என் மலர்
உலகம்
- கடந்த 10 நாட்களுக்கு முன் அமெரிக்க துருப்புகள் மீது தாக்குதல்
- ஜோ பைடன் எச்சரித்திருந்த நிலையில், தற்போது பதில் தாக்குதல் நடத்தியுள்ளது
மத்திய கிழக்கு கடற்பகுதி, ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா தனது துருப்புகளை நிறுத்தியுள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதமேந்திய படைக்குழு அமெரிக்க துருப்புகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த வகையில் கடந்த 17-ந்தேதி அமெரிக்க துருப்புகள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலின்போது அமெரிக்காவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 21 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் குணமடைந்து தற்போது பணிக்கு திரும்பியுள்ளனர்.
இதற்கு பதிலடியாக அமெரிக்கா, கிழக்கு சிரியாவில் உள்ள இரண்டு இடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த துல்லியமான தாக்குதல், கடந்த 17-ந்தேதிக்கு பதிலடி என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஹமாஸ்- இஸ்ரேல் இடையிலான போருக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
"தற்பாதுகாப்புக்காக குறுகியதாக வடிவமைக்கப்பட்ட இந்த தாக்குதல்கள், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க துருப்புகளை பாதுகாப்பது மட்டுமே நோக்கமாக இருந்தன" என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
சிரியாவில் அமெரிக்க துருப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
- காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது
- எகிப்தில் இருந்து காசாவிற்கு மனிதாபிமான உதவி பொருட்கள் வந்த வண்ணம் உள்ளன
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா முனையில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், தரைவழியாக தாக்குதல் நடத்தவும், தங்களை தயார் படுத்தி வருகிறது இஸ்ரேல்.
காசா முனையைத் தவிர மேற்கு கரை, லெபனான் எல்லை ஆகிய பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரித்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் எகிப்து நாட்டின் தபா பகுதியில் உள்ள கட்டடம் ஒன்று ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி, ஐந்து பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசா முனையில் இருந்து எகிப்து எல்லையில் 200 கி.மீ. தொலைவில் உள்ள பகுதி தபா.
இதற்கு முன்னதாக ஒருமுறை இஸ்ரேல் ஏவுகணை எகிப்து பகுதியை தவறுதலாக தாக்கியது. இந்த தாக்குதல் தவறுதலாக நடைபெற்றது என இஸ்ரேல் ராணுவம் உடனடியாக அறிவித்தது.
ஆனால் தபா மீது ஏவுகணை தாக்குதல் நடைபெற்ற போதிலும், இஸ்ரேல் இதுகுறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
காசாவில் உள்ள மருத்துவமனை மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டு, 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என இஸ்ரேல் தெரிவித்தது. அதேபோல் பாலஸ்தீனத்தில் உள்ள அமைப்பும், நடத்தவில்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எகிப்தில் இருந்து ரஃபா எல்லை வழியாக காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் வந்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- 8 அதிகாரிகளும் பல போர் கப்பல்களுக்கு தலைமை தாங்கியவர்கள்
- பல முறை ஜாமீன் மறுக்கப்பட்டு சிறைவாசம் நீட்டிக்கப்பட்டது
இந்திய கடற்படை போர்கப்பல்களுக்கு தலைமை தாங்கி, உயர் பதவி வகித்த, கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கேப்டன் சவுரப் வசிஷ்ட், கமாண்டர் அமித் நாக்பால், கமாண்டர் புமேந்து திவாரி, கமாண்டர் சுகுணாகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா மற்றும் அதிகாரி ராகேஷ் எனும் 8 முன்னாள் கடற்படை அதிகாரிகள், அரபு நாடான கத்தாரின் தலைநகர் தோஹாவில், டஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் (Dahra Global Technologies) எனும் நிறுவனத்தில் பணியாற்ற சென்றனர்.
இவர்கள் 8 பேரும் இத்தாலிய தொழில்நுட்பத்தில் உருவாகும், மறைந்திருந்து தாக்க கூடிய அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களின் செயல்பாடுகள் குறித்த செயல்பாட்டில் அந்நிறுவனத்தில் முக்கிய பங்காற்றி வந்தனர்.
கடந்த 2022 ஆகஸ்ட் மாதம், கத்தார் அரசாங்கம் இவர்களை சிறையில் அடைத்தது. இவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து சரிவர தகவல்கள் இல்லாமலிருந்தது. இவர்களின் ஜாமின் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டு அவர்கள் சிறைவாசம் நீட்டிக்கப்பட்டு கொண்டே சென்றது.
