என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்திய கிரிக்கெட்டின் எந்த காலக்கட்டத்திலும் அனில் கும்ப்ளேதான் மிகப்பெரிய மேட்ச் வின்னர் என்று விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியில் சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்‌ஷ்மண் மற்றும்  கங்குலி ஆகியோர் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களாக திகழ்ந்தனர். இவர்கள் காலத்தில் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே மாயாஜால பந்து வீச்சால் இந்திய அணிக்கு வெற்றிகளை தேடிக்கொடுத்தார்.

    விவிஎஸ் லக்‌ஷ்மணிடம் இந்திய அணியின் எந்த காலக்கட்டத்திலும் மிகப்பெரிய மேட்ச் வின்னர் யார் என்று கேட்கப்பட்டது.

    அதற்கு விவிஎஸ் லக்‌ஷ்மண் ‘‘என்னுடைய நண்பர் அனில் கும்ப்ளேதான் இந்தியாவின் மிகப்பெரிய மேட்ச் வின்னர். நான் விளையாடியபோது மிகப்பெரிய மேட்ச் வின்னராக திகழ்ந்தார்’’ என்றார்.
    இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் கிரிக்கெட் விளையாட்டு நடைபெற வேண்டும். இது ஆஷஸ் தொடரை விட பெரியது என முஷ்டாக் அகமது தெரிவித்துள்ளார்.
    இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருநாட்டு கிரிக்கெட் தொடர் 2012-க்குப் பிறகு நடைபெறவில்லை. இரு அணிகளும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் கடைசியாக 2012-ல் மோதியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 2007-ல் மோதியது.

    ஐசிசி நடத்தும் தொடர்களிலும், ஆசிய கோப்பையிலும் விளையாடி வருகின்றன. இந்நிலையில் இருநாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் மீண்டும் நடைபெற வேண்டும். இது ஆஷஸ் தொடரை விட மிகப்பெரியது என்று பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முஷ்டாக் அகமது தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முஷ்டாக் அகமது கூறுகையில் ‘‘இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருதரப்பு கிரிக்கெட் தொடர் மீண்டும் நடைபெற வேண்டும். கிரிக்கெட்டால் இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்பு முன்னேற்றம் அடையும் என நினைக்கிறேன். கிரிக்கெட் அன்பை கொடுக்கும். அது சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் ரசிகர்களுக்கு வழங்குகிறது.

    ஒவ்வொருவரை எதிர்த்து விளையாடுவது இரண்டு அணிகளுக்கும் முக்கியமானது. ஏனென்றால், அவர்கள் விளையாடுவதை ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

    இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போதெல்லாம் கிரிக்கெட் மிகப்பெரிய போட்டியாக விளங்குகிறது. உண்மையிலேயே ஆஷஸ் தொடரை விட இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மிகப்பெரியது’’ என்றார். 
    தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மான்சி சூப்பர் லீக் டி20 கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர் இரண்டு கைகளாலும் பந்து வீசி விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    தென்ஆப்பிரிக்காவில் மான்சி சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் கேப் டவுன் பிளிட்ஸ் - டர்பன் ஹீட் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த கேப் டவுன் பிளிட்ஸ் 174 ரன்கள் குவித்தது. பின்னர் 75 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டர்பன் ஹீட் அணி களம் இறங்கியது. 8-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் மலோக்வானா வீசினார். இந்த ஓவரின் 7.2-வது பந்தை அவர் வலது கையால் வீசினார். பந்தை எதிர்கொண்ட இடது கை பேட்ஸ்மேன் எர்வீ மிட் ஆஃப் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    10-வது ஓவரை மலோக்வானா வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை இடது கையால் வீசினார். பந்தை எதிர்கொண்ட வலது கை பேட்ஸ்மேன் விலாஸ் 8 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டானார்.

    இந்த போட்டியில் கேப் டவுன் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சாளரான மலோக்வானா இரண்டு கைகளாலும் பந்து வீசியதோடு, விக்கெட்டுக்களையும் வீழ்த்தி அனைவரது பார்வையையும் ஈர்த்துள்ளார்.
    டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் மிகவும் சிறப்பாக பந்து வீசுவதில் முகமது ஷமி முன்னிலை வகிக்கிறார்.
    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இந்தூரில் நடைபெற்றது. இதில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும்  130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் இந்திய ஆடுகளத்தில் சமீப காலமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசி வருகின்றனர்.

    குறிப்பாக முகமது ஷமி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் நான்கு விக்கெட்டும் வீழ்த்தினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் முகமது ஷமி 2-வது இன்னிங்சில் அசத்தி வருகிறார்.

    முகமது ஷமி

    அவர் 20 இன்னிங்சில் 51 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். சராசரி 17. ஸ்டிரைக் ரேட் 32.2. 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை 2-வது இன்னிங்சில் 25 விக்கெட்டுக்களுக்கு மேல் வீழ்த்தியவர்களில் இவர்தான் கிங்.

