என் மலர்tooltip icon

    விளையாட்டு

    செல்டா விகோ அணிக்கெதிரான ஆட்டத்தில் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடிக்க பார்சிலோனா 4-1 என எளிதில் வெற்றி பெற்றது.
    லா லிகா கால்பந்து லீக்கில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் புகழ்பெற்ற கிளப் அணியான பார்சிலோனா, செல்டா விகோ அணியை எதிர்கொண்டது.

    சொந்த மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா ஆதிக்கம் செலுத்தியது. 23-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்சி முதல் கோலை பதிவு செய்தார். 42-வது நிமிடத்தில் செல்டா விகோ ஒரு கோல் அடித்தது. இதனால் ஸ்கோர் 1-1 சமநிலையில் இருந்தது.

    முதல் பாதி நேரம் ஆட்டம் முடிவடைவதற்கு சற்று முன் (45+1) மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் பார்சிலோனா முதல் பாதி நேரத்தில் 2-1 என முன்னிலைப் பெற்றது.

    2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும் 3-வது நிமிடத்தில், அதாவது ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் மெஸ்சி ஹாட்ரிக் கோலை பதிவு செய்தார். 85-வது நிமிடத்தில் செர்ஜியோ பஸ்குயட்ஸ் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 4-1 என வெற்றி பெற்றது.

    12 போட்டிகள் முடிவில் பார்சிலோனா 25 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரையும் கைப்பற்றியது.
    ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் லக்னோவில் நடைபெற்று வருகிறது.

    முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்ற நிலையில், 2-வது போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர் ஷாய் ஹோப் 43 ரன்களும், லிவிஸ் 54 ரன்களும், அடுத்த வந்த ஹெட்மையர் 34 ரன்களும் அடித்தனர்.

    நிக்கோலஸ் பூரன் 50 பந்தில் 67 ரன்கள்  அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் அடித்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் நவீன் உல் ஹக் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 248 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணியால் 200 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-0 எனக் கைப்பற்றியுள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் காட்ரெல், சேஸ், வால்ஷ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் இளம் வீராங்கனையான ஷஃபாலி 73 ரன்கள் குவித்தார்.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸில் உள்ள கிராஸ் ஐலேட்டில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.

    தொடக்க வீராங்கனைகளான ஷஃபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷஃபாலி வர்மா 49 பந்தில் 73 ரன்களும், ஸ்மிரிதி மந்தனா 46 பந்தில் 67 ரன்களும் குவித்தனர்.

    இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 15.3 ஓவரில் 143 ரன்கள் குவித்தது. ஷஃபாலிக்கு 15 வருடம் 285 நாட்களே ஆகிறது. இதனால் குறைந்த வயதில் அரைசதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

    இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் 16 வயதில் 214 நாட்கள் ஆன நிலையில் சதம் அடித்திருந்தது. 30 வருடமாக குறைந்த வயதில் அரைசதம் அடித்த சாதனையை தற்போது ஷஃபாலி முறியடித்துள்ளார்.
    ஆக்லாந்தில் நடைபெற்ற கடைசி டி20 போட்டி டையில் முடிவடைய சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து.
    நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. நான்கு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் 2-2 என சமநிலையில் இருந்தன.

    தொடரை கைப்பற்றுவது யார்? என்பதை தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. மழை பெய்ததால் ஆட்டம் 11 ஓவராக குறைக்கப்பட்டது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில் கொலின் முன்ரோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மார்ட்டின் கப்தில் 20 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    கொலின் முன்ரோ 21 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 46 ரன்கள் குவித்தார். செய்பெர்ட் 19 பந்தில் ஒரு பவுண்டரி, ஐந்து சிக்சருடன் 39 ரன்கள் விளாச, நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 11 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் குவித்தது.

    பின்னர் 66 பந்தில் 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் பாண்ட்டன் 7 ரன்னிலும், அடுத்து வந்த வின்ஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அதிரடியாக விளையாட விரும்பிய மோர்கன் 7 பந்தில் 17 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோவ் 18 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 47 ரன்கள் சேர்த்தார்.

