என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • வருங்கால வைப்புநிதியில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை எளிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
    • இனி கல்வி தேவைக்காக 10 முறையும், திருமண தேவைக்காக 5 முறையும் பணம் எடுத்துக் கொள்ளலாம்.

    புதுடெல்லி:

    தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் (இ.பி.எப்.ஓ.) முடிவு எடுக்கும் உயரிய அமைப்பான மத்திய அறங்காவலர்கள் வாரிய கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மத்திய தொழிலாளர்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார்.

    இதில், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி உறுப்பினர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில், வைப்புநிதியில் பகுதி அளவுக்கு பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை எளிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

    அத்தியாவசிய தேவைகள் (உடல்நலக்குறைவு, கல்வி, திருமணம்), வீட்டு தேவைகள், சிறப்பு சூழ்நிலை என 3 பிரிவாக விதிமுறைகள் வகைப்படுத்தப்பட்டன.

    தொழிலாளர் பங்களிப்பு, நிறுவனத்தின் பங்களிப்பு உள்பட வைப்புநிதியில் தகுதியான இருப்பில் 100 சதவீதம் வரை பணம் எடுத்துக்கொள்ளலாம்.

    கல்வி தேவைக்காக 3 முறைக்கு பதிலாக 10 முறையும், திருமண தேவைக்காக 3 முறைக்கு பதிலாக 5 முறையும் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

    பேரிடர், வேலையின்மை போன்ற சிறப்பு சூழ்நிலை பிரிவில் தேவைக்கான காரணத்தை குறிப்பிடத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேசமயம் உறுப்பினர்களின் எதிர்கால தேவைக்காக உறுப்பினர் கணக்கில் 25 சதவீத பங்களிப்பை குறைந்தபட்ச இருப்பாக எப்போதும் பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

    • இங்கிலாந்தை சேர்ந்த பாடகர் எட் ஷீரன் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.
    • இந்தாண்டு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் எட் ஷீரன் இசை நிகழ்ச்சி நடத்தினார்.

    உலகளவில் பிரபலமானவர் இங்கிலாந்தை சேர்ந்த பாடகர் மற்றும் இசையமைப்பாளரான எட் ஷீரன். இவர் உலகம் முழுவதும் பயணம் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்.

    அந்தவகையில் எட் ஷீரன்கடந்த வருடம் மார்ச் மாதம் மும்பையில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்தாண்டு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடத்தினார்.

    இந்நிலையில், எட் ஷீரன், இந்திய இசைக்கலைஞர்கள் தீ, ஹனுமன்கைண்ட் இணையும் தனியிசை பாடல் ஒன்றை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரித்திருக்கிறார்.

    இப்படி ஒரு பாடலை தயாரித்ததில் பெருமைகொள்கிறேன் என தனது எக்ஸ் பக்கத்தில் சந்தோஷ் நாராயணன் பதிவிட்டுள்ளார்.

    • சென்னை உயர்நீதிமன்றம் SIT அமைத்தது.
    • உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதால், SIT சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.

    தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, கூட்டல் நெரிசல் ஏற்பட்டடு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அஸ்ரா காக் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. இந்த குழு சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வந்தது.

    இந்த நிலையில் நேற்று உச்சநீதிமன்றம் கரூர் பெருந்துயர சம்பவம் தொடர்பான வழக்கை, சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. அத்துடன், சிபிஐக்கு வழக்கை மாற்ற உத்தரவிட்டதால், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு இடைக்கால தடைவிதித்தது.

    இதனால் சிறப்பு புலனாய்வுக்குழு இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் வாக்குமூலங்களை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இந்த ஆவணங்கள் சிபிஐ-யிடம் வழங்கப்படும்.

    • முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 378 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் செனுரன் முத்துசாமி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது .

    இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 378 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் செனுரன் முத்துசாமி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோர்ஜி சதம் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

    109 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணி 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் முத்துசாமி 5 விக்கெட்டும் ஹர்மர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தி தமிழ்நாடு வம்சாவளியை சேர்ந்த சேனுரான் முத்துசாமி அசத்தியுள்ளார்.

    • சாதி பெயர்களில் உள்ள 'ன்' எழுத்தை நீக்கி 'ர்' சேர்க்க வேண்டும்.
    • இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் சந்தித்து பேசினார். அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனைச் செல்வன், எஸ்.எஸ். பாலாஜி, ஜெ. முகம்மது ஷா நவாஸ், எம். பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்த சந்திப்பின்போது சாதி பெயர்களில் உள்ள 'ன்' எழுத்தை நீக்கி 'ர்' சேர்க்க வேண்டும் என முதலமைச்சரிடம் வி.சி.க. தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

    அத்துடன் தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு நன்றி கூறியதுடன் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

    • நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • பிக்பாஸ் நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள்.

    சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதில், நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது.

    15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், " தமிழ் சமூகத்திற்கு நன்மை பயக்கும் நீயா நானா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் விஜய் தொலைக்காட்சிக்கு பாராட்டுகளை தெரிவிக்கும் அதே வேலையில் தமிழ்ச் சமூகத்தின் கலாச்சாரத்தை பண்பாட்டை சீரழிக்கும் "பிக் பாஸ்" போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் அதன் லாப நோக்கம் நிச்சயம் நிறுத்திக் கொள்ளப்பட வேண்டும், விரைவில் பிக் பாஸ் நிகழ்ச்சி தடை செய்யப்படவில்லையென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் தளமும், விஜய் டிவி அலுவலகமும் கட்சியின் மகளிர் அணியினரால் முற்றுகையிடப்படும்" என்று தெரிவித்தார்.

    • திருட்டு மற்றும் ஏமாற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மிளகாய்ப்பொடி அபிஷேகம் செய்யலாம்.
    • பைரவருக்கு மிளகாய்ப்பொடியில் அபிஷேகம் செய்வதால் எதிர்மறை எண்ணங்கள் நீங்குவதால் இது சக்திவாய்ந்த அபிஷேகமாக பார்க்கப்படுகிறது.

    பைரவருக்கு பால், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம், நல்லெண்ணெய், மற்றும் பலவகையான பழச்சாறுகள் கொண்டு அபிஷேகம் செய்து பார்த்திருப்போம். ஆனால், கன்னிகைப்பேர் என்ற ஊரிலுள்ள சிவாநந்தீஸ்வரர் கோவில் பைரவருக்கு மிளகாய்ப்பொடியில் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    பைரவருக்கு எதற்காக மிளகாய்ப்பொடியில் அபிஷேகம் செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.

    பைரவருக்கு மிளகாய்ப்பொடியில் அபிஷேகம் செய்வதால் எதிர்மறை எண்ணங்கள் நீங்குவதாகவும் அதனால் இது சக்திவாய்ந்த அபிஷேகமாகவும் பார்க்கப்படுகிறது.

    யார் யாரெல்லாம் இந்த அபிஷேகம் செய்யலாம் :

    * பணம் மற்றும் தங்கம் முதலானவற்றை தொலைத்தவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், திருட்டு மற்றும் ஏமாற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அபிஷேகத்தை மேற்கொள்ளலாம்.

    * திருட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அபிஷேகத்தை செய்யும் போது, திருடியவர்கள் சட்டத்தின் முன் வந்து நிற்பார்கள் என்றும் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    * மிளகாய்ப் பொடியால் அபிஷேகம் செய்து பிரார்த்தனை நிறைவேறியவர்கள், பால் அபிஷேகம் செய்து பைரவரை குளிர்வித்து, பிரார்த்தனையை நிறைவு செய்ய வேண்டும்.

    சென்னை - பெரியபாளையம் சாலையில், 36 கி.மீ., துாரத்தில் உள்ளது, கன்னிகைப்பேர் என்ற கிராமம். இங்கிருந்து, 4 கி.மீ., தொலைவில்  சிவாநந்தீஸ்வரர் கோவில் உள்ளது . திருவள்ளூரில் இருந்தும் பெரியபாளையம் வழியாகவும் இக்கோவிலுக்கு செல்லலாம்.


    எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த நாளில் பைரவரை வழிபட வேண்டும்:

    * சிம்ம ராசிக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமையிலும், கடக ராசிக்காரர்கள் திங்கட் கிழமையிலும் மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய்க் கிழமையிலும் பைரவரை வழிபாடு செய்யலாம்.

    * மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் புதன்கிழமையிலும், தனுசு, மீனம் ராசிக்காரர்கள் வியாழக்கிழமையிலும், ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமையில் வழிபாடு செய்யலாம்.

    * மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் சனிக்கிழமையிலும் பைரவரை வழிபாடு செய்ய நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம்.

    • சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசும், டாஸ்மாக் நிறுவனமும் மேல்முறையீடு செய்தது.
    • அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியது.

    தமிழக அரசின் மது விற்பனை நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனையில் ரூ.1,000 கோடி அளவுக்கு டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதை கண்டுபிடித்து இருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

    அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு தடைவிதிக்க கோரி தமிழக அரசு சார்பிலும், 'டாஸ்மாக்' நிர்வாகம் சார்பிலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்தும், அமலாக்கத்துறையின் நடவடிக்கையை எதிர்த்தும், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசும், டாஸ்மாக் நிறுவனமும் மேல்முறையீடு செய்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடைவிதித்து உத்தரவிட்டனர். தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

    இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியது.

