என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளுக்கான தமிழக கபடி அணிகள் தேர்வு சென்னையில் வருகிற 5 மற்றும் 6-ந்தேதிகளில் நடைபெறுகிறது.
    சென்னை:

    கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் அடுத்த ஆண்டு (2020) ஜனவரி மாதம் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 17 வயதுக்கு உட்பட்ட சிறுமியர் மற்றும் 21 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமியருக்கான தமிழக கபடி அணிகள் தேர்வு சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.

    இதில் சிறுவர்களுக்கான தேர்வு வருகிற 5-ந் தேதியும், சிறுமிகளுக்கான தேர்வு வருகிற 6-ந் தேதியும் காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது. 17 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பிரிவில் பங்கேற்பவர்கள் 1-1-2003 அன்றோ அதற்கு பின்போ பிறந்து இருக்க வேண்டும். உடல் எடை 56 கிலோவுக்கு கீழ் இருக்க வேண்டும். 21 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் பிரிவில் பங்கேற்பவர்கள் 1-1-1999 அன்றோ அதற்கு பின்போ பிறந்து இருக்க வேண்டும்.

    சிறுவர்கள் 75 கிலோவுக்கு கீழும், சிறுமிகள் 70 கிலோவுக்கு கீழும் இருக்க வேண்டும். இந்த தகுதி தேர்வில் கலந்து கொள்ளும் வீரர்-வீராங்கனைகள் தேவையான வயது சான்றிதழுடன் வர வேண்டும் என்று தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்க பொதுச்செயலாளர் ஏ.ஷபியுல்லா தெரிவித்துள்ளார்.
    உலக தடகள போட்டியில் பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் ர‌ஷிய வீராங்கனை மரியா லசிட்ஸ்கேனி ‘ஹாட்ரிக்’ சாம்பியன் பட்டத்தை வென்றார்.
    தோகா:

    17-வது உலக தடகள சாம்பியன்‌ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் நார்வே வீரர் கார்ஸ்டென் வார்ஹோல்ம் 47.42 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை மீண்டும் தனதாக்கினார். அவர் கடந்த 2017-ம் ஆண்டு உலக போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார். அமெரிக்க வீரர் ராய் பெஞ்சமின் 47.66 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், கத்தார் வீரர் அப்டெர்ராக்மேன் சம்பா 48.03 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

    5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எத்தியோப்பியா வீரர் முக்தார் எட்ரிஸ் 12 நிமிடம் 58.85 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தொடர்ச்சியாக 2-வது முறையாக தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு எத்தியோப்பியா வீரர் செலிமோன் பார்கா 12 நிமிடம் 59.70 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், கனடா வீரர் முகமது அகமது 13 நிமிடம் 01.11 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

    வட்டு எறிதலில் சுவீடன் வீரர் டேனியல் ஸ்டா 67.59 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். ஜமைக்கா வீரர் பெட்ரிக் டாசெஸ் 66.94 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கமும், ஆஸ்திரியா வீரர் லூகாஸ் வெய்‌ஷாய்டின்ஜெர் 66.82 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர்.

    பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் ர‌ஷியாவை சேர்ந்த மரியா லசிட்ஸ்கேனி, உக்ரைன் வீராங்கனை யரோஸ்லாவா மஹூசிக் ஆகியோர் தலா 2.04 மீட்டர் உயரம் தாண்டினார்கள். ஆனால் ர‌ஷிய வீராங்கனை மரியா தனது முதல் முயற்சியிலேயே அந்த இலக்கை தாண்டியதால் அவர் தங்கப்பதக்கத்தை தனதாக்கினர். இதன் மூலம் உலக போட்டியில் தொடர்ச்சியாக 3 முறை (2015, 2017, 2019) தங்கம் வென்ற முதல் உயரம் தாண்டுதல் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். ஊக்க மருந்து சர்ச்சை காரணமாக ர‌ஷிய தடகள சம்மேளனத்தை, சர்வதேச தடகள சம்மேளனம் தடை செய்யப்பட்டு இருப்பதால் 26 வயதான மரியா லசிட்ஸ்கேனி இந்த போட்டியில் பொதுவான வீராங்கனைகள் பட்டியலில் பங்கேற்றார். யுரோஸ்வாலா மஹூசிக் தனது 3-வது முயற்சியில் அந்த உயரத்தை எட்டியதால் வெள்ளிப்பதக்கம் வென்றார். அமெரிக்க வீராங்கனை வஸ்தி குன்னிங்ஹாம் 2 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கம் பெற்றார்.