கடந்த மார்ச் 2023ல் இவர்கள் மீதான வழக்கு விசாரணை துவங்கியது.
இந்நிலையில், இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு இவர்களுக்கு கத்தார் நீதிமன்றம் தற்போது மரண தண்டனை விதித்துள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அதில் அத்துறை தெரிவித்திருப்பதாவது:
நாங்கள் இந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம். தீர்ப்பின் முழு விவரங்களும் கிடைத்ததும் கத்தார் அதிகாரிகளுடன் இது குறித்து பேச உள்ளோம். இந்த வழக்கிற்கு தீவிர முக்கியத்துவம் வழங்கியதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளோம். சட்டதிட்டங்களின்படி அவர்களை வெளியே கொண்டு வருவதற்கான வழிமுறைகளை ஆராய்த்து வருகிறோம்.
இவ்வாறு வெளியுறவு துறை தெரிவித்திருக்கிறது.
கடந்த ஜூன் 8 அன்றே இந்த 8 பேரில் ஒரு அதிகாரியின் சகோதரி, இவ்விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அவசர தலையீட்டை கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டெமன் சானலை லட்சக்கணக்கானவர்கள் பின் தொடர்கிறார்கள்
- டெமன் மோதியதில் ஜிஎம்சி டிரக், சாலையின் ஓரத்திற்கு தள்ளப்பட்டது
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அட்லான்டிக் கடலை ஒட்டியுள்ள மாநிலம் புளோரிடா (Florida). இதன் தலைநகரம், டல்லஹாசி (Tallahassee)
இம்மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர், "ஸ்ட்ரீட் டெமன் பிசி" (Street Demon PC) எனும் புனைப்பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். மிக வேகமாக தனது பைக்கை நெடுஞ்சாலைகளில் ஓட்டி, அதில் சாகசங்களை செய்து காட்டி, அதை நேரிடையாக ஒளிபரப்பு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார் ஸ்ட்ரீட் டெமன். டெமனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பதால், இவரது சானலை பலர் பின் தொடர்கிறார்கள்.
இவர், சில தினங்களுக்கு முன் "ஹோண்டா சிபிஆர் 600 ஆர் ஆர்" (Honda CBR 600 RR) அதிவேக சூப்பர் பைக்கில் அம்மாநில அட்லான்டிக் கடற்கரையோரத்தில் உள்ள டேடோனா பீச் (Daytona Beach) பகுதி இன்டர்ஸ்டேட்-95 (Interstate-95) நெடுஞ்சாலையில் சாகசங்கள் செய்து அதை நேரிடையாக தனது யூடியூப் சேனலில் ஒளிபரப்பினார். பைக்கை மணிக்கு 160 கிலோமீட்டருக்கு மேல் வேகத்தில் ஓட்டி, வெறி பிடித்தவரை போல் வேகத்தை அதிகரித்து, சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களை முந்தி சென்று கொண்டிருந்தார்.
அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த "ஜிஎம்சி பிக்அப் ட்ரக்" (GMC Pick-up Truck) ஒன்றின் மீது மோதினார். தாக்குதலின் தீவிரத்தால் சாலையின் வேறு பகுதிக்கு அந்த டிரக் தள்ளப்பட்டது. உடனடியாக கீழே விழாமல் "டெமன்" பைக்கிலிருந்து கையை எடுக்காமல் சிறிது தூரம் சென்றார். அப்போது அவரை கடந்து சென்ற டிரக் அவரது பைக்கின் பக்கவாட்டில் மோதியது.
இதில் பைக்குடன் தலைகுப்புற கீழே விழுந்தார், டெமன். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாலும் டெமனுக்கு 20க்கும் மேற்பட்ட எலும்புகள் உடைந்தன. அவரது செயலுக்கு பலர் கண்டனங்கள் தெரிவித்தனர்.

தனது அதிகாரபூர்வ வலைதளத்தில் பிற வாகன ஓட்டுனர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை செலுத்திய தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார் டெமன்.

தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு முன் யூடியூபர் வாசன் விபத்திற்கு உள்ளானதையும், அவருக்கு ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட்டதையும் இதனுடன் தொடர்பு படுத்தி சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து பதிவிடுகின்றனர்.
