என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 150 போட்டிகளில் விளையாடிய ஒரே வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜேம்ஸ் ஆண்டர்சன் பெற்றுள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடம் பிடித்திருந்தார்.

    இது அவருக்கு 150-வது டெஸ்ட் போட்டியாகும். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே 150 டெஸ்ட் போட்களில் விளையாடிய ஒரே வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் 149 போட்டிகளில் 575 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

    2003-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கெதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அறிமுகம் ஆனார். சமீபத்தில் ஆஷஸ் தொடரின்போது காயத்தால் வெளியேறினார். அதன்பின் தற்போது அணிக்கு திரும்பியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவின் மெக்ராத் (563 விக்கெட்) 124 போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸின் வால்ஷ் (519) 132 போட்டிகளிலும், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் (471) 135 போட்டிகளிலும், கபில்தேவ் (434 விக்கெட்) 131 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர்.
    லாபஸ்சாக்னே, ஸ்மித் அரைசதம் அடித்தாலும் நிதானமான ஆட்டத்தால் முதல்நாளில் 4 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்களே சேர்த்துள்ளது ஆஸ்திரேலியா.
    ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் (பாக்சிங் டே டெஸ்ட்) இன்று தொடங்கியது. நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ‘டாஸ்’ வென்று ஆஸ்திரேலியாவை முதலில் ஆட அழைத்தார்.

    ஆஸ்திரேலியாவுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரில் 4-வது பந்தில் ஜோ பேர்ன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் போல்ட் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். 2-வது விக்கெட்டுக்கு வார்னர் உடன்  மார்னஸ் லாபஸ்சாக்னே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடியது.

    என்றாலும், நீண்ட நேரம் நிலைத்து நிற்கவில்லை. வார்னர் 41 ரன்னில் வாக்னர் பந்தில் அவுட் ஆனார். 64 பந்தில் 3 பவுண்டரியுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். ஆஸ்திரேலியா 61 ரன்னில் 2 விக்கெட்டை இழந்தது.

    அடுத்து முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் களம் வந்தார். லாபஸ்சாக்னே - ஸ்மித் ஜோடியை நியூசிலாந்து பந்து வீச்சாளர்களால் எளிதில் பிரிக்க முடியவில்லை. அதேவேளையில் லாபஸ்சாக்னே - ஸ்மித் ஜோடியால் விரைவாக ரன்களும் குவிக்க இயலவில்லை.

    லாபஸ்சாக்னே 132 பந்தில் அரைசதம் அடித்தார். லாபஸ்சாக்னே தொடர்ச்சியாக 4-வது சதத்தை அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் 63 ரன்னில் கிராண்ட்ஹோம் பந்தில் வெளியேறினார். அப்போது ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 144 ஆக இருந்தது.

    லாபஸ்சாக்னே நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 143 ரன்னும், அதற்கு முன்னதாக பாகிஸ்தான் டெஸ்டில் 162 ரன்னும், 185 ரன்னும் எடுத்து இருந்தார்.

    4-வது விக்கெட்டுக்கு ஸ்மித்துடன் மேத்யூ வடே ஜோடி சேர்ந்தார். ஸ்மித் சிறப்பாக ஆடி 103 பந்தில் அரைசதத்தை தொட்டார். வடே 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    டிரென்ட் போல்ட் பந்தில் போல்டாகிய ஜோ பேர்ன்ஸ்

    5-வது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இன்றைய முதல் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. ஆஸ்திரேலியா முதல்நாளில் 90 ஓவர்கள் விளையாடி 4 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்துள்ளது.

    சராசரி 2.85 ஆகும். ஆஸ்திரேலியாவின் மந்தமான ஆட்டத்தில் இதுவும் ஒன்று. ஸ்மித் 77 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஸ்மித் பெரிய இன்னிங்ஸ் விளையாடினால் ஆஸ்திரேலியா அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது.

