என் மலர்tooltip icon

    உலகம்

    • பாலஸ்தீனத்தை ஐ.நா. பொதுச்சபையில் முழு நேர உறுப்பினராக சேர்ப்பது தொடர்பாக வரைவு தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்தது.
    • 9 நாடுகள் எதிராக வாக்களித்தன. 25 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன.

    நியுயார்க்:

    பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேலின் போர் 7 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது.

    இப்போரை நிறுத்த கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.

    இந்த நிலையில் ஐ.நா. பொதுச்சபையில் பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று அரபு நாடுகள் கூட்டமைப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தன. இதையடுத்து ஐ.நா. பொதுச்சபையின் அவசர கூட்டம் நடந்தது. இதில் பாலஸ்தீனத்தை ஐ.நா. பொதுச்சபையில் முழு நேர உறுப்பினராக சேர்ப்பது தொடர்பாக வரைவு தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்தது.

    தீர்மானத்திற்கு இந்தியா உள்பட 143 நாடுகள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட 9 நாடுகள் எதிராக வாக்களித்தன. 25 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன.

    இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன் பேசும்போது, இந்த தீர்மானம் ஐ.நா சாசனத்தின் தெளிவான மீறல் என்றார்.மேலும் தீர்மான நகலை கிழித்தார். காகிதங்களை கிழிக்கும் கருவியில் தீர்மான நகலை போட்டார்.

    பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக்க ஐ.நா. பொதுச்சபையில் ஆதரவு கிடைத்துள்ள நிலையில் பாதுகாப்பு கவுன்சில் முடிவு எடுக்க உள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் பாலஸ்தீனம் ஐக்கிய நாடுகள் அவையில் உறுப்பினர் அல்லாத பார்வையாளராக மட்டும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பூமியை கடும் சூரிய காந்த புயல் தாக்கும் அபாயம் உள்ளது.
    • துருவ ஒளி என்பது இரவு வானத்தில் பிரகாசமான, சுழலும் திரைச்சீலைகள் போல் தோன்றும்

    கலிபோர்னியா:

    சூரியனின் மேற்பரப்பில் இருந்து கிளம்பும் மின்காந்த வெடிப்புகள் மற்றும் சக்திவாய்ந்த ஆற்றல்கள் சூரியப்புயல் என்று அழைக்கப்படுகிறது. சூரியப் புயல், புவி மற்றும் அதன் காந்த மண்டலம் உள்ளடக்கிய முழு சூரிய மண்டலத்தையும் தாக்கும்.

    இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த சூரியப்புயல் பூமியை தாக்கியது.

    ஏற்கனவே இது தொடர்பான எச்சரிக்கையை அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் தெரிவித்து இருந்தது. பூமியை கடும் சூரிய காந்த புயல் தாக்கும் அபாயம் உள்ளது என்றும் இதனால் கலிபோர்னியா முதல் தெற்கு அலபாமா வரை அரோரா என்ற துருவ ஒளி ஏற்படும் என்றும் தெரிவித்தது.

    துருவ ஒளி என்பது இரவு வானத்தில் பிரகாசமான, சுழலும் திரைச்சீலைகள் போல் தோன்றும். பச்சை நிறத்தில் இருந்து இளஞ்சிவப்பு மற்றும் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

    அதன்படி வானத்தில் கண்கவர் வான ஒளிக் காட்சிகள் ஏற்பட்டன. ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா முதல் இங்கிலாந்து வரை வான ஒளிக் காட்சிகளை பார்க்க முடிந்தது.

