என் மலர்
விளையாட்டு
- சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் மோசமாக விளையாடியது.
- கவாஸ்கர் பாகிஸ்தான் அணியை விமர்சனம் செய்திருந்தார்.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் இந்த தொடரை நடத்துகிறது. "ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்தன.
பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக ஆறு விக்கெட் வித்தியாசத்திலும், நியூசிலாந்துக்கு எதிராக 60 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்தது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் ஒரு போட்டியில் கூட வெற்றிபெற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியது.
மோசமான தோல்வியால் பாகிஸ்தான் அணி கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர், இந்தியா "பி" அணி அல்லது இந்தியா "சி" அணி கூட தற்போதைய பாாகிஸ்தான் அணியை வீழ்த்திவிடும் என்பது போல் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவரது கருத்துக்கு ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், பாகிஸ்தான் அணி முன்னாள் பயிற்சியாளருமான ஜேசன் கில்லஸ்பி கண்டனம் தெரிவித்தள்ளார்.
இது தொடர்பாக கில்லஸ்பி கூறுகையில் "நான் கவாஸ்கரின் வார்த்தை ஜாலங்களை ஏற்கவில்லை. சுனில் கவாஸ்கர் இந்தியா "பி" அணி அல்லது இந்தியா "சி" அணி கூட தற்போதைய பாாகிஸ்தான் அணியை வீழ்த்திவிடும் எனக் கூறியதை நான் பார்த்தேன். இது முட்டாள் தனமானது. முற்றிலும் முட்டாள்தனமானது" என்றார்.
- முதல் 10 ஓவருக்குப் பிறகு பவர்பிளே கோட்டிற்கு வெளியே 4 பீல்டர்கள் நிற்க வேண்டும் என்பது கொடூரமான விதி.
- பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க நினைக்கும்போது, ரிவர்ஸ்-ஸ்வீப்ஸ் மூலம் பவுண்டரி அடித்து விடுகிறார்கள்.
டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று கிரிக்கெட் வடிவில் விளையாடுவதற்குன ஒருநாள் கிரிக்கெட் வடிவம் மோசமானது என மொயீன் அலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மொயீன் அலி கூறியதாவது:-
உலகக் கோப்பைகள், சாம்பியன்ஸ் டிராபி ஆகிவற்றை தவிர்த்து ஒருநாள் கிரிக்கெட் வடிவம் ஏறக்குறைய செத்துவிட்டது. இது விளையாடுவதற்கான மோசமான வடிவம். இதற்கு ஏராளமான காரணம் இருப்பதாக நினைக்கிறேன்.
ஒருநாள் போட்டி வடிவத்திற்கான விதி பயங்கரமானதாக உள்ளது. முதல் பவர்பிளேய்க்குப் பிறகு 4 வீரர்கள்தான் பவர்பிளே கோட்டிற்கு வெளியே நிற்க வேண்டும். விக்கெட் எடுப்பதற்கும், எந்தவிதமான நெருக்கடிகை ஏற்படுத்துவதற்கும் இது மிகவும் பயங்கரமான விதி. இதனால் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் 60, 70 சராசரி வைத்துள்ளனர்.
தற்போது 11 முதல் 40 ஓவரை வரை நான்கு பீல்டர்கள் மட்டுமே பவர்பிளே கோட்டிற்கு வெளியே இருப்பதால், நீங்கள் ஒரு பேட்ஸ்மேனுக்கு பந்து வீசும்போது அவருக்கு சற்று நெருக்கடி கொடுக்கும்போது, அவர் ஜஸ்ட் ரிவர்ஸ்-ஸ்வீப்ஸ் செய்கிறார். இதனால் ஒரு ரன் மட்டுமல்ல நான்கு ரன்கள் கிடைக்கிறது. இது பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க சிறந்த ஆப்சனாக உள்ளது.
இவ்வாறு மொயீன் அலி தெரிவித்தார்.
தற்போது இரண்டு பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ரிவர்ஸ் ஸ்விங் என்பது இல்லாமல் போய் விட்டது என முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
- விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட்டை பார்ப்பது அபத்தமானது.
