
சேவாக், தெண்டுல்கர் ஏமாற்றம் அளித்த நிலையில் கவுதம் காம்பிர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 122 பந்தில் 97 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்ததார்.
நான் சதம் அடிக்காமல் போனதற்கு, அந்த ஓவருக்கு முன் எம்எஸ் டோனி என்னிடம் ஞாபகம் படுத்திய அந்த ஒரு வார்த்தைதான் என காம்பிர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நான் 97 ரன்கள் எடுத்திருக்கும் போது என்ன நிகழ்ந்தது என்ற கேள்வியை பலமுறை கேட்டிருக்கிறேன். நான் ஒவ்வொருவருக்கும் சொன்னது, 97 ரன்கள் எடுப்பதற்கு முன், என்னுடைய தனிப்பட்ட ஸ்கோரை நான் நினைத்தது கிடையாது. ஆனால், இலங்கைக்கு எதிரான டார்கெட்டை மட்டுமே நினைத்திருந்தேன் என்பதுதான்.
தற்போது அவுட்டானதற்கு முந்தைய ஓவரில் நான் நடந்ததை நினைத்து பார்க்கிறேன். அப்போது டோனி என்னிடம் இன்னும் மூன்று ரன்கள் இருக்கிறது. மூன்று ரன்கள் அடித்தால் உங்களுடைய சதம் பூர்த்தியாகும் என்று கூறினார்.

97 ரன்கள் எடுத்திருக்கும் வரை நிகழ்காலத்தில் இருந்தேன். ஆனால், உடனடியாக 100 ரன்களுக்கு இன்னும் மூன்று ரன்கள்தான் இருக்கிறது என்பதை நான் நினைத்த உடன், படபடப்பு தொற்றிக் கொண்டது.
நான் அவுட்டாகி வீரர்கள் அறைக்கு திரும்பும்போது எனக்குள்ளே நான் சொல்லிக் கொண்டது, எஞ்சிய வாழ்நாள் முழுவதும் இந்த மூன்று ரன்கள் பெரிய பிரச்சினையாக இருக்கும் என்பதுதான். அது உண்மையானது. தற்போது கூட, நீங்கள் ஏன் அந்த மூன்று ரன்களை எட்ட முடியவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள். இதனால் இந்த விஷயத்தை நினைவு கூர்ந்து சொல்வது முக்கியமாக இருந்தது’’ என்றார்.