    பேட் கம்மின்ஸ் 48 விக்கெட்டுக்களும், தென்ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா 34 விக்கெட்டுக்களும், ஜடேஜா 32 விக்கெட்டுக்களும், பும்ரரா 29 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளனர்.
    ஐபிஎல் தொடரில் பும்ரா - டிரென்ட் போல்ட் ஜோடி அபாயகரமான ஜோடியாக திகழும் என்று மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் கொல்கத்தாவில் நடக்கிறது. இதற்கு முன் ஒவ்வொரு அணிகளும் தாங்கள் விரும்பும் வீரர்களை வெளியேற்றவும், மற்ற அணிகளில் இருந்து வாங்குவதற்கவுமான நடைமுறைக்கான காலக்கெடு கடந்த வாரம் முடிவடைந்தது.

    இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்த டிரென்ட் போல்ட்-ஐ மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. டிரென்ட் போல்ட் பும்ரா உடன் இணைந்து பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஜோடி மிகவும் அபாயகரமானதாக இருக்கும் என்று மும்பை இந்தியன்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜெயவர்தனே கூறுகையில் ‘‘ஜேசன் பெரெண்டர்ஃப் அணியில் வைத்து எப்படி செயல்படுத்துவது என்பது எங்களுக்கு மிகப்பெரிய கவலையாக இருந்தது. அவருக்குப் பதிலாக மாற்று வீரரை தேட வேண்டியிருந்தது. கடந்த முறை எங்களுக்காக பெரெண்டர்ஃப் சிறப்பாக விளையாடியிருந்தார்.

    டெல்லி அணி டிரென்ட் போல்ட்-ஐ ரிலீஸ் செய்கிறது என்ற செய்தி வந்தபோது, அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர் என நாங்கள் உணர்ந்தோம். பும்ரா உடன் இணைந்து அவர் பந்து வீசினால், இந்த ஜோடி மிகவும் அபாயகரமானது’’ என்றார்.
    தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் சுவிட்சர்லாந்து மற்றும் டென்மார்க் அணிகள் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
    டூப்ளின்:

    உலககோப்பை கால்பந்து போட்டிக்கு அடுத்து பிரபலம் பெற்றது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியாகும்.

    4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப்போட்டி நடைபெற்று வருகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டு பிரான்சில் நடந்த போட்டியில் போர்ச்சுக்கல் சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி இறுதிப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தியது.

    16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் ஷிப் போட்டி (யூரோ) அடுத்த ஆண்டு (2020) ஜூன் 12-ந்தேதி முதல் ஜூலை 12-ந்தேதி வரை நடக்கிறது.

    முதல் முறையாக 12 நாடுகள் இந்தப்போட்டியை நடத்துகின்றன. இந்தப்போட்டியில் மொத்தம் 24 நாடுகள் பங்கேற்கின்றன. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 55 அணிகள் 10 பிரிவாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றன.

    ‘டி’ குரூப்பில் நடந்த ஆட்டம் ஒன்றில் சுவிட்சர்லாந்து- ஜிப்ரால்டர் அணிகள் மோதின. இதில் சுவிட்சர்லாந்து அணி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் சுவிட்சர்லாந்து அந்த பிரிவில் 5 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 17 புள்ளிகள் பெற்று தகுதி பெற்றது. 4-வது முறையாக அந்த அணி முன்னேறி உள்ளது.

    டூப்ளின் நகரில் நடந்த ஆட்டத்தில் டென்மார்க்- அயர்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. இதன்மூலம் டென்மார்க் 16 புள்ளியுடன் தகுதி பெற்றது. அந்த அணி 8-வது முறையாக நுழைந்துள்ளது.

    ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கு இதுவரை 19 அணிகள் தகுதி பெற்றுள்ளன. அதன் விவரம்:-

    பெல்ஜியம், இத்தாலி, ரஷியா, போலந்து, உக்ரைன், ஸ்பெயின், பிரான்ஸ், துருக்கி, இங்கிலாந்து, செக்குடியரசு, பின்லாந்து, சுவீடன், குரோஷியா, ஆஸ்திரியா, நெதர்லாந்து, ஜெர்மனி, போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து, டென்மார்க்.
    சக வீரரை அடித்த வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைனை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்தது.
    டாக்கா:

    தேசிய கிரிக்கெட் லீக் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் டாக்கா மண்டலம்-குல்னா மண்டலம் அணிகள் இடையிலான ஆட்டம் குல்னாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாக்கா மண்டல அணிக்காக விளையாடி வரும் வங்காளதேச அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைன், நேற்று முன்தினம் சக வீரர் அராபத் சன்னியை கோபத்தில் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். தனது பந்து வீச்சு திறமை குறித்து அராபத் சன்னி குறை கூறியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து புகார் வந்ததும் வங்காளதேச கிரிக்கெட் வாரியம் ஷகாதத் ஹூசைனை உடனடியாக இடைநீக்கம் செய்தது. அவர் வீடு திரும்பினார். ஷகாதத் ஹூசைனுக்கு ஒரு ஆண்டு தடை மற்றும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக வங்காளதேச கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 33 வயதான ஷகாதத் ஹூசைன் வங்காளதேச அணிக்காக 38 டெஸ்ட், 51 ஒருநாள் மற்றும் 6 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார்.