    சாம் குர்ரான் 11 பந்தில் 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்தின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 26 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை சவுத்தி இந்த ஓவரில் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    இதனால் கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. 11-வது ஓவரை நீசம் வீசினார். முதல் இரண்டு பந்தில் மூன்று ரன்கள் எடுத்தனர். 3-வது பந்தில் டாம் குர்ரான் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணிக்கு கடைசி 3 பந்தில் 13 ரன்கள் தேவைப்பட்டது.

    ஜோர்டான் களம் இறங்கினார். 4-வது பந்தை நீசிம் ஆப்-ஸ்டம்பிற்கு வெளியே புல் டாஸ்-ஆக வீசினார். இதை சிக்சருக்கு தூக்கினார் ஜோர்டான். இதனால் இங்கிலாந்து அணிக்கு 2 பந்தில் ஏழு ரன்கள் தேவைப்பட்டது.

    இந்த போட்டி 50 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போன்று ‘டை’ முடியுமோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

    ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள் அடித்தார் ஜோர்டார். கடைசி பந்தில் பவுண்டரி அடித்தால் ‘டை’, சிக்ஸ் அடித்தால் வெற்றி என்ற நிலையில், கடைசி பந்தை பவுண்டரிக்கு தூக்கினார் ஜோர்டார்.

    இதனால் போட்டி ‘டை’யில் முடிந்தது. ஆட்டம் ‘டை’யில் முடிந்ததால் சூப்பர் ஓவரை கடைபிடிக்கப்பட்டது.

    பேர்ஸ்டோவ், மோர்கன் ஆகியோர் களம் இறங்கினர். பேர்ஸ்டோவ் 3 பந்தில் ஒரு சிக்சருடன் 8 ரன்களும், மோர்கன் 3 பந்தில் ஒரு சிக்சருடன் 9 ரன்களும் அடித்தனர். இதனால் இங்கிலாந்து  17 ரன்கள் அடித்தது.

    இங்கிலாந்து டி20 அணி

    பின்னர் 18 ரன்கள் அடித்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் நியூசிலாந்து செய்பெர்ட், கப்தில் ஆகியோர் களம் இறங்கினர். நியூசிலாந்து அணியால் 8 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்து சூப்பர் ஓவரில் வெற்றி  பெற்று டி20 தொடரை 3-2 எனக்கைப்பற்றியது.

    இந்த போட்டி 50 உலகக்கோப்பை தொடரை ஞாபகப்படுத்தியது. இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. பின்னர் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரும் டை ஆனதால், பவுண்டரிகள் அதிகம் அடித்த அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    வங்காளதேச அணிக்கெதிரான இன்றைய போட்டியில் 400 சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்தியா - வங்காள தேச அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இதுவரை நடந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றிபெற்றன. டெல்லியில் நடந்த முதல் ஆட்டத்தில் வங்காள தேசம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும்.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. இதேபோல் வங்காளதேச அணியும் முதல்முறையாக இந்தியாவுக்கு எதிராக தொடரை கைப்பற்றும் வேட்கையில் உள்ளது.

    தொடக்க வீரரான ரோகித் சர்மா மிகவும் சிறப்பான நிலையில் உள்ளார். அவர் ராஜ்கோட் போட்டியில் 43 பந்தில் 85 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.

    சர்வதேச போட்டிகளில் இந்த ஆண்டிலும் அவர் அதிக சிக்சர் அடித்து முதல் இடத்தில் உள்ளார். 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளிலும் அவர்தான் சர்வதேச போட்டிகளில் அதிக சிக்சர் அடித்து சாதனை புரிந்திருந்தார்.

    இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா மேலும் ஒரு சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது.

    ரோகித் சர்மா சர்வதேச போட்டிகளில் இதுவரை 398 சிக்சர்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டியில் 232 சிக்சர்களும், டெஸ்டில் 51 சிக்சர்களும், 20 ஓவர் ஆட்டத்தில் 115 சிக்சர்களும் அடித்துள்ளார்.

