என் மலர்tooltip icon

    உலகம்

    • போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தாக்குதலை நடத்தியது யார் என போலீசார் தெரிவிக்கவில்லை.

    ஓமன்:

    ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டின் வாடிகபீர் பகுதியில் உள்ள மசூதி அருகே துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 4 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். உடனே சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், சாட்சியங்களை சேகரிப்பதற்கான நடைமுறைகள், விசாரணைகள் நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலை நடத்தியது யார்? என போலீசார் தெரிவிக்கவில்லை.

    • குப்பைக் கிடங்கில் இருந்து தொடர்ச்சியாக பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது.
    • கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் உடல்களை அப்புறப்படுத்த உபயோகித்த 9 சாக்குகளை போலீசார் கைப்பற்றினர்.

    கென்யாவில் மனைவி உட்பட 42 பெண்களை கொடூரமாகக் கொன்று புதைத்ததாக ஜோமைசி கலிசியா (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைவிடப்பட்ட குவாரியில் உள்ள குப்பைக் கிடங்கில் இருந்து தொடர்ச்சியாக பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது கென்யாவில் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது.

    இந்த குவாரிக்கு அருகில் இருந்த குற்றவாளியின் வீட்டை சோதனை செய்ததில், 10 செல்போன்கள், மடிக்கணினி, அடையாள அட்டைகள் மற்றும் பெண்களின் ஆடைகள், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் உடல்களை அப்புறப்படுத்த உபயோகித்த 9 சாக்குகளை போலீசார் கைப்பற்றினர்.

    தனது மனைவியின் கொலை தொடங்கி அடுத்ததாக 42 பெண்களை கொன்று அவர்களின் உடல்களை கைவிடப்பட்ட குவாரியில் அப்புறப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட ஒப்பு கொண்டுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடந்த மே மாதம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகினர்.
    • உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான் காலநிலை மாற்றத்தின் பாதிப்பு காரணமாக இயற்கை பேரிடர் சம்பவங்களுக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

    ஆப்கானிஸ்தானில் நேற்று மாலை இடியுடன் கூடிய பெய்த பலத்த மழையால் ஜலாலாபாத் மற்றும் நங்கர்ஹர் மாகாணத்தில் மரங்கள், சுவர்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்ததில் 35 பேர் உயிரிழந்தனர். மேலும் 230 பேர் படுகாயமடைந்தனர்.

    காயம் அடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் நங்கர்ஹார் பிராந்திய மருத்துவமனை மற்றும் பாத்திமா-துல்-சஹ்ரா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் உடல்களும் இதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டன.

    இதுகுறித்து தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் துயரத்தில் நாங்கள் பங்கு கொள்கிறோம். இஸ்லாமிய எமிரேட்டின் தொடர்புடைய நிறுவனங்கள் விரைவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் மருந்துகளை வழங்குவார்கள்," என்றார்.

    கடந்த மே மாதம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகினர். மேலும் விவசாய நிலங்கள் சேதமாயின. உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான் காலநிலை மாற்றத்தின் பாதிப்பு காரணமாக இயற்கை பேரிடர் சம்பவங்களுக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஜேம்ஸ் டேவிட் வான்ஸ் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
    • டேவிட் வான்ஸ் "ஹில்பில்லி எலிகி" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் துணை அதிபர் வேட்பாளரை டொனால்டு டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதிபர் பதவிக்கான தேர்தலில் டிரம்ப் களத்தில் உள்ள நிலையில், துணை அதிபர் பதவிக்கு ஜேம்ஸ் டேவிட் வான்ஸ் போட்டியிடுவார் என்று டிரம்ப் அறிவித்தார்.

    ஓஹியோவை சேர்ந்த ஜேம்ஸ் டேவிட் வான்ஸ் "ஹில்பில்லி எலிகி" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். டிரம்ப் ஆதரவாளர்களில் சிலர் பெண் அல்லது சற்றே மாநிறமாக உள்ள நபரை துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்ய வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், தான் ஜேம்ஸ் டேவிட் வான்ஸ் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

    முன்னதாக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அதிபர் டிரம்ப் மீது சுப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. துப்பாக்கி சூட்டில் சிக்கிய டிரம்ப் நூலிழையில் உயிர்தப்பினார். இவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய 20 வயதான தாமஸ் மேத்யூ சம்பவ இடத்திலேயே சுட்டு வீழ்த்தப்பட்டார். 