    19.1 ஓவரில் அரைசதத்தை தொட்ட ஆஸ்திரேலியா 40.1 ஓவரில் 100 ரன்னையும், 68.5 ஓவரில் 200 ரன்னையும் தொட்டது.
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.- கோவா அணிகள் மோதுகின்றன.
    சென்னை:

    10 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கும் 46-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, எப்.சி. கோவாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

    சென்னையின் எப்.சி. அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்வி, 3 டிரா என்று 9 புள்ளியுடன் 8-வது இடம் வகிக்கிறது.

    முதல் 4 ஆட்டங்களில் 3 தோல்வியுடன் பெரும் சரிவை சந்தித்த சென்னையின் எப்.சி. அணி புதிய பயிற்சியாளர் ஓவன் கோய்லியின் வருகைக்கு பிறகு புத்தெழுச்சி பெற்றுள்ளது. கடைசி 4 ஆட்டங்களில் 2 டிரா, 2 வெற்றியை ருசித்துள்ள சென்னை அணி, தனது வெற்றிப்பயணத்தை தொடருமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி வாகை சூடினால், புள்ளி பட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னேற முடியும்.

    பயிற்சியாளர் கோய்லி கூறுகையில், ‘கோவா மிகச்சிறந்த அணி. புள்ளி பட்டியலில் முதன்மையான அணியாக திகழ்கிறது. அந்த அணியை நாங்கள் மதிக்கிறோம். அதற்காக அவர்களை கண்டு பயந்துவிடவில்லை. முந்தைய கேரளா பிளாஸ்டர்சுக்கு எதிரான ஆட்டத்தில் (3-1 என்ற கோல்) வெளிப்படுத்திய திறமையை மீண்டும் காட்டினால் வெற்றி சாத்தியம்’ என்றார். சென்னை அணியில் வல்ஸ்கிஸ் 5 கோல்கள் அடித்து நம்பிக்கைக்குரிய வீரராக உள்ளார். அவரைத் தான் அணி அதிகமாக சார்ந்து உள்ளது.

    எப்.சி. கோவா அணி 5 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வி என்று 18 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. தாக்குதல் ஆட்டத்துக்கு பெயர் போன கோவா அணியில் பெர்ரன் கோரோமினாஸ், பிரான்டன் பெர்னாண்டஸ், ஹூகோ பவுமோஸ் கடும் சவாலாக இருப்பார்கள். நடப்பு தொடரில் 8 வீரர்கள் அந்த அணியில் கோல் அடித்திருப்பது சிறப்பம்சமாகும்.

    மேலும், சென்னை நேரு மைதானத்தில் கோவா அணி மொத்தத்தில் 6 ஆட்டங்களில் ஆடி அதில் 4-ல் வெற்றி பெற்றிருப்பது அந்த அணிக்கு சாதகமான விஷயமாக கருதப்படுகிறது.

    கோவா பயிற்சியாளர் செர்ஜியோ லோப்ரா கூறுகையில், ‘சென்னை அணி வீரர்கள் தீவிரத்துடன் விளையாடுகிறார்கள். தடுப்பாட்டக்காரர்களும், அதிரடி வீரர்களும் சரியான கலவையில் உள்ளனர். அதனால் நிச்சயம் இது எளிதான ஆட்டமாக இருக்காது’ என்றார்.

    இந்த சீசனில் முதல் போட்டியில் கோவாவிடம் 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த சென்னை அணி அதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    இதற்கிடையே கொல்கத்தாவில் நேற்றிரவு அரங்கேறிய 45-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி 1-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி.-யை வீழ்த்தியது. வெற்றிக்குரிய கோலை டேவிட் வில்லியம்ஸ் 47-வது நிமிடத்தில் அடித்தார். 10-வது ஆட்டத்தில் விளையாடிய பெங்களூருக்கு இது 2-வது தோல்வியாகும்.

    அதே சமயம் 10-வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தா அணி 5 வெற்றி, 3 டிரா, 2 தோல்வி என்று 18 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தை எட்டியுள்ளது. கோவா அணியும் 18 புள்ளிகள் பெற்ற போதிலும் கோல் வித்தியாசத்தில் கொல்கத்தா முன்னணியில் இருக்கிறது.


