என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிறந்த கேப்டன்களாக எம்எஸ் டோனியும், ரோகித் சர்மாவும் இணைந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டி அறிமுகமாகி நேற்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதைக் கொண்டாடும் வகையில் இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளிலேயே சிறந்த வீரர்கள், கேப்டன்கள் யார் என்பதை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் முன்னாள் வீரர்கள், பத்திரிகையாளர்கள், கிரிக்கெட் நிபுணர்கள், வர்ணனையாளர்கள் என்று 50 பேருடன் அலசி ஆராய்ந்தது.

    அவர்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் ஐபிஎல்-லின் சிறந்த கேப்டன்களாக டோனியும் (சென்னை சூப்பர் கிங்ஸ்), ரோகித் சர்மாவும் (மும்பை இந்தியன்ஸ்) இணைந்து தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். சென்னை அணியை எல்லா தடவையும் பிளேஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ள டோனி மூன்று முறை கோப்பையையும் வென்றுத் தந்திருக்கிறார்.

    ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 4 முறை கோப்பையை கைப்பற்றித்தந்த சிறப்புக்குரியவர் ஆவார். சிறந்த பேட்ஸ்மேனாக டி வில்லியர்சும் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்), சிறந்த பந்து வீச்சாளராக மலிங்காவும் (மும்பை இந்தியன்ஸ்), சிறந்த ஆல்- ரவுண்டராக ஷேன் வாட்சனும் (சென்னை சூப்பர் கிங்ஸ்) தேர்வாகியுள்ளனர்.

    ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவரான விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ்) பெங்களூர்) சிறந்த இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.
    தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் சுயாட்சி உரிமை அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் செயல்பாடுகளில், மத்திய விளையாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) அதிகாரிகள் தலையிட்டு தங்களின் உரிமையை பறிக்க முயலுகிறார்கள் என்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா சமீபத்தில் புகார் தெரிவித்து இருந்தார்.

    இதற்கு பதிலளித்த மத்திய விளையாட்டு துறை செயலாளர் ராதேஷியாம் ஜூலானியா, ‘தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு அரசு அளித்து வரும் உதவிகளை விட்டு விட்டு, அதன் பிறகு விளையாட்டு அமைச்சகத்தின் தலையீடு குறித்து புகார் அளிக்க தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் முன்வர வேண்டும்’ என்று காட்டமாக தெரிவித்து இருந்தார். இதனால் இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் மத்திய விளையாட்டு அமைச்சகம் இடையிலான சுமூக உறவில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    பங்குதாரர்கள் இடையே பல்வேறு மட்டத்திலான வழக்கமான ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல் சுமூகமானதாக இருக்க வேண்டும். ஆனால் எந்தவொரு சூழ்நிலையிலும் தனிநபர்களின் விரும்பத்தகாத செயல்பாடுகள் நம்முடைய ஒத்துழைப்பு மற்றும் உத்வேகத்தை குலைக்க கூடியதாக இருக்கக்கூடாது. சில சூழ்நிலையில் தனிநபர்கள் தெரிவிக்கும் எந்தவொரு கருத்தையும் கொள்கை விஷயமாக கருத்தில் எடுத்து கொள்ளக்கூடாது. இந்தியாவை விளையாட்டில் சூப்பர் பவர் நாடாக்க வேண்டும் என்ற கனவை நனவாக்க வேண்டும் என்ற முடிவுடன் நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்.

    தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் செயல்பாட்டில் தலையிட வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாது. தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் சுயாட்சியுடன் செயல்படுவதை எந்த விலை கொடுத்தும் அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தேசிய விளையாட்டு கொள்கை மற்றும் நல்ல நிர்வாகத்தை தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் பின்பற்ற வேண்டும் என்பது அதன் அனைத்து செயல்களிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை கொண்டு வருவதற்கான மூலைக்கல்லாகும்.