- அணிக்கு அவரிடம் இருந்து என்ன தேவையோ? அதை சரியாக செய்து வருகிறார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்தியாவின் தலைசிறந்த வீரரான விராட் கோலி ஆர்.சி.பி. அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2008-ஆம் ஆண்டில் இருந்து அந்த அணிக்கு அற்புதமான பங்களிப்பை கொடுத்து வருகிறார். கேப்டனாக அந்த அணிக்காக 140 போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தம் 252 போட்டிகளில் விளையாடி 8004 ரன்கள் அடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவராக உள்ளார். அவரது ஸ்கோரில் 8 சதம், 55 அரைசதங்கள் அடங்கும்.
என்றாலும் ஆர்சிபி அணிக்காக அவரால் சாம்பியன்ஸ் கோப்பையை வாங்கிக் கொடுக்க முடியவில்லை. 2009, 2011 மற்றும் 2016 ஆகிய மூன்று முறை 2-வது இடம் பிடித்தது. இந்த நிலையில்தான் ஆர்சிபி சாம்பியன் பட்டம் வென்றால், அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த முடிவாக இருக்கும் என ஏடி பி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாவது:-
விராட் கோலி அவருடைய வசதியான இடத்தில் இருந்து வெளியே வந்து புதிய ஷாட்களை முயற்சி செய்து கொண்டிருப்பது, அவருடைய ஆட்டத்தில் மாறுபட்ட அம்சங்களை வெளிப்படுத்துவதை பார்க்க சிறப்பானதாக உள்ளது. இதை செய்வதற்கான திறன் அவரிடம் ஏற்கனவே உள்ளது.
ஆர்சிபி அணியோடு சாம்பியன் பட்டம் வெல்வது, ஏற்கனவே அவருடைய அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கைக்கு சரியான முடிவாக (perfect finishing touch) இருக்கும்.
விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட்டை பார்ப்பது அபத்தமானது. அணிக்கு அவரிடம் இருந்து என்ன தேவையோ? அதை சரியாக செய்து வருகிறார். இது அனைத்தும் சூழ்நிலையை பொறுத்தது. மறுமுனையில் வேறு ஒருவர் அவருக்கு நம்பிக்கை கொடுக்கும்போது, அதிக சுதந்திரத்துடன் பரிசோதனை மேற்கொண்டு விளையாடுவதை பார்க்கலாம். அவ்வாறு இல்லாதபோது அவர் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். தேவை என வரும் நிலைத்து நின்று விளையாடுவார்.
இவ்வாறு ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
- தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கிளாசன் அடித்த பந்தை டைவ் அடித்து கேட்ச் பிடித்தபோது தோள்பட்டையில் காயம்.
- காயம் தொடர்பாக ஸ்கேன் மற்றும் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளைமறுதினம் (மார்ச் 9-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து- இந்தியா பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
அரையிறுதி போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிராக நியூசிலாந்து விளையாடும்போது, தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் கிளாசன் அடித்த பந்தை நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி டைவ் அடித்து கேட்ச் பிடிக்கும் அவரது வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
இந்த போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கு ஐந்து நாட்கள் இருப்பதால் காயம் சரியாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் காயத்தால் மேட் ஹென்றி இந்தியாவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடுவது சந்தேகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் அவரை விளையாட வைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக நியூசிலாந்து அணியின் தலைமை பயற்சியாளர் கேரி ஸ்டீட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கேரி ஸ்டீட் கூறியதாவது:-
மேட் ஹென்றிக்கு ஸ்கேன் மற்றும் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் வழங்க நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
தற்போதைய நிலையில் அவர் இடம் பெறுவது சிறிது தெரியாத நிலையில்தான் உள்ளது. அவர் கீழே விழுந்ததில் இருந்து தோள்பட்டையில் அவருக்கு வலி இருந்தது தெளிவாக தெரிந்தது. அவர் போட்டிக்கு தயாராகிவிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு கேரி ஸ்டீட் தெரிவித்துள்ளார்.
லீக் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து தோல்வியடைந்தாலும், மேட் ஹென்றி 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார். இந்தியாவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் ஹென்றி விளையாடவில்லை என்றால் அது நியூசிலாந்துக்கு பின்னடைவாக அமையும்.