    2020ம் ஆண்டு டென்னிஸ் போட்டிகளுடன் ஓய்வு பெறவுள்ளதாக இந்திய டென்னிஸ் வீர‌ர் லியாண்டர் பயஸ் அறிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் (வயது 46) ஒலிம்பிக் ஒற்றையரில் வெண்கலம் வென்றுள்ளார். டேவிஸ் கோப்பை தொடரில் இரட்டையர் போட்டிகளில் கிராண்ட்ஸ்லாம் உள்ளிட்ட 44 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

    இந்நிலையில் 2020-ம் ஆண்டுவரை நடக்க உள்ள சில டென்னிஸ் போட்டிகள் தமது கடைசி போட்டியாக இருக்கும் எனவும் அதன் பின்னர் ஓய்வுபெற முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    டென்னிஸ் விளையாட்டில் 7 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ஒரே வீரர் லியாண்டர் பயஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
    நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்தின் டெஸ்ட் தரவரிசை மிகவும் மோசம், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாதான் உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணி என வாகன் தெரிவித்துள்ளார்.
    ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து 2-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா 3-வது இடத்திலும், இங்கிலாந்து 4-வது இடத்திலும், ஆஸ்திரேலியா ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

    நியூசிலாந்து 2-வது இடத்திலும், இங்கிலாநது 4-வது இடத்திலும் இருப்பதை என்னால் ஏற்க முடியாது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அவர்களின் தரவரிசை குப்பை என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மைக்கேல் வாகன் கூறுகையில் ‘‘ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் எந்த நேர்மையும் இல்லை என்று சொல்வேன். இது முற்றிலும் குப்பை. கடந்த இரண்டு வருடங்களாக நியூசிலாந்து அதிக அளவில் டெஸ்ட் தொடரை வென்றதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவர்கள் 2-வது இடத்தில் உள்ளனர். இங்கிலாந்து 3-வது இடத்தில் உள்ளது. இதனால் தரவரிசை சரியாக இருக்க முடியாது. இங்கிலாந்து கடந்த இரண்டு மூன்று வருடங்களாக திணறி வருகிறது. குறிப்பாக வெளிநாட்டு மண்ணில் திணறுகிறது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு தலைசிறந்த அணிகள் உள்ளன. ஒன்று இந்தியா, மற்றொன்று ஆஸ்திரேலியா. அவர்கள்தான் உலகின் சிறந்த டெஸ்ட் அணிகள். இதில் எந்த கேள்விக்கும் இடமில்லை.

    ஒரேயொரு அணி ஆஸ்திரேலியா வந்து அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கினர். 12 மாதத்திற்கு முன் இந்தியா ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வென்றுள்ளது.

    ஸ்மித், வார்னர், லாபஸ்சாக்னே போன்றோர் அந்த தொடரில் இல்லை. இந்திய அணியில் சுழற்பந்து, வேகப்பந்து, பேட்டிங் என அனைத்திலும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தனர்.

    ஆஸ்திரேலியா மண்ணில் அந்த அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்றால், அது இந்திய அணியால்தான் முடியும்’’ என்றார்.
    கட்டாக் ஒருநாள் போட்டியில் பரபரப்பான கட்டத்தில் 6 பந்தில் 17 ரன்கள் அடித்து இந்தியாவை த்ரில் வெற்றி பெற வைத்த ஷர்துல் தாகூர், அது பற்றி விவரிக்கிறார்.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 315 ரன்கள் குவித்தது.

    பின்னர் 316 ரன்கள் அடித்து சேஸிங் செய்தால்தான் தொடரை கைப்பற்ற முடியும் என்ற நிலையில் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர்களான ரோகித் சர்மா (63), கேஎல் ராகுல் (77) ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

    ஷ்ரேயாஸ் அய்யர் (7), ரிஷப் பந்த் (7), கேதர் ஜாதவ் (9) சொற்ப ரன்களில் வெளியேறியதால் நெருக்கடி ஏற்பட்டது.