    விளையாட்டு மேம்பாட்டுக்காக, தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு தேவையான ஆதரவை அளிக்க அரசு உறுதியாக இருக்கிறது. அதேநேரத்தில் விளையாட்டு வீரர்களின் நலனை பாதுகாப்பதிலும் ஆர்வமாக இருக்கிறோம். இந்த விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளமாட்டோம். நமது வீரர்களுக்கு சிறந்த பயிற்சி, நல்ல ஊட்டச்சத்து உணவு வகைகள் அளிப்பதுடன், உயர்தர போட்டியில் பங்கேற்க வைத்து, 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் டாப்-10 இடங்களுக்குள் நமது நாட்டை கொண்டு வருவது தான் விளையாட்டு மந்திரி என்ற முறையில் எனது இலக்காகும். இந்த பொதுவான இலக்கை எட்ட மத்திய விளையாட்டு அமைச்சகம், சாய், இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமானதாகும். இந்த விஷயத்தில் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்துடன் மிகவும் நெருக்கமாக இணைந்து செயல்பட அரசு உறுதியாக இருக்கிறது’.

    இவ்வாறு அவர் கூறினார். 

    அடுத்த ஆண்டு (2021) டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் என்னால் விளையாட முடியும் என இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா ஆன்லைன் மூலம் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    ‘கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் எல்லோருக்கும் கடினமாக சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த ஊரடங்கால் மக்கள் மத்தியில் மனிதநேயம் மீண்டும் தளைத்து இருக்கிறது. கொரோனா காரணமாக டென்னிஸ் உள்பட அனைத்து விளையாட்டுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நீங்கள் மைதானத்துக்குள் நுழையும் போது ரசிகர்கள் எழுப்பும் ஆரவாரத்தை, வேறு எதனாலும் ஈடுசெய்ய முடியாது. ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது எப்பொழுதும் சிறப்பானதாகும். 

    டோக்கியோ ஒலிம்பிக்

    அதேநேரத்தில் ரசிகர்கள் இன்றி தான் போட்டி நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டால், அது சிறந்ததா? என்பது எனக்கு தெரியவில்லை. ரசிகர்கள் அனுமதியின்றி காலியாக இருக்கும் ஸ்டேடியத்தில் விளையாட தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. குழந்தை பெற்ற பிறகு டென்னிஸ் போட்டிக்கு திரும்புவதற்காக 2 வருடம் நான் கடினமாக உழைத்து இருக்கிறேன். 

    இந்த ஆண்டு டோக்கியோவில் நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டியில் விளையாட நான் தயாராக இருந்தேன். அதற்கு தயாராக இல்லையெனில் நான் களம் திரும்பி இருக்க வேண்டிய அவசியமில்லையே?. சொல்லப்போனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தள்ளிப்போனது எனக்கு லேசான பின்னடைவு தான். ஏனெனில் அடுத்த ஆண்டு எனக்கு மேலும் ஒரு வயது அதிகரித்து விடும். அது சரியான விஷயம் அல்ல. சர்வதேச போட்டிக்கு திரும்பும் போது நல்ல நிலையை எட்ட நேரம் பிடிக்க தான் செய்யும். 