    லிவர்பூல், கென்ட், நார்போக் உள்பட இங்கிலாந்து முழுவதும் துருவ ஒளி தெரிந்தது. சூரியப்புயல் தாக்கிய பிறகு அமெரிக்கா, கனடா, ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் துருவ ஒளி வானில் தோன்றியது. இதை பார்த்து மக்கள் பரவசமடைந்தனர். சூரியப்புயலின் தாக்கம் நீடிக்கும் என்பதால் செயற்கைக்கோள்கள், மின்கட்டமைப்புகள் பாதிக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ‘தென்மேற்கு வைல்டின்’ என்ற தலைப்பில் டிக்-டாக்கில் பதிவிடப்பட்ட அந்த வீடியோ 50 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.
    • வீடியோவில், பெண் பயணி லக்கேஜ் வைக்கும் இடத்திற்குள் படுத்திருப்பதை பார்த்து சக பயணிகள் மனம் விட்டு சிரிக்கும் காட்சிகளும் உள்ளது.

    விமான பயணங்களின் போது பயணிகளின் சில வித்தியாசமான செயல்கள் சமூக வலைதளங்களில் வைரலாவதுண்டு. அந்த வகையில் தற்போது இணையத்தில் பரவி வரும் வீடியோ ஒன்றில், பெண் பயணி ஒருவர் லக்கேஜ் வைக்கும் இடத்தில் படுத்து உறங்குவது போன்று காட்சிகள் உள்ளது.

    'தென்மேற்கு வைல்டின்' என்ற தலைப்பில் டிக்-டாக்கில் பதிவிடப்பட்ட அந்த வீடியோ 50 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது. வீடியோவில், பெண் பயணி லக்கேஜ் வைக்கும் இடத்திற்குள் படுத்திருப்பதை பார்த்து சக பயணிகள் மனம் விட்டு சிரிக்கும் காட்சிகளும் உள்ளது.

    இந்த சம்பவம் சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடைபெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர் ஒருவர், 'மற்ற பயணிகளின் அருகே அமர்ந்து தூங்குவதற்கு அந்த பெண் மிகவும் சங்கடமாக இருந்திருப்பார் என நான் நினைக்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.

    • ஒரு கட்டத்தில் மக்கள் அதிபர் மாளிகை, பிரதமர் இல்லம் உள்ளிட்டவற்றை ஆக்கிரமித்ததை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார்.
    • ரணில் விக்ரமசிங்கே மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கொழும்பு:

    நமது அண்டை நாடான இலங்கை கடந்த 2022-ம் ஆண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு ஆளானது. அனைத்து விதமான அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை தொட்டன.

    இதனால் வெகுண்டெழுந்த மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். பல மாதங்களுக்கு நீடித்த இந்த போராட்டம் அரசுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது.

    ஒரு கட்டத்தில் மக்கள் அதிபர் மாளிகை, பிரதமர் இல்லம் உள்ளிட்டவற்றை ஆக்கிரமித்ததை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

    அதை தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்கே அதிபராக பொறுப்பேற்றார். அவருடைய பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைகிறது.

    இந்த நிலையில் இலங்கையின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலை அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அதன்படி இலங்கை அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் 17-ந்தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 16-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவார் என்றும், அவரை எதிர்த்து தற்போது அவரது மந்திரி சபையில் நீதி மந்திரியாக இருக்கும் விஜேயதாச ராஜபக்சே போட்டியிடுவார் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயங்களுடன் மீட்பு.
    • படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

    மொய்கா ஆற்றின் மேம்பாலத்தில் பயணிகளுடன் வந்துக் கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ஆற்றில் கவிழ்ந்தது.

    இந்த பேருந்தில் மொத்தம் 20 பேர் பயணித்துள்ளனர். இதில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தண்ணீரில் மூழ்கிய பேருந்தில் இருந்து 12 பேரை அவசர உதவியாளர்கள் மீட்டுள்ளனர். மீட்பு பணி முடிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    பேருந்து விபத்தில் சிக்கிய வீடியோ காண்பவர்களை பதற வைத்துள்ளது. மேலும், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • 89 ராணுவ வீரர்கள் மாலத்தீவில் இந்தியா வழங்கிய ஹெலிகாப்டர்களை பராமரித்து வந்தனர்.
    • ஏற்கனவே இரண்டு கட்டமாக 51 வீரர்களை இந்தியா திரும்பப் பெற்றிருந்தது.