    ஜடேஜாவுடன் இணைந்து விராட் கோலி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார். ஆனால் 85 ரன்கள் சேர்த்த நிலையில் விராட் கோலி ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 46.1 ஓவரில் 286 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்தியாவின் வெற்றிக்கு 23 பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் ஜடேஜா உடன் ஷர்துல் தாகூர் ஜோடி சேர்ந்தார். ஜடேஜா அதிரடி ஃபார்மில் இருந்தார். ஷர்துல் தாகூர் ஜடேஜாவுடன் இணைந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுப்பாரா? என்ற ஏக்கம் ரசிகர்களிடம் தொற்றிக் கொண்டிருந்த நிலையில் அடுத்த பந்தை சிறப்பாக விளையாடி பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. அதன்பின் 6 பந்தில் 17 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.

    அவர் களம் இறங்கும்போது நடந்தது என்ன என்பதை விவரித்துள்ளார் ஷர்துல் தாகூர். இதுகுறித்து ஷர்துல் தாகூர் கூறுகையில் ‘‘நான் பேட்டிங் செய்ய வரும்போது ரவி சாஸ்திரி சார் என்னிடம், பொறுப்பை ஏற்றுக் கொண்டு போட்டியை முடித்துவிட்டு வாருங்கள். அந்த திறமை உங்களிடம் இருக்கிறது என்றார்.

    நான் மைதானத்திற்குள் வரும்போது, விராட் கோலி என்னிடம் ஜடேஜா அடித்து விளையாடும்படி நீங்கள் ஒரு ரன் எடுத்துக் கொடுத்தால் சிறந்ததாக இருக்கும் என்றார்.

    ஆனால் எனக்கு அதிர்ஷ்டம் இருந்ததால் முதல் பந்தே என்னுடைய மிடில் பேட்டில் பட்டது. ஜடேஜா என்னிடம்  பனியின் தாக்கம் உள்ளது. பந்து பேட்டிற்கு சிறந்த முறையில் வருகிறது என்றார். நான் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பின்னர், தேவையான் ரன்ரேட் குறைந்ததால், ஜடேஜா மீதான நெருக்கடி குறைய ஆரம்பித்தது.

    நான் 8-வது வீரராக களம் இறங்குவேன் என்பது தெளிவாக தெரிந்தது. விராட் கோலி பேட்டிங் செய்யும்போது, அவர் போட்டியை முடித்து விடுவார், அதனால் பேட்டிங் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்று நினைத்தேன். அந்த வகையில் அவரது பேட்டிங் இருந்தது.

    நான் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் இதுபோன்று போட்டியை முடித்திருக்கிறேன். அது எனக்கு உதவியாக இருந்தது’’ என்றார்.

    ஷர்துல் தாகூர் களம் இறங்கும்போது ஜடேஜா 21 பந்தில் 29 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியில் 31 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷர்துல் தாகூர் வந்தபின் 10 பந்தில் 10 ரன்களே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    நியூசிலாந்தின் தலைசிறந்த வீரர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது என டிம் சவுத்தி கூறியுள்ளார்.
    ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

    2-வது டெஸ்ட் நாளை ‘பாக்சிங் டே’ டெஸ்டாக மெல்போர்னில் தொடங்குகிறது. நியூசிலாந்து அண்டை நாடாக இருந்தாலும் ஆஸ்திரேலியாவில் டிசம்பர் 26-ந்தேதி தொடங்கும் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் விளையாடி நீண்ட காலம் ஆகிறது.

    இரு அணிகளுக்கும் இடையில் 1987-ம் ஆண்டு மெல்போர்னில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் நடைபெற்றது. அதன்பின் தற்போதுதான் நடக்க இருக்கிறது. தற்போதைய நியூசிலாந்து அணியில் ராஸ் டெய்லர், வாட்லிங், கிராண்ட்ஹோம், நீல் வாக்னர் ஆகியோர்தான் 1987-க்கு முன்னர் பிறந்தவர்கள். மற்ற வீர்ரகள் பிறந்திருக்கமாட்டார்கள்.

    இந்நிலையில், நியூசிலாந்தின் தலைசிறந்த வீரர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது என்று டிம் சவுத்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

    டிம் சவுத்தி இதுகுறித்து கூறுகையில் ‘‘நியூசிலாந்தில் இருந்து ஏராளமான தலைசிறந்த வீரர்கள்  உருவாகியிருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் இந்த வாய்ப்பு கிடைத்ததில்லை. ஆகவே, இது எங்களுக்கு சிறப்பு வாய்ந்தது.

