என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்டில் டிராவிஸ் ஹெட் சதம் அடிக்க ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 467 ரன்கள் குவித்தது.
    • டேவிட் வார்னர் 41, லாபஸ்சாக்னே 63, ஸ்மித் 85, டிம் பெய்ன் 79
    •  நீல் வாக்னர் 4 விக்கெட், டிம் சவுத்தி 3 விக்கெட், கிராண்ட்ஹோம் 2 விக்கெட்
    •  கேன் வில்லியம்சன் 15 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம்
    ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மெல்போர்னில் நேற்று தொடங்கியது. ‘பாக்சிங் டே’ டெஸ்டான இதில் நியூசிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வை செய்தது.

    மார்னஸ் லாபஸ்சாக்னே (63), ஸ்டீவ் ஸமித் (77 அவுட் இல்லை) ஆகியோரின் அரைசதத்தால் ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் சேர்த்தது. ஸ்டீவ் ஸ்மித் 77 ரன்னுடனும், டிராவிஸ் ஹெட் 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து டிராவிஸ் ஹெட் உடன் கேப்டன் டிம் பெய்ன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். மறுமுனையில் டிம் பெய்ன் அரைசதம் அடித்தார்.

    தொடர்ந்து விளையாடிய டிராவிஸ் ஹெட் 114 ரன்களிலும், டிம் பெய்ன் 79 ரன்களிலும் வெளியேற ஆஸ்திரேலியா 155.1 ஓவரில் 467 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து அணி சார்பில் நீல் வாக்னர் 4 விக்கெட்டும், டிம் சவுத்தி 3 விக்கெட்டும், கிராண்ட்ஹோம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. டாம் லாதம், பிளண்டல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிளண்டல் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 9 ரன்னில் வெளியேறினார். இதனால் நியூசிலாந்து 39 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது.

    ஸ்மித் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் நீல் வாக்னர்

    3-வது விக்கெட்டுக்கு டாம் லாதம் உடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.

    நியூசிலாந்து 2-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்துள்ளது. நாளைய 3-வது நாள் முழுவதும் தாக்குப்பிடித்து விளையாடினால் நியூசிலாந்து இந்த போட்டியில் தோல்வில் இருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது.
    இந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுக்கள் வீழ்த்திய 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஸ்டூவர்ட் பிராட்.
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா நேற்றைய முதலாவது ஆட்டத்தின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 277 ரன் எடுத்து இருந்தது. குயிண்டன் டி காக் அதிகபட்சமாக 95 ரன் எடுத்தார். சாம் கர்ரன் 4 விக்கெட்டும் ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டும், ஆண்டர்சன், ஆர்சர் தலா 1 விக்கெட்டும். கைப்பற்றினார்கள்.

    3 விக்கெட் கைப்பற்றியதன் மூலம் இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் புதிய சாதனை படைத்தார். அவர் கடந்த 10 ஆண்டுகளில் 400 டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார். 400 விக்கெட்டை எடுத்த 2-வது வீரர் ஆவார்.

    இங்கிலாந்தை சேர்ந்த மற்றொரு வேகப்பந்து வீரர் ஆண்டர்சன் 428 விக்கெட் எடுத்துள்ளார். ஸ்டூவர்ட் பிராட் 401 விக்கெட்டுடன் அதற்கு அடுத்த நிலையில் உள்ளார்.

    நாதன் லயன் (ஆஸ்திரேலியா) 376 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும், ஹெராத் (இலங்கை) 363 விக்கெட்டுடன் 4-வது இடத்திலும், அஸ்வின் (இந்தியா) 362 விக்கெட்டுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
    இந்திய முன்னணி குத்துச்சண்டை வீரர் சுமித் சாங்வான் ஊக்கமருந்து பரிசோதனையில் தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது தெரிய வந்ததால், அவருக்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஆசிய விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்திய முன்னணி குத்துச்சண்டை வீரர் சுமித் சாங்வானிடம் கடந்த அக்டோபர் மாதம் நடந்த ஊக்கமருந்து பரிசோதனையில் தடை செய்யப்பட்ட மருந்தை அவர் பயன்படுத்தியது தெரிய வந்தது.

    2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்றவரான அவருக்கு ஓராண்டு தடைவிதித்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

    சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையை 4- 3 என்ற கணக்கில் மீண்டும் வீழ்த்திய கோவா புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது.
    சென்னை:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    சென்னையின் நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 46-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, எப்.சி.கோவாவை சந்தித்தது.

