என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டெஸ்டுக்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ராகுலை பயன்படுத்த திட்டம்
- லோகேஷ் ராகுல், வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக இருக்கிறார்.
- ராகுல் கீப்பராக இருக்கும் போது, கூடுதலாக ஒரு பேஸ்ட்மேனை சேர்க்க வாய்ப்பு கிடைக்கும்.
செஞ்சூரியனில் நாளை தொடங்கும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பணிக்கு லோகேஷ் ராகுலை பயன்படுத்த அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மற்றொரு விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத்தின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. இஷான்கிஷன், மனதளவில் சோர்ந்து விட்டதாக கூறி இந்த தொடரில் இருந்து விலகி விடடார்.
லோகேஷ் ராகுல், வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக இருக்கிறார். ஆனால் டெஸ்டில் விக்கெட் கீப்பிங் பணி என்பது மிகவும் கடினம். அது குறித்து அவரிடம் ஆலோசித்து இருப்பதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
மேலும் டிராவிட் கூறுகையில், 'டெஸ்டில் விக்கெட் கீப்பிங் பணியை சவாலான ஒன்றாக பார்க்கிறேன். இதுகுறித்து ராகுலிடம் பேசிய போது மிகவும் நம்பிக்கையுடன் காணப்பட்டார். அந்த முயற்சிக்கு ஆர்வம் காட்டினார். ஆனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும்பாலும் விக்கெட் கீப்பிங் செய்ததில்லை என்பது தெரியும்.
50 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக கீப்பிங் பணியை கவனிக்கிறார். இருப்பினும் கடந்த 5-6 மாதங்களாக விக்கெட் கீப்பராக நன்றாக செயல்படுகிறார். ராகுல் கீப்பராக இருக்கும் போது, கூடுதலாக ஒரு பேஸ்ட்மேனை சேர்க்க வாய்ப்பு கிடைக்கும்' என்றார்.