    • சிறுத்தையும் சீறாமல் குளியலை ரசிக்கிறது.
    • வீடியோ எங்கு பதிவு செய்யப்பட்டது என்று தெரியவில்லை.

    குளியல் தொட்டியில் வைத்து சிறுத்தையை இளம்பெண் குளிப்பாட்டும் வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்குகிறது.

    தென் அமெரிக்க பகுதிகளில் காணப்படும் சிறுத்தை இனங்களை சேர்ந்தது ஜாகுவார் சிறுத்தை. அந்த பெண் உயிரியல் பூங்கா பராமரிப்பாளரா அல்லது சிறுத்தையை குட்டியில் இருந்து தத்தெடுத்து வளர்ப்பவரா என்று தெரியவில்லை.

    பூனைக்குட்டியை குளிப்பாட்டுவதுபோல ஒரு கையால் குழாயில் தண்ணீரை பீய்ச்சி அடித்து மறுகையால் சிறுத்தைக்கு உடம்பை தேய்த்து விட்டு குளிப்பாட்டுகிறார். சிறுத்தையும் சீறாமல் குளியலை ரசிக்கிறது.

    இந்த வீடியோ எங்கு பதிவு செய்யப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியான இந்த வீடியோ 94 லட்சம் பேரின் பார்வையைத் தாண்டி ஒருகோடி பார்வையாளர்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வலைத்தளவாசிகள் பெண்ணின் செயலை பாராட்டியும், விமர்சித்தும் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள்.

    • அவனது தோற்றத்தை வைத்து சக மாணவர்கள் தொடர்ந்து கேலி கிண்டல் செய்து வம்பிழுத்து வந்துள்ளனர்.
    • தனது தந்தையின் AR ஸ்டைல் செமி ஆட்டோமேட்டிக் ரைபிளை பயன்படுத்தியே மேத்யூ டிரம்பை சுட்டுள்ளான்

    அமேரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னால் அதிபர் டொனல்டு டிரம்ப் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று பென்சில்வேனியா மாகாணத்தில் நடந்த பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிசூடு நடந்தது. குண்டு அவரது வலது காதின் மேற்பகுதியை உரசிச் சென்றது.

     

    அகதிகளை அமெரிக்காவுக்குள் அனுமதிப்பதை எதிர்த்து அவர் எழுதியிருந்த பேப்பர் குறிப்பை பார்பதற்காக அவர் சற்று தலைசாய்த்த நிலையில் நூலிழையில் உயிர்பிழைந்தார். அவர் மீது துப்பாக்கிசூடு நடத்தியது அப்பகுதியை சேர்ந்த  தாமஸ் மாத்தியூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞர் என்பது தெரியவந்தது. சீக்ரட் சர்வீஸ் பாதுகாவலர்கள் சுட்டதில் மேத்யூ க்ரூக்ஸ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயரிலிழந்தார். அவரைப் பற்றிய அடுத்தடுத்த தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

    மேத்யூ மிகவும் தனிமையான அமைதியான சமூகத் தொடர்பு இல்லாத  பையன் என்று அவனது சக மாணவர்கள் கூறுகின்றனர். எனவே மேத்யூவுக்கு நண்பர்களும்  இல்லை. துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் சரியாக குறிவைக்கும் திறன் இல்லாததால் மேத்யூ நிராகரிக்கப்பட்டுள்ளான். அவனது தோற்றத்தை வைத்து சக மாணவர்கள் தொடர்ந்து கேலி கிண்டல் செய்து வம்பிழுத்து வந்துள்ளனர்.

     

     அவன் அணியும் உடைகளை வைத்தும் அவனை அவர்கள் தொடர்ந்து சீண்டியுள்ளனர். தனது தந்தையின் AR ஸ்டைல் செமி ஆட்டோமேட்டிக் ரைபிளை பயன்படுத்தியே மேத்யூ டிரம்பை சுட்டுள்ளான் என்று விசாரணையில் தெரிகிறது. மேலும் அவனது காரில் சில வெடிகுண்டுகளையும் பாதுகாப்பு படையினர் கண்டறிந்துள்ளனர்.

