என் மலர்
தலைப்புச்செய்திகள்
- திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன.
- கௌதம் தின்னனுரி எழுதி இயக்கிய அதிரடி திரில்லர் படம் கிங்டம்.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
'கிங்டம்'
கௌதம் தின்னனுரி எழுதி இயக்கிய அதிரடி திரில்லர் படம் கிங்டம். இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
'லவ் மேரேஜ்'
அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான படம் 'லவ் மேரேஜ்'. இதில் நடிகை சுஷ்மிதா பட் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
'கெவி'
இப்படம் கொடைக்கானல் மலைப்பகுதியில், சாலை மற்றும் மருத்துவ வசதி இல்லாத ஒரு கிராமத்தில் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து, உண்மை சம்பவங்களின் பின்னணியில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். ஆதவன் மற்றும் ஷீலா ராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ள இப்படம் கடந்த 27ந் தேதி சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
'மாயக்கூத்து'
'மாயக்கூத்து' என்பது ஏ.ஆர்.ராகவேந்திரா எழுதி இயக்கிய படமாகும். நாகராஜன், ஐஸ்வர்யா, காயத்ரி மற்றும் டில்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
'தண்டர்போல்ட்ஸ்'
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் அடுத்ததாக வெளியான படம் 'தண்டர்போல்ட்ஸ்'. இது எம்.சி.யுவின் 36-வது படமாகும். பிரபல இயக்குனர் ஜேக் ஷ்ரேயர் இயக்கி உள்ளார். இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
'வசந்தி'
வசந்தி ரஹ்மான் சகோதரர்களால் எழுதி இயக்கப்பட்ட மலையாள படம் வசந்தி. இதில் வசந்தியாக ஸ்வாசிகா சிஜு வில்சன், ஸ்ரீல நல்லேடம், மது உமாாலயம், ஷபரிஷ் வர்மா, சிவாஜி குருவாயூர், வினோத் குமார், ஹரிலால் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
'கராத்தே கிட் லெஜண்ட்ஸ்'
இயக்குநர் ஜோனதன் எண்ட்விஸ்ட் இயக்கத்தில் ஜாக்கி சான், பென் வாங் உள்ளிடோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் கராத்தே கிட்: லெஜண்ட்ஸ் (karate kid: legends). இப்படத்திலும் சிறுவனுக்கு கராத்தே பயிற்றுவிக்கும் மாஸ்டராக ஜாக்கி ஜான் நடித்துள்ளார். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
'தி டோர்'
இயக்குனர் ஜெய்தேவ் இயக்கத்தில் பாவனா நடிப்பில் வெளியான படம் 'தி டோர்'. மிஸ்டரி திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ராமேஷ் ஆறுமுகம், பிரியா வெங்கட், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
- 2006 தேர்தலில் விஜயகாந்த் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டார்.
- தேர்தல் ஆணையம் எப்போதும் பொம்மையாக தான் செயல்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறது.
மதுரையில் நடைபெற்ற த.வெ.க. 2-வது மாநில மாநாடு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநாட்டில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குறித்து பேசியிருந்தார்.
இந்த நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
2006 தேர்தலில் விஜயகாந்த் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டார். அதே போல 2026 தேர்தலில் விஜய் தனித்து நின்றால் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார்.
தேர்தல் ஆணையம் எப்போதும் பொம்மையாக தான் செயல்படுகிறது. வாக்கு திருட்டு தொடர்பாக இந்தியா முழுக்க சீர்திருத்தம் நடைபெற வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுப்பது, ஓட்டு திருட்டு, கள்ள ஓட்டு எல்லாமே சரி செய்ய வேண்டும்.
தே.மு.தி.க.விற்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது.
கூட்டணி, விஜய் பற்றி கேள்வி கேட்டால் இனிமேல் பதில் சொல்ல மாட்டேன். மக்கள் பிரச்சனை குறித்து கேள்வி கேளுங்கள்.
மக்களுக்காக தான் அரசியல், மக்களுக்காக தான் ஆட்சி, மக்கள் நல்லா இருந்தா தான் நாடு நல்லா இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜாய் கிரிசில்டா தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ஆவார்.
- ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராமில், குழந்தையின் பெயரை ராஹா ரங்கராஜ் என அறிவித்தார்.
மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல சமையல்துறை நிபுணர் ஆவார். தமிழ் திரையுலகில் நடக்கும் பிரபலங்களின் திருமண நிகழ்ச்சிகளுக்கு கேட்டரிங் சேவையை செய்வது மாதம்பட்டி ரங்கராஜின் நிறுவனம்தான். தமிழ் திரைப்பட உலகில் வளர்ந்து வரும் நடிகராகவும் உள்ளார். அவரது முதல் படம் 'மெஹந்தி சர்க்கஸ்'.
மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
இதற்கிடையே, மாதம்பட்டி ரங்கராஜ் பேஷன் டிசைனரான ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. ஜாய் கிரிசில்டா தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ஆவார். மாதம்பட்டி ரங்கராஜ் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஜாய் கிரிசில்டா 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.
இதனிடைடேய, கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதியுடன் பங்கேற்றது பேசுபொருளானது. இதனை தொடர்ந்து, ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராமில், குழந்தையின் பெயரை ராஹா ரங்கராஜ் என அறிவித்தார்.
இதனால் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.
இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா புகார் கூறியுள்ளார்.
சென்னையில் கோவிலில் வைத்து தன்னை திருமணம் செய்து கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ், 7 மாத கர்ப்பமாக இருக்கும் தன்னை ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிசில்டா காவல் ஆணையரகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
- மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
- ஆற்று நீரில் மிதந்து வந்த மனுக்களை சேகரித்த போலீசார் அதனை ஆற்றில் வீசியவர்கள் யார்? என விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் முகாம்கள் நடத்தி மக்களிடம் மனுக்களை பெறும் வகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 15-ம் தேதி தொடங்கி வைத்தார். இம்முகாமில் தரப்படும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, மகளிர் உரிமைத் தொகை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஆவணங்களில் பெயர் திருத்தம், பட்டா, சிட்டா உள்ளிட்டவற்றுக்கான மனுக்களை உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மக்கள் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் மனுக்கள் மிதப்பதைக் கண்டு பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆற்று நீரில் மிதந்து வந்த மனுக்களை சேகரித்த போலீசார் அதனை ஆற்றில் வீசியவர்கள் யார்? என விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை அருகே கீழடி, கொந்தகை, நெல் முடிகரை, மடப்புரம் பகுதிகளில் நடந்த முகாம்களில் பெற்றப்பட்ட மனுக்கள் ஆற்றில் வீசப்பட்டுள்ளன. ஆற்றில் மிதக்கும் மனுக்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
- சூர்யாவின் கருப்பு, கார்த்தியின் சர்தார் 2 ஆகிய இரண்டு படங்களும் தீபாவளி ரிலீஸுக்கு குறி வைத்தன.
- ஷண்முக முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அதுல்யா டீசல் படத்தில் நடித்துள்ளனர்.
தீபாவளி, பொங்கல் என்றாலே சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ஏனெனில் அப்போது நிறைய திரைப்படங்கள் வெளியாகும். பெரிய நட்சத்திர நடிகர்களின் திரைப்படம் வெளியாகும். தீபாவளி அன்று வீட்டில் கறி சாப்பாடு சாப்பிட்டுவிட்டு பிடித்த நடிகர்களின் திரைப்படத்தை திரையரங்கில் பார்ப்பது தான் பல மக்களின் வழக்கமே.
ஆனால் கடந்த பல வருடங்களாகவே ரஜினி, விஜய், அஜித், கமல் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் தீபாவளி பொங்கல் நேரங்களில் வெளியாவது இல்லை. அதேப்போல் இந்த வருடமும் எந்தவித நட்சத்திர நடிகர்களின் திரைப்படமும் வெளியாகவில்லை.
சூர்யாவின் கருப்பு, கார்த்தியின் சர்தார் 2 ஆகிய இரண்டு படங்களும் தீபாவளி ரிலீஸுக்கு குறி வைத்தன. ஆனால் அந்த படங்களின் ஓடிடி உரிமைகள் இதுவரை விற்கப்படவில்லை. எனவே அந்த இரண்டு படங்களும் அடுத்த வருடம்தான் ரிலீஸ் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தீபாவளி அன்று உறுதியாக வெளியாகும் படங்களின் லிஸ்டை பார்ப்போம்.
பைசன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஷ்வரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கபடி விளையாட்டு மற்றும் வீரர்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமாகும்.
டீசல்
ஷண்முக முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அதுல்யா இப்படத்தில் நடித்துள்ளனர். படத்தின் வெளியான இரண்டு பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது. படத்தின் இசையை திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
LIK
பிரதீப் ரங்கநாதன் , கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.
ட்யூட்
கீர்த்திவாசன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் இசையை சாய் அபயங்கர் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில்தான் பிரதீப் ரங்கநாதனின் டியூட் மற்றும் எல்.ஐ.கே ஆகிய இரண்டு படங்களும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆனால் இதில் ஏதாவது ஒன்றே வெளியாகும் என பிரதீப் சமீபத்தில் கூறினார்.
எனவே பைசன், டீசல் ஆகிய இரண்டு படங்களும் உறுதியான நிலையில் பிரதிப் ரங்கநாதனின் எல்.ஐ.கே அல்லது ட்யூட் என இந்த தீபாவளிக்கு மூன்று படங்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- இந்தியாவில் பொருளாதார மற்றும் அரசியல் சூழல் சீராக உள்ளது.