    மாலத்தீவில் நடைபெற்ற தேர்தலில் முகமது முய்சு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டவர். தேர்தல் பிரசாரத்தின்போது மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள், திருப்பி அனுப்பப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.

    தேர்தலில் வெற்றி பெற்றபின், அதற்கான வேலையில் மும்முரமாக இறங்கினார். இருநாட்டு அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தையில் ராணுவ வீரர்களை திரும்பப்பெற இந்தியா ஒப்புக்கொண்டது.

    மே 10-ந்தேதிக்குள் படிப்படியாக அனைத்து வீரர்களையும் திரும்பப்பெற இந்தியா சம்மதம் தெரிவித்தது.

    அதன்படி கடந்த மார்ச் முதல்கட்டமாக சில வீரர்களை இந்தியா திரும்பப் பெற்றது. ஏப்பரல் மாதம் 2-வது கட்டமாக ஏப்ரல் மாதம் சில வீரர்களை திரும்பப்பெற்றது. 2 கட்டங்களாக 51 வீரர்களை திரும்பப்பெற்றது.

    இந்த நிலையில் இன்றோடு அனைத்து வீரர்களையும் இந்தியா திரும்பப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்தியா ராணுவ வீரர்களை திரும்பப்பெற மே 10-ந்தேதி (இன்று) கடைசி நாளாகும். இந்த நிலையில் வீரர்களை இந்தியா திரும்பப் பெற்றுள்ளது.

    இந்தியாவைச் சேர்ந்த 90 ராணுவ வீரர்கள் மூன்று ராணுவ தளங்களில் பணியாற்றி வந்தனர்.

    இந்தியா வீரர்கள், மாலத்தீவுக்கு இந்தியா வழங்கிய இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் டோர்னியர் ஏர்கிராஃப்டை இயக்கி வந்ததுடன், பராமரித்து வந்தனர். மேலும், மாலத்தீவுக்கு இந்திய நிர்வாகத்தால் வழங்கப்பட்ட உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பிற வளங்களைப் பயன்படுத்துவதில் பங்களித்தனர்.

    • சிறப்பு கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் கப்பலில் இறங்கி அதில் இருந்த இந்திய மாலுமிகள் உள்பட 25 பேரையும் சிறை பிடித்தனர்.
    • கப்பலில் இருந்த கேரளாவை சேர்ந்த ஆன்டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் விடுவிக்கப்பட்டு சொந்த ஊர் அனுப்பி வைக்கப்பட்டார்.

    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரக கடற்கரை பகுதியில் இருந்து மும்பை நவசேவா துறைமுகத்துக்கு கடந்த மாதம் 12-ந்தேதி எம்.எஸ்.சி. ஏரிஸ் என்று பெயரிடப்பட்ட சரக்கு கப்பல் கண்டெய்னர் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது.

    போர்ச்சுகீசிய கொடியுடன் இஸ்ரேலுடன் தொடர்புடைய இந்த கப்பலில் இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ரஷியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 25 மாலுமிகள் பயணம் செய்தனர். இதில் 3 தமிழர்கள் உள்பட 18 பேர் இந்தியர்கள் ஆவார்கள்.