    இன்னும் 2 சிக்சர் அடித்தால் அவர் 400 சிக்சர்களை தொட்டு புதிய சாதனை நிகழ்த்துவார். இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா இந்த சாதனையை படைப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    400 சிக்சர் அடித்தால் அவர் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். சர்வதேச அளவில் 3-வது இடத்தை பிடிப்பார்.

    வெஸ்ட் இண்டீசை சேர்ந்த கிறிஸ் கெய்ல் 534 சிக்சர்களுடன் முதல் இடத்திலும், பாகிஸ்தானை சேர்ந்த அப்ரிடி 426 சிக்சர்களுடன் இரண்டாது இடத்திலும் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா 100-வது போட்டியில் விளையாடிய முதல் இந்தியன் என்ற சாதனையை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
    செயிண்ட் லூசியாவில் நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய பெண்கள் அணி.
    செயிண்ட் லுசியா:

    இந்திய பெண்கள் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என இந்திய அணி கைப்பற்றியது.

    இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா பெண்கள் அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.

    செயிண்ட் லுசியாவில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
     
    அதன்படி, இந்திய பெண்கள் அணி முதலில் ஆடியது.

    தொடக்க ஆட்டக்காரர்களான ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா இருவரும் அதிரடியாக ஆடினர். இருவரும் அரைசதம் கடந்தனர். இறுதியில், இந்திய பெண்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. ஷபாலி வர்மா 73 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 67 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். 

    இதையடுத்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் அணி களமிறங்கியது. இந்திய அணியினரின் பந்து வீச்சில் சிக்கி நிலைகுலைந்தனர்.

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 101 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய பெண்கள் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
    கர்நாடக பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சர்வதேச தரகர் சயாம் இன்று கைது செய்யப்பட்டார்.
    பெங்களுர்:

    கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் கர்நாடக பிரிமீயர் லீக் என்ற பெயரில் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த 2009-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 

    இதுவரை 8 சீசன்களாக நடைபெற்றுள்ள இந்த கிரிக்கெட் தொடரில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தொடரின் இறுதிப் போட்டியில் பல்லாரி டஸ்கர்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹூப்ளி டைகர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 
     
    இதில் பல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேபடன் சிஎம் கௌதம் 37 பந்துகளில் வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்து மிகவும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டனின் மந்தமான ஆட்டமே தோல்விக்கு முக்கிய காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. 

    இறுதிப் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக எழுந்த புகாரையடுத்து பெங்களுர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 
    இதையடுத்து, கர்நாடாக பிரிமீயர் லீக் தொடரில் மேட்ச் பிக்சிங் எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேப்டன் சிஎம் கௌதம் மற்றும் அபர் காசி ஆகிய இரு வீரர்களை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    இந்நிலையில், கர்நாடக பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சர்வதேச தரகர் சயாம் இன்று கைது செய்யப்பட்டார்.
    இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 3வது டி 20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று நடைபெறுகிறது. இதில் வென்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் முனைப்புடன் உள்ளன.
    நாக்பூர்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது.

    டெல்லியில் நடந்த முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசமும், ராஜ்கோட்டில் நடந்த 2-வது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதையடுத்து இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டி 20 கிரிக்கெட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்றிரவு நடைபெறுகிறது.
     
    தொடக்க ஆட்டத்தில் பேட்டிங்கிலும், கடைசிகட்ட பந்து வீச்சிலும் கோட்டை விட்ட இந்திய அணி, 2-வது ஆட்டத்தில் சுதாரிப்போடு விளையாடி வெற்றிக்கனியை பறித்தது. கேப்டன் ரோகித் சர்மா 6 சிக்சருடன் 85 ரன்கள் குவித்து அசத்தினார். யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் சுழலில் மிரட்டினர். இன்றைய ஆட்டத்திலும் அதே உத்வேகத்துடன் ஆடி தொடரை வசப்படுத்தும் ஆர்வத்தில் உள்ளனர். 
    இரண்டு ஆட்டங்களிலும் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது ரன்களை வாரி வழங்கியுள்ளார். அனேகமாக இந்த ஆட்டத்தில் அவர் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய இளம் வீரர் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கிலும், பேட்டிங்கிலும் அவ்வப்போது தடுமாறுகிறார்.