- இந்தியாவில் ராணுவம், விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படுகிறது.
இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையே 15-வது உச்சி மாநாடு இன்று பிற்பகல் ஜப்பானில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். இன்று அதிகாலை அவரது விமானம் டோக்கியோ சென்று அடைந்தது. விமான நிலையத்தில் ஜப்பான் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் இந்தியவாழ் ஜப்பான் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இந்நிலையில் டோக்கியோவில் நடைபெறும் இந்தியா - ஜப்பான் பொருளாதார மன்றக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* இந்தியாவில் பொருளாதார மற்றும் அரசியல் சூழல் சீராக உள்ளது.
* உலகில் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் மாற உள்ளது.
* இந்தியாவின் பொருளாதார நட்பு நாடுகளில் ஜப்பான் முக்கிய இடத்தில் உள்ளது.
* இந்தியாவில் ராணுவம், விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படுகிறது.
* இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் எப்போதும் ஒரு முக்கிய பங்காளியாக இருந்து வருகிறது.
* மெட்ரோ ரெயில் உற்பத்தி, ஸ்டார்ட்அப் என ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் 40 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- பனை மரத்தில் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை நடத்திய அவர் ஆடு மாடுகளின் மாநாட்டையும் நடத்தினார்.
- மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு, மாடுகள் வளர்ப்பு, இயற்கை விவசாயம் உள்ளிட்டவை பற்றி எப்போதுமே அக்கறையோடு பேசி வருபவர் ஆவார்.
அந்த வகையில் பனை மரத்தில் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை நடத்திய அவர் ஆடு மாடுகளின் மாநாட்டையும் நடத்தினார்.
இந்த நிலையில் திருத்தணி அருகே உள்ள அருங்குளம் கூட்டு சாலையில் சீமான் நாளை காலை 10 மணிக்கு மரங்களுடன் பேசுகிறார். அங்குள்ள மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

'மரங்களோடு பேசுவோம், மக்களுக்காக பேசுவோம்' என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் சீமானுடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் திரளாக பங்கேற்கிறார்கள்.
இந்த மாநாட்டையொட்டி சீமான் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்று தோட்டத்தில் உள்ள மரங்களை முத்தமிட்டு மகிழ்ந்தார். அப்போது ஒரு மரத்தின் கிளையை பிடித்த படி என்ன... உனக்கு தண்ணி ஊற்றினார்களா? சாப்பாடு போட்டார்களா? என்று கேட்டு பேசுவார். அந்த வீடியோக்களையும் நாம் தமிழர் கட்சியினர் வெளியிட்டுள்ளனர்.
- கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதே நாளில் பிரதீப் ரங்கநாதனின் Lik திரைப்படமும் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பிரதீப் ரங்கநாதன் "இந்த இரண்டு திரைப்படத்தில் ஏதாவது ஒருத்திரைப்படமே தீபாவளி அன்று வெளியாகும். அது எதுவென பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இந்த தீபாவளி நம்ம தீபாவளி தான்" என கூறினார்.
தீபாவளி அன்று எந்த திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
- பீகாரில் மேற்கொள்ளப்படும் சிறப்பு வாக்காளர் திருத்தத்தால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
- நாளைய தினம் ஜெர்மனி, இங்கிலாந்து ஒரு வார கால பயணம் செல்கிறேன்.
சென்னை நீலாங்கரையில் தி.மு.க. எம்.பி. என்.ஆர்.இளங்கோ இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். திருமணத்தை நடத்தி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* கலைஞர் மீதும், தி.மு.க. மீதும், என் மீதும் பற்று கொண்டவர் என்.ஆர்.இளங்கோ.
* என்.ஆர்.இளங்கோ அரசு வழக்கறிஞராக பணியாற்ற வாய்ப்பு தந்தவர் கலைஞர்.
* தேர்தல் காலத்தில் வழக்கறிஞர் அணியை தயார் நிலையில் வைத்திருப்பார் என்.ஆர்.இளங்கோ.
* பீகாரில் மேற்கொள்ளப்படும் சிறப்பு வாக்காளர் திருத்தத்தால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
* வாக்குத்திருட்டு தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
* பீகார் போன்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டு விடக்கூடாது என அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
* நாளைய தினம் ஜெர்மனி, இங்கிலாந்து ஒரு வார கால பயணம் செல்கிறேன்.
* இதுவரை நான் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களால் தமிழ்நாட்டிற்கு 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
* ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தின் நோக்கம் குறித்து நாளை தெரிவிக்கிறேன்.
* ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படம் திறக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் விளையாட்டு துறை குறிப்பிடத்தக்க மாற்றத்தை அடைந்துள்ளது.