    போட்டி தொடங்குவதற்கு முன் அணியில் இடம் பிடித்திருந்த 11 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்ட வீராங்கனைக்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் 2-ந்தேதி ஹோபர்ட் ஹரிகேன்ஸ் - சிட்னி தண்டர்ஸ் அணிகள் விளையாட இருந்தது. இந்த போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே, ஹரிகேன்ஸ் அணியைச் சேர்ந்த எமிலி ஸ்மித் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

    இது ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டின் ஊழல் தடுப்பு பிரிவிற்கு எதிரானது என்று ஓராண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் பிக் பாஷ் லீக், அதனைத் தொடர்ந்து பெண்களுக்கான தேசிய கிரிக்கெட் லீக்கிலும் விளையாட முடியாது.
    போட்டியில் வெற்றி பெறுவதற்கு ஆர்சிபி விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் ஆகியோரை மட்டுமே நம்பி இருக்க முடியாது என மொயீன் அலி தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் தொடரில் விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 12 வீரர்களை அதிரடியாக வெளியேற்றியுள்ளது. அதில் ஸ்டெயின், சவுத்தி, கவுல்டர்-நைல் ஆகிய முக்கிய பந்து வீச்சாளர்களாவார்கள். இவர்களுடன் மார்கஸ் ஸ்டாய்னிஸ், கொலின் டி கிராண்ட்ஹோம் ஆகியோரையும் வெளியேற்றியுள்ளது.

    விராட் கோலி, டி வில்லியர்ஸ் ஆகிய இருவர்கள்தான் பேட்டிங்கில் ஆர்சிபி அணியின் முதுகெலும்பாக உள்ளனர். மூன்று முறை ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு நுழைந்த போதிலும் கோப்பையை வெல்ல முடியவில்லை.

    இந்நிலையில் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளரான மொயீன் அலி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமென்றால், விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் ஆகியோரை மட்டுமே சார்ந்து இருக்க முடியாது தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மொயீன் அலி கூறுகையில் ‘‘எங்களுக்கு நல்ல தொடக்கம் தேவை. நாங்கள் எப்போதுமே தொடரை மெதுவாக தொடங்குகிறோம் என்று நினைக்கிறேன். சொந்த மைதானத்தில் விளையாடும்போது எங்களுக்கு தைரியம் தேவை. பெங்களூர் ஆடுகளம் மிகவும் சிறந்தது. பவுண்டரி லைன் மிகச் சிறியது. இது பந்து வீச்சாளர்களுக்கு கடினமாக இருக்கும்.

    மொயீன் அலி, விராட் கோலி

    எங்கள் அணியின்  வெற்றிக்கு விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரை மட்டுமே சார்ந்து இருக்க முடியாது. பேட்டிங்கில் என்னைப் போன்ற வீரர்கள், சிறப்பாக பேட்டிங் செய்து அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும்’’ என்றார்.
    ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் பந்தை சேதப்படுத்தி தடைக்குள்ளான நிக்கோலஸ் பூரனுக்கு ஸ்மித் ஆதரவு தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த வீரரான ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார். ஓராண்டு தடைக்குப்பின் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ளார். முதல் தொடரான ஆஷஸில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இதற்கிடையில் ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய ஆட்டத்தின்போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் பந்தை சேதப்படுத்தியது தெரிய வந்தது. இதனால் அவருக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த பிரச்சினையில் இருந்து மீண்டு வலுவான வீரராக வருவார் என ஸ்மித் நிக்கோலஸ் பூரனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

    நிக்கோலஸ் பூரன் குறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் ‘‘ஒவ்வொருவரும் மாறுபட்டவர்கள். அதேபோல் ஒவ்வொரு கிரிக்கெட் போர்டும் மாறுபட்டது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை அவரவர் வழிகளில் கையாள்வார்கள். என்னைப் பொறுத்த வரைக்கும், முகத்தில் அறையப்பட்டு அதை எதிர்கொண்டேன்.

    எனக்கு நிக்கோலஸ் பற்றி தெரியும். அவருடன் சிறிய காலம் கிரிக்கெட் விளையாடியுள்ளேன். அவர் திறமையான வீரர். அவருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. அவர் தவறில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, அதில் இருந்து கடந்து செல்வார் என நினைக்கிறேன்.

