என் மலர்tooltip icon

    உலகம்

    • இந்தியாவை யாராவது அச்சுறுத்தினால், அவர் முற்றிலும் மாறிவிடுவார்.
    • பிரதமர் மோடி சிறந்தவர், அருமையான மனிதர்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். அவர் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

    இதற்கிடையே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற டிரம்ப் பேட்டி அளித்தார். அப்போது இந்திய பிரதமர் மோடி பற்றி குறிப்பிட்டார். இதுதொடர்பாக டிரம்ப் கூறியதாவது:-

    2014-ம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்பதற்கு முன்பு வரை, தலைமைத்துவத்தில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டு அந்நாட்டில் நிலையற்ற தன்மை காணப்பட்டது.


    மோடி பிரதமராக வந்தபிறகு இந்தியா சிறந்த நாடாக மாறிவிட்டது. அவர் என்னுடைய நண்பர். வெளிப்புற தோற்றத்தில் அவர் உங்களது தந்தையை போன்று காணப்படுபவர். அவர் அன்பானவர்.

    ஆனால் இந்தியாவை யாராவது அச்சுறுத்தினால், அவர் முற்றிலும் மாறிவிடுவார். இந்தியாவை சிலர் அச்சுறுத்தி கொண்டிருந்த போது, நான் உதவி செய்கிறேன் என நான் மோடியிடம் கூறினேன். அதற்கு மோடி, நான் பார்த்து கொள்கிறேன். தேவையானவற்றை நானே பார்த்து கொள்கிறேன். அவர்களை நூற்றாண்டுகளாக நாங்கள் தோற்கடித்து வருகிறோம் என கூறினார். பிரதமர் மோடி சிறந்தவர், அருமையான மனிதர்.

    தேவைப்படும்போது, எதிரியை நாடு எதிர்கொள்ள வேண்டிய ஒரு கடின சூழலில் ஒரு தலைவராகவும் இருக்க கூடியவர் என்றார்.

    மேலும் 2019-ம் ஆண்டு டெக்சாசின் ஹூஸ்டனில் நடந்த ஹவுடி மோடி நிகழ்வின் போது பிரதமர் மோடியுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டதை நினைவு கூர்ந்த டிரம்ப், அந்த அரங்கம் நிரம்பிருந்தது. அங்கிருந்தவர்கள் மோடிக்காக ஆரவாரம் செய்வதைப் பார்ப்பது அழகாக இருந்தது என்றார்.

    • ஒருவருக்கு வெடிகுண்டுகள் கிடைத்ததால் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
    • வீடியோவை வலைத்தளத்தில் வெளியிட்டபோது 1.3 கோடி பேர் பார்வையிட்டனர்.

    பூமி, புதையல்களின் சுரங்கம். ஆதிமனிதன் பூமியைத் தோண்டி கிழங்கையும், விதைகளையும் எடுத்து பசியாறினான். தற்கால மனிதர்கள் தோண்டும்போது வரலாற்றையும், பொன்னையும், பொருளையும் தோண்டி எடுக்கிறார்கள்.

    வரலாற்று ஆய்வாளர்கள் மட்டுமல்லாது, சாதாரணமானவர்கள் கூட நிலத்தை தோண்டும்போது ஏதாவது அதிசய பொருட்கள் கிடைக்கலாம். அப்படி ஒருவருக்கு வெடிகுண்டுகள் கிடைத்ததால் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

    'இன்சேன்ரியாலிடிஸ்' என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியான அந்த வீடியோவில், ஒருநபர் வீட்டுத் தோட்டத்தில் ஆழமாக குழி தோண்டியது காட்டப்படுகிறது. அப்போது ஒருபொருள் தட்டுப்பட, புதையல்போல எண்ணி பக்குவமாக தோண்டியெடுத்தபோது அது சிறிய மருத்துவ கருவிப் பெட்டி போல தெரிந்தது. செல்லரிக்கத் தொடங்கியிருந்த அந்த பெட்டியை சிரமப்பட்டு அந்த நபர் திறக்கிறார். உள்ளே சிவப்பு நிறத்தில் பக்கத்திற்கு 5 என மொத்தம் 10 பொருட்கள் இருந்தன. அவை வெடிகுண்டு போல தோற்றமளித்ததால் அதிர்ச்சியானார்.