- இந்தியாவை விளையாட்டுத் திறனுக்கான உலகளாவிய மையமாக மாற்றுவதற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது.
தேசிய விளையாட்டு தினத்தையொட்டி வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தேசிய விளையாட்டு தின வாழ்த்துக்கள்! இந்த சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில், மேஜர் தியான் சந்த் ஜிக்கு அஞ்சலி செலுத்துவோம். அவரது சிறப்பு பல தலைமுறைகளை கடந்தும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் விளையாட்டு துறை குறிப்பிடத்தக்க மாற்றத்தை அடைந்துள்ளது.
இளம் திறமையாளர்களை வளர்க்கும் அடிமட்டத் திட்டங்கள் முதல் உலகத் தரம் வாய்ந்த வசதிகளை உருவாக்குவது வரை, நமது நாட்டில் ஒரு துடிப்பான விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்பைக் காண்கிறோம்.
விளையாட்டு வீரர்களை ஆதரிப்பதற்கும், உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும், இந்தியாவை விளையாட்டுத் திறனுக்கான உலகளாவிய மையமாக மாற்றுவதற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
- கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 62 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் செயல் திறன் சிறப்பாக இருப்பதாக கூறியிருந்தனர்.
- பிரதமர் மோடியின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக 58 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் செயல் திறன் மற்றும் பிரதமராக நரேந்திர மோடியின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து இந்தியா டுடே-சி வோட்டர் நிறுவனம் இணைந்து கருத்துக் கணிப்பை நடத்தி வருகின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 62 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் செயல் திறன் சிறப்பாக இருப்பதாக கூறியிருந்தனர். இந்நிலையில் தற்போது ஆகஸ்டு மாத கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளது.
ஜூலை 1-ந்தேதி முதல் ஆகஸ்டு 14-ந்தேதி வரை நாட்டில் உள்ள அனைத்து மக்களவை தொகுதிகளிலும் 54 ஆயிரத்து 788 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடியின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக 58 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
இது மோடியின் செல்வாக்கில் சிறிய சரிவு இருப்பதை காட்டினாலும், 11 ஆண்டுகள் பதவியில் இருந்த பிறகும் பிரதமர் மோடிக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து செல்வாக்கு இருப்பதையும், அவருக்கு மக்கள் மத்தியில் நீடித்த அங்கீகாரத்தை காட்டுவதாகவும் அமைந்துள்ளது.
இதை போல கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 34.2 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் 3-வது பதவி காலத்தில் அவரது செயல் திறன் இதுவரை சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளனர்.
அதே நேரம் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடியின் செயல் திறன் சிறப்பாக இருப்பதாக 36.1 சதவீதம் பேர் கூறியிருந்தனர். இது இந்த முறை மோடியின் செயல் திறன் சற்று சரிவை காட்டுகிறது.
கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் பிரதமர் மோடியின் செயல் திறன் சராசரி என்று 12.7 சதவீதம் பேரும், மோசம் என்று 12.6 சதவீதம் பேரும், மிகவும் மோசம் என்று 13.8 சதவீதம் பேரும் குறிப்பிட்டுள்ளனர்.
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் 62.1 சதவீதம் பேர் தெரிவித்து இருந்தனர்.
ஆனால் தற்போது ஆகஸ்டு மாத கருத்துக்கணிப்பில் இது 54.2 சதவீதமாக குறைந்துள்ளது.
- உடலை அடக்கம் செய்ய அருகருகே கல்லறை கட்ட இடத்தை முன்பதிவு செய்யும் பழக்கம் நீடித்து வருகிறது.
- கட்டப்பட்டுள்ள கல்லறை அருகே முன்பதிவு செய்யப்பட்ட பகுதி என பலகை வைத்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா நகர் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் இறப்பதற்கு முன்பாகவே இடத்தை முன்பதிவு செய்து வருகின்றனர்.
தாங்கள் இறந்த பிறகு தங்களது உடல்களை உறவினர்கள் எவ்வாறு அடக்கம் செய்வார்கள் என தெரியாது. எனவே மனைவி இறந்த பிறகு கணவரும், கணவர் இறந்த பிறகு மனைவியும் அவர்களது உடலை அடக்கம் செய்ய அருகருகே கல்லறை கட்ட இடத்தை முன்பதிவு செய்யும் பழக்கம் நீடித்து வருகிறது.
கட்டப்பட்டுள்ள கல்லறை அருகே முன்பதிவு செய்யப்பட்ட பகுதி என பலகை வைத்துள்ளனர்.
கணவன், மனைவி சிறு சிறு சண்டைகளுக்காகவே பிரிந்து செல்லும் கால நிலையில் இறந்த பிறகும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கல்லறை கட்ட இடங்களை முன்பதிவு செய்து வருவதாக தெரிவித்தனர்.