    கொரோனா பிரச்சினை ஓய்ந்த பிறகு நான் பழைய நிலைக்கு திரும்ப நிறைய விஷயங்களை செய்ய வேண்டும். ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது. அதற்கு முன்பு விளையாட்டு போட்டிகள் சகஜ நிலைக்கு திரும்பி விடும் என்று நம்புகிறேன். நானும் மீண்டும் விளையாட தொடங்கி விடுவேன். அடுத்த ஆண்டு (2021) டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் என்னால் விளையாட முடியும் என நம்புகிறேன்’. இவ்வாறு அவர் கூறினார். 
    கிரிக்கெட்டில் சிறந்த சாதனை எதுவும் செய்ததில்லை என்ற அப்ரிடி விமர்சனத்துக்கு இந்திய முன்னாள் வீரர் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டி தொடரின் போது களத்தில் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடும் அப்ரிடி, கவுதம் கம்பீர் இடையிலான மோதல் ஓய்வுக்கு பிறகும் தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான அப்ரிடி தனது சுயசரிதை புத்தகத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் குறித்து குறிப்பிட்டு வம்புக்கு இழுத்து இருக்கிறார். அதில் ‘கவுதம் கம்பீருக்கு குணநலனில் கோளாறு இருக்கிறது. அவருடைய எண்ணங்கள் சரியில்லை. அவருக்கென்று ஒரு தனித்தன்மை கிடையாது. அவரை போன்ற கிரிக்கெட் வீரர்கள் எப்போதாவது தான் இருப்பார்கள். அவர் கிரிக்கெட்டில் சிறந்த சாதனை எதுவும் செய்ததில்லை. ஆனால் மனதில் டான் பிராட்மேனும், ஜேம்ஸ்பாண்டும் கலந்து செய்யப்பட்ட கலவை போல அவர் தன்னைத் தானே நினைத்து கொள்வார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கு கவுதம் கம்பீர் தனது டுவிட்டர் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். அந்த பதிவில், ‘தனது வயதையே நினைவு வைத்து கொள்ள முடியாத ஒருவருக்கு, எனது சாதனையை எப்படி நினைவில் வைத்து கொள்ள முடியும். சரி பரவாயில்லை, அப்ரிடிக்கு ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன். 2007-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நான் 54 பந்துகளில் 75 ரன்கள் அடித்தேன். அந்த போட்டியில் நீங்கள் (அப்ரிடி) முதல் பந்திலேயே டக்-அவுட். மிக முக்கியமாக நாங்கள் கோப்பையை கைப்பற்றினோம். ஆம் பொய்யர்கள் மற்றும் சந்தர்ப்பவாதிகளுக்கு எதிராக எனது நடத்தை இப்படி தான் இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார். 
    ஐ.பி.எல். போட்டிகள் நடக்காததால் மகேந்திர சிங் டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது எளிதான விஷயமல்ல என அசாருதீன் கூறியுள்ளார்.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் டோனி கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்த போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. எதிர்காலத் திட்டம் குறித்து எதுவும் சொல்லாமல் மவுனம் காத்து வரும் டோனி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு தன்னை தீவிரமாக தயார்படுத்தி வந்தார். ஆனால் கொரோனா அச்சத்தால் கடந்த மாதம் தொடங்க இருந்த 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதை பொறுத்தே அவர் மீண்டும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியிருந்தார். ஐ.பி.எல். போட்டிகளும் நடக்காததால் 38 வயதான டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கேள்விக்குறியாகி இருக்கிறது. முன்னாள் வீரர்கள் ஸ்ரீகாந்த், ஆகாஷ் சோப்ரா உள்ளிட்டோர் டோனி இந்திய அணிக்கு மறுபிரவேசம் செய்வதற்கான வாய்ப்பு மங்கி போய் விட்டதாக கூறியுள்ளனர்.

    இந்த நிலையில் டோனி விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஐதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவருமான முகமது அசாருதீனிடம் கேட்ட போது, ‘டோனி அடுத்து என்ன செய்ய விரும்புகிறார் என்பதை என்னை விட அவர் விளக்குவதே நன்றாக இருக்கும். இது அவருடைய சொந்த விருப்பம். கொரோனா பரவலால் இப்போதைக்கு நாட்டின் சூழ்நிலை சரியவில்லை. அதனால் ஐ.பி.எல். போட்டிகளும் திட்டமிட்டபடி நடக்கவில்லை. இத்தகைய பிரச்சினை எல்லாம் சரியாக கொஞ்சம் நாள் பிடிக்கும். அதே நேரத்தில் டோனியை பொறுத்தவரை இது அவருடைய தனிப்பட்ட முடிவு தான். அவர் இந்திய அணிக்கு திரும்புவது எளிதான விஷயமல்ல.

    அப்படியே வாய்ப்பு அளிப்பதாக இருந்தாலும் தேர்வாளர்கள் நிச்சயம் அவரது திறனை பரிசோதித்து பார்ப்பார்கள். ஏனெனில் அவர் நீண்ட காலம் விளையாடாமல் இருக்கிறார். பயிற்சி பெறும் விதமாக போட்டிகளில் விளையாடுவது (உள்ளூர் மற்றும் ஐ.பி.எல். போன்றவை) உண்மையிலேயே மிகவும் முக்கியம். நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் தொடர்ந்து ஓரளவு கிரிக்கெட் விளையாட வேண்டும். பயிற்சி மேற்கொள்வது என்பது வேறு, களத்தில் இறங்கி போட்டிகளில் விளையாடி அதன் மூலம் பயிற்சி எடுப்பது என்பது வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’ என்றார்.
    கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க விளையாட்டு வீரர்கள் ஆரோக்கியமாக இருக்க பல்வேறு வகையான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார்.
    மும்பை:

    கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் விளையாட்டு வீரர்கள் ஆரோக்கியமாக இருக்க பல்வேறு வகையான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்தார்.

    கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு விளையாட்டு நிகழ்வுகளையும் ஒத்திப்போட வைத்துள்ளது. 

    உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா குறித்து டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியதாவது:-

    இந்த சூழ்நிலை எளிதாக இல்லாவிட்டாலும் அனைவரும் தொற்று நோயில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் முயற்சியில் இருக்க வேண்டும். 

    ஊரடங்கு உத்தரவின் போது மக்கள் வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், கொரோனாவில் தங்களை காத்துக்கொள்ள வேண்டும். இந்த சூழ்நிலையில் இது எளிதானது அல்ல. ஆனால் எங்களை விட நிறைய போராடும் மக்கள் நிறைய பேர் உள்ளனர். 

    குறைந்தபட்சம் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதை நாம் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். விளையாட்டு வீரர்கள் என்ற வகையில், நாங்கள் எதற்காக இப்பொழுது உடற்பயிற்ச்சி செய்கிறோம் என்பது இப்போது எங்களுக்குத் தெரியாது.

    நீங்கள் வீட்டில் நேரத்தை செலவழிக்க உங்கள் சொந்த வழிகளையும் முறையையும் கண்டுபிடிக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்கவும். மேலும் நன்றாக ஓய்வு எடுக்கவும். எப்போது நம் கையில் இவ்வளவு நேரம் மீண்டும் கிடைக்கப் போகிறது? அதனால் ஆக்கபூர்வமான வேலைகளை செய்யுங்கள் என்று நான் நம்புகிறேன். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    டேவிட் வார்னர் தன் மகளுடன் சேர்ந்து, பிரபல பாலிவுட் பாடலான ‘ஷீலா கி ஜவானி’ பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
    மும்பை:

    டேவிட் வார்னருக்கு இந்திய மக்கள் மீது அதிக அன்பும், காதலும் இருப்பது அனைவரும் நன்கு அறிந்ததே. ஆனால், அவர் பாலிவுட் பாடலுக்கு நடனமாடுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.  

    இந்த நிலையில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சமீபத்தில் அவர், டிக்டாக் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, தன்னுடைய டிக்டாக் கணக்கிற்கு பின்தொடர்பவர்கள் யாருமில்லாததால், ஆதரவு தெரிவிக்கும்படி உதவி கோரினார்.  இப்போது அவர் தன் மகளுடன் சேர்ந்து, பிரபல பாலிவுட் பாடலான ‘ஷீலா கி ஜவானி’ பாடலுக்கு நடனமாடி அசத்தி உள்ளார்.

    வார்னர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது  நடன வலிமையின் துணுக்கை வெளியிட்டார், ஒரு மணி நேரத்திற்குள் 2,50,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கவர்ந்தது.
    கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக வித்தியாசமான முறையில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி வீராங்கனைகள் நிதி திரட்டி வருகின்றனர்.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் ஏழைகள் மற்றும் கூலி தொழிலாளர்களின் குடும்பத்தினர் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். சாப்பாட்டுக்கு கூட வழியில்லாத நிலையில் பலர் பரிதவிக்கிறார்கள். இத்தகைய ஏழைக்கூலி தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக நிதி திரட்ட இந்திய பெண்கள் ஆக்கி அணியினர் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது 18 நாட்கள் உடல் தகுதி பயிற்சி குறித்த வெவ்வேறு விதமான சவால்களை இந்திய ஆக்கி அணி வீராங்கனைகள் ஆன்லைன் மூலம் அறிவித்து அதனை செய்து காட்டும்படி ரசிகர்களுக்கு அழைப்பு விடுப்பார்கள். அந்த சவாலை ஏற்பவர்கள் குறைந்தபட்சம் ரூ.100 செலுத்தி இந்த ஜாலியான போட்டியில் பங்கேற்கலாம். இந்த உடற்பயிற்சி சவால் மூலம் திரட்டப்படும் நிதி டெல்லியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான உதய் பவுண்டேசனிடம் வழங்கப்படும்.