- லாட்டரி பரிசு வெல்பவர்கள் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்
- வென்றவர்களின் தகவல்களை தரும் கடைக்காரர்களுக்கும் கமிஷன் வழங்கினார்
வடகிழக்கு அமெரிக்காவில் உள்ள மாநிலம் மசாசுசெட்ஸ் (Massachusetts). இதன் தலைநகரம் பாஸ்டன் (Boston).
1990களின் ஆரம்பத்தில் லெபனான் நாட்டிலிருந்து அமெரிக்காவில் குடியேறி மசாசுசெட்ஸ் மாநிலத்தின் வாடர்டவுன் பகுதியில் வசித்து வந்தவர் 63 வயதான அலி ஜாஃபர் (Ali Jaafar). இவருக்கு யூசெஃப் (Yousef) மற்றும் மொஹமெட் (Mohamed) என இரு மகன்கள் உள்ளனர்.
அலி செல்போன் பயனர்களுக்காக ஒரு ப்ரீபெய்டு சிம் கார்டு கடை நடத்தி வந்தார். இதன் மூலம் அலிக்கு பலர் அறிமுகமானார்கள்.
கடந்த 2011ல் பணத்தேவைக்காக அலி ஜாஃபர் ஒரு புதிய திட்டம் தீட்டினார்.
மசாசுசெட்ஸ் மாநில வருமான துறை சட்டங்களின்படி அம்மாநிலத்தில் லாட்டரி பரிசுச்சீட்டில் பெரும் தொகையை வெல்பவர்கள், சுமார் 30 சதவீதத்திற்கும் மேல் வருமான வரி செலுத்த வேண்டும். இதை தவிர்க்க பரிசை வென்றவர்கள் வழிமுறைகளை தேடி வந்தனர்.
இதையறிந்த அலி, பரிசுச்சீட்டு வென்றவர்களை தேடிச்சென்று, அந்த பரிசு சீட்டை, வென்ற தொகையை விட குறைவாக கொடுத்து பெற்று கொள்வார். வென்றவர்கள், அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய வரித்தொகை சேமிக்கப்படுவதால், இதற்கு சம்மதித்தனர்.
அந்த பரிசுச்சீட்டை தான் வாங்கியதாக கூறி, சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் காண்பித்து வங்கியின் மூலமாக பரிசுத்தொகையை அலி பெற்று கொள்வார். அத்துடன் தான் பல பரிசுச்சீட்டுகள் வாங்கியதாகவும் அவற்றில் அனைத்திற்கும் பரிசு கிடைக்காமல் நஷ்டம் அடைந்ததாக வருவாய்த்துறைக்கு கணக்கு காட்டி தானும் வரி கட்டாமல் தப்பித்தார்.
"10 பர்சென்டிங்" (10 Percenting) என அந்நாட்டில் அழைக்கப்படும் இந்த நூதன மோசடியில் உண்மையாக வென்றவர்களுக்கும், பரிசுச்சீட்டு நிறுவனத்திற்கும் ஒரு மறைமுக தரகராக அலி செயல்பட்டார்.
2011ல் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்த அலி, 136 லாட்டரி சீட்டுகளை அந்த வருடம் வென்றதாக காட்டி பணம் பெற்றார். 2012ல், 214 பரிசுச்சீட்டுகளில் வென்றதாக பணம் பெற்றார். 2013ல் தனது இரு மகன்களையும் இத்திட்டத்தில் ஈடுபடுத்தி 867 லாட்டரி டிக்கெட்டுக்கான பரிசுத்தொகையை அலி குடும்பத்தினர் பெற்று கொண்டனர்.
பரிசுத்தொகை எந்த சீட்டிற்கு விழுந்திருக்கிறது என்பதை கடைக்காரர்கள் அலிக்கு தெரிவிப்பார்கள். இதில் அவர்களுக்கும் ஒரு தொகையை அலி, கமிஷனாக வழங்கினார்.
அடிக்கடி லாட்டரி பரிசு வெல்லும் அலி குறித்து 2019ல் அம்மாநில லாட்டரி ஆணைய செயல் இயக்குனர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில் அலி சிக்கி கொண்டார். இவ்வழக்கில் அவருக்கு 5 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை அலி குடும்பத்தினர் ரூ.166 கோடி ($20 மில்லியன்) அளவிற்கு மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
- புதிருக்கு பதில் அளிக்கும் சரியான நபருக்கு மொத்த பரிசுத் தொகையையும் கொடுக்க ஏற்பாடு
- பின்னர், அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கும் விதமாக ஹெலிகாப்டர் மூலம் வீச ஏற்பாடு
செக் குடியரசு நாட்டின் டெலிவிசன் ஷோ நடத்துபவர் கமில் பார்ட்டோஷெக். இவர் கஸ்மா என்று அழைக்கப்படுகிறார். டெலிவிசன் நிகழ்ச்சியில் தாக்குத்தை ஏற்படுத்தக் கூடியவரான இவரின், "Onemanshow: The Movie" படத்தில் ஒரு புதிர் தொடர்பான கேள்வி போட்டியை ஏற்பாடு செய்தார்.