    அதுகுறித்த வீடியோவை வலைத்தளத்தில் வெளியிட்டபோது 1.3 கோடி பேர் பார்வையிட்டனர். கருத்துப் பகுதியில் அது 2-ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜெர்மன் தொழில்நுட்ப குண்டு போல இருப்பதாக பலரும் கூறி இருந்தனர்.

    • ஐந்து இடங்களுக்கு ஆறு நாடுகள் போட்டியிட்டன.
    • தாய்லாந்து, சைப்ரஸ், கத்தார், தென்கொரியா, மார்ஷல் தீவு அதிக வாக்குகள் பெற்றன.

    சவுதி அரேபியா மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக வலது குழுக்கள் புகார் அளிக்க ஐ.நா.வின் மனித உரிமைகள் குழுவில் இணைவதற்கான வாய்ப்பை சவுதி அரேபியா இழந்துள்ளது.

    193 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. சபை, 18 புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பபை நடத்தியது. இவர்கள் 47 நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இடம் பிடிப்பார்கள். புவியியல் சார்பிலான பிரநிதிகள் அடிப்படையில் உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள்.

    இவர்கள் வடகொரியா, ஈரான், மியான்மர் மன்றும் உக்ரைன் போரில் ஆகிவற்றில் மனித உரிமைகள் மீறப்படுவது குறித்து தகவல் சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    இந்த வருடம் ஆசிய-பசிபிக் குழுவில் ஐந்து இடங்களுக்கு ஆறு நாடுகள் போட்டியிட்டன. இதில் தாய்லாந்து 177 வாக்குகள் பெற்றது. சைப்ரஸ், கத்தார் தலா 167 வாக்குகள் பெற்றன. தென்கொரியா 161 வாக்குகள் பெற்றது. மார்ஷல் தீவு 124 வாக்குகள் பெற்றது. சவுதி அரேபியா 117 வாக்குகள் பெற்றர்து.

    இந்த வாக்கெடுப்பிற்கு முன்னதாக, ஐ.நா.வுக்கான மனித உரிமை கண்காணிப்பு இயக்குனர் லூயிஸ் சார்போன்னோ, மனித உரிமை கவுன்சிலில் பணியாற்ற சவுதி அரேபியா தகுதியற்றது எனத் தெரிவித்தார்.

    2022 மற்றும் 2023-ல் ஏமன்-சவுதி எல்லையில் எத்தியோப்பியால் இருந்து புலம் பெயர்ந்தவர்களை சவுதி எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். 2018-ல் சவுதி அரேபிய பத்திரிகையாளர் இஸ்தான்புல்லில் கொலை செய்யப்பட்டதில் அரசின் செயல்பாடு ஆகியவற்றை சுட்டிக்காட்டினார்.

    மேலும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் அல்லது அதுபோன்ற அட்டூழியங்களைச் செய்து, அதற்குப் பொறுப்பானவர்கள் தண்டனையிலிருந்து விலக்கப்படுவதை உறுதி செய்யும் அரசாங்கங்கள், ஐநாவின் மனித உரிமைகள் அமைப்பின் உயர்மட்டக் குழுவில் இடம் பெறக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • அவருடைய பார்வை என்னைத் தூண்டியது.
    • இந்தியாவில் நவீன வணிகத் தலைமையை வழி நடத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் கருவியாக இருந்தார்.

    பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், தொழில் அதிபர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை இரங்கல் தெரிவித்துள்ளார். சுந்தர் பிச்சை தனது இரங்கல் செய்தியில் "கூகுளில் ரத்தன் டாடாவுடனான எனது கடைசி சந்திப்பில், வேமோவின் முன்னேற்றம் குறித்துப் பேசினோம், அவருடைய பார்வை என்னைத் தூண்டியது. அவர் ஒரு அசாதாரண வணிகம் மற்றும் மரபை விட்டுச் செல்கிறார்.

