்பை அலட்சியபடுத்தியதை நினைவூட்டுவதே வில்கின்சன் மரணம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தாங்கள் பெறும் அதிக ஊதியத்தில் இருந்து நீதிபதிகள் தங்கள் பாதுகாப்பிற்கு தாங்களாகவே பாதுகாப்பாளர்களை நியமித்து கொள்ள வேண்டும் என ஒரு சாராரும், நீதிபதிகள் மக்களுக்கு பணியாற்றுவதால் அவர்கள் பாதுகாப்பிற்கு அரசே பொறுப்பு என மற்றொரு சாராரும் இது குறித்து சமூக வலைதலங்களில் விவாதித்து வருகின்றனர்.
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான உயர்ந்த விருதாக கருதப்படுகிறது
- அசோக் கேட்கில் மற்றும் டாக்டர் சுப்ரா சுரேஷ் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்கள்
1973 கான்பூர் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் பவுதிகத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர் 63 வயதான அசோக் கேட்கில் (Ashok Gadgil). இவர் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைகழகத்தில் பவுதிகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.
1993ல் இந்தியாவில் ஏற்பட்ட காலரா தொற்றுநோய் பாதிப்பை கண்ட கேட்கில், புற ஊதா கதிர் மூலமாக குடிநீரை சுத்திகரிப்பு செய்யும் சாதனத்தை கண்டுபிடித்தார். வளர்ந்து வரும் நாடுகளில் தூய்மையான குடிநீர் கிடைப்பதற்காக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருபவர், கேட்கில்.
இவரை போன்ற மற்றொரு ஆராய்ச்சியாளர் அமெரிக்காவின் புகழ் பெற்ற எம்.ஐ.டி. (MIT) பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் 66 வயதான டாக்டர். சுப்ரா சுரேஷ் (Dr. Subra Suresh). பொறியியல் படிப்பிற்கான பிரவுன் பல்கலைகழகத்தில் பேராசிரியராக உள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவருக்கும் அமெரிக்காவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான உயர்ந்த விருதான தேசிய பதக்கம் (National Medal of Sciences) கிடைத்துள்ளது. மனிதகுலத்திற்கு இன்றியமையாத அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளில் இவர்கள் காட்டிய அர்ப்பணிப்பிற்காக இந்த பதக்கங்கள் வழங்கப்படுவதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.
இருவருக்கும் இந்த பதக்கங்களை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வழங்கினார்.
- மக்கள் தொகையில் 4 லட்சம் பேர் மட்டுமே கொண்டது ஐஸ்லேண்டு
- அனைத்து பணிகளும் வேலைநிறுத்தத்தால் முடங்கி போனது
வட அட்லான்டிக் பகுதியில் உள்ள வட ஐரோப்பிய நாடு, ஐஸ்லேண்டு (Iceland). இதன் தலைநகர் ரெக்ஜேவிக் (Reykjavik). "லேண்ட் ஆஃப் ஃபையர் அண்ட் ஐஸ்" (land of fire and ice) என அழைக்கப்படும் இந்நாடு, சுமார் 4 லட்சம் பேரை கொண்ட தனித்தீவு நாடாகும்.
எரிமலை, பனிப்பாறைகள் என இயற்கை அழகுக்காக புகழ் பெற்ற சுற்றுலா தலமான ஐஸ்லேண்டில் ஆண்கள் பெறும் ஊதியத்தை விட 21 சதவீதம் குறைவாகவே பெண்கள் ஊதியம் பெறுகின்றனர். சுகாதார பணிகள், தூய்மை பணிகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு உள்ளிட்ட பல பணிகளில் பெண்களுக்கு ஊதியம் இன்னும் குறைவாக உள்ளது. 1975லிருந்து இது குறித்து 7 முறை போராட்டங்கள் நடத்தியும் அரசாங்கம் இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் அந்நாட்டில் பெண்கள் அமைப்பினர் மீண்டும் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதை தொடர்ந்து நேற்று, இந்நாட்டின் தலைநகரில் உள்ள அர்னார்ஹால் (Arnarholl) மலை மற்றும் பல முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆண்களுக்கு நிகராக ஊதியம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தின் விளைவாக பெண்கள் ஈடுபட்டு வந்த பள்ளிக்கூடங்கள், கடைகள், வங்கிகள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட பல பணிகள் அந்நாட்டில் ஸ்தம்பித்து விட்டன.