இதில் வெற்றிபெறும் நபருக்கு சுமார் ஒரு மில்லியன் டாலர் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், அந்த கஷ்டமான புதிருக்கு விடையளிக்க கடினம் என்பதால், போட்டியில் கலந்து கொள்ள பதிவு செய்த அனைவருக்கும், பணத்தை பகிர்ந்து அளிக்க முடிவு செய்தார். இதனால் ஒரு இடத்தை இலக்கு செய்து, அந்த இடத்தில் பணத்தை கொடுக்கப் போவதாக அறிவித்தார்.
அவர் சொன்னதுபோன்று, சரியான நேரத்திற்கு அந்த இடத்திற்கு வந்து ஹெலிகாப்டர் மூலம் பணத்தை வீசினார். அங்கு வந்திருந்தவர்கள் அந்த பணத்தை எடுத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
- துப்பாக்கிச்சூடு நடந்தபோது பலர் தப்பிக்க அங்கு உள்ள கட்டிடங்களில் இருந்த அறைகளில் பதுங்கிக்கொண்டனர்.
- துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அதிபர் ஜோ பைடனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
லூயிஸ்டன்:
அமெரிக்காவின் மைனே மாகாணம் லூயிஸ்டன் நகரில் வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தினார்.
அந்நகரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நுழைந்து அந்த நபர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். அவர் அங்குள்ள மதுபான விடுதி, ஓட்டல், பவுலிங் விளையாட்டு மையம், வணிக வளாகத்தின் பொருட்கள் வினியோக மையம் ஆகியவற்றுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார்.
இதனால் பொதுமக்கள் அலறியடித்தபடி ஓடினர். துப்பாக்கி சூடு காரணமாக லூயிஸ்டன் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கி சூட்டில் ஏராளமானோர் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
பின்னர் துப்பாக்கி சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். போலீசார் மற்றும் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் 22 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கிச்சூடு நடந்தபோது பலர் தப்பிக்க அங்கு உள்ள கட்டிடங்களில் இருந்த அறைகளில் பதுங்கிக்கொண்டனர். அவர்களை போலீசார் ஒவ்வொருவராக பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
தாக்குதல் நடத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அவரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டனர். அதில் அந்த நபர் துப்பாக்கியால் சுட தயாராகுவது இடம் பெற்று இருந்தது.
அவரிடம் ஆயுதம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் வீட்டுக்கு உள்ளேயே இருக்கும்படியும் லூயிஸ்டன் நகரில் கடைகளை மூடவும் போலீசார் அறிவுறுத்தினர். தாக்குதல் நடத்தியவரை பிடிக்க லூயிஸ்டன் நகர் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
அந்த நபர் பற்றி தகவல் தெரிந்தவர்கள் உடனே போலீசுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் வீட்டின் அருகில் சந்தேகத்திற்கிடமான நிகழ்வுகள் நடந்தால் போலீசுக்கு தகவல் கொடுக்கும் படி அறிவுறுத்தப்பட்டனர்.
இது தொடர்பாக மைனே மாகாண கவர்னர் ஜேனட் மில்ஸ் கூறும்போது, லூயிஸ்டனில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. மாகாணம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் வழிகாட்டுதலை பின்பற்றுமாறு அப்பகுதியில் உள்ள மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அதிபர் ஜோ பைடனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. துப்பாக்கி கலாசாரத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்தாலும் இச்சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் துப்பாக்கி சூடு நடத்திய நபரின் அடையாளம் தெரிந்தது. அவரது பெயர் ராபர்ட் கார்டு என்றும், மைனேவில் உள்ள அமெரிக்க ராணுவ ரிசர்வ் பயிற்சி நிலையத்தில் துப்பாக்கி பயிற்றுவிப்பாளராக பயிற்சி பெற்றவர் என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் மனநல மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார் என்றும் தெரிவித்தனர்.