    * அமலாக்கத்துறை விசாரணை கூட்டாட்சிக்கு எதிரானது இல்லையா?

    * சந்தேகம் எழுந்தால் உடனடியாக அமலாக்கத்துறை தலையிடுமா?

    * சந்தேகம் இருந்தாலே அரசு அலுவலகத்தில் நுழைந்து ஆவணங்களை எடுத்து செல்வீர்களா?

    * மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு யார் கட்டுப்பாட்டில் உள்ளது.

    * மாநில அரசு உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என்று சந்தேகம் எழுந்தால் உடனடியாக அமலாக்கத்துறை தலையிடுமா? என்று கேள்வி எழுப்பியது.

    டாஸ்மாக் நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் குற்றம் நடந்துள்ளது. டாஸ்மாக்கில் நடந்த ஊழல் குறித்து மாநில போலீஸ் விசாரிக்கிறது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரிப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

    டாஸ்மாக் நிறுவனத்திற்குள் புகுந்து ஊழியர்களின் செல்போன்களை வலுக்கட்டாயமாக அமலாக்கத்துறையினர் பறித்துள்ளனர்.

    ஊழியர்களின் செல்போன் தரவுகளை அனுமதியின்றி பதிவிறக்கம் செய்தது தனிநபர் உரிமையை பறிக்கும் செயல்.

    அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என சுப்ரீம் கோர்ட் பலமுறை அறிவுறுத்தியும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டுப்படுவதில்லை என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

    இந்நிலையில், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

    • மாம்பழம் கொள்முதல் விலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியாலும், மாம்பழக்கூழ் மிகக் குறைவான அளவில் கொள்முதல் செய்யப்பட்டதாலும் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
    • மா விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் மாம்பழ விவசாயிகள் மற்றும் மாம்பழம் பதப்படுத்துவோர் நலன் கருதியும் மாம்பழ ஏற்றுமதி மற்றும் மதிப்புக்கூட்டுப் பொருட்களை உற்பத்தியை மேம்படுத்தும் வகையிலும் தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 10-10-2025 அன்று கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், 2025ஆம் ஆண்டின் மாம்பழப் பருவத்தில் மா விவசாயிகள் மற்றும் மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க ஒன்றிய அரசின் தலையீட்டைக் கோரி 24.06.2025 அன்று தாம் எழுதியிருந்த கடிதத்தினை சுட்டிக்காட்டியுள்ளார்.

    அதன் அடிப்படையில், பதப்படுத்தக்கூடிய மாம்பழ வகைகளை பயிரிட்ட விவசாயிகள், மாம்பழம் கொள்முதல் விலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியாலும், மாம்பழக்கூழ் மிகக் குறைவான அளவில் கொள்முதல் செய்யப்பட்டதாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர் என்றும் கடந்த ஆண்டு நடந்தது போலவே இந்தப் பருவத்திலும் மா விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதன் ஒரு முக்கிய பகுதியாக இக்கடிதத்தை தாம் எழுதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் தனது முந்தைய கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தபடி, இந்தியாவில் விற்கப்படும் மாம்பழ பானத்தில் உள்ள பழக்கூழின் அளவு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) விதிமுறைகளைப் பின்பற்றாமல், பேக்கேஜ் செய்யப்பட்ட மாம்பழச் சாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்றும், பானங்களில் மாம்பழக்கூழ் சேர்க்கப்படுவதில் FSSAI தரநிலைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கான வழிமுறைகளைப் பிறப்பிக்குமாறு இந்திய அரசைக் தாம் கேட்டுக்கொண்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