    ஒவ்வொருவரும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியை பார்த்து வளர்ந்திருப்பார்கள் என்பதை உறுதியாக கூற இயலும். ரசிகர்கள் கூட்டம், வரலாறு ஆகியவை இதற்கு பின்னால் உள்ளது. 30 வருடத்திற்கு மேலாக பாக்சிங் டே டெஸ்டில் நியூசிலாந்து விளையாடியது கிடையாது. இது கொஞ்சம் வித்தியாசமான ஸ்பெஷல்’’ என்றார்.
    ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் மத்திய பிரதேச அணிக்கு எதிராக தமிழ்நாடு 149 ரன்னில் சுருண்டது. பாபா அபரஜித் ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் சேர்த்தார்.
    ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் இந்தூரில் இன்று தொடங்கிய ஆட்டத்தில் மத்திய பிரதேசம் - தமிழ்நாடு அணிகள் விளையாடி வருகின்றன.

    டாஸ் வென்ற மத்திய பிரதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தமிழ் நாடு அணியின் கருணாகரன் முகுந்த், கங்கா ஸ்ரீதர் ராஜூ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முகுந்த் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த காந்தி முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

    3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ஹரி நிஷாந்த் 22 ரன்னில் வெளியேறினார். இதனால் தமிழ்நாடு 48 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு கங்கா ஸ்ரீதர் ராஜூ உடன் கேப்டன் அபரஜித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. அணியின் ஸ்கோர் 101 ரன்னாக இருக்கும்போது கங்கா ஸ்ரீதர் ராஜூ 43 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் வந்த தமிழ் நாடு அணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் தமிழ்நாடு 149 ரன்னில் சுருண்டது. கேப்டன் பாபா அபரஜித் ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் சேர்த்தார். மத்திய பிரதேசம் அணி சார்பில் ஈஸ்வர் பாண்டே 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் மத்திய பிரதேசம் முதல் இன்னிங்சை தொடங்கியது. நடராஜன், விக்னேஷ் பந்து வீச்சில் மத்திய பிரதேசம் விரைவாக மூன்று விக்கெட்டுக்களை இழந்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் மத்திய பிரதேசம் 3 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்துள்ளது. நடராஜன் இரண்டு விக்கெட்டும், விக்னேஷ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி  தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் நாளை செஞ்சூரியனில் தொடங்குகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் தொடங்கும் பாக்சிங் டே டெஸ்டில் விளையாட இரண்டு அணி வீரர்களும் தயாராகி வந்தனர்.

    இந்நிலையில் பென் ஸ்டோக்சின் தந்தை கெட் உடல்நலம் குன்றிய நிலையில் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் ஜோகன்னஸ்பர்க் சென்ற பென் ஸ்டோக்ஸ் நேற்று மருத்துவமனையிலேயே தங்கினார். இதனால் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் கலந்து கொள்வது சந்தேகம் எனக் கூறப்பட்டது.

    இந்நிலையில் அவரது தந்தையில் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று செஞ்சூரியன் வந்து பயிற்சியில் ஈடுபட்டார் பென் ஸ்டோக்ஸ். இதனால் நாளைய போட்டியில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், காய்ச்சல் காரணமாக ஜேக் லீச், ஒல்லி போப், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் பயிற்சியில் ஈடுபடவில்லை.
    பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்த வங்காளதேசம், பொதுவான இடத்தில் டெஸ்ட் போட்டியை நடத்தினால் தயார் என்று தெரிவித்துள்ளது.
    இலங்கை அணி 10 வருடத்திற்குப் பிறகு பாகிஸ்தான் சென்று டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதனால் மற்ற அணிகளும் பாகிஸ்தான் வந்து விளையாடும் என அந்நாட்டு கிரிக்கெட் போர்டு நம்பிக்கையுடன் இருந்தது.

    இதற்கு காரணம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறுவதும் ஒரு காரணம். இந்த சாம்பியன்ஷிப்பின் படி ஒவ்வொரு அணிகளும் தங்களது நாட்டிலும், வெளிநாட்டிலும் விளையாட வேண்டும்.