    இந்த சரக்கு கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தி அருகில் வந்து கொண்டிருந்த போது ஈரானின் புரட்சி படையை சேர்ந்த சிறப்பு கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் கப்பலில் இறங்கி அதில் இருந்த இந்திய மாலுமிகள் உள்பட 25 பேரையும் சிறை பிடித்தனர். பின்னர் அவர்கள் ஈரான் நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஈரான் கடற்படையினரிடம் சிக்கிய இந்திய மாலுமிகளை மீட்க மத்திய அரசு முயற்சியினை மேற்கொண்டது. இதையடுத்து இந்தியர்களை விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    கப்பலில் இருந்த கேரளாவை சேர்ந்த ஆன்டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் விடுவிக்கப்பட்டு சொந்த ஊர் அனுப்பி வைக்கப்பட்டார். கொச்சி விமான நிலையத்துக்கு வந்த அவருக்கு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதன் தொடர்ச்சியாக மேலும் இந்திய மாலுமிகள் 5 பேர் நேற்று மாலை ஈரானில் இருந்து சொந்த நாட்டுக்கு திரும்புவதை பந்தர் அப்பாசில் உள்ள இந்திய துணை தூதரகம் உறுதிபடுத்தி உள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் எக்ஸ் வலைதள பக்கத்தில் தகவலை வெளியிட்டு ஈரானுக்கு இந்தியா நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    இவர்களை தொடர்ந்து மற்ற இந்திய மாலுமிகளும் இன்னும் ஓரிரு நாளில் சொந்த நாட்டுக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

    • இன்னும் 134 பேரை காணவில்லை. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை.
    • படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணி நடந்து வருகிறது.

    தெற்கு பிரேசிலில் உள்ள ரியோ கிராண்டே சுல் மாநில தலைநகர் போர்டோ அலெக்ரே உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் பலத்த மழை கொட்டிவருகிறது.

    இதனால் அந்த நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. சாலைகள் அனைத்தும் ஆறுகளாக மாறிவிட்டன. பாலங்கள்,ரோடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. வெள்ளத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 107- ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 134 பேரை காணவில்லை. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணி நடந்து வருகிறது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களிலும் தெற்கு பிரேசில் பகுதியில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சென்னை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளிலில் இருந்தும் விண்வெளி மையத்தை பார்க்கலாம்.
    • சென்னையில் இருந்தே இந்த நிகழ்வு தெரியும் என்பதால் மக்கள் காண ஆர்வம்.

    சர்வதேச விண்வெளி மையம் குறிப்பிட்ட பகுதியில் வானிலை தெரியும் நேரம் பற்றிய தகவல்களை நாசா வெளியிட்டு வருகிறது.

    பொதுவாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வான்வெளி தெளிவாக இருக்கும்போது மட்டும் சிறிய ஒளி புள்ளியாக விண்வெளி ஆய்வு மையத்தை காண முடியும்.

    அந்த வகையில், சென்னையில் இருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை இன்று இரவு வெறும் கண்களால் பார்க்கலாம் என நாசா அறிவித்துள்ளது.

    இதுபோல், சென்னை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளிலில் இருந்தும் விண்வெளி மையத்தை பார்க்கலாம். சென்னையில் இன்றிரவு, 7.09 மணியில் இருந்து 7 நிமிடங்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தென்படும் என நாசா அறிவித்துள்ளது.

    சென்னையில் இருந்தே இந்த நிகழ்வு தெரியும் என்பதால் மக்கள் காண ஆர்வத்துடன் உள்ளனர்.

    • விமானம் சான்பிரான்சிஸ்கோவில் தரை இறங்கியதும் 2 பயணிகளும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
    • பயணிகளின் மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றது.

    பஸ், ரெயில்களில் இருக்கைகளை பிடிப்பதற்காக பயணிகள் இடையே சண்டை நடப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் விமானத்தில் இருக்கைக்காக பயணிகள் இடையே நடந்த மோதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    கிழக்கு ஆசியாவில் உள்ள தைவானில் இருந்து கலிபோர்னியா செல்லும் ஈ.வி.ஏ. விமானத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் தொடர்ந்து இருமிக்கொண்டே இருந்துள்ளார். இதனால் அவர் அருகே அமர்ந்திருந்த மற்றொரு பயணி விமானத்தில் காலியாக இருந்த மற்றொரு இருக்கைக்கு சென்று அமர்ந்துள்ளார். இந்நிலையில் இருமிக்கொண்டிருந்த பயணி எழுந்து சென்று, ஏற்கனவே தன் அருகே இருந்து விலகி சென்று அமர்ந்த பயணியின் இருக்கை அருகே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டது. இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் திடீரென ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இதனால் சக பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சண்டை போட்ட பயணிகளை விலக்கி விட முயன்றனர். ஆனாலும் 2 பயணிகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை சமாதானபடுத்த முடியாமல் விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விமானம் சான்பிரான்சிஸ்கோவில் தரை இறங்கியதும் 2 பயணிகளும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஏற்கனவே பயணிகளின் மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றது.

    வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விமான ஊழியர்களின் பொறுமை மற்றும் கடமை உணர்வை பாராட்டி பதிவிட்டனர். மேலும் மோதலில் ஈடுபட்ட பயணிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

    • பெருவெள்ளம் சூழ்ந்த நகர்ப்பகுதி நடுவே பைபர் படகு மூலம் முதியவர் ஒருவர் மீட்கப்பட்டார்.
    • வெள்ளத்தில் சிக்கியபோது பிரிந்த அவரின் 4 வளர்ப்பு நாய்களும் மீட்புத்துறையினரால் மீட்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    வெள்ளத்தில் பிரிந்துபோன தனது வளர்ப்பு நாய்களுடன் மீண்டும் இணைந்த உரிமையாளர் குறித்தான வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

    பிரேசிலின் ரியோ கிராண்ட் சுலே மாகாணத்தில் கனமழை காரணமாக அங்கு திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிய நிலையில் பலர் வீடுகளை இழந்தும், சொந்தங்களை பிரிந்தும் தவித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் பேரிடரின்போது பிரிந்துபோன தன் வளர்ப்பு நாய்களுடன் அதன் உரிமையாளர் மீண்டும் இணைவது குறித்தான காட்சிகள் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாக பரவுகிறது. அதில் பெருவெள்ளம் சூழ்ந்த நகர்ப்பகுதி நடுவே பைபர் படகு மூலம் முதியவர் ஒருவர் மீட்கப்பட்டார்.

    மேலும் வெள்ளத்தில் சிக்கியபோது பிரிந்த அவரின் 4 வளர்ப்பு நாய்களும் மீட்புத்துறையினரால் மீட்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் பெருமகிழ்ச்சியில் அவர் தன் நாய்களை அணைத்தவாறு அவர் கதறி அழுதார். இந்த பதிவு காண்போரை நெகிழ வைத்து வேகமாக பகிரவும் செய்துள்ளது.


    • இந்தியாவின் மத சுதந்திரம் சார்ந்து ஆதாரமற்ற வகையில் அமெரிக்கா தொடர்ந்து பேசி வருகிறது.
    • இந்தியாவில் நிலவும் அரசியல் சமநிலையை சீர்குலைக்க வேண்டும் என்பதுதான் இதற்கு காரணம்.

    இந்திய பாராளுமன்ற தேர்தலில் அமெரிக்கா தலையிட முயற்சி செய்வதாக ரஷ்யா பகிரங்க குற்றம் சாட்டியுள்ளது.

    ரஷ்ய நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா பத்திரிகையாளர் சந்தித்து பேசினார்.

    அப்போது, "காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை சதியில் இந்தியர்களுக்கு தொடர்பு இருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை அமெரிக்கா சுமத்துகிறது. இப்படி இந்தியாவின் மத சுதந்திரம் சார்ந்து ஆதாரமற்ற வகையில் அமெரிக்கா தொடர்ந்து பேசி வருகிறது.

    இந்தியாவில் நிலவும் அரசியல் சமநிலையை சீர்குலைக்க வேண்டும் என்பதுதான் இதற்கு காரணம். இந்திய பொதுத் தேர்தலை சிக்கலாக்கும் நோக்கில் அமெரிக்கா இப்படி செய்கிறது" என்று அவர் தெரிவித்தார்.

    அண்மையில் மத நம்பிக்கை சார்ந்த உரிமை மீறல்களில் இந்தியா உட்பட 16 நாடுகள் ஈடுபடுவதாக சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தது.

    இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..

    ×