- கிம் ஜாங் உன்- புதின் சந்திப்பின்போது ஆயுத தொழில்நுட்பத்தை வடகொரியாவுக்கு வழங்க இருப்பதாக தகவல்
- வடகொரியா ஆயுதங்கள் வழங்கியுள்ளதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டு
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததன் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட உலக நாடுகள் ரஷியா மீது பல்வேறு தடைகளை விதித்தன. ஏறக்குறைய தனித்துவிடப்பட்ட சூழ்நிலையில் ரஷியா உள்ளது.
ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியாவுக்கு ஆயுதங்கள் தேவைப்படுகிறது. இதனால் வடகொரியா, சீனாவுடன் நட்பை வலுப்படுத்தி வருகிறது.
சமீபத்தில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரஷியா சென்றிருந்தார். ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசியதுடன், ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், போர் விமானங்கள் போன்றவற்றை நேரில் பார்த்து ஆய்வு செய்தார். அப்போது ஆயுதங்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பங்களை வடகொரியாவுக்கு வழங்க இருப்பதாக தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கவலை தெரிவித்திருந்தன.
இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன், இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி வடகொரியா சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து, வடகொரிய ரஷியாவுக்கு ஆயுதங்கள் வழங்கியுள்ளது. இது உக்ரைன் மீதான போரில் மனித இழப்பை அதிகப்படுத்தும் என அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது.
நாங்கள் ஆயுதங்கள் வழங்கியதற்கான ஆதாரத்தை அமெரிக்கா நிரூபிக்க தவறிவிட்டதாக வடகொரிய கிண்டல் செய்திருந்தது.
இந்த நிலையில் தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் ரஷியாவிற்கு ஆயுதங்கள் வழங்குவதாக வடகொரிய மீது குற்றம்சாட்டியுள்ளன.
"வடகொரியாவிடம் இருந்து ரஷியா ராணுவ பொருட்களை பெறும் முயற்சியை உலகத்திற்கு எடுத்துக்காட்ட நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். சில ஆயுதங்கள் வழங்கியதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். இது ரஷியாவின் ஆக்கிரமிப்பு போரில் மேலும் மனித இழப்பை அதிகரிக்கும்" என மூன்று நாடுகளும் இணைந்து கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.
- குடியரசு கட்சியை சேர்ந்த கெவின் மெக்கார்த்தி, சபாநாயகராக இருந்தார்.
- புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதில் குடியரசு கட்சியினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
அமெரிக்காவில் ஜனநாயக கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பாராளுமன்ற பிரதிநிதி சபையில் ஜனநாயக கட்சியை விட குடியரசு கட்சிக்கு அதிக பலம் உள்ளது. இதனால் குடியரசு கட்சியை சேர்ந்த கெவின் மெக்கார்த்தி, சபாநாயகராக இருந்தார்.
கெவின் மெக்கார்த்தி, ஆளுங்கட்சியுடன் இணக்கமாக செயல்படுவதாக குடியரசு கட்சி உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்து அவரை பதவி நீக்கம் செய்தனர்.
புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதில் குடியரசு கட்சியினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. சபாநாயகர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் நிலவியது. இதற்கிடையே குடியரசு கட்சியின் சபாநாயகர் வேட்பாளராக மைக் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து சபாநாயகர் தேர்வுக்கான ஓட்டெப்பில் மைக் ஜான்சன் 220 வாக்குகள் பெற்றார். எதிராக 209 வாக்குகள் விழுந்தது. இதனால் மைக் ஜான்சன், பாராளுமன்ற பிரநிதிநிதிகள் சபை சபாநாயராக வெற்றி பெற்றார்.
- இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
- காசா மக்களுக்கு உணவு உள்ளிட்ட பிற தேவையான பொருட்களை அமெரிக்கா வழங்கி வருகிறது.
வாஷிங்டன்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய 19-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு பாலஸ்தீன மக்களுக்குப் பின்னால் சென்று ஒளிந்துகொண்ட கோழைகள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக சாடினார்.
காசா மக்களுக்கு உணவு உள்ளிட்ட பிற தேவையான பொருட்களை வழங்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு ஆதரவளித்து வரும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
- அமெரிக்காவில் நேற்று நள்ளிரவு துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
- இதில் 16 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் உள்ள லெவிஸ்டன் பகுதியில் உள்ள நேற்று திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. துப்பாக்கி ஏந்திய இருவர் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும் 50க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களைத் தேடி வருகின்றனர்.