    நான் இந்த விஷயத்தை கடினமாக உணர்ந்ததில்லை. நான் கடந்த காலத்தில் இருந்து விலகி வந்துவிட்டேன். தற்போது வரவிருக்கும் கிரிக்கெட் போட்டிகள் மீது கவனம் செலுத்துகிறேன்.

    கரிபீயன் பிரிமீயர் லீக்கில் பூரனுடன் விளையாடியுள்ளேன். ஒயிட் பால் கிரிக்கெட்டில் அவர் ஒரு தலைசிறந்த வீரராக இருக்கப்போகிறார் என்று நினைக்கிறேன்’’ என்றார்.
    எம்எஸ் டோனி சொன்ன அந்த ஒரு வார்த்தையால்தான் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் என்னுடைய சதம் பறிபோனது என்று கவுதம் காம்பீர் நினைவு கூர்ந்துள்ளார்.
    இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்தியா வென்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    சேவாக்,  தெண்டுல்கர் ஏமாற்றம் அளித்த நிலையில் கவுதம் காம்பிர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 122 பந்தில் 97 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்ததார்.

    நான் சதம் அடிக்காமல் போனதற்கு, அந்த ஓவருக்கு முன் எம்எஸ் டோனி என்னிடம் ஞாபகம் படுத்திய அந்த ஒரு வார்த்தைதான் என காம்பிர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நான் 97 ரன்கள் எடுத்திருக்கும் போது என்ன நிகழ்ந்தது என்ற கேள்வியை பலமுறை கேட்டிருக்கிறேன். நான் ஒவ்வொருவருக்கும் சொன்னது, 97 ரன்கள் எடுப்பதற்கு முன், என்னுடைய தனிப்பட்ட ஸ்கோரை நான் நினைத்தது கிடையாது. ஆனால், இலங்கைக்கு எதிரான டார்கெட்டை மட்டுமே நினைத்திருந்தேன் என்பதுதான்.

    தற்போது அவுட்டானதற்கு முந்தைய ஓவரில் நான் நடந்ததை நினைத்து பார்க்கிறேன். அப்போது டோனி என்னிடம் இன்னும் மூன்று ரன்கள் இருக்கிறது. மூன்று ரன்கள் அடித்தால் உங்களுடைய சதம் பூர்த்தியாகும் என்று கூறினார்.

    உங்களது மனநிலை திடீரென தனிப்பட்ட ஆட்டம் நோக்கி செல்லும்போது, உங்களுக்கு படபடப்பு ஏற்படும். அதற்கு முன்பு வரை இலங்கை நிர்ணயித்த டார்கெட்டை எட்ட வேண்டும் என்று நினைப்பு இருந்தது. இந்த ஒரு நினைப்பு மட்டுமே இருந்திருந்தால், ஒருவேளை நான் எளிதாக சதம் அடித்திருக்கலாம்.

    கவுதம் காம்பிர், எம்எஸ் டோனி

    97 ரன்கள் எடுத்திருக்கும் வரை நிகழ்காலத்தில் இருந்தேன். ஆனால், உடனடியாக 100 ரன்களுக்கு இன்னும் மூன்று ரன்கள்தான் இருக்கிறது என்பதை நான் நினைத்த உடன், படபடப்பு தொற்றிக் கொண்டது.

    நான் அவுட்டாகி வீரர்கள் அறைக்கு திரும்பும்போது எனக்குள்ளே நான் சொல்லிக் கொண்டது, எஞ்சிய வாழ்நாள் முழுவதும் இந்த மூன்று ரன்கள் பெரிய பிரச்சினையாக இருக்கும் என்பதுதான். அது உண்மையானது. தற்போது கூட, நீங்கள் ஏன் அந்த மூன்று ரன்களை எட்ட முடியவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள். இதனால் இந்த விஷயத்தை நினைவு கூர்ந்து சொல்வது முக்கியமாக இருந்தது’’ என்றார்.
    கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சர்பராஸ் அகமது உள்நாட்டு தொடரில் சிறப்பாக விளையாடினால் பாகிஸ்தான் அணிக்கு திரும்பலாம் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் சர்பராஸ் அகமது. டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் கேப்டனில் பதவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில், அணியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

    இந்நிலையில் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடவில்லை. உள்நாட்டு போட்டியில் சிறப்பாக விளையாடினால் அணியில் மீண்டும் அவருக்கு இடம் உண்டு என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் புரவலராக இருக்கும் இம்ரான் கான் இதுகுறித்து கூறுகையில் ‘‘டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதை வைத்து வீரரின் ஆட்டம் மற்றும் ஃபார்ம்-ஐ நிர்ணயிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் சரியானது. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் சர்பராஸ் அகமதுவால் மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு திரும்ப முடியும்’’ என்றார்.
    ×