    ஆனால் மேத்யூவின் டிரம்பை சுட்டதற்கு எந்த வலுவான காரணமும் இல்லை. எந்த சித்தாந்தத்தின் மீதும் மேத்யூ ஈடுபாடு காட்டவில்லை என்றும் தன்னிச்சையாகவே இந்த செயலில்ஈடுபட்டுள்ளான் என்றும் விசாரணையில் தெரியவருகிறது. டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டையே மேத்யூ கொண்டிருந்தான் என்றும் தெரிகிறது.

    • நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் கட்சி இடஒதுக்கீடு மூலம் 20 இடங்களை பெற தகுதியானது- உச்சநீதிமன்றம்
    • நாட்டுக்கு எதிரான செயலில் இம்ரான் கான் கட்சி ஈடுபட்டதற்கான சாட்சி தெளிவாக உள்ளது- அரசு

    பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். இவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. மூன்று வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மூன்று முக்கிய வழக்குகளில் இரண்டில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒரு வழக்கில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. இந்த நிலையில் இம்ரான் கான் கட்சியான பாகிஸ்தான் தெரீக்-இ-இன்சாஃப் கட்சி நாட்டுக்கு எதிரான செயலில் ஈடுபட்டுள்ளது. இதனால் தடைவிதிக்க முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் தகவல்தொடர்பு துறை மந்திரி அட்டாயுல்லா டரார் தெரிவித்துள்ளது.

    அக்கட்சியை தடை செய்வதற்கு போதுமான தெளிவான சாட்சிகள் உள்ளது. தடைக்கான வேலைகளை அரசு தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

    இம்ரான் கட்சிக்கு குறைந்தபட்சம் இடங்கள் நாடாளுமன்றத்தில் சட்டவிரோதமாக மறுக்கப்பட்டது என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது. இது ஆளும் கூட்டணி ஆட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இம்ரான் கான் கட்சி பிப்ரவரி 8-ந்தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்டது. இதனால் இம்ரான் கான் கட்சி வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர்.

    • மூன்று சிறிய படகுகள் மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.
    • இந்த தாக்குதலில் கப்பலுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி களிர்ச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று ஏமனில் உள்ள அல் ஹுதைதா கடலில் சென்று கொண்டிருந்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியார்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    மூன்று சிறிய படகு மூலம் கப்பலை வழிமறித்துள்ளனர். இரண்டு படகில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இருந்துள்ளனர். ஒரு படகில் மனிதார்கள் யாரும் இல்லை. ஆளில்லாத படகு கப்பல் மீது இரண்டு மூன்று முறை மோதியுள்ளது. பின்னர் கப்பல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது அநத் ஆளில்லாத படகு விலகிச் சென்றுள்ளனர்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து ஆட்கள் உள்ள இரண்டு படகில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த தாக்குதலில் இருந்து கப்பல் தப்பிவிட்டது.

    கப்பலில் இருந்து மாலுமிகள் உள்பட யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. பிரிட்டன் கடல்சார் வர்த்தக நடவடிக்கை மையம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

    ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இதுவரை 70-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் நான்கு மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். ஒரு கப்பலை சிறைப்பிடித்தது. இரண்டு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

    • துப்பாக்கி சூடு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் அதிபர் டிரம்ப் காதில் இருந்து இரத்தம் சிந்தியது.
    • நியூயார்க்கில் நடந்த ஜெகந்நாதரின் முதல் ரத யாத்திரையில் பக்தர்களுக்கு ட்ரம்ப் உதவி செய்தார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த நபர் டொனால்ட் டிரம்ப்-ஐ சுட்டார். இந்த சம்பவத்தால் பரபர சூழல் உருவானது.

    துப்பாக்கி சூடு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் அதிபர் டிரம்ப் காதில் இருந்து இரத்தம் சிந்தியது. இதைத் தொடர்ந்து டிரம்ப்-ஐ பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றிக்கொண்டு அவரை அங்கிருந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக எஃப்பிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    துப்பாக்கி சூடு நடத்திய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்-ஐ பாதுகாவலர்கள் சம்பவ இடத்தில் வைத்தே சுட்டுக் கொன்றனர். இவர் ஏன் டிரம்ப்-ஐ சுட முயன்றார் என்பது பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், கடவுள் ஜெகந்நாதரின் அருளால் தான் சிறு காயங்களுடன் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் உயிர் தப்பினார் என்று "சர்வதேச கிருஷ்ணர் விழிப்புணர்வுக்கான சமூக அமைப்பு" (ISKCON) தெரிவித்துள்ளது.

