search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி வில்லியர்ஸ்"

    • விராட் கோலி அந்த வரிசையை ஏற்கலாம் என்று சில வதந்திகளை கேள்விபட்டுள்ளேன்.
    • விராட் கோலி தனது இடமான 3-வரிசையை விரும்புவதை நாங்கள் அறிவோம்.


    புதுடெல்லி:

    ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியாவில் தொடங்க இன்னும் 41 தினங்களே உள்ளன.

    ஆனால் இந்திய அணிக்கு இதுவரை 4-வது வரிசையில் விளையாடக்கூடிய வீரர் உறுதியாக அடையாளம் காணப்படவில்லை.

    இந்த நிலையில் 4-வது வரிசையில் ஆடுவதற்கு விராட் கோலி பொருத்தமானவர் என்று தென்ஆப்ரிக்க அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணிக்கு "நம்பர்-4" பேட்ஸ்மேன் யார்? என்று இன்னும் பேசிக் கொண்டு இருக்கிறோம். விராட் கோலி அந்த வரிசையை ஏற்கலாம் என்று சில வதந்திகளை கேள்விபட்டுள்ளேன். அதற்கு நான் மிகப்பெரிய ஆதரவை தெரிவிப்பேன்.

    4-வது வரிசையில் ஆடுவதற்கு விராட் கோலி பொருத்தமானவர் என்று நினைக்கிறேன். நிலைத்து நின்று விளையாடக்கூடிய அவரால் தான் மிடில் ஆர்டரில் எந்த வரிசையிலும் ஆட முடியும்.

     

    ஆனால் அவர் அதை செய்ய விரும்புகிறாரா? என்று எனக்கு தெரிய வில்லை. விராட் கோலி தனது இடமான 3-வரிசையை விரும்புவதை நாங்கள் அறிவோம். அந்த வரிசையில் தான் அவர் தனது அனைத்து ரன்களையும் குவித்தார்.

    அதே நேரத்தில் அணிக்கு என்ன தேவை என்று கருதினாலும் நாம் அதற்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    34 வயதான விராட் கோலி ஒருநாள் போட்டியில் 4-வது வரிசையில் 39 ஆட்டததில் விளையாடி 1,767 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 55.21 ஆகும். அதிகபட்சமாக 139 ரன் எடுத்துள்ளார். இந்த வரிசையில் 7 சதமும், 8 அரை சதமும் அடித்துள்ளார்.

    விராட் கோலி 3-வது வரிசயைில் 210 ஆட்டத்தில் 39 சதத்துடனும், 55 அரை சதத்துடனும், 10,777 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 60.20 ஆகும். அதிகபட்சமாக 183 ரன் குவித்துள்ளார்.

    ஒட்டுமொத்தத்தில் அவர் 275 ஆட்டத்தில் 12,898 ரன் எடுத்துள்ளார். சராசரி 57.32 ஆகும். 46 சதமும், 65 அரை சதமும் அடங்கும். விராட் கோலியும், டி வில்லியர்சும் ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    விராட் கோலி 4-வது வரிசையில் ஆடும் பட்சத்தில் ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஆகியோரில் ஒருவர் 3-வது வீரராக ஆடலாம்.

    காயத்துக்காக ஆபரேசன் செய்து கொண்ட இருவரும் அதில் இருந்து மீண்டு உடல் தகுதி பெற்றதால் ஆசிய கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆசிய கோப்பை போட்டியில் அணியின் நிலை பொறுத்தே உலக கோப்பைக்கு 4-வது வரிசை இறுதி செய்யப்படும். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான், இலங்கையில் இந்த போட்டி நடக்கிறது.

    ×