- நியூசிலாந்து, ஆஸ்திரேலியா தொடர்களை இழந்த பிறகு ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
- அடுத்த இரண்டு மூன்று வருடங்களுக்கு நிலையான கேப்டனை பிசிசிஐ விரும்புவதாக தகவல்.
தொடக்க வீரரான ரோகித் சர்மா மூன்று வடிவிலான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றதும், டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கு கேப்டனாக இருந்து வருகிறார். ரோகித் சர்மாவுக்கு தற்போது 37 வயது ஆகிறது. வருகிற ஏப்ரல் மாதம் வந்தால் 38 வயது பிறக்கும்.
கடந்த வருடம் இறுதியில் நியூசிலாந்து அணி இந்தியா வந்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரை இந்தியா இதுவரை இல்லாத வகையில் மிகவும் மோசமான வகையில் 0-3 என இழந்தது.
அதன்பின் ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 1-3 என இந்தியா தொடரை இழந்தது. இதனால் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த இரண்ட தொடரிலும் ரோகித் சர்மா மோசமாக விளையாடினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி டெஸ்டில் தானாகவே ஆடும் லெவனில் இருந்து வெளியேறினார். இதனால் ரோகித் சர்மாவின் ஃபார்ம் மற்றும் கேப்டன் பதவி குறித்து விமர்சனம் எழுந்தது.
ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் பிசிசிஐ, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கம்பீர் உடன் இந்தியாவின் எதிர்கால திட்டம் குறித்து ஆலோசனை நடத்தியது.
அப்போது 2027 உலகக் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றிற்கான திட்டம் குறித்து ஆலோசனை நடத்தியபோது அடுத்த இரண்டு மூன்று வருடத்திற்கு நிலையான கேப்டனுடன் செல்ல வேண்டிய அவசியம். இதனால் ரோகித் சர்மாவுடன் செல்ல முடியாது. இதனால் புதிய கேப்டனை தயார் செய்ய வேண்டும் என பிசிசிஐ முடிவு எடுத்ததாக தகவல் வெளியானது.
மேலும் ரோகித் சர்மாவிடம் உங்களுடைய எதிர்காலம் திட்டம் குறித்து முடிவு எடுக்கக் கூறியதாகவும் கேட்டுக்கொண்டதாக தகவல வெளியானது. ரோகித் சர்மாவும் கேப்டன் பதவியில் இருந்து விலக தயார் என தெரிவித்தாகவும் தகவல் வெளியானது.
இதனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில், பிசிசிஐ அவர் மீது நம்பிக்கை வைத்து கேப்டனாக நியமித்தது. சுப்மன் கில்லை துணைக் கேப்டனாக நியமித்தது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின் ரோகித் சர்மா ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால் ரோகித் சர்மாவின் தனிப்பட்ட ஃபார்ம் கவலை அளிப்பதாக இருந்தாலும் கேப்டன் பொறுப்பில் அற்புதமாக செயல்பட்டார். இவரது தலைமையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளைமறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை இந்தியா எதிர்கொள்கிறது.
ஒருநாள், டி20, டெஸ்ட் சாம்பியன்ஷிப், சாம்பியன்ஸ் டிராபி ஆகிய நான்கு ஐசிசி தொடர்களிலும் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

இந்த நிலையில்தான் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய ஒருவேளை சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால், ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும்.
அவர் தற்போது ஓய்வு பெறும் முடிவில் இல்லை. இன்னும் சில காலம் விளையாட விரும்புகிறார் எனக் கூறப்படுகிறது. ஆகவே, பிசிசிஐ அவரை ஒரு வீரரான விளையாட அனுமதித்தாலும் கூட, அடுத்த இரண்டு மூன்று வருடத்திற்கான திட்டத்தில் கேப்டனாக நீடிக்க பிசிசிஐ விரும்புவா? எனத் தெரியவில்லை.
இதனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றினாலும் இந்திய அணியின் எதிர்கால கேப்டன் திட்டத்தில் ரோகித் சர்மா இருப்பாரா? என்பது சந்தேகம்தான். இதனால் அவருடைய கேப்டன் பதவிக்கு ஆபத்து நீடிக்கத்தான் செய்கிறது.
எதுவாக இருந்தாலும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் முடிந்த பின் பிசிசிஐ முடிவு எடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியே வந்தபின்னர்தான் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி குறித்த உறுதியான நிலை தெரியவரும்.
இதற்கிடையே பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் ஏ பிளஸ் பிரிவில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா இடம் பிடிப்பார்களா? என்ற கேள்வியும் எழுகிறது. ஏனென்றால் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடும் வீரர்கள் மட்டுமே ஏ பிளஸ் பிரிவில் இடம் பிடிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் இம்மாதம் தொடங்குகிறது.
- ஐ.பி.எல். தொடரில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்க உள்ளன.
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்க இருக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் அதற்கான பயிற்சியை தொடங்கி வருகின்றன. கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2-வது இடம் பிடித்தது.
இந்த நிலையில் ஐதராபாத்தில் நடைபெறும் சன்ரைசர்ஸ் அணியின் ஹோம் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் ஒருவர் 2 டிக்கெட்டுகளை வாங்கும் ரபோது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஜெர்சி ஒன்று இலவசமாக வழங்கப்படும் என்று அந்த அணி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான வலைதள முகவரியையும் அந்த அணி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
- லீக் போட்டியின் போது இந்தியாவுக்கு எதிராக நாங்கள் கடும் நெருக்கடியை கொடுத்தோம்.
- ஒரே அணியாக இணைந்து எதிரணியின் மீது நெருக்கடி செலுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய திட்டம்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் வருகிற 9-ந் தேதி மோதுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்த தொடர் முழுவதும் நாங்கள் நல்ல அணிகளால் கடும் சவால்களை எதிர்கொண்டோம். இந்தியாவுக்கு எதிராக ஏற்கனவே விளையாடி நல்ல அனுபவத்தை பெற்றிருக்கிறோம். மீண்டும் அவர்களை சந்திப்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடியுள்ளது. அதனால் பிட்ச்சை நன்கு அறிந்திருப்பார்கள். லாகூர் மைதானத்தை விட துபாய் பிட்ச் சற்று மெதுவாக இருக்கலாம். இது சவாலின் ஒரு பகுதியாகும்.
ஒரே அணியாக இணைந்து எதிரணியின் மீது நெருக்கடி செலுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய திட்டம். அணியில் 4 ஸ்பின்னர் இருப்பதால் நல்ல பலன் கிடைத்திருக்கிறது. துபாயில் நாங்கள் ஏற்கனவே விளையாடியிருக்கிறோம். அந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் கடும் நெருக்கடியை கொடுத்தோம்.
இதன் மூலம் அவர்களை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இறுதி போட்டியில் டாஸ் வெல்வதும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் என மிட்செல் சான்ட்னர் கூறினார்.
- இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் முகமது சமி போட்டியின் போது குளிர்பானம் அருந்தினார்.
- சமி விரதத்தை கடைபிடிக்ககாமல் பாவம் செய்துவிட்டார் என அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத்தின் தேசியத் தலைவர் கூறினார்.
இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம் மக்கள் ரமலான் மாதத்தை முன்னிட்டு விரதம் இருக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி சுற்றுப்பயணத்தின் போது முகமது சமி ரமலான் நோன்பு கடைபிடிக்காதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.
இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத்தின் தேசியத் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ரஸ்வி கூறுகையில், ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் விரதம் இருக்க வேண்டியது கட்டாய கடமை. ஆரோக்கியமான ஆணோ பெண்ணோ விரதத்தை கடைப்பிடிக்கவில்லை என்றால், அவர்கள் பெரிய பாவிகளாகி விடுவார்கள்
முகமது சமி போட்டியின் போது குளிர்பானம் அருந்தினார். மக்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் கிரிக்கெட் விளையாடுகிறார் என்றால், அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அர்த்தம். அத்தகைய நிலையில், அவர் விரதத்தை கடைபிடிக்ககாமல் பாவம் செய்துவிட்டார். ஷரியத்தின் பார்வையில், அவர் ஒரு பாவி. அவர் கடவுளுக்குப் பதில் சொல்ல வேண்டும்" என்று தெரிவித்தார்.
இவரது கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ஷமா முகமது எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில், ரம்ஜான் மாதத்தில் ஒரு மிக முக்கியமான விஷயம் உள்ளது. நாம் பயணம் செய்யும்போது, நோன்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. முகமது சமி பயணம் செய்கிறார், அவர் தனது சொந்த இடத்தில் இல்லை. நீங்கள் ஒரு விளையாட்டை விளையாடும்போது, நோன்பு இருக்க வேண்டும் என்று யாரும் வற்புறுத்துவதில்லை. உங்கள் செயல்கள்தான் மிகவும் முக்கியம். அது (இஸ்லாம்) மிகவும் அறிவியல் பூர்வமான மதம் என்று ஷமா முகமது கூறினார்.
இதனையடுத்து, முகமது சமி மீதான விமர்சனங்களுக்கு பதில் அளித்த அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் நிர்வாக உறுப்பினர் மவுலானா காலித் ரஷீத் ஃபராங்கி மஹ்லி, "ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தாலோ அல்லது நோய்வாய்ப்பட்டிருந்தாலோ, விரதம் கடைபிடிக்காமல் இருக்க அவர்களுக்கு விருப்பம் உள்ளது என்று அல்லா குர்ஆனில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே சமி விரதம் இருக்காமல் இருக்க விருப்பம் உள்ளது: அவர் மீது விரல் நீட்ட யாருக்கும் உரிமை இல்லை.
என்று தெரிவித்தார்.
மேலும் சுற்றுப் பயணத்தில் இருப்பவர்கள் நோன்பைத் தவிர்க்க குர்ஆன் அனுமதிக்கிறது என சமியின் உறவினர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் மத குருமார்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
- ஒரு கேப்டனாக கடந்த 4 வருடங்களில் 4 ஐசிசி தொடர்களில் இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார்.
- ஒருவர் 15 முதல் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடுவது பெரிய விஷயம்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்திய அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்திய கேப்டன் ரோகித் சர்மா இதுவரை யாரும் படைத்திராத சாதனையை படைத்து அசத்தியுள்ளார். இதன் மூலம் ஐ.சி.சி. நடத்தும் நான்கு வகை கிரிக்கெட் தொடர்களின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
இந்திய அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார். இதையடுத்து, எம்.எஸ். தோனி இதுவரை எட்டாத சாதனையை ரோகித் சர்மா தற்போது படைத்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஐ.சி.சி. நடத்திய அனைத்து வித கிரிக்கெட் தொடர்களிலும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இத்தகைய சாதனையை படைத்த முதல் கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றிருக்கிறார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை எந்த கேப்டனும் பெறாத பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஒரு கேப்டனாக கடந்த 4 வருடங்களில் 4 ஐசிசி தொடர்களில் இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார் என ரோகித் சர்மாவுக்கு இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒரு கேப்டனாக கடந்த 4 வருடங்களில் 4 ஐசிசி தொடர்களில் இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு ரோகித் சர்மா அழைத்து சென்றுள்ளார். இது மிகப்பெரியது. ஒருவர் 15 முதல் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடுவது பெரிய விஷயம்.
அவர் கடினமாக உழைக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் விளையாடும் அவருக்கு என் வாழ்த்துகள்.
என சூர்யகுமார் யாதவ் கூறினார்.
- 16-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின.
- இந்த போட்டியில் மும்பை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லக்னோ:
3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் லக்னோவில் நடந்து வருகிறது. அதில் நேற்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய மும்பை அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது மும்பை அணியின் 4-வது வெற்றி ஆகும்.
முன்னதாக உபி வாரியர்ஸ் பேட்டிங் செய்த போது மும்பை இந்தியன்ஸ் அணி அதிக நேரம் எடுத்துக் கொண்டனர். இதனால் கடைசி ஓவரில் 3 பீல்டர்கள் மட்டுமே உள்வலையத்திற்கு வெளியே நிற்க வேண்டும் என நடுவர்கள் தெரிவித்தனர். அதனை மும்பை கேப்டனிடம் நடுவர் தெரிவித்து கொண்டிருந்தார். இதனால் கவுர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.
அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த சோஃபி எக்லெஸ்டோன் நடுவரிடம் கவுரை பார்த்து ஏதோ கூறினார். உடனே பதிலுக்கு கவுர் அவரை பார்த்து (உங்கள் வேலையை பாருங்கள் என்பது போல) எதோ திட்டினார். இதனையடுத்து களநடுவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு 60% ஆகவும் நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு 40 சதவீதமாகவும் உள்ளது.
- நியூசிலாந்து அணியின் கேப்டனாக சாட்னர் சிறப்பாக செயல்படுகிறார்.
சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் பலப்பரிட்சை நடத்த உள்ளது. நியூசிலாந்து அணி எப்போதுமே இந்தியாவுக்கு ஐசிசி தொடரில் கடும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது. இது அணிகளும் இதுவரை ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 12 முறை மோதி இருக்கிறார்கள். இதில் இந்திய ஆறுமுறையும் நியூசிலாந்து அணியும், ஆறுமுறையும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.
இந்த சூழலில் இறுதி போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் கணித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்தியா மற்றும் நியூசிலாந்து என இரண்டு அணிகளுக்கும் எந்த மாதிரியான ஆடுகளம் கிடைக்கப்போகிறது என்பது குறித்து நன்றாக தெரியும். குறிப்பாக நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக துபாய் ஆடுகளத்தில் சிறப்பாக செயல்பட முடியும். இதனால் இந்தியாவுக்கு இது நிச்சயமாக சுலபமாக இருக்காது.
ஆனால் இந்த தொடரை வெல்லும் அணியாக இந்தியா தான் நிச்சயம் இருக்கும். ஆனால் அது அவ்வளவு எளிதாக இருக்காது. இந்தியா 70% மற்றும் நியூசிலாந்து 30 சதவீதம் என்று கூட சொல்ல முடியாது. இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு 60% ஆகவும் நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு 40 சதவீதமாகவும் உள்ளது. ஏனென்றால் நியூசிலாந்து அணியும் பலமாக இருக்கிறது.
இதேபோன்று நியூசிலாந்து அணியின் கேப்டனாக சாட்னர் சிறப்பாக செயல்படுகிறார். அவரிடம் ஒரு நம்பிக்கையும் அமைதியும் இருக்கிறது. வில்லியம்சன் போல் அவரும் களத்தில் பதற்றமில்லாமல் இருக்கின்றார். அவருடைய இந்த இயல்பு நிச்சயம் அணிக்கு ஒரு பலமாக இருக்கும். களத்தில் அமைதியாக இருப்பதற்கும் சோம்பேறியாக இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நியூசிலாந்து வீரர்கள் எல்லாம் அமைதியான வகையை சார்ந்தவர்கள்.
என்று வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
- கங்குலி போலீஸ் சீருடையில் இருக்கும் புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகிறது.
- கங்குலி நடிப்பதை படக்குழுவினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
மைதானத்தில் பவுண்டரி, சிக்சர் என்று ரன்களை குவித்த கிரிக்கெட் வீரர்கள் நடிகர்களாகி வருகிறார்கள். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் 'ராபின் ஹுட்' என்ற தெலுங்கு படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியும் நடிகராக மாறி இருப்பதாக இந்தி இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது.
வெப்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் கங்குலி நடிக்க இருப்பதாகவும், ஜீத், புரோசன் ஜீத் சட்டர்ஜி, சாஸ்வதா பரம்விரதா சட்டர்ஜி ஆகியோரும் கங்குலியுடன் வெப் தொடரில் நடிக்கின்றனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கங்குலி போலீஸ் சீருடையில் இருக்கும் புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகிறது. இந்த வெப் தொடரில் கங்குலி போலீஸ் உயர் அதிகாரியாக நடிப்பதாக தகவல். கங்குலி நடிப்பதை படக்குழுவினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.