    ஆட்டத்தின் 26-வது நிமிடத்தில் கோவா அணியின் அஹமது ஜாவோ ஒரு கோலும், பிராண்டன் பெமண்டிஸ் 41-வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்தனர். தொடர்ந்து, 46வது நிமிடத்தில் ஹியூகோ பவ்மஸ் ஒரு கோல் அடித்தார்.

    இதனால் முதல் பாதி முடிவில் கோவா அணி 3-0 என முன்னிலை வகித்தது. 

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சென்னை அணியின் ஆண்ட்ரி செம்பிரி 57-வது நிமிடத்திலும், ரபெல் கிரிவல்லாரோ 59-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

    கோவா அணியின் பெரான் கரோமினாஸ் 63வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் கோவா அணி 4-2 என முன்னிலை பெற்றது.

    ஆட்டத்தின் இறுதியில் 91-வது நிமிடத்தில் சென்னை அணியின் ரபெல் கிரிவல்லாரோ மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், கோவா அணி 4-3 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப் சி அணியை மீண்டும் வீழ்த்தியது. இந்த வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் கோவா அணி முதலிடம் பிடித்துள்ளது.
    செஞ்சூரியனில் தொடங்கிய பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில், டி காக்கின் பொறுப்பான ஆட்டத்தால் முதல் நாள் முடிவில் தென்ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது.

    செஞ்சூரியன்:

    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் டீன் எல்கர், மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    முதல் ஓவரை ஆண்டர்சன் வீசினார். முதல் பந்திலேயே டீன் எல்கர் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். சீரான இடைவெளியில் தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் ஆட்டமிழந்தனர்.

    இதனால் அந்த அணி 111 ரன்களை எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அப்போது இறங்கிய டி காக் ஓரளவு தாக்குப் பிடித்து ஆடி அரை சதமடித்தார்,

    சதமடிப்பார் என எண்ணிய நிலையில் 95 ரன்னில் டி காக் அவுட்டானார். சுபைர் ஹம்சா 39 ரன்னும், டுவைன் பெரெடோரியஸ் 33 ரன்னும் எடுத்தனர்.

    முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 82.4 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. பிளெண்டர் 28 
    ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்து சார்பில் சாம் கரன் 4 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட்  3 விக்கெட்டும், ஆண்டர்சன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விரும்பியதால் அந்த அணிக்காக விளையாட இருக்கிறேன் என ரகானே தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் ரகானே. தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார். அதில் துணைக் கேப்டனாக உள்ளார். ஐபிஎல் சீசனில் ரகானே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.

    நீண்ட காலமாக அணிக்காக விளையாடி வந்த அவர், 2020 சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாறியுள்ளார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாறியது ஏன் என்பது குறித்து ரகானே கூறுகையில் ‘‘எனது மனதில் அடுத்த அணிக்காக விளையாட வேண்டும் போன்ற எந்த சிந்தனையும் உதிக்கவில்லை. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, அவர்களுக்காக நான் விளையாட வேண்டும் என்று விரும்பியது.

    கற்றுக் கொள்ளவும், ஒரு வீரராக வளரவும் கிடைத்த வாய்ப்பு என்று எண்ணினேன். நீண்ட வருடமாக விளையாட வாய்ப்பு கொடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நன்றி சொல்லியாக வேண்டும். 2019 சீசன் மத்தியில் நடந்த சம்பவங்கள் எனக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

    கிரிக்கெட் எப்போதுமே டீம் ஸ்போர்ட் என்று நம்புகிறவன் நான். ஒரு வீரரின் தவறால் நீங்கள் தோல்வியடைய மாட்டீர்கள். அதேபோல், ஒரு வீரரின் சிறந்த ஆட்டத்தால் வெற்றி பெற முடியாது. நீங்கள் என்னை குற்றம்சாட்ட நினைத்தால், அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

    கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய பின்னர், என்னுடைய நெருக்கமான நண்பர்களிடம் உட்கார்ந்திருந்தேன். ஆனால், கேப்டன் பதவி குறித்து எந்த விஷயத்தையும் நான் பேசவில்லை. நான் எப்படி பேட்டிங் செய்யனும், செய்ய வேண்டும் என்பது குறித்து முடிவு செய்தேன். ஆக்ரோஷமான ஆட்டத்தை நேர்மறையாக சிந்தனையுடன் விளையாட வேண்டும் என்ற நோக்கத்துடன் களம் இறங்கினேன். அதனடிப்படையில் என்னுடைய ஆட்டம் வெளிப்பட்டது’’ என்றார்.
    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள லோகேஷ் ராகுல் உச்சத்திற்கான வளர்ச்சியை அடைவார் என அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த அஸ்வின், அதில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அஸ்வின் டெல்லி அணிக்கு சென்றுள்ளார். கடந்த இரண்டு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அவரை ஏன் கேப்டனாக நியமித்தோம் என்பது குறித்து அந்த அணியின் கிரிக்கெட் டைரக்டரான அனில் கும்ப்ளே விளக்கம் அளித்துள்ளார்.

