என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • மொத்தத்தில் 7-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் 2 வெற்றி, 5 தோல்வி என 11 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் இருக்கிறது.
    • நாளையுடன் சென்னையில் நடைபெறும் லீக் சுற்று நிறைவடைகிறது.

    சென்னை:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது புரோ கபடி லீக் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 41-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, அரியானா ஸ்டீலர்சை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் தொடக்கம் முதலே அதிக்கம் செலுத்திய அரியானா, தலைவாஸ் அணியை ஒரு முறை 'ஆல்-அவுட்' செய்ததுடன் முதல் பாதியில் 18-12 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது.

    பிற்பாதியிலும் அரியானா வீரர்கள் மளமளவென புள்ளிகளை எடுத்தனர். குறிப்பாக சூப்பர் டேக்கிள்ஸ் யுக்தியில் அருமையாக செயல்பட்டு தலைவாஸ் அணியை தத்தளிக்க வைத்தனர். இந்த வகையில் மடக்கி பிடித்ததில் மட்டும் 13 புள்ளிகள் திரட்டினர்.

    முடிவில் அரியானா அணி 42-29 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை வீழ்த்தியது. அதிகப்பட்சமாக தலைவாஸ் அணியில் சாஹில் குலியா 10 புள்ளியும், அரியானா தரப்பில் சிவம் படரே 8 புள்ளியும் எடுத்தனர்.

    இதுவரை உள்ளுரில் நடந்த மூன்று ஆட்டத்திலும் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை சந்தித்து இருப்பது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.

    மொத்தத்தில் 7-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் 2 வெற்றி, 5 தோல்வி என 11 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் இருக்கிறது. அரியானா 5 வெற்றி, 2 தோல்வி என 26 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி 38-29 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது. டெல்லி கேப்டன் நவீன்குமார் 11 புள்ளி எடுத்து தங்கள் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

    இன்றைய லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன்-பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன. நாளையுடன் சென்னையில் நடைபெறும் லீக் சுற்று நிறைவடைகிறது.

    • இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் போட்டி இன்று தொடங்குகிறது.
    • பத்திரிகையாளர்களிடம் ஐபிஎல் குறித்து கேள்வி கேட்கக்கூடாது என ரோகித் சர்மா கேட்டுக்கொண்டார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று செஞ்சூரியனில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்பாக ரோகித் சர்மா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் ஐ.பி.எல். தொடர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் குறித்து கேள்விகளை எழுப்ப தயாராக இருந்தனர்.

    பத்திரிகையாளர்கள் சந்திப்பை தொடங்கியதும் ரோகித் சர்மா, ஐபிஎல் குறித்து கேள்வி எழுப்பக்கூடாது என்றார். இது பத்திரியாளர் சந்திப்பு தானே?... நாங்கள் கேள்விகள் கேட்க முடியும் என நிருபர்கள் தெரிவித்தனர். பிசிசிஐ லோகோவை சுட்டிக்காட்டு இது இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பு என அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    பின்னர், அடுத்த இரண்டு வருடத்திற்கு கிரிக்கெட் விளையாடுவீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. டி20 கிரிக்கெட் மற்றும் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இவ்வாறு கேள்வி எழுப்பினர்.

    அதற்கு எனக்கான, என்முன் இருக்கும் கிரிக்கெட்டில் நான் விளையாடுவேன் என்றார். அப்போதும் டி20 எதிர்காலம் குறித்து ரோகித் சர்மா பிடி கொடுக்காமல் பதில் அளித்தார்.

    சீனியர் வீரர்களான நீங்கள் மற்றும் விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் விளையாட விருப்பப்படுகிறீர்களா? என்று நேரடியாக கேள்விகளை தொடுத்தனர்.

    அதற்கு ரோகித் சர்மா, நாங்கள் அனைவரும் கிரிக்கெட் விளையாட விருப்பப்படுகிறோம். யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக விளையாட விரும்புவார்கள் என்றார்.