    இதனடிப்படையில் வங்காளதேசம் அணி பாகிஸ்தான் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருந்தது. வங்காளதேசம் அணி எப்படியும் பாகிஸ்தான் வரும் என்று நம்பியிருந்தது. ஒரு போட்டியை பகல்-இரவு டெஸ்டாக நடத்த விரும்பிய பாகிஸ்தான், இதற்கு சம்மதிக்கும்படி வங்காளதேசத்திற்கு வேண்டுகோளும் விடுத்தது.

    ஆனால், பாதுகாப்பு கருதி டெஸ்ட் தொடரில் விளையாட முடியாது என்று வங்காளதேசம் கூறியுள்ளது. மேலும், டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட தயார். பொதுவான இடத்தில் டெஸ்ட் தொடரை நடத்தினால், விளையாடுகிறோம் என்று வங்காளதேசம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே வங்காளதேசம் விளையாட மறுத்தபால், இந்த விஷயத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கொண்டு செல்வோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
    காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள பும்ரா ரஞ்சி போட்டியில் விளையாட தயாராக இருந்த நிலையில், கங்குலி தலையீட்டால் புறக்கணித்துள்ளார்.
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. முகுதுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து விளையாடாமல் உள்ளார்.

    தற்போது உடற்தகுதி பெற்றதால் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களுக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

    இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர் ஐந்தாம் தேதி தொடங்குகிறது. இதனால் இன்றைய ரஞ்சி போட்டியில் குஜராத் அணிக்கெதிராக கேரளாவை எதிர்த்து விளையாட இருந்தார்.

    காயத்தில் இருந்து மீண்ட அவருக்கு, உடற்தகுதியை நிரூபிக்க இது சிறந்த வாய்ப்பாக இருக்கும் என கருதப்பட்டது. ஆனால் பும்ரா பிசிசிஐ தலைவர் மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோருடன் பேசியதாக தெரிகிறது.

    அப்போது இலங்கை அணிக்கெதிரான விளையாடக் கூடிய இந்திய அணியில் இடம் பிடித்துள்ளதால், சர்வதேச போட்டிக்கு தயாராகுவதில் கவனம் செலுத்தும்படி ஜெய் ஷா கூறியதாக தெரிகிறது.

    குஜராத் அணிக்காக விளையாட இருந்த பும்ரா, கடைசி நேரத்தில் விலகியுள்ளார். இந்திய அணிக்கு திரும்பும்போது புதிதாக களம் இறங்குவதாக பும்ரா நினைக்க வேண்டும். மாறாக காயம் குறித்து பரபரப்பான யோசனையுடன் களம் இறங்கக்கூடாது என்று கங்குலி தெரிவித்ததாக கூறப்படுகிறது
    இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்பட நான்கு நாடுகளுக்கு இடையிலான தொடரை நடத்த பிசிசிஐ தலைவர் கங்குலி திட்டம் வகுத்துள்ளார்.
    பல நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்துகிறது. இந்த நிலையில் முன்னணி அணிகள் மோதும் ஒரு நாள் தொடரை 2023 முதல் ஒவ்வொரு ஆண்டும் நடத்த ஐசிசி முடிவு செய்துள்ளது. இதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தொடக்க நிலையில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    ஐசிசி அமைப்பில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை குறைக்க ஏதுவாக ஐசிசி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    இந்த நிலையில் ஐசிசி-க்கு பதிலடி கொடுக்கும் விதமாக 4 நாடுகள் பங்கேற்கும் சூப்பர் சீரிஸ் ஒரு நாள் தொடரை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கங்குலி தீவிரம் காட்டியுள்ளார்.

    ஐசிசி-யின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும் அவர் 4 நாடுகள் போட்டியை நடத்த முடிவு செய்கிறார்.

    இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் 4-வது அணியை கொண்ட 2021-ம் ஆண்டு இந்தப் போட்டியை நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி 3 நாடுகள் மத்தியில் சுழற்சி முறையில் நடத்தப்படும். இதன் மூலம் 3 வாரியங்களுக்கும் நிதியாதாரம் பெருகும்.
    ×