    48 ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க்கில் நடந்த ஜெகந்நாதரின் முதல் ரத யாத்திரையில் பக்தர்களுக்கு ட்ரம்ப் உதவி செய்தார். தற்போது ஜெகந்நாதரின் 9 ஆவது ரத யாத்திரை நடைபெறவுள்ள நிலையில், அதன் பிரதிபலனாக தற்போது ட்ரம்பின் உயிரை ஜெகந்நாதர் காப்பற்றியுள்ளார்" என்று இஸ்கான் செய்தித் தொடர்பாளர் ராதாரமன் தாஸ் தெரிவித்துள்ளார்.

    • டேட்டிங் உத்திகளுக்கு தனி கட்டணம் என பல வகையான பேக்கேஜூகளின் வருமானம் ஈட்டி வருகிறாராம்.
    • பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    சமூக வலைதளங்கள் பொழுதுபோக்கு தளமாக மட்டுமல்லாமல், சிலருக்கு பணம் ஈட்டித்தரும் தளமாகவும் விளங்குகிறது. அந்த வகையில் சீனாவை சேர்ந்த ஒருவர் சமூக வலைதளங்களில் பெண்களுக்கு ஆலோசனைகள் கூறி ஆண்டுக்கு ரூ.163 கோடி சம்பாதிக்கிறார். ஆனால் இவர் கூறும் ஆலோசனைகள் சர்ச்சையாக உள்ளது.

    அதாவது பணக்கார ஆண்களை திருமணம் செய்வது எப்படி? என்பது குறித்து பெண்களுக்கு இவர் சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார். க்யூ குவின் என்ற பெயர் கொண்ட இவர், காதல் உறவுகளை கையாள்வது குறித்து சர்ச்சை கருத்துக்களை வழங்குவதாக கூறப்படுகிறது.

    திருமணம் செய்வதை கோட்டைக்குள் செல்வது என்றும், பணத்தை அரிசி என்றும், கர்ப்பத்தை பந்தை சுமப்பது என்றும் குறிப்பிடும் இவர், உறவுகளை மதிப்பதில்லை. ஆனாலும் இவரை கலந்து ஆலோசிக்க பெண்களிடம் குறிப்பிட்ட தொகையை பெறுகிறார். ரூ.12,945, ரூ.43,179, கவுன்சிலிங் பேக்கேஜூகளுக்கு மாதம் ரூ.1.17 லட்சம், டேட்டிங் உத்திகளுக்கு தனி கட்டணம் என பல வகையான பேக்கேஜூகளின் வருமானம் ஈட்டி வருகிறாராம்.

    அந்த வகையில் ஆண்டுக்கு தோராயமாக 142 மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் ரூ.163 கோடி) சம்பாதிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ள நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • மொகடிஷு ஓட்டலில் கார் வெடிகுண்டு வெடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.
    • இந்த குண்டு வெடிப்பில் சுமார் 20 பேர் காயமடைந்தனர்.

    யூரோ 2024 கோப்பை இறுதிப் போட்டியை காண்பதற்காக சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஒரு ஓட்டலில் ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

    ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டியை இளைஞர்கள் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென சக்திவாய்ந்த கார் வெடிகுண்டு வெடித்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் சுமார் 20 பேர் காயமடைந்தனர்.

    வில்லா சோமாலியா என அழைக்கப்படும் ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்கு அருகில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • அந்நாட்டு அரசியல் களத்தை சூடுபிடிக்க செய்தது.
    • அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அவரை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் நூலிழையில் உயிர்பிழைத்தார். முன்னாள் அதிபர் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி தாக்குல் அந்நாட்டு அரசியல் களத்தை சூடுபிடிக்க செய்துள்ளது.

    இந்த நிலையில், முன்னாள் அதிபர் மீதான துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

     


    அப்போது பேசிய அவர், "இந்த நாட்டின் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியது. இதனை குளிர்விக்கும் நேரம் வந்துவிட்டது. அரசியல் களம் உண்மையான போர் களமாகவோ, கொலை களமாகவோ மாறிவிட கூடாது. இது சோதனை காலக்கட்டம். இந்த நேரத்தில் வாக்குப் பெட்டி தான் போர் பெட்டி," என்று தெரிவித்தார்.

    தேர்தல் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தியர் அதே இடத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கி சூடு நடத்தியது தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அமெரிக்காவில் முன்னாள் அதிபர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அந்நாட்டு பாதுகாப்பு துறை மீது ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    ×