    அதன்பின், நீங்கள் அனைவரும் என்ன கேட்க வருகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் நிச்சயமாக ஒரு பதிலை பெறுவீர்கள் என்பதுடன் முற்றுப்புள்ளி வைத்தார்.

    • இத்தொடரில் நாள் முழுவதும் விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் செயல்பட வேண்டும்.
    • ஒருவேளை நாள் முழுவதும் விளையாடினால் அவரால் அனைத்து விதமான ஷாட்டுகளையும் எளிதாக அடிக்க முடியும்.

    தென் ஆப்பிரிக்கா- இந்தியா ஆகிய இரு அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் ரோகித் தலைமையில் விராட் கோலி போன்ற முதன்மை வீரர்களுடன் களமிறங்கும் இந்தியா தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக வென்று புதிய சரித்திரம் படைக்குமா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

    இந்நிலையில் 2023 உலகக் கோப்பையில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா அதே போல செயல்படாமல் இத்தொடரில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தகுந்தார் போல் விளையாடுவதற்கு தன்னுடைய அணுகுமுறையை மாற்ற வேண்டும் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முதலில் உங்களுடைய மன நிலையை டெஸ்ட் போட்டிக்குள் கொண்டு வருவதே முதல் சவாலாக இருக்கும். இதுவரை விளையாடிய ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் 10 ஓவர்களில் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அணிக்காக எந்தளவுக்கு ரன்கள் குவிக்க முடியுமோ அந்தளவுக்கு எடுக்க வேண்டும் என முடிவெடுத்து அட்டாக் செய்து அதிரடியாக விளையாடினார்.

    இருப்பினும் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தகுந்தார் போல் அவர் தம்முடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். குறிப்பாக இத்தொடரில் நாள் முழுவதும் விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் செயல்பட வேண்டும். ஒருவேளை நாள் முழுவதும் விளையாடினால் அவரால் அனைத்து விதமான ஷாட்டுகளையும் எளிதாக அடித்து 180 அல்லது 190 ரன்களை விளாசி அவுட்டாகாமல் வெளியே வர முடியும். அந்த வகையில் அவர் விளையாடினால் இந்தியா எளிதாக ஒரு நாளில் 300 ரன்கள் அடித்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும் என்று கூறினார்.

    இவ்வாறு சுனில் கவாஸ்கர் கூறினார்.

    • தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளது.
    • ரவீந்திர ஜடேஜா அல்லது அஷ்வின் ஆகிய இருவரில் ஒருவர் விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    மும்பை:

    தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. ஒருநாள் தொடரை 2-1 என இந்திய அணி கைப்பற்றியது.

    இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இந்திய முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் வெளியிட்டுள்ளார்.

    இதில் அவர் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மாவை தேர்வு செய்துள்ளார். அதற்கு அடுத்ததாக 3 முதல் 6 வரை சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

    இதையடுத்து ரவீந்திர ஜடேஜா அல்லது அஷ்வின் ஆகிய இருவரில் ஒருவர் விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரை கம்பீர் தேர்வு செய்துள்ளார்.

    கவுதம் கம்பீர் தேர்வு செய்துள்ள இந்தியாவின் பிளேயிங் லெவன்:-

    ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா / ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

    • ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
    • கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படுகிறது.

    மெல்போர்ன்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த் நகரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் பாக்சிங் டே என்று அழைக்கப்படும் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 5 மணிக்கு தொடங்குகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி 'பாக்சிங் டே' என்று அழைக்கப்படுகிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தேவாலயங்கள் முன் பெரிய பெட்டி (பாக்ஸ்) வைக்கப்பட்டிருக்கும்.

    ஆலயத்துக்கு வருபவர்கள் அதில் தங்களால் முடிந்த நன்கொடையை செலுத்துவார்கள். மறுநாள் (டிசம்பர் 26-ந்தேதி) பாக்சை பிரித்து அதில் உள்ள பணம், பொருட்களை ஏழை எளியோருக்கு தானமாக வழங்குவார்கள். பாக்சை திறக்கும் நாளை 'பாக்சிங் டே' என்று அழைக்கிறார்கள்.