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். நகரின் பல்வேறு இடங்களில் அதிக அளவிலான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன எனவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூடுகளும், உயிரிழப்புகளும் அந்நாட்டு மக்களை பெரிதும் கவலை கொள்ள செய்துள்ளது.
- தீர்ப்பளித்த வில்கின்சன் தன் வீட்டு வாசலில் சடலமாக கிடந்தார்
- சலாசின் மகனை டிரைவர் வேடமணிந்து வந்து ராய் சுட்டு கொன்றான்
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநில நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்தவர் 52 வயதான ஆண்ட்ரூ வில்கின்சன் (Andrew Wilkinson). இவர் கடந்த வாரம் ஒரு விவாகரத்து வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தார். இதன் பிறகு அந்த வழக்கில் சம்பந்தபட்ட பெண்ணுக்கு சாதகமான உத்தரவை பிறப்பித்தார்.
இதையடுத்த சில மணி நேரங்களில் ஹேகர்ஸ்டவுன் பகுதியில் உள்ள வில்கின்சனின் வீட்டு வாசலில் அவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் விசாரித்து வந்த வழக்கில் சம்பந்தபட்ட அப்பெண்ணின் கணவன் பெட்ரோ அர்கோட் (Pedro Argote) என்பவனை காவல்துறையினர் சந்தேகித்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில், மேரிலேண்ட் நீதிபதி ஆண்ட்ரூ வில்கின்சன் உயிரிழந்ததற்கு, நியூ ஜெர்சி மத்திய நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரியும் எஸ்தர் சலாஸ் (Esther Salas), தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
நீதிபதி வில்கின்சனை போன்று, நீதிபதி எஸ்தரும் சில வருடங்களுக்கு முன் ராய் டென் ஹாலேண்டர் (Roy Den Hollander) என்பவரின் வழக்கில் அவருக்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்தார். இதனால் சலாஸ் மீது ஆத்திரத்தில் இருந்த ராய், ஒரு டெலிவரி வாகன ஓட்டுனராக வேடமணிந்து வந்து 20 வயதே ஆன சலாஸின் மகன் டேனியல் ஆண்ட்ரியை சுட்டு கொன்று, சலாஸின் கணவர் மார்க் ஆண்ட்ரியை கடுமையான காயங்கள் ஏற்படும் அளவிற்கு தாக்கி விட்டு ஓடி விட்டான். பிறகு காவல்துறையினரால் தேடப்படும் போது தனக்கு தானே ஏற்படுத்தி கொண்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தான்.
இப்பின்னணியில் நீதிபதி எஸ்தர் சலாஸ் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
வில்கின்சன் குடும்பத்தினரை நன்கு அறிவேன். அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் ஆழ்ந்த இரங்கல்கள். நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்புகளில் எவருக்கோ எங்கேயே அதிருப்தி இருந்து கொண்டுதான் இருக்கும். எனவே அமெரிக்காவின் அனைத்து மாநில நீதிபதிகளுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் வகையில் சட்டங்கள் உருவாக்க வேண்டும். நியூ ஜெர்சியை போல ஒரு சில மாநிலங்களே இதற்காக போராடி வருகின்றன. பிற மாநிலங்கள் தங்களுக்கு உகந்த சட்டதிட்டங்களை நீதித்துறையில் பணியாற்றுபவர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி உருவாக்க வேண்டும். மத்திய, மாநில மற்றும் உள்ளூர் நீதிமன்றங்களில் வில்கின்சனை போன்று எத்தனை நீதிபதிகள் கொல்லப்பட்டனர் என்பது பற்றிய விவரங்கள் சரியான வகையில் இல்லை. நீதிபதிகளின் பாதுகாப்பை அலட்சியபடுத்தியதை நினைவூட்டுவதே வில்கின்சன் மரணம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தாங்கள் பெறும் அதிக ஊதியத்தில் இருந்து நீதிபதிகள் தங்கள் பாதுகாப்பிற்கு தாங்களாகவே பாதுகாப்பாளர்களை நியமித்து கொள்ள வேண்டும் என ஒரு சாராரும், நீதிபதிகள் மக்களுக்கு பணியாற்றுவதால் அவர்கள் பாதுகாப்பிற்கு அரசே பொறுப்பு என மற்றொரு சாராரும் இது குறித்து சமூக வலைதலங்களில் விவாதித்து வருகின்றனர்.