இப்போராட்டத்திற்கு அந்நாட்டின் பெண் பிரதமர் கேத்ரின் ஜேகப்ஸ்டாட்டிர் (Katrin Jakobsdottir) ஆதரவு தெரிவித்து, பணிக்கு செல்லாமல் தனது வீட்டிலேயே இருந்து கொண்டு வேலை நிறுத்தம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ட்ரிஃப்ட் எனும் டச்சு நிறுவனத்தால் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது
- பறவை கூட்டங்களை போல் நேர்த்தியாக பல வடிவங்களில் பறக்க விடப்பட்டன
அமெரிக்க மாநிலம் நியூயார்க் நகரில் மன்ஹாட்டன் பகுதியில் 843 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது புகழ் பெற்ற சென்ட்ரல் பார்க் (Central Park). நியூயார்க் நகரின் ஐந்தாவது மிக பெரிய பூங்கா இது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குள்ள ஏரிக்கு அருகே சனிக்கிழமை இரவு ட்ரிஃப்ட் (DRIFT) எனும் டச்சு ஸ்டூடியோ ஒன்றினால் "பிரான்சைஸ் ஃப்ரீடம்" (Franchise Freedom) எனும் பெயரில் நடத்தப்பட்ட ஒரு கண்கவர் நிகழ்வு உலகமெங்கும் பேசுபொருளாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில், இரவு வானில் 1000 டிரோன்கள் ஒரே நேரத்தில் பறக்க விடப்பட்டன. அந்த டிரோன்களை இயக்குபவர்களால் வானில் பறந்த அவை, பல கலை வடிவங்களை காண்பிக்கும்படி பறக்க விடப்பட்டது.
10 நிமிட இடைவெளியில் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் பறந்த இவை, இது போல் 3 முறை பல வெவ்வேறு விதமான வடிவங்களை வானில் வெளிப்படுத்தின. ஒவ்வொரு டிரோனில் இருந்தும் வரும் சிறு ஓளி ஒட்டு மொத்தமாக 1000 டிரோன்களில் இருந்து பெரும் நட்சத்திர கூட்டம் போன்று வானில் தெரிந்தது.

இந்த டிரோன்கள், வானில் பல வடிவங்களில் பறவை கூட்டம் போல் நேர்த்தியாக பறக்க விடப்பட்டது காண்போரை மிகவும் பரவசப்படுத்தியது.
"மனிதன், இயற்கை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய மூன்றிற்கும் இடையே உள்ள தொடர்பை ஆய்வு செய்யும் ஒரு முயற்சி இது. கவித்துவமான இந்த நிகழ்வு, மனிதர்களாக நாம் ஒரே சமூகமாக சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்வதை உணர்த்துகிறது" என தங்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் இந்த நிகழ்ச்சி குறித்து ட்ரிஃப்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.
இரவு நேர பறவைகள், பறக்கின்ற வழித்தடங்களுக்கு இந்த நிகழ்ச்சியினால் எந்த தடையும் ஏற்படாது என விலங்குகள் மற்றும் பறவைகள் நல அமைப்புகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே இது ஏற்பாடு செய்யப்பட்டதாக டிரிஃப்ட் அமைப்பினர் தெரிவித்தனர்.
ஒரே சமயத்தில் இத்தனை டிரோன்கள் வானில் பறக்கும் நிகழ்வு, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- இஸ்ரேல் தனது வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.
- எரி பொருள் தீர்ந்து விட்டதால் காசாவில் அனைத்து மருத்துவமனைகளும் முடங்கியுள்ளன.
டெல்அவிவ்:
இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு கடந்த 7-ந்தேதி தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து போர் பிரகடனத்தை அறிவித்த இஸ்ரேல், காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று 19-வது நாளாக தாக்குதல் நடந்து வருகிறது.
