என் மலர்
இந்தியா

வருங்கால வைப்புநிதியில் இருந்து இனி 100 சதவீதம் வரை பணம் எடுக்கலாம்
- வருங்கால வைப்புநிதியில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை எளிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
- இனி கல்வி தேவைக்காக 10 முறையும், திருமண தேவைக்காக 5 முறையும் பணம் எடுத்துக் கொள்ளலாம்.
புதுடெல்லி:
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் (இ.பி.எப்.ஓ.) முடிவு எடுக்கும் உயரிய அமைப்பான மத்திய அறங்காவலர்கள் வாரிய கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மத்திய தொழிலாளர்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார்.
இதில், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி உறுப்பினர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில், வைப்புநிதியில் பகுதி அளவுக்கு பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை எளிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அத்தியாவசிய தேவைகள் (உடல்நலக்குறைவு, கல்வி, திருமணம்), வீட்டு தேவைகள், சிறப்பு சூழ்நிலை என 3 பிரிவாக விதிமுறைகள் வகைப்படுத்தப்பட்டன.
தொழிலாளர் பங்களிப்பு, நிறுவனத்தின் பங்களிப்பு உள்பட வைப்புநிதியில் தகுதியான இருப்பில் 100 சதவீதம் வரை பணம் எடுத்துக்கொள்ளலாம்.
கல்வி தேவைக்காக 3 முறைக்கு பதிலாக 10 முறையும், திருமண தேவைக்காக 3 முறைக்கு பதிலாக 5 முறையும் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
பேரிடர், வேலையின்மை போன்ற சிறப்பு சூழ்நிலை பிரிவில் தேவைக்கான காரணத்தை குறிப்பிடத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் உறுப்பினர்களின் எதிர்கால தேவைக்காக உறுப்பினர் கணக்கில் 25 சதவீத பங்களிப்பை குறைந்தபட்ச இருப்பாக எப்போதும் பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.