    இந்தியாவில் நவீன வணிகத் தலைமையை வழி நடத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் கருவியாக இருந்தார். இந்தியாவை மேம்படுத்துவதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அவரது அன்புக்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    • 2021-ல் பிரதமராக பொறுப்பேற்ற புமியோ கிஷிடா 3 ஆண்டுகளே பதவியில் இருந்தார்.
    • ஜப்பானின் புதிய பிரதமராக ஷிகெரு இஷிபா வெற்றி பெற்று பதவியேற்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் பிரதமராக பதவி வகித்து வந்த புமியோ கிஷிடா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதனால் அவர் சமீபத்தில் ராஜினாமா செய்தார். புமியோ கிஷிடா 2021-ல் பிரதமராக பொறுப்பேற்று, 3 ஆண்டுகளே பதவியில் இருந்தார்.

    இதையடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டது. பிரதமர் பதவிக்கு, அதாவது கட்சி தலைவர் பதவிக்கு 9 பேர் போட்டியிட்டனர். இதற்கான வாக்கெடுப்பு கடந்த 1-ம் தேதி நடந்தது. இதில் ஷிகெரு இஷிபா (67) வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார்.

    அப்போது, விரைவில் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த முடிவுசெய்தார். வரும் 27-ம் தேதி தேர்தலை நடத்த உள்ளதாக கூறியிருந்தார்.

    இந்நிலையில், ஜப்பான் பாராளுமன்றத்தை (கீழ்சபை) கலைத்து பிரதமர் ஷிகெரு இஷிபா உத்தரவிட்டார். திட்டமிட்டபடி வரும் 27-ம் தேதி தேர்தலை நடத்த தயாராகி வருகிறார்.

    தற்போதைய ஆட்சிக்கு மக்களின் ஆதரவு மற்றும் அங்கீகாரத்தை பெற நாங்கள் நேர்மையாக செயல்படுவோம் என இஷிபா, தெரிவித்தார்.

    பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் தேர்தல் முடிந்து புதிய அரசு அமையும் வரை பதவியில் இஷிபாவும், அவரது அமைச்சரவையும் பதவியில் நீடிப்பார்கள்.

    அதேசமயம், அவசர அவசரமாக தேர்தலை நடத்தும் பிரதமரின் முடிவை எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

    • அதிபர் பதவிக்கு போட்டியிட்ட டிரம்ப், தேர்தலில் தோல்வியை தழுவினார்.
    • அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அமெரிக்காவின் 45 ஆவது அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப் 2021 ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபராக பதவியில் இருந்தார். இதைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட டிரம்ப், தேர்தலில் தோல்வியை தழுவினார்.

    இதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறப் போவதில்லை என்று டிரம்ப் கூறினார். மேலும் ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க அதிபர் மாளிகையில், டிரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிபராக தொடர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டிரம்ப் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் காரணமாக அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    இந்த நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டது முதல் பல முறை ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் என்று அமெரிக்க செய்தியாளர் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவித்து இருக்கிறார்.

    புத்தகத்தில் உள்ள தகவல்களின் படி டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் புதினை கிட்டத்தட்ட ஏழு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ஒரு சமயம் தான் பேசுவதை உதவியாளர்கள் கேட்க கூடாது என்ற காரணத்தால் அவர்களை வெளியேற்றிவிட்டு டிரம்ப் ரஷிய அதிபர் புதினுடன் பேசினார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    அமெரிக்க செய்தியாளரின் புத்தக்கில் இடம்பெற்றுள்ள தகவல்கள் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து, அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் அதிபர் வேட்பாளரான டொனல்டு டிரம்ப் புத்தகத்தில் உள்ள தகவல்களில் துளியும் உண்மையில்லை என தெரிவித்து இருக்கிறார்.

    இதே போன்று ரஷியா தரப்பில் இருந்தும் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷிய அதிபர் புதினிடம் தொலைபேசியில் பேசவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு 2 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டது.
    • 2024-ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி 2024-ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் இரு அமெரிக்கர்களுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு 2 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டது.

    அந்த வரிசையில், வேதியியலுக்கான நோபல் பரிசு டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் ஆகியோருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கணக்கீட்டு புரத வடிவமைப்பு மற்றும் புரத அமைப்பு கணிப்பு ஆகியவற்றுக்காக இந்த ஆண்டு மூவருக்கு நோபல் விருது வழங்கப்படுகிறது.

