search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மா
    X
    ரோகித் சர்மா

    சர்வதேச போட்டிகளில் 400 சிக்சர்கள் ஆர்வத்தில் ரோகித் சர்மா: இன்னும் 2 சிக்சரே தேவை

    வங்காளதேச அணிக்கெதிரான இன்றைய போட்டியில் 400 சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்தியா - வங்காள தேச அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இதுவரை நடந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றிபெற்றன. டெல்லியில் நடந்த முதல் ஆட்டத்தில் வங்காள தேசம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும்.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. இதேபோல் வங்காளதேச அணியும் முதல்முறையாக இந்தியாவுக்கு எதிராக தொடரை கைப்பற்றும் வேட்கையில் உள்ளது.

    தொடக்க வீரரான ரோகித் சர்மா மிகவும் சிறப்பான நிலையில் உள்ளார். அவர் ராஜ்கோட் போட்டியில் 43 பந்தில் 85 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.

    சர்வதேச போட்டிகளில் இந்த ஆண்டிலும் அவர் அதிக சிக்சர் அடித்து முதல் இடத்தில் உள்ளார். 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளிலும் அவர்தான் சர்வதேச போட்டிகளில் அதிக சிக்சர் அடித்து சாதனை புரிந்திருந்தார்.

    இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா மேலும் ஒரு சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது.

    ரோகித் சர்மா சர்வதேச போட்டிகளில் இதுவரை 398 சிக்சர்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டியில் 232 சிக்சர்களும், டெஸ்டில் 51 சிக்சர்களும், 20 ஓவர் ஆட்டத்தில் 115 சிக்சர்களும் அடித்துள்ளார்.

    இன்னும் 2 சிக்சர் அடித்தால் அவர் 400 சிக்சர்களை தொட்டு புதிய சாதனை நிகழ்த்துவார். இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா இந்த சாதனையை படைப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    400 சிக்சர் அடித்தால் அவர் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். சர்வதேச அளவில் 3-வது இடத்தை பிடிப்பார்.

    வெஸ்ட் இண்டீசை சேர்ந்த கிறிஸ் கெய்ல் 534 சிக்சர்களுடன் முதல் இடத்திலும், பாகிஸ்தானை சேர்ந்த அப்ரிடி 426 சிக்சர்களுடன் இரண்டாது இடத்திலும் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா 100-வது போட்டியில் விளையாடிய முதல் இந்தியன் என்ற சாதனையை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
    Next Story
    ×