இதற்கிடையே காசா மீது இடைவிடாத தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் ராணுவம் நேற்று அறிவித்தது. அதன்படி இஸ்ரேல் தனது வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் இஸ்ரேல் தாக்குதலில் 704 பேர் பலியானார்கள். இதுகுறித்து பாலஸ்தீன அதிகாரிகள் கூறும்போது, காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 704 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது" என்றார்.
ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் மூலம் குண்டு மழை பொழிந்து வருகிறது. நேற்று 400-க்கும் மேற்பட்ட ஹமாஸ் இலக்குகளை தாக்கியதாகவும், ஏராளமான ஹமாஸ் அமைப்பினரை கொன்றதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
இதற்கிடையே காசாவின் சுகாதார அமைச்சகம் கூறும்போது, இஸ்ரேலின் தாக்குதலில் காசா பகுதியில் 2360 குழந்தைகள் உள்பட 5791 பேர் பலியாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.
காசாவில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகி உள்ளன. இடி பாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
இஸ்ரேல் தாக்குதல்களால் காசாவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே எரி பொருள் தீர்ந்து விட்டதால் காசாவில் அனைத்து மருத்துவமனைகளும் முடங்கியுள்ளன.
இதனால் சிகிச்சை பெறுபவர்கள் கடும் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இதனால் காசாவுக்குள் எரி பொருளை அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலை உலக நாடுகள் வலியுறுத்தி உள்ளன.
அதே போல் காசாவில் தண்ணீர் பற்றாக்குறையும் நிலவி வருகிறது.
- 45 வயது மதிக்கத்தக்க நபர், 6 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் உயிரிழந்து கிடந்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கனடாவின் வடக்கே உள்ள ஒன்டாரியோ நகரில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்றனர். அப்போது சாலையில் ஒருவர் இறந்து கிடந்தார். அதே போல் வீடுகளில் 45 வயது மதிக்கத்தக்க நபர், 6 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் உயிரிழந்து கிடந்தனர். மேலும் 44 வயது நபர் ஒருவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். 5 பேர் இறந்த இந்த உயிரிழப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்று போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
- பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 96 பேர் உயிரிழந்தனர்.
டெல் அவிவ்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய 18-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பேசும்போது, இஸ்ரேலின் தொடர் குண்டு வீச்சு பெரும் அபாய ஒலியை ஏற்படுத்துகிறது. சர்வதேச மனித உரிமை சட்டம் இப்போரில் மீறப்படுவது வருத்தம் அளிக்கிறது. 10 லட்சத்துக்கும் மேற்பட்டோரை வடக்கு காசாவில் இருந்து தெற்கு காசாவுக்கு இடம் பெயர கூறிவிட்டு அங்கேயும் இஸ்ரேல் குண்டு வீசுகிறது. 56 ஆண்டுகளாக பாலஸ்தீன மக்கள் ஆக்கிரமிப்பு, உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். காரணங்களின்றி ஹமாஸ் இஸ்ரேலை தாக்கவில்லை. ஹமாஸ் தாக்குதலுக்காக பாலஸ்தீன மக்களுக்கு தண்டனை வழங்குவதை நியாயப்படுத்த முடியாது என தெரிவித்தார்.
குட்டரெசின் இந்த கருத்துக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் இர்டான் கூறுகையில், "ஹமாஸ் தாக்குதலை ஐ.நா. பொதுச்செயலாளர் பொறுத்து கொண்டு நியாயப்படுத்துகிறார். அவர் பதவி விலக வேண்டும்" என்றார்.
அதேபோல், ஐ.நா. பொதுச்செயலாளர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இஸ்ரேல் மந்திரி கோஹன் கூறினார்.
- மருந்துகள் மற்றும் உபகரணங்கள் உள்பட 38 டன் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது.
- போரில் பொது மக்கள் உயிரிழப்புகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
நியூயார்க்:
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு போர் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் ஐ.நா.வுக்கான இந்திய துணை நிரந்தர பிரதிநிதி ரவீந்திரன் பேசியதாவது:-
இஸ்ரேல், பாலஸ்தீனம், இரு தரப்பும் நேரடி பேச்சு வார்த்தைகளை மீண்டும் தொடங்க நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். போர் நிறுத்தத்தை உடனே அறிவிக்க வேண்டும்.