    இது குறித்து இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘கொரோனா பாதிப்பு காரணமாக இந்த தருணத்தில் நிறைய மக்கள் உணவு கிடைக்காமல் தவித்து வருவதாக செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக நாங்கள் தினசரி படித்து வருகிறோம். இந்த ஏழை மக்களுக்கு, அணியாக ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம். அதற்காக ஆன்லைன் மூலம் உடல் தகுதி சவால் போட்டி நடத்தி நிதி திரட்டுவது சரியான வழியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இந்த முயற்சியின் மூலம் மக்களையும் தொடர்ந்து சுறுசுறுப்பாக வைத்து கொள்ள முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம். குறைந்தபட்சம் 1,000 குடும்பத்தினருக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையாவது வழங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் அறிமுகமான முதல் போட்டியில் ஆட்டமிழக்காமல் 158 ரன்கள் விளாசியது என் வாழ்க்கையை மாற்றியது என மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்காவில் 2007-ம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகம் செய்யப்பட்டது. மாலை 7 மணிக்கு தொடங்கி இரவு 10.30 மணிக்குள் முடிந்து விடுவதால் ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருந்தது.

    இதனால் பிசிசிஐ இந்தியாவில் 8 அணிகளை கொண்டு பிரிமீயர் லீக் என்ற பெயரில் டி20 தொடரை 2008-ல் அறிமுகம் செய்தது, உள்ளூர் மற்றும் வெளிநாடு வீரர்கள் என 8 அணிகளும் ஏலம் மூலம் வீரர்களை தங்கள் அணிக்கு எடுத்துக்கொண்டது.

    முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அரங்கேறியது. இதில் கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராகுல் டிராவிட் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.

    இந்திய ரசிகர்களுக்கு இது புதுசு என்பதால் ஆதரவு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் முதல் போட்டியில் பிரெண்டன் மெக்கல்லம் விஸ்வரூபம் எடுத்து ஆட்டமிழக்காமல் 73 பந்தில் 158 ரன்கள் குவித்தார். இந்த அதிரடிதான் ஐபிஎல் தொடரை பிரபலப்படுத்த முக்கிய காரணமாக அமைந்தது என்றால் மிகையாகாது.

    பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டுவதும், டெத் ஓவர்கள் பரபரப்பாக செல்வதும் என இருந்ததால் ரசிகர்கள் மைதானத்திற்குள் குவிந்தனர். இந்த போட்டியில் ஆட்டமிழக்காமல் 158 ரன்கள் குவித்ததுதான் எனது வாழ்க்கையை மாற்றியது என பிரெண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரெண்டன் மெக்கல்லம் கூறுகையில் ‘‘என்னால் ஏராளமான ரியாக்சனை நினைவுப்படுத்த முடியவில்லை. ஆனால், அன்று இரவு என்னிடம் வந்து சொன்னதை ஞாபகப்படுத்த முடியும்.

    கங்குலி என்னிடம் வந்து உங்களுடைய வாழ்க்கை ஒரேநாளில் மாறிவிட்டது என்றார். எனக்கு அந்த நேரத்தில்  அதற்கான சரியான அர்த்தம் தெரியவில்லை. தற்போது நினைத்து பார்க்கையில், அவர் சொன்னதை 100 சதவீதம் ஒத்துக்கொள்கிறேன். அணி உரிமையாளர் ஷாருக்கான் என்னிடம் எப்போதுமே நைட் ரைடர்ஸ் உடன் இருப்பீர்கள் என்றார்.

    நான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய காலத்திலும், அங்கிருந்து வெளியேறிய காலத்திலும் சிறந்த உறவுடன்தான் இருந்தோம். நான் எப்போதுமே மிகவும் விசுவாசமாகத்தான் இருந்தேன். எனக்கு கொல்கத்தா அணி கொடுத்த வாய்ப்பிற்காக நன்றி சொல்லியாக வேண்டும்.