    மேலும் இதுகுறித்த தனது கடிதத்திற்கு இன்னும் நேர்மறையான பதில் ஏதும் கிடைக்கப்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே, மா விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், நம்நாட்டில் இந்த பானத்தை அதிகளவில் பயன்படுத்தும் நுகர்வோரின் நலனைக் கருத்தில் கொண்டும், மாம்பழங்களை அடிப்படையாகக் கொண்ட பான உற்பத்தித் தொழிலில் குறைந்தபட்சம் 18 முதல் 20 சதவீதம் வரை பழக்கூழ் உள்ளடக்கத்தை உறுதிசெய்ய அறிவுறுத்தப்படவேண்டும் என்று தாம் கேட்டுக்கொள்வதாகவும் அதனால் அப்பானத்தின் தரமும் மேம்படும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டின் மாம்பழ ஏற்றுமதிக் கொள்கையானது மாம்பழ வகை ஏற்றுமதியை மேம்படுத்துவதிலும், மாம்பழப் பொருட்களை பல்வகைப்படுத்துவதிலும் கவனம் செலுத்துவதாகவும், அதற்குத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலமும், ஏற்றுமதி தரநிலைகளுக்கு இணங்க செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் சாத்தியப்படும் என்றும் அத்தகைய நடவடிக்கைகள் மாம்பழங்களுக்கு அதிக மதிப்பைச் சேர்க்கும் அதே வேளையில், மாம்பழக்கூழ் தொழில்களை அதிகமாகச் சார்ந்திருப்பதையும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    ஆகவே, இந்த முயற்சிகளை மேலும் வலுப்படுத்திட இந்திய அரசின் வணிக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA), ஒருங்கிணைந்த பேக்கிங் செய்யும் வசதிகள், உள்நாட்டு கொள்கலன் கிடங்குகள், குளிரூட்டப்பட்ட துறைமுகங்கள், தரச்சோதனை ஆய்வகங்கள், வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்புகளை ஏற்பாடு செய்தல், வெளிநாட்டு வாங்குபவர்களை அடையாளம் காணுதல் மற்றும் ஏற்றுமதி தரநிலைகள் குறித்த திறன் மேம்பாட்டுத் திட்டங்களை நடத்துதல் போன்ற உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் தமிழ்நாட்டிற்குத் தேவையான ஆதரவை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இந்தப் பிரச்சினையில் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் இத்தருணத்தில் தலையிட்டு, மா விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், மேம்பட்ட ஏற்றுமதி மற்றும் மதிப்புக் கூட்டல் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்ய உதவிடுமாறும் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரீஸில்டா புகார் .
    • மாதம்பட்டி ரங்கராஜ் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருணம் செய்து ஏமாற்றி விட்டார். வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் தந்தை என ஜாய் கிரிசில்டா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தார். மேலும், சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் இடையிலான தொடர்பு குறித்த படங்களையும் பகிர்ந்திருந்தார்.

    இதனையடுத்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரீஸில்டா புகார் அளித்தார்.

    இந்நிலையில், ஜாய் கிரிசில்டா கொடுத்த புகாரில் நாளை (அக்டோபர் 15) மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா இருவரும் ஆஜராக மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

    • மத்திய பிரதேச மாநிலத்தில் இருமல் மருந்தை உட்கொண்ட 23 குழந்தைகள் உயிரிழந்தனர்.
    • ராஜஸ்தானிலும் இருமமல் மருந்து குடித்த குழந்தைகள் இறந்தனர்.

    மத்திய பிரதேச மாநிலத்தில் கோல்ட்ரிப் என்ற இருமல் மருந்தை உட்கொண்ட 23 குழந்தைகள் உயிரிழந்தனர். அதேபோல் ராஜஸ்தானிலும் இருமல் மருந்து குடித்த குழந்தைகள் இறந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த நிறுவனம் தயாரித்து வந்த கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பரிசோதனையில் கோல்ட்ரிப் இருமல் மருந்தில் டை எதிலீன் கிளைக்கால் என்ற ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து பல்வேறு நிறுவனங்களின் மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

    இதில் மத்திய பிரதேசத்தில் மேலும் 2 இருமல் மருந்துகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.

    இருமல் மருந்து குடித்து குழந்தைகள் இறப்பு தொடர்பாக உலக சுகாதார அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களின் தயாரிப்பான கோல்ட்ரிப், ரெஸ்பிப்ரெஷ் டி.ஆர், ரீலைப் ஆகிய 3 இருமல் மருந்துகள் பாதிக்கப்பட்ட மருந்துகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்த மருந்துகள் குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்துவதாகவும், கடுமையான, உயிருக்கு ஆபத்தான நோயை ஏற்படுத்தக்கூடியவை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

    மேலும் இந்த மருந்துகள் ஏதாவது நாட்டில் பயன்பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டால் உடனே புகாரளிக்குமாறு உலக சுகாதார அமைப்பு கேட்டு கொண்டு உள்ளது.

    முன்னதாக கலப்பட மருந்துகள் எதுவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் இந்தியா தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலர் மதிப்பில் கூகுள் ஏஐ மையம் அமைக்க உள்ளது.
    • கூகுள் நிறுவனம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ளது.

    விசாகப்பட்டினம்:

    உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்று கூகுள். இந்த நிறுவனம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ளது.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலர் மதிப்பில் கூகுள் ஏஐ மையம் அமைக்க உள்ளது என மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    இந்திய இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புக்கு கூகுளின் ஏஐ மையம் உதவும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவிற்கு வெளியே கூகுள் நிறுவனம் செய்யக்கூடிய மிகப்பெரிய முதலீடு இதுதான் என்று சொல்லப்படுகிறது.

    ×