இந்த போர் சூழல் அதிகரிப்பு மோசமாக மனிதாபிமான நிலைமையை இன்னும் மோசமாக்கி உள்ளது.
இது மீண்டும் ஒருமுறை போர் நிறுத்தத்தின் பலவீனமான தன்மையை அடிக்கோடிட்டு காட்டுகிறது. இந்த சவாலான காலங்களில் பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை அனுப்பும். பாலஸ்தீன மக்களுக்கு மருந்துகள் மற்றும் உபகரணங்கள் உள்பட 38 டன் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது.
காசாவில் உள்ள ஆஸ்பத்திரி மீதான தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தது குறித்து நாங்கள் ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளோம்.
இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை, போரில் பொது மக்கள் உயிரிழப்புகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடி ஆபத்தானது. நேரடி சமாதான பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கப்பட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரஷிய அதிபர் புதினுக்கு உடல்நல குறைவு என பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
- அதிபர் புதின் நன்றாகவே இருக்கிறார் என அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
மாஸ்கோ:
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், உடல்நிலை குறித்து அடிக்கடி பரபரப்பு தகவல்கள் வெளியாகி வந்தன. அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்காக தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், அதிபர் புதினுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. புதின் தனது அறையில் இருந்தபோது ஏதோ சத்தம் கேட்டு பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு சென்றனர் என்றும், அப்போது புதின் தரையில் விழுந்து கிடந்தார் என்றும், அங்கிருந்த மேஜை கவிழ்ந்து கிடந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.
புதினுக்கு சரியான நேரத்தில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து காப்பாற்றினர். அதிபர் மாளிகையிலேயே மருத்துவ வசதிகளை கொண்ட அறைக்கு புதினை டாக்டர்கள் கொண்டு சென்றனர்.
பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறிது நேரத்தில் புதின் சுய நினைவுக்கு திரும்பினார் என்று தகவல் வெளியானது.
இதற்கிடையே, அதிபர் புதின் உடல்நிலை குறித்து வெளியான தகவலை ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகை மறுத்துள்ளது.
அதிபர் புதின் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். அவர் உடல்நலக் குறைவால் இருப்பதாகவும், அவருக்கு பதிலாக அவரை போல தோற்றமளிக்கும் ஒருவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாகவும் வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யானது என்று தெரிவித்துள்ளது.
அதிபர் புதின் கடந்த வாரம் சீனாவில் நடந்த சர்வதேச ஒத்துழைப்புக்கான சாலை மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
- பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நேற்று இஸ்ரேல் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார்.
- இஸ்ரேல் சென்ற அதிபர் மேக்ரான் அந்நாட்டு அதிபர் ஹெர்சாகை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
டெல் அவிவ்:
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இஸ்ரேல் நாட்டில் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று இஸ்ரேல் சென்றடைந்த மேக்ரான், அந்நாட்டு அதிபர் ஹெர்சாகை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவைச் சந்தித்தார். இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அதிபர் இம்மானுவல் மேக்ரான் கூறுகையில், இஸ்ரேலுக்கும், பிரான்சுக்கும் பயங்கரவாதம் பொது எதிரி. இதில் இஸ்ரேல் தனியாக இல்லை. ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்தவர்கள் ஹமாசுக்கு எதிராகவும் ஒன்றிணைய வேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் உலக அளவில் ஒன்றிணைந்தது போல, ஹமாசுக்கு எதிரான போரிலும் பிரான்ஸ் ஒன்றிணையும். பாலஸ்தீன பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் இஸ்ரேல் தீர்வு கண்டால் மட்டுமே மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி, நிலைத்தன்மை ஏற்படும் என தெரிவித்தார்.
- ஆயுதங்கள், கூட்டணிகளின் எண்ணிக்கை பாதுகாப்பை அளித்துவிடாது.
- மக்கள் மீது அழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து பாலஸ்தீன வெளியுறவு துறை மந்திரி ரியாத் அல் மாலிக் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றும் போது, "நிர்வாகிகள் இன்றைய உரையை முடிப்பதற்குள் 60 குழந்தைகள் உள்பட 150 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு இருப்பர். கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 5 ஆயிரத்து 700-க்கும் அதிக பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 2 ஆயிரத்து 300-க்கும் அதிகமானோர் குழந்தைகள், 1300-க்கும் அதிகமானோர் பெண்கள்."