    மீண்டும் எனக்கு கொல்கத்தா அணி வாய்ப்பு கொடுத்தபோது (பயிற்சியாளராக), ஷாருக்கான் என்னிடம் எப்போதுமே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் ஈடுபட்டு இருப்பீர்கள் என்று கூறியதை நினைத்து பார்க்கிறேன்.’’ என்றார்.
    கொரோனா வைரஸ் தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இங்கிலிஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரை நடத்தி முடித்திட கிளப்புகள் உறுதியாக உள்ளன.
    கொரோனா ரைவஸ் தொற்று காரணமாக கடந்த மாதம் 13-ந்தேதியில் இருந்து இங்கிலிஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடர் ஒத்திவைக்கப்பட்டது. அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக தற்போது இங்கிலாந்தில் கொரோனா மையம் கொண்டுள்ளது.

    இதனால் எப்போது சகஜ நிலை திரும்பும் என்ற நிலை உறுதியாக தெரியவில்லை. இங்கிலிஷ் பிரிமீயர் லீக்கில் இன்னும் 92 போட்டிகள் மீதமுள்ளது. சீசன் முடிவடைந்தால்தான் சாம்பியன்ஸ் லீக், வீரர்கள் டிரான்ஸ்பர் போன்ற அடுத்தக்கட்ட நிலைக்கு செல்ல முடியும்.

    இதனல் இங்கிலிஷ் பிரிமீயர் லீக் அமைப்பாளர்கள் 20 கிளப்புகளுடனும் என்று வீடியோ கான்பெரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தியது. அப்போது பெரும்பாலான கிளப்புகள் போட்டிகளை அனைத்தும் நடத்தி முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன. சில கிளப்புகள் ஜூன் 30-ந்தேதிக்குள் நடத்தி முடித்திட வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தின.

    இங்கிலிஷ் பிரிமீயர் லீக் அமைப்பாளர்கள் ‘‘போட்டிகள் அனைத்தையும் நடத்தி முடித்திட வேண்டும் என்பது எங்கள் எண்ணம். ஆனால், தற்போதுள்ள தேதிகள் அனைத்தும் தற்காலிகம்தான்’’ என்று தெரிவித்துள்ளனர்.
    இந்தியா எங்களுடன் இருநாட்டு கிரிக்கெட் தொடரில் விளையாட மறுத்து வருவதால் சுமார் 700 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று பாகிஸ்தன் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
    சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரை அடுத்து மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுவது இந்தியா - பகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடர். அது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என எந்த வகை கிரிக்கெட் என்றாலும் ரசிகர்களிடையே பரபரப்பு தொற்றிக்கொள்ளும்.

    இதனால் ஸ்பான்சர்கள் மற்றும் ஒளிபரப்பு உரிமம் மூலம் இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டும்.

    ஆனால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதால் அதை நிறுத்தும் வரைக்கும் இரு நாடுகளுக்கிடையில் நேரடி கிரிக்கெட் தொடர் கிடையாது என்று இந்திய அரசு முடிவு எடுத்தது. 2008-ம் ஆண்டுக்குப்பின் இருநாடுகளுக்கு இடையிலான தொடர் நடைபெறாமல் உள்ளது.

    இருநாடுகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை தொடங்க பாகிஸ்தான் எவ்வளவோ முயற்சி எடுத்தது. ஆனால் மத்திய அரசு அனுமதி இல்லாமல் எங்களால் விளையாட முடியாது என்று பிசிசிஐ கைவிரித்து விட்டது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான ஒளிபரப்பு உரிமத்தை டென்ஸ்போர்ட்ஸ் மற்றும் பிடிவி ஆகியவற்றிற்கு சுமார் 149 மில்லியன் டாலருக்கு கொடுத்திருந்தது. ஆனால் இரண்டு டிவி நிறுவனங்களும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான இரண்டு தொடர்களை நடத்தினால்தான் இந்தத் தொகையை தருவோம் என்று ஒப்பந்தத்தில் கூறியிருந்தன.

    தற்போது போட்டி நடைபெறாததால் 90 மில்லியன் டாலரை (இந்திய பண மதிப்பில் 688.40 கோடி ரூபாய்) குறைத்துள்ளன. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஒளிபரப்பு உரிமம் மூலம் சுமார் 700 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ஸ்பான்சர், டிக்கெட் விற்பனை போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு இன்றும் அதிகமான இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
    ஒயிட