    ஆண்டு முழுவதும் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குடும்பத்தினரை பார்க்க செல்லும் போது, அவர்களின் முதலாளிகள் கிறிஸ்துமஸ் பாக்சை பரிசாக வழங்கும் பழக்கம் இருந்தது. அதன் அடையாளமாகவும் இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

    ஆண்டுதோறும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி நடைபெறும். இந்த ஆண்டு மெல்போர்னில் நடக்கும் பாக்சிங் டே டெஸ்டில் பாகிஸ்தானுடன ஆஸ்திரேலியா மோதுகிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணி, கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்துக்கு பரிசு மற்றும் இனிப்பு வழங்கினர். அவர்களின் குழந்தைகளுக்கு இனிப்பு கொடுத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • தமிழ் தலைவாஸ் அணி 6 ஆட்டத்தில் 2 வெற்றி, 4 தோல்வியுடன் 11 புள்ளிகள் பெற்று 11-வது இடத்தில் உள்ளது.
    • அரியானா ஸ்டீலர்ஸ் அணி 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 21 புள்ளிகள் பெற்று உள்ளது.

    சென்னை:

    12 அணிகள் பங்கேற்று உள்ள 10-வது புரோ கபடி லீக் போட்டியில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத் தில் பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி மோதுகின் றன. இரவு 9 மணிக்கு போட்டியில் தமிழ் தலை வாஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    தமிழ் தலைவாஸ் அணி 6 ஆட்டத்தில் 2 வெற்றி, 4 தோல்வியுடன் 11 புள்ளிகள் பெற்று 11-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 3-வது வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது. கடந்த இரண்டு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் தோல்வி அடைந்தது. இதனால் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பாதைக்கு திரும்புமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அரியானா ஸ்டீலர்ஸ் அணி 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 21 புள்ளிகள் பெற்று உள்ளது.

    • இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கே.எல். ராகுல் செயல்படுவார் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறினார்.
    • தென் ஆப்பிரிக்கா இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

    இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டி20 தொடர் சமனில் முடிவடைந்த நிலையில், அதன்பின் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

    இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கே.எல். ராகுல் செயல்படுவார் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறினார்.

    இந்நிலையில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்தீவ் படேல் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பார்தீவ் படேல் கூறியதாவது:-

    இந்தியாவின் டெஸ்ட் போட்டி விக்கெட் கீப்பர், ரஞ்சி கோப்பை அல்லது முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ந்து கீப்பிங் செய்பவராக இருக்க வேண்டும்.

    என்று அவர் கூறினார்.

    • கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த போட்டி ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படுகிறது.
    • செஞ்சூரியன் மைதானத்தில் 3 டெஸ்டில் ஆடியுள்ள இந்திய அணி ஒன்றில் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த போட்டி 'பாக்சிங் டே' என்று அழைக்கப்படுகிறது. 'பாக்சிங் டே' என்றால் ஒருவருக்கொருவர் சண்டையிடும் நாள் என்று அர்த்தம் கிடையாது. இந்த பெயருக்கு சில சுவாரஸ்யமான வரலாறு உண்டு.

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, கனடா போன்ற மேலைநாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தேவாலயங்கள் முன் பெரிய பெட்டி (பாக்ஸ்) வைக்கப்பட்டிருக்கும். ஆலயத்துக்கு வருபவர்கள் அதில் தங்களால் முடிந்த நன்கொடையை செலுத்துவார்கள். மறுநாள் டிசம்பர் 26-ந்தேதி அன்று அந்த பாக்சை பிரித்து அதில் உள்ள பணம், பொருட்களை ஏழை எளியோருக்கு வழங்குவார்கள். இப்படியாக பாக்சை திறக்கும் நாளை 'பாக்சிங் டே' என்று அழைக்கிறார்கள்.

    தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்கள் கிறிஸ்துமஸ் சீசனில் குடும்பத்தினரை பார்க்க செல்லும் போது அவர்களது முதலாளிகள் சிறப்பு பரிசாக கிறிஸ்துமஸ் பாக்ஸ் வழங்கும் பழக்கம் இருந்தது. இதன் அடையாளமாகவும் இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

    இன்னொரு காரணமும் உண்டு. முந்தைய காலத்தில் காற்றால் இயக்கப்படும் கப்பல்களில் மேற்கொள்ளப்படும் பயணம் ஆபத்து இன்றி பாதுகாப்பாக அமைய வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பணம் அடங்கிய பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருக்கும். பயணம் நிறைவு பெற்றதும் அந்த பெட்டி பாதிரியாரிடம் ஒப்படைக்கப்படும். கிறிஸ்துமஸ் அன்று அது திறக்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்படும். இதுவும் 'பாக்சிங் டே' பெயருக்கு ஒரு அச்சாரமாக சொல்லப்படுகிறது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் நாளை (பிற்பகல் 1.30 மணி) தொடங்குகிறது. இதுவும் 'பாக்சிங் டே' என்றே அழைக்கப்படுகிறது.

    தென்ஆப்பிரிக்காவை பொறுத்தவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மோதலை தவிர்த்து மற்றபடி 'பாக்சிங் டே' அன்று தங்கள் நாட்டில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறது.

    'பாக்சிங் டே' போட்டி நடக்கும் செஞ்சூரியன் மைதானத்தில் 3 டெஸ்டில் ஆடியுள்ள இந்திய அணி ஒன்றில் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பதி ராயுடு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
    • ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி 25 முறை 200 ரன்னுக்கு எடுத்தது.

    ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. இதில் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இந்த தொடரில் கொல்கத்தா அணி வீரரான ரிங்கு சிங் இந்த தொடரில் தான் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். இந்த தொடரின் லீக் ஆட்டம் ஒன்றில் குஜராத் - கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியின் கடைசி ஓவரில் கொல்கத்தா அணிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். 

    அந்த போட்டியில் இருந்து ரிங்கு சிங் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

    இதேபோல கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்து ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்தார்.

    இந்த சீசனில் லக்னோ அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வந்த கேஎல் ராகுல் பெங்களூர் அணிக்கு எதிராக காயமடைந்தார். பீல்டிங்கின் போது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டத்தில் ராகுல் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த சீசனின் இறுதி ஆட்டத்துடன் ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பதி ராயுடு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    இந்த சீசனில் ரோகித் சர்மா மோசமான சாதனையை படைத்தார். ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனைக்கு ரோகித் சர்மா சொந்தக்காரரானார். அவர் மொத்தம் 16 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

    டக் அவுட்டில் மோசமான சாதனை படைத்தாலும் சிக்சர் மூலம் மிரட்டலான சாதனையை படைத்தார். ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஏ.பி.டிவில்லியர்ஸை பின்னுக்குத் தள்ளி ரோகித் சர்மா 2-வது இடம் பிடித்துள்ளார். ரோகித் 252 சிக்சருடன் 2-வது இடம் பிடித்துள்ளார். அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் 141 போட்டியில் 357 சிக்சருடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

     

    ஐ.பி.எல். தொடரில் 7,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். 233 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 46 அரைசதங்களுடன் மொத்தம் 7,036 ரன்கள் எடுத்துள்ளார்.

     

    ஐ.பி.எல் கிரிக்கெட்டில் அவர் தனது ஏழாவது சதத்தை பதிவு செய்தார். ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் ஏழு சதங்கள் அடித்தது கிடையாது.

    மேலும் 236 ஆட்டங்களில் ஆடிய டோனி 5004 ரன்கள் குவித்துள்ளார். இந்த மைல்கல்லை கடந்த 7-வது வீரர் டோனி ஆவார். ஏற்கனவே விராட் கோலி, ஷிகர் தவான், டேவிட் வார்னர், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, டிவில்லியர்ஸ் ஆகியோர் ஐ.பி.எல்.-ல் 5 ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளனர்.