    வங்காளதேசம் அணி

    மக்முதுல்லா தலைமையிலான வங்காளதேச அணி முதல் ஆட்டத்தைப் போன்று மீண்டும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வேட்கையுடன் காத்திருக்கிறது. முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா, சவுமியா சர்கார் ஆகியோரின் பேட்டிங்கை தான் அந்த அணி நிர்வாகம் அதிகமாக சார்ந்துள்ளது.
     
    வங்காளதேச பயிற்சியாளர் ரஸ்செல் டொமிங்கோ கூறுகையில், இப்போது தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. வீரர்களும் சாதிக்கும் துடிப்பில் உள்ளனர். எது எப்படியோ, இந்தியா உலகின் சிறந்த அணிகளில் ஒன்று என்பதை மறுக்க முடியாது. நாங்கள் எங்களது திறமைக்கு தக்கபடி விளையாடினால் வெற்றி வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

    நாக்பூரில் இதுவரை 11 இருபது ஓவர் ஆட்டங்கள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே 8 முறை வெற்றி பெற்றுள்ளன. இதில் இந்திய அணி ஆடிய 3 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றியும் (இங்கிலாந்துக்கு எதிராக), 2-ல் தோல்வியும் (இலங்கை, நியூசிலாந்துக்கு எதிராக) கண்டுள்ளது.

    2009-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி 215 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். 2016-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 79 ரன்னில் சுருண்டது மோசமான ஸ்கோராகும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ஷிவம் துபே, குருணல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், தீபக் சாஹர், கலீல் அகமது அல்லது ஷர்துல் தாகூர்.

    வங்காளதேசம்: லிட்டான்தாஸ், முகமது நைம், சவுமியா சர்கார், முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா (கேப்டன்), அபிப் ஹூசைன், மொசாடெக் ஹூசைன், அமினுல் இஸ்லாம், ஷபியுல் இஸ்லாம் அல்லது தைஜூல் இஸ்லாம், முஸ்தாபிஜூர் ரகுமான், அல்-அமின் ஹூசைன்.
    கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணி ஜாம்ஷெட்பூர் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
    கொல்கத்தா;

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் கோல் அடிக்க முயன்றன. ஆனாலும் யாரும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியின் முடிவில் 0- 0 என இரு அணிகளும் சமனிலை வகித்தன.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 57 மற்றும் 71வது நிமிடங்களில் கொல்கத்தா அணி வீரர் ராய் கிருஷ்ணா இரு கோல்கள் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். 
     
    ஆட்டத்தின் இறுதியில் 85-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணி வீரர் செர்ஜியோ கேசில் ஒரு கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகக் 94-வது நிமிடத்தில் எடு கார்சியா ஒரு கோல் அடித்தார். 

    இறுதியில், கொல்கத்தா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை தோற்கடித்தது, இதன்மூலம் மூன்றாவது வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது.
    சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.
    புஜோவ்:

    சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி புஜோவ் நகரில் நடந்து வருகிறது. இதில், இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனேசியாவின் நம்பர் ஒன் ஜோடியான மார்கஸ் பெர்னால்டி ஜிடோன்-கெவின் சஞ்சயா சுகாமுல்ஜோவுடன் மோதினர்.