    • மதிப்பெண்களுக்காக அவர்கள் தங்களின் இயற்கை உபாதையையும் அடக்கிக்கொள்ளும் அவலம் நிகழ்ந்துள்ளது
    • பாத்ரூம் போகாமல் வகுப்பறையிலேயே இருந்து குழந்தைகள் பாடத்தைக் கவனிக்கின்றனர்.

    அமெரிக்காவில் சேர்ந்த கணக்கு ஆசிரியை மாணவர்கள் கழிவறை செல்ல இடைவேளை எடுத்துக்கொள்ளாமல் இருக்க போனஸ் மதிப்பெண்கள் வழங்கி ஊக்குவித்த சம்பவம் கண்டனத்தைக் குவித்து வருகிறது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த இந்த கொடுமை குறித்து அங்கு பயின்று வந்த சிறுமியின் தாய் சமூக வளைத்ததில் பதிவிட்டதை அடுத்து இந்த விவகாரம் வைரலாகி வருகிறது.

    மதிப்பெண்களைத் தேடி ஓடும் ரேசாக இந்தியா உட்பட உலகம் முழுமைக்கும் கல்வியானது தரம் தாழ்ந்து கிடக்கிறது. அந்த வகையில் சிறுவர்கள் மதிப்பெண்களே முக்கியம் என்று மூளைச்சலவை செய்யப்பட்டதால் அந்தமதிப்பெண்களுக்காக அவர்கள் தங்களின் இயற்கை உபாதையையும் அடக்கிக்கொள்ளும் அவலம் நிகழ்ந்துள்ளது. 

     

    'எனது மகளின் கணக்கு ஆசிரியை ஒரு வினோதமான டாய்லட் பாலிசி வைத்திருக்கிறார். அதன்படி வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே பள்ளியில் குழந்தைகளை பாத்ரூம் போக அவர் அனுமதிக்கிறார், அதன்படி பாத்ரூம் போகாமல் வகுப்பறையிலேயே இருந்து பாடத்தைக் கவனிக்கும் குழந்தைகளுக்கு அவர்அகாடெமிக் பாயிண்ட்ஸ் எனப்படும் குழந்தைகள் படிக்கும் தரத்தை நிர்ணயிக்கும் மதிப்பெண்களை போனசாக வழங்குகிறார்' என்று தனது சமுக வலைத்தள பதிவில் சிறுமியின் தாய் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் இதுகுறித்து பிரின்சிபலுக்கு புகார் தெரிவித்து மெயில் அனுப்பியதற்கு தனது மகள் தன்னிடம் கோபித்துக்கொள்ளும் அளவுக்கு அவ்விஷயம் நார்மலைஸ் ஆக்கப்பட்டுள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

    பிரைவசி கருதி தனது மகளின் வயதையும் பள்ளி பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

    • நேருக்கு நேர் விவாதத்தில் டிரம்ப்பை திறம்பட சமாளித்ததது கமலாவின் தலைமைப் பண்பு மீது அனைவரையும் நம்பிக்கை கொள்ளச் செய்தது
    • லேட் நைட் ஊடக நேர்காணலில் பங்கேற்று ஜாலியாக பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்

    அமெரிக்காவுக்கான அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டுள்ளார். வயது மூப்பு காரணமாக அதிபர் ஜோ பைடன் தடுமாற்றத்தில் இருப்பது விமர்சிக்கப்பட்ட நிலையில் அவர் போட்டியிலிருந்து விலகி கமலாவை வேட்பாளராக அறிவித்தார்.

    இந்திய - ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கமலாவுக்கு அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி எதிர் வேட்பாளர் டிரம்பை விட ஆதரவு சற்று அதிகமாவே உள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகிறன. சியானா கல்லூரி மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் நடத்திய தேசிய கருத்துக்கணிப்பில் ஹாரிஸ் 49 சதவீதம் முதல் 46 சதவீதம் வரை ஆதரவு பெற்று டிரம்பை விட முன்னிலையில் உள்ளார்.

    சமீபத்தில் நடந்த நேருக்கு நேர் விவாதத்தில் டிரம்ப்பை திறம்பட சமாளித்ததது கமலாவின் தலைமைப் பண்பு மீது அனைவரையும் நம்பிக்கை கொள்ளச் செய்தது. தற்போது தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கமலா, லேட் நைட் ஊடக நேர்காணலில் பங்கேற்று ஜாலியாக பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து தொகுப்பாளர் ஸ்டெப்பான் கால்பெர்ட்டுடன் விவாதித்துள்ளார்.