    இந்த சீசனில் லக்னோ மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் விராட் கோலி, நவீன் உல் ஹக், கம்பீர் ஆகியோர் வார்த்தை மோதலில் ஈடுபட்ட சம்பவத்தை யாரும் மருந்து விட முடியாது. இந்த மோதலினால் கோலி- கம்பீர் ஆகியோருக்கு 100% அபராதம் விதிக்கப்பட்டது.


    ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி 25 முறை 200 ரன்னுக்கு எடுத்தது. அதிக முறை 200-க்கு மேல் எடுத்த அணி சென்னை தான். இந்த வகையில் 2-வது இடத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் (24 முறை), 3-வது இடத்தில் பஞ்சாப் கிங்சும் (17 முறை) உள்ளது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் 10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணி என்ற வரலாற்று சாதனையைப் சென்னை சூப்பர் கிங்ஸ் படைத்தது. சென்னைக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணி 6 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த குஜராத் அணிக்கு ரூ.13 கோடி கிடைத்தது. 3-வது இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ், 4-வது இடத்தை பிடித்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு முறையாக ரூ.7 கோடி, ரூ.6.5 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.


    இந்த தொடர் முழுவதிலும் சென்னை அணி எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அங்கு சென்னை அணிக்கே அதிகமான ஆதரவு கிடைத்தது. ஏனென்றால் இந்த தொடருடன் டோனி கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக வதந்தி பரவியது. இதனால் அவரை கடைசி போட்டியில் பார்த்து விட வேண்டுமென்றே அனைவரும் சென்றதாக ரசிகர்கள் தெரிவித்திருந்தனர்.


    இந்த சீசனில் இறுதிப்போட்டி நடக்கும் மைதானத்தில் ராட்சத திரையில் 'ரன்னர் அப் சென்னை சூப்பர் கிங்ஸ்' என்று எழுதியிருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை ஐபிஎல் போட்டிகள் சொல்லி வைத்து ஆடுவது போல என்று நினைக்கும் ரசிகர்களுக்கு, உண்மையிலேயே அப்படிதான் நடக்கிறதோ என்பது போல இருந்தது இந்த புகைப்படம்.


    போட்டி டாஸ் கூட போடாத நிலையில் ராட்சத திரையில் இப்படி வந்தது சிஎஸ்கே ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் திரை சோதனை, வழக்கமான பயிற்சியாக இருந்திருக்கலாம் என்று சிலர் கூறியுள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இதேபோன்ற சோதனை நடத்தப்பட்டுள்ளது எனவும் கூறினர். 

    • லோகேஷ் ராகுல், வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக இருக்கிறார்.
    • ராகுல் கீப்பராக இருக்கும் போது, கூடுதலாக ஒரு பேஸ்ட்மேனை சேர்க்க வாய்ப்பு கிடைக்கும்.

    செஞ்சூரியனில் நாளை தொடங்கும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பணிக்கு லோகேஷ் ராகுலை பயன்படுத்த அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மற்றொரு விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத்தின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. இஷான்கிஷன், மனதளவில் சோர்ந்து விட்டதாக கூறி இந்த தொடரில் இருந்து விலகி விடடார்.

    லோகேஷ் ராகுல், வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக இருக்கிறார். ஆனால் டெஸ்டில் விக்கெட் கீப்பிங் பணி என்பது மிகவும் கடினம். அது குறித்து அவரிடம் ஆலோசித்து இருப்பதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

    மேலும் டிராவிட் கூறுகையில், 'டெஸ்டில் விக்கெட் கீப்பிங் பணியை சவாலான ஒன்றாக பார்க்கிறேன். இதுகுறித்து ராகுலிடம் பேசிய போது மிகவும் நம்பிக்கையுடன் காணப்பட்டார். அந்த முயற்சிக்கு ஆர்வம் காட்டினார். ஆனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும்பாலும் விக்கெட் கீப்பிங் செய்ததில்லை என்பது தெரியும்.

    50 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக கீப்பிங் பணியை கவனிக்கிறார். இருப்பினும் கடந்த 5-6 மாதங்களாக விக்கெட் கீப்பராக நன்றாக செயல்படுகிறார். ராகுல் கீப்பராக இருக்கும் போது, கூடுதலாக ஒரு பேஸ்ட்மேனை சேர்க்க வாய்ப்பு கிடைக்கும்' என்றார்.

    • இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களம் இறங்கும்.
    • மிடில் ஆர்டர் வரிசையில் ஷ்ரேயாஸ் அய்யர், கேஎல் ராகுல் களம் இறங்குவார்கள்

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் நாளை தொடங்குகிறது.

    கிறிஸ்துமஸ் விழாவிற்கு அடுத்த நாள் தொடங்கும் டெஸ்ட் "பாக்சிங் டே" டெஸ்ட் என அழைக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாடிய கையோடு ஏராளமான ரசிகர்கள் போட்டியை பார்க்க வருவார்கள். இந்த போட்டிக்கான ஆடும் லெவன் இவ்வாறாகத்தான் இருக்கும் என சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார்.

    கவாஸ்கர் கணித்துள்ள இந்திய ஆடும் லெவன் அணி:-

    ரோகித் சர்மா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கேஎல் ராகுல், ஜடேஜா, அஸ்வின், முகேஷ் குமார், பும்ரா, முகமது சிராஜ்.

    ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். சுப்மன் கில் 3-வது வீரரராகவும், விராட் கோலி 4-வது வீரராகவும் களம் இறங்க வாய்ப்புள்ளது.

    ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் மிடில் ஆடவர் வரிசையில் களம் இறங்குவார்கள். இருவரும் சிறந்த பேட்ஸ்மேன்கள். இந்த நேர சூழ்நிலையை பொறுத்து 5-வது வீரர் யார் என்பது முடிவு செய்ய வாய்ப்புள்ளது.

    இந்தத் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகியுள்ளார்.

     நாளை செஞ்சூரியனில் முதல் டெஸ்ட் தொடங்கும் நிலையில், 2-வது டெஸ்ட் ஜனவரி 3-ந்தேதி கேப் டவுனில் தொடங்குகிறது.

    • கடந்த ஜூன் மாதம் முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தற்போது அவர் குணம் அடைந்துள்ளார்.
    • தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதும் போட்டி அட்டவணை இறுதி செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 22-ந்தேதி தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப் டன் டோனி இந்த சீசனிலும் விளையாடுகிறார்.

    கடந்த போட்டித் தொட ரின்போது அவரிடம் ஓய்வு பற்றி கேட்டபோது, ரசிகர் களுக்காக மேலும் ஒரு சீசன் விளையாட முயற்சி செய் வேன் என்று கூறினார். அதன்படி டோனி ஐ.பி.எல். போட்டியில் விளையாட ஆயத்தமாகி வருகிறார்.

    அவர் கடந்த ஜூன் மாதம் முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தற்போது அவர் குணம் அடைந்துள்ளார்.

    இந்த நிலையில் டோனி 10 நாளில் பயிற்சியை தொடங்குவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    டோனி தற்போது நன்றாக இருக்கிறார். அவர் உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இன்னும் 10 நாட்களில் டோனி வலைப்பயிற்சியை தொடங்குவார். மார்ச் முதல் வாரத்தில் எங்களது பயிற்சி முகாமை நடத்த திட்டமிட்டுள்ளோம். ஐ.பி.எல். சீசன் மார்ச் 22-ந்தேதி தொடங்குவதால் அந்த மாதம் முதல் வாரத்தில் சென்னையில் முதல் முகாமை நடத்துவோம்.

    அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடப்பதை முன்னிட்டு ஐ.பி.எல். தொடரின் பாதி ஆட்டங்கள் வேறு நாட்டுக்கு மாற்றம் செய்யப்படமாட்டாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதும் போட்டி அட்டவணை இறுதி செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

    போட்டி அட்டவணையை வேறு இடத்துக்கு மாற்றுவது பற்றி அவர்கள் எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்தியாவில் ஐ.பி.எல். விளையாட தயாராக இருக்க வேண்டும் என்று எங்களிடம் தெரிவித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×