"அதிகளவு அநீதி மற்றும் கொலை இஸ்ரேலை பாதுகாப்பாக மாற்றிவிடாது. ஆயுதங்கள் மற்றும் கூட்டணிகளின் எண்ணிக்கை அவர்களுக்கு பாதுகாப்பை அளித்துவிடாது. அமைதி மட்டுமே அவர்களுக்கு பாதுகாப்பை கொடுக்கும். பாலஸ்தீனர்கள் மற்றும் அந்நாட்டு மக்களுடன் அமைதியாக இருப்பது மட்டுமே பாதுகாப்பை அளிக்கும்."
"இதனை அடைவதற்கு ஒரே வழி, காசா எல்லையில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக துவங்கப்பட்ட இஸ்ரேலின் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவது மட்டும் தான். அதிகளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டால் அவற்றை மனிதாபிமான உதவிகளால் சரி செய்துவிட முடியாது. காசாவில் உள்ள எங்களது மக்களின் மீது அழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது," என்று தெரிவித்து உள்ளார்.
- போர் நிறுத்தம் குறித்து பேச முன் வருவதாக அறிவித்தது
- இறையாண்மையை காக்கும் உரிமை ஓவ்வொரு நாட்டிற்கும் உள்ளது என தெரிவித்தார்
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க போவதாக உறுதி எடுத்துள்ள இஸ்ரேலை, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் ஆதரிக்கின்றன. பாலஸ்தீன பொதுமக்களுக்காக ஹமாஸ் போராடுவதாக கூறி ஈரான், கத்தார், ஜோர்டான், ஏமன் உள்ளிட்ட சில அரபு நாடுகள் ஹமாஸ் ஆதரவு நிலையை எடுத்துள்ளன.
இப்பிரச்சனையில் நீண்ட நாட்களாக எந்த கருத்தும் கூறாமலிருந்து வந்தது சீனா. பிறகு கடந்த வாரம் "உடனடி போர் நிறுத்தம் தேவை" என வலியுறுத்தியது. மேலும், எகிப்து உள்ளிட்ட அரபு நாடுகளுடன் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் குறித்து பேச முன் வருவதாகவும் அறிவித்தது. ஹமாஸ் அமைப்பினரை குறித்து கண்டனமோ, ஆதரவோ அதன் அறிக்கையில் இடம் பெறவில்லை.
தங்களை ஆதரிக்காத சீனாவின் நிலைப்பாட்டை இஸ்ரேல் விமர்சித்தது. சீனா சரியான முடிவை எடுக்கும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்து வந்தது.
இதற்கிடையே, நாளை மறுநாள், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வேங் யி (Wang Yi), 3 நாள் நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்லவிருக்கிறார். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவிக்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு நலிவடைந்ததால், சீனாவிற்கு பெருமளவு வர்த்தக இழப்பு ஏற்பட்டது. அது மட்டுமின்றி தற்போது அதிநவீன தொழில்நுட்ப துறையில் சீனாவின் வளர்ச்சிக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்து வருவதால், சீனா, அமெரிக்காவுடன் சுமூக உறவுக்கு முயன்று வருகிறது.
இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வேங்க் யி, "சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு ஒவ்வொரு நாடும் தன் சுயபாதுகாப்பிற்காகவும் இறையாண்மையை காக்கவும் எந்த நடவடிக்கை எடுக்கவும் முழு உரிமை உள்ளது" என இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹனிடம் (Eli Cohen) தான் தொலைபேசியில் தெரிவித்துள்ளதாக அறிவித்தார்.
சீனாவின் ஆரம்ப நிலைப்பாட்டுடன் தற்போதைய இந்த கருத்தை ஒப்பிடும் அரசியல் விமர்சகர்கள், இது பெருமளவு இஸ்ரேல் ஆதரவு நிலையென்றும், இதன் பின்னணியில் அமெரிக்கா உள்ளதாகவும் கருத்து தெரிவிக்கின்றனர்.