    அந்த நிகழ்ச்சியில் போது மில்லர் ஹை லைப் என்ற பீர் பானம் கமலாவுக்கு வழங்கப்பட்டது. கடைசியாக பேஸ் பால் போட்டியின் பொது குடித்தது என கூறியவரே அந்த டின் கேன் பாட்டிலைக் கையில் எடுத்த கமலா லாவகாக உடைத்து சீர்ஸ் சொல்லி குடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்ததால் பிரேசிலில் எக்ஸ் தளம் மொத்தமாக தடை செய்யப்பட்டது.
    • அபாரதத் தொகையை தவறான வங்கிக்கணக்குக்கு எலான் மஸ்க் செலுத்தியதால் விவகாரம் இன்னும் சிக்கலானது

    பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள எக்ஸ் அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை அதிரடியாக நீக்கினார் எலான் மஸ்க். முன்னதாக அதிபர் தேர்தலின்போது முடக்கப்பட்ட எக்ஸ் தளங்கள் சட்டவிரோதமாக மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததாகவும் எக்ஸ் தளம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக அந்நாட்டில் நடந்த உச்சநீதிமன்ற விசாரணையில் பிரேசிலில் எக்ஸ் தளத்திற்கான பிரதிநிதியை நியமிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் இதற்கு எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்ததால் பிரேசிலில் எக்ஸ் தளம் மொத்தமாக தடை செய்யப்பட்டது.

     

    மேலும் இந்த தடையை நீக்க வேண்டுமானால், 5.2 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் அந்த அபாரதத் தொகையை தவறான வங்கிக்கணக்குக்கு எலான் மஸ்க் செலுத்தியதால் விவகாரம் இன்னும் சிக்கலானது.

    தவறாக அனுப்பப்பட்ட தொகையை மீண்டும் எலான் மஸ்க்குக்கே அனுப்பி வைக்கும்படி பிரேசில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த இடியாப்ப சிக்கல் தற்போது ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.

    இந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரஸ், X தளம் பிரேசிலில் மீண்டும் செயல்படத் தேவையான அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த 24 மணி நேரத்துக்குள் எக்ஸ் சேவைகளை பிரேசில் மீட்டெடுக்க அவர் உத்தரவிட்டுள்ளார். 

    • தேர்தல் நாளில் தாக்குதல் நடத்த நசீர் அகமத் திட்டமிட்டு இருந்தார்.
    • ஏ.கே.47 துப்பாக்கியை வாங்க ஆர்டர் செய்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் நாளின்போது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஆப்கானிஸ்தானை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தானை சேர்ந்த நசீர் அகமத் தவ்ஹெடி (வயது 27) என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவிற்கு வந்தார். ஓக்லஹோமா நகரில் வசித்து வந்த அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவருடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, அடுத்த மாதம் நடக்கும் தேர்தல் நாளில் தாக்குதல் நடத்த நசீர் அகமத் திட்டமிட்டு இருந்தார். ஏ.கே.47 துப்பாக்கியை வாங்க ஆர்டர் செய்துள்ளார். மேலும் மனைவி மற்றும் குழந்தையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப டிக்கெட்டுகளை வாங்கி உள்ளார் என்றனர்.

    • அதிவேக சூறாவளிக் காற்றுடன், தீவிர மழையும் பெய்யும்.
    • புளோரிடாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    அட்லாண்டிக் பெருங்கடலில் மெக்சிகோவின் யுகேட்டான் தீபகற்பத்தையொட்டிய பகுதிகளில் அதி தீவிர புயல் உருவானது.

    மில்டன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கரையை கடக்க உள்ளது. அதிவேக சூறாவளிக் காற்றுடன், தீவிர மழையும் பெய்யும்.

    அதிகபட்சமாக, மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். டாம்பா வளைகுடா பகுதியில் புயல் கரையைக் கடக்கும் போது 15 அடி உயரம் வரை கடல் அலைகள் எழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புயல் காரணமாக புளோரிடாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    டாம்பா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். புளோரிடா மாகாணத்தை கடந்த மாதம் 26-ந்தேதி ஹெலீன் புயல் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×