    800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உகாண்டா வீராங்கனை ஹலிமாக் நகாயி 1 நிமிடம் 58.04 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்றார். அமெரிக்க வீராங்கனைகள் ராவ்னி ரோஜர்ஸ் (1:58.18 வினாடி) வெள்ளிப்பதக்கமும், அஜீ வில்சன் (1:58.84 வினாடி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.
    ராஜஸ்தான் மாநில கிரக்கெட் சங்க தலைவர் பதவி போட்டிக்கு அம்மாநில முதல்வர் அஷோக் கெலாட் மகன் மனு தாக்கல் செய்துள்ளார்.
    பிசிசிஐ கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அனைத்து கிரிக்கெட் சங்கங்களுக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு அக்டோபர் மாதம் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும்.

    இந்நிலையில் அம்மாநில முதல்வர் அஷோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் தலைவர் பதவிக்கு போட்டியிட இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வைபவ் ஜோத்பூர் தொகுதியில் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளரிடம் படுதோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தென்ஆப்பிரிக்கா தொடரில் பும்ரா இழப்பை ஈடுகட்டும் வகையில் போதுமான வலிமை இந்தியாவிடம் உள்ளது என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயத்தால் தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

    என்றாலும் இந்த இழப்பை ஈடுசெய்யும் அளவிற்கு இந்தியாவிடம் வலிமை உள்ளது என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘பும்ரா என்று பார்க்கும்போது, அவருடைய தனித்தன்மை வாய்ந்த பந்து வீச்சை உறுதியாக இழக்கிறோம் என்பதில் ஐயமில்லை.

    ஆனால், இந்திய அணி வேகப்பந்து வீச்சு துறையில் பேக்-அப்  வலிமையாக வைத்துள்ளது. சுழற்பந்து வீச்சு துறையிலும் சிறப்பான காம்பினேசனை உருவாக்கியுள்ளது. இதை பார்க்க எனக்கு சிறப்பானதாக தோன்றுகிறது’’ என்றார்.
    ஹர்திக் பாண்டியாவின் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தால் ஐந்து மாதங்கள் விளையாட முடியாத நிலை ஏற்படும்.
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின்போது முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

    அதன்பின் சிகிச்சை மேற்கொண்டு அணிக்கு திரும்பினா். என்றாலும் முகுது வலி அவருக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தது. தற்போது தென்ஆப்பிரிக்கா தொடரிலும் இருந்து முதுகு வலியால் விலகியுள்ளார்.

    முதுகு வலியின் வீரியம் குறித்து அறிய, லண்டன் சென்று  அவர்  ஏற்கனவே சிகிச்சை பெற்ற டாக்டரிடம் ஆலோசனை கேட்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தென்ஆப்பிரிக்கா தொடர் முடிந்த பின்னர் நடைபெற இருக்கும் வங்காளதேச தொடரில் விளையாடமாட்டார் எனக் கூறப்படுகிறது.

    ஒருவேளை அறுவை சிகிச்சை மேற்கொண்டால் சுமார் ஐந்து மாதங்கள் வரை ஹர்திக் பாண்டியாவால் விளையாட முடியாது என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    லண்டன் சென்று திரும்பிய பின்னர்தான், ஹர்திக் பாண்டியா காயம் குறித்து முழு விவரம் தெரிய வரும்.
    தினேஷ் கார்த்திக் 62 பந்தில் 97 ரன்கள் விளாச, விஜய் ஹசாரே டிராபியில் இந்தியா தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளை ருசித்துள்ளது.
    விஜய் ஹசாரே டிராபியில் இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - பெங்கால் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்கால் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தமிழ்நாடு அணியின் ஜெகதீசன், அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    ஜெகதீசன் 8 ரன்னிலும், அபிநவ் முகுந்த் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பாபா அபரஜித் 34 ரன்கள் சேர்த்தாலும், ஹரி நிஷாந்த் 8 ரன்னில் வெளியேறினார்.

    83 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்த நிலையில், ஐந்தாவது விக்கட்டுக்கு விஜய் சங்கர் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. விஜய் சங்கர் 41 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து தினேஷ் கார்த்திக் உடன் ஷாருக் கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. தினேஷ் கார்த்திக் 62 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 97 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் - ஷாருக் கான் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 12.3 ஓவர்களில் 153 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

    ஷாருக்கான் 45 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 69 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருக்க தமிழ்நாடு 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் குவித்தது.

    பின்னர் 287 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்கால் அணி களம் இறங்கியது. முதல் நான்கு வீரர்களையும் ஒற்றையிலக்க ரன்னில் தமிழ்நாடு பந்து வீச்சாளர்களான நடராஜன், விக்னேஷ் ஆகியோ் வெளியேற்றினர்.