    இதில் சிறப்பாக ஆடிய இந்தோனேசிய ஜோடி 21-16, 22-20 என்ற நேர் செட் கணக்கில் இந்திய ஜோடியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்தோனேசியா ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
    ரிஷப் பந்தை விமர்சிக்க வேண்டாம், அவரை தனியாக விட்டு விடுங்கள் என இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
    நாக்பூர்: 

    இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான மகேந்திர சிங் டோனி உலகக் கோப்பை  போட்டிகளுக்கு பிறகு இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. டோனிக்கு பிறகு விக்கெட் கீப்பராக உருவெடுக்கும் ரிஷப் பந்திற்கு ஒரு  விதமான அழுத்தம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி  வருகிறார். 

    வங்காளதேச கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் இரண்டு டெஸ்டில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. கடந்த  3ம் தேதி டெல்லியில் நடைபெற்ற முதல் போட்டியில் வங்காளதேசம் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.  

    அந்த போட்டியில் தவறான ரிவியுவ் எடுக்க வலியுறுத்தி ரிஷப் பந்த் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். இரண்டாவது டி20  போட்டி கடந்த 7ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற்றது. முதலில் வங்காள தேசம் அணி பேட் செய்தது. அந்த போட்டியிலும் ரிஷப் பந்த்  தவறிழைத்தார். 

    சாஹல் வீசிய 6 வது ஓவரில் வங்காள தேச வீரர் லிட்டன் தாஸ் கிரீசை விட்டு வெளியேறி பந்தை அடிக்க முயன்றார். ஆனால் பந்து  அவரது பேட்டில் படவில்லை. ரிஷப் பந்த் அவரை ஸ்டம்பிங் செய்தார். ஐ.சி.சி விதிமுறைகள் படி பந்து ஸ்டம்பை கடந்த பிறகே  ஸ்டம்பிங் செய்ய வேண்டும். ஆனால் பந்து ஸ்டம்பை கடக்கும் முன்பே அவர் பந்தை பிடித்து ஸ்டம்பில் அடித்ததால் அது அவுட்  இல்லை என அறிவிக்கப்பட்டது. இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற்றது. ஆனால் ரிஷப் பந்தின் இந்த செயல் விமர்சனத்திற்கு  உள்ளானது. 

    ரிஷப் பந்த்

    இந்நிலையில், ரிஷப் பந்தை யாரும் விமர்சிக்க வேண்டாம், அவரை தனியாக விட்டு விடுங்கள் அவர் அணி நிர்வாகத்தின் யுக்தியை  செயல்படுத்தவே முயல்கிறார், என ரோகித் சர்மா கூறியுள்ளார். 

    ‘ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் அனைவரும் ரிஷப் பந்தை பற்றியே விமர்சிக்கிறார்கள். களத்தில் அவர் என்ன செய்ய  விரும்புகிறாரோ அதை செய்ய அனுமதிக்க வேண்டும். அவர் மீதிருந்து உங்களது விமர்சன பார்வையை விலக்கிக்கொள்ளுங்கள்’ என  ரோகித் சர்மா குறிப்பிட்டுள்ளார். 

    டோனியுடன் ரிஷப் பந்தை ஒப்பிட வேண்டாம். ரிஷப் டோனியிடமிருந்து கற்றுக்கொண்டு தனக்கென ஒரு பாணியை  உருவாக்கிக்கொள்ள வேண்டும், என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் சமீபத்தில் கூறியது  குறிப்பிடத்தக்கது.
    இந்தியாவின் முன்னணி உள்ளூர் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது தமிழ்நாடு.
    திருவனந்தபுரம்:

    முன்னணி டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக முரளி விஜய், ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்தனர். ஜெகதீசன் 34 ரன்னிலும், முரளி விஜய் 35 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
     
    அதன்பின் வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் 48 ரன்களில் அவுட்டானார். அடுத்து இறங்கிய விஜய் சங்கர் 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், தமிழ்நாடு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.

    அதைத்தொடர்ந்து, 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. சாய் கிஷோர் 3 விக்கெட்டும், நடராஜன், பெரியசாமி, விஜய் சங்கர், முருகன் அஷ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டு வீழ்த்தினர். இதனால் ராஜஸ்தான் அணியால் 116 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் தமிழ்நாடு 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.
    ×