    லோகேஷ் ராகுல் குறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘அணியை கட்டமைக்க இந்திய வீரர் ஒருவர் கேப்டனாக இருந்தால் சிறப்பானதாக இருக்கும் என நான் கருதினேன். அணியில் உள்ள வீரர்களில் கேஎல் ராகுல்தான் அதற்கு சரியான நபராக இருப்பார் என தீர்மானித்தேன்.

    கடந்த இரண்டு வருடமாக அவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பிடித்து விளையாடியிருக்கிறார். பஞ்சாப் அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். மற்ற வீரர்களின் மரியாதையை சம்பாதித்துள்ளார். டி20-யில் அவர் எங்களுக்கு சிறந்த வீரர்.

    நான் அவரை கிங்ஸ் லெவன் அணியின் கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கவில்லை. அவருடைய தனிப்பட்ட வளர்ச்சியில் சிறப்பாக இருக்கும். கேப்டன் பதவியை ஏற்பதற்கு அவருக்கு இது சரியான நேரம்.

    ஏனென்றால், இந்த பதவி அவரை ஒரு மனிதராக, உச்சத்தை தொடுவதற்கான வளர்ச்சி, ஒரு தலைவராக உதவியாக இருக்கும். டி20 கிரிக்கெட் மட்டுமல்ல, அனைத்து வகை கிரிக்கெட்டையும் புரிந்துகொள்ள அவருக்கு உதவியாக இருக்கும்’’ என்றார்.
    விராட் கோலி கிரிக்கெட் போட்டிக்கு அறிமுகம் ஆகியபோது எடுத்த போட்டோவையும், தற்போதுள்ள போட்டோவையும் வெளியிட்டு அற்புதமான மாற்றம் என பதிவிட்டுள்ளார்.
    மூன்று வகை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி உள்ளார். தனது அபாரமான ஆட்டத்தால் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார்.

    இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். அதன்பின் 2010-ல் டி20- கிரிக்கெட்டிலும், 2011-ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகம் ஆனார்.

    11 வருடத்திற்கு முன் U-19 உலகக்கோப்பை தொடரில் விளையாடிய பின், 20 வயதில் சர்வதேச கிரிக்கெட்டிற்கு வரும்போது அரும்பிய மீசை, தாடியுடன் அமுல்பேபி போன்று காட்சியளித்தார்.

    தற்போது கடும் உடற்பயிற்சியின் மூலம் உடலை பிட் ஆக வைத்திருப்பதுடன், ட்ரிம் செய்த தாடியுடன் காட்சியளிக்கிறார்.

    இந்நிலையில் அப்போதைய படத்தையும், தற்போதைய படத்தையும் வெளியிட்டு அற்புதமான மாற்றம். நீங்களும் இதேபோன்று உங்களுடைய புகைப்படங்களை உலகிற்கு வெளியிடத் தயாரா? என்று ஜடேஜா மற்றும் ரெய்னாவிடம் கேட்டுள்ளார் விராட் கோலி. ஜடேஜா கோலியுடன் U-19 உலகக்கோப்பையில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    செஞ்சூரியன் டெஸ்டில் முதல் பந்தில் அவுட்டானதன் மூலம் 21 வருட விரும்பத்தகாத சாதனையில் இணைந்துள்ளார் டீன் எல்கர்.
    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் டீன் எல்கர், மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஆண்டர்சன் வீசினார். முதல் பந்திலேயே டீன் எல்கர் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    இதன்மூலம் கேரி கிர்ஸ்டனுக்குப் பிறகு 21 ஆண்டுகளில் கழித்து முதல் பந்தில் ஆட்டமிழந்த தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார் டீன் எல்கர்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக கேப் டவுனில் நடைபெற்ற போட்டியில் கேரி கிர்ஸ்டன் அம்புரோஸ் பந்தில் ஆட்டமிழந்துள்ளார். மேலும், ஜிம்மி குக், எட்டி பார்லோ ஆகியோரும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்துள்ளனர்.
    இந்திய தேர்வுக்குழு உறுப்பினராக உள்ள தேவங் காந்தி பெங்கால் அணி வீரர்கள் அறையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
    பெங்கால் - ஆந்திரா அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