    இதனால் பெங்கால் அணி 21 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது. ஷபாஸ் அகமது 107 ரன்கள் அடித்தாலும், அந்த அணி 212 ரன்னில் சுருண்டது. இதனால் தமிழ்நாடு அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தமிழ்நாடு அணி சார்பில் பாபா அபரஜித், கே. விக்னேஷ், டி நடராஜன், முருகன் அஸ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் விஜய் ஹசாரே டிராபியில் தமிழ்நாடு அணி தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளை ருசித்து புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு இடம்பிடித்துள்ள மற்றொரு அணியான குஜராத் அணியும் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
    என்னைப் பொறுத்த வரையில் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சகா என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் ரிஷப் பந்த்-ஐ நீண்ட கால விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பந்த்-ஐ உருவாக்க முயற்சி எடுத்து வருகிறோம். அவருக்கு போதுமான அளவு வாய்ப்புகள் வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் தெரிவித்தது.

    கேப்டன் விராட் கோலி, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் ரிஷப் பந்துக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மூன்று வகை கிரிக்கெட்டுக்கும் விக்கெட் கீப்பராக நியமிக்கப்பட்டார். ஆனால் ரிஷப் பந்தால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் அவர் மீது விமர்சனம் எழும்பியது. இந்நிலையில் நாளை தொடங்கும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டிற்கான ஆடும் லெவன் அணியில் ரிஷப் பந்திற்குப் பதிலாக சகா சேர்க்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘சகா உடற்தகுதி பெற்று விளையாட தயாராக உள்ளார். அவர் எங்களுடன் இந்த தொடரை தொடங்க இருக்கிறார். அவருடைய கீப்பிங் திறமையை ஒவ்வொருவரும் பார்த்திருப்பீர்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடியுள்ளார். என்னைப் பொறுத்த வரையில் அவர் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்’’ என்றார்.
    ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால்?... அவ்வளவுதான் என இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் டு பிளிசிஸ்.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. கடந்த முறை தென்ஆப்பிரிக்கா இந்தியாவில் விளையாடும்போது ஆடுகளங்கள் முதல் ஓவரில் இருந்து சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

    டி வில்லியர்ஸ், டு பிளிசிஸ், அம்லா போன்ற ஜாம்பவான்களே கடுமையாக திணறினார்கள். அரைசதம் அடித்தாலே மிகப்பெரியதாக பார்க்கப்பட்டது. இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா விக்கெட்டுக்களை அள்ளினர். அதேவேளையில் தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர்களால் சாதிக்க முடியவில்லை.

    ஆனால்  இந்த முறை இடது கை சுழற்பந்து வீச்சாளரான கேசவ் மகாராஜ்-யை மிகப்பெரிய ஆயுதமாக உபயோகிக்க தென்ஆப்பிரிக்கா தயாராக உள்ளது.

    வேகப்பந்து வீச்சை நாங்கள் முதுகெலும்பாக கொண்டுள்ளோம். ஒருவேளை ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்போம் என டு பிளிசிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘கடந்த தொடரில் ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. எங்களுடைய சுழற்பந்து வீச்சாளரான மகாராஜ், உலகளில் உள்ள சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்கிறார். ஆகவே, சுழற்பந்து வீச்சுக்கு சாதமாக ஆடுகளம் கொடுக்கப்பட்டால் இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு அவர் கடும் சவாலாக திகழ்வார்.

    நாங்கள் எப்போதுமே வேகப்பந்து வீச்சை பலமாக கொண்டவர்கள். ஆனால், துல்லியமான வேகத்தால் அதை உறுதி செய்வது முக்கியமானதாகும்’’ என்றார்.
    இத்தாலியில் நடைபெற்ற 2-ம் நிலை ஏடிபி டென்னிஸ் தொடரின்போது பந்தை சேகரிக்கும் சிறுமியை நோக்கி ஆபாசமாக பேசிய நடுவருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    இத்தாலியில் கடந்த வாரம் ஆண்களுக்கான 2-ம் நிலை ஏடிபி டென்னிஸ் தொடர் நடைபெற்றது. பெட்ரோ சவுசா - என்ரிகோ டல்லா ஆகியோர் விளையாடிக் கொண்டிருக்கும்போது, வீரர்கள் அடித்த பந்தை சேகரிக்கும் சிறுமியிடம் நடுவர் ஆபாச முறையில் பேசியுள்ளார். இது அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை எழுப்பியது. இதனால் நடுவர் ஜியான்லுகா மோஸ்கரெல்லாக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    ஜியான்லுகா மோஸ்கரெல்லா ஒரு சிறுமியை நோக்கி, ‘‘மிகவும் கவர்ச்சியாக இருக்கிறார். உடல் அளவில் அல்லது எமோசன் அல்லது இரண்டிலும் ஹாட்டாக இருக்கிறாயா’’ என்று கேட்டுள்ளார்.
    இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ரோகித் சர்மாவுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படும் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வரும் ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டியிலும் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாட இருக்கிறார்.

    பொதுவாக ரோகித் சர்மா ஸ்விங் பந்தில் சற்று தடுமாறுவார். டெஸ்ட் போட்டி பந்தான சிகப்பு பந்து 20 ஓவர்களுக்குப் பிறகு கூட பந்து ஸ்விங் ஆகும். இதனால் ரோகித் சர்மா எப்படி விளையாடுவார்? என்ற கேள்வி ரசிகர்களின் முன் இருக்கிறது.

    இந்நிலையில் ரோகித் சர்மா தொடக்க இடத்தில் அவரது வழக்க ஆட்டத்தை வெளிப்படுத்தும் வரை வாய்ப்பு வழங்கப்படும் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    ரோகித் சர்மா குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘ரோகித் சர்மா தொடக்க பேட்ஸ்மேன் வரிசையில் வெற்றி பெற்றால், எங்களது டாப் ஆர்டர் பேட்டிங் வரிசை மேலும் அச்சுறுத்தலாக இருக்கும். ஒவ்வொரு முறையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது தொடக்க வரிசையில் களம் இறங்கும் வீரர்களுக்கு கடினமானது.

    ரோகித் சர்மா அவரது வழக்கமான பேட்டிங் நிலைக்கு வந்து விட்டால், மற்ற அணிகளை விட முற்றிலும் மாறுபட்ட பேட்டிங் ஆர்டரை கொண்ட அணியாக திகழ்வோம்.

    ரோகித் சர்மாவுக்கு இத்தனை போட்டிகளில்தான் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை. இந்தியாவில் பின்பற்றப்படும் முறை வெளிநாட்டில் மாறுபடும். தொடக்க இடத்தில் பேட்டிங் செய்யும் வீரர்களுக்கு அவர்களது சொந்த ஆட்டத்தை புரிந்து கொள்ளும் வரை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

    ரோகித் சர்மாவுக்கு அவரது சொந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் வரை வாய்ப்புகள் வழங்கப்படும். தொடக்க காலத்தில் நான் டெஸ்ட் போட்டியில் 6-வது இடத்தில் களம் இறங்கினேன். தற்போது 4-வது இடத்தில் களம் இறங்குகிறேன். டெஸ்ட் கிரிக்கெட் என்பது மாறுபட்ட சூழ்நிலையில் உங்களது ஆட்டத்தை கண்டுபிடிப்பதாகும்’’ என்றார்.
    13-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு (2020) ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது. இதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி கொல்கத்தாவில் நடக்கிறது.
    புதுடெல்லி:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போட்டிக்கு வீரர்கள் ஏல முறையில் எடுக்கப்பட்டு வருகிறார்கள்.

    13-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு (2020) ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது. இதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி கொல்கத்தாவில் நடக்கிறது.

    வழக்கமாக வீரர்கள் ஏலம் பெங்களூரில் நடைபெறும். தற்போது முதல்முறையாக ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் நடக்கிறது. ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சொந்தநகராக கொல்கத்தா இருக்கிறது.

    ஒவ்வொரு அணியும் ஐ.பி.எல்.ஏலத்தில் ரூ.85 கோடி வரை செலவு செய்யலாம். இது கடந்த ஆண்டை விட ரூ.3 கோடி கூடுதல் ஆகும். கடந்த ஆண்டு ஒவ்வொரு அணிக்கும் தலா ரூ.82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    போட்டியில் விளையாடும் 8 அணிகளும் வீரர்களை மாற்றிக் கொள்வதற்கான காலம் நவம்பர் 14-ந்தேதி தொடங்குகிறது.
    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அஸ்வின் மற்றும் விருத்திமான் சகா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது. இதற்கான இந்திய லெவன் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் களம் இறக்கப்படாத அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பும்ரா இல்லாததால் இவருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

    விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்த ரிஷப் பந்த் அதிரடியாக நீக்கப்பட்டு விருத்திமான் சகா சேர்க்கப்பட்டுள்ளார்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. விராட் கோலி (கேப்டன்), 2. ரகானே, 3. ரோகித் சர்மா, 4. மயாங்க் அகர்வால், 5. புஜாரா, 6. விஹாரி, 7. அஸ்வின், 8. ஜடேஜா, 9. சகா, 10. இசாந்த் சர்மா, 11. முகமது சமி.
    ×