    இதில் 2-ம் நாளான இன்று  இந்திய அணித் தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவரான தேவங் காந்தி பெங்கால் வீரர்கள் ஓய்வறையில் நுழைந்தார். ஆனால் அவர் அனுமதியின்றி நுழைந்ததாகக் கூறி பிசிசிஐ அதிகாரிகள் வெளியேற்றினர்.

    தேவங் காந்தி ஓய்வறையில் இருந்ததையடுத்து பெங்கால் வீரர்கள் மற்றும் முன்னாள் கேப்டன் மனோஜ் திவாரி உட்பட ஊழல் தடுப்பு நடைமுறை குறித்து கேள்வி எழுப்பி தேவங் காந்தி எப்படி அனுமதிக்கப்பட்டார் என்று கேட்டனர். விதிமுறைகளின்படி போட்டிக்குத் தேர்வான வீரர்கள், உதவிப் பணியாளர் தவிர ஓய்வறையில் யாரும் இருக்கக் கூடாது.

    ‘‘நாம் நடைமுறை விதிகளைக் கடைபிடிக்க வேண்டும். தேசிய அணித்தேர்வாளருக்கு ஓய்வறையில் வேலையில்லை. இவர் அனுமதியின்றி உள்ளே வரக்கூடாது’’ என்று மனோஜ் திவாரி தெரிவித்தார்.

    வெளியேற்றப்பட்ட தேவங் காந்தி முன்னாள் இந்திய வீரர், முன்னாள் பெங்கால் கேப்டன் மற்றும் இந்திய அணித் தேர்வுக்குழு உறுப்பினர் ஆவார்.
    விஸ்டமின் இந்த ஆண்டின் சிறந்த ஐந்து வீரர்கள் பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு இடம் கிடைத்துள்ளது.
    ஆஸ்திரேலியா - நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியுடன் இந்த வருடத்திற்கான கிரிக்கெட் போட்டிகள் முடிவடைகின்றன.

    2020 வருடம் பிறப்பதால் 2010 முதல் 2019 வரை 10 வருடத்தில்  கிரிக்கெட் நடந்த சம்பவங்களில் சிறப்பானவற்றை நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

    அந்த வகையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் சார்பில் இந்த 10 வருடத்தில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணியை தேர்வு செய்து வெளியிட்டது. இதில் டோனியை கேப்டனாக தேர்வு செய்திருந்தது. அதேபோல் விராட் கோலியை டெஸ்ட் கேப்டனாக தேர்வு செய்திருந்தது.

    இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் விஸ்டன் ஆண்டுதோறும் சிறந்த வீரர்கள் படத்தை முதல் பக்கத்தில் பிரசுரிக்கும். விஸ்டன் அட்டை பக்கத்தில் இடம் பிடித்தால் ஒவ்வொரு வீரர்களும் அதை மிகப்பெரிய கவுரவமாக நினைப்பார்கள்.

    அந்த விஸ்டன் இந்த 10 ஆண்டுகளில் சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்துள்ளது. இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு இடம் கொடுத்துள்ளது.

    விராட் கோலியுடன் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், தென்ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின், டீ வில்லியர்ஸ், வீராங்கனை எலிஸ் பெர்ரி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
    டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 150 போட்டிகளில் விளையாடிய ஒரே வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜேம்ஸ் ஆண்டர்சன் பெற்றுள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடம் பிடித்திருந்தார்.

    இது அவருக்கு 150-வது டெஸ்ட் போட்டியாகும். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே 150 டெஸ்ட் போட்களில் விளையாடிய ஒரே வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் 149 போட்டிகளில் 575 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

    2003-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கெதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அறிமுகம் ஆனார். சமீபத்தில் ஆஷஸ் தொடரின்போது காயத்தால் வெளியேறினார். அதன்பின் தற்போது அணிக்கு திரும்பியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவின் மெக்ராத் (563 விக்கெட்) 124 போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸின் வால்ஷ் (519) 132 போட்டிகளிலும், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் (471) 135 போட்டிகளிலும், கபில்தேவ் (434 விக்கெட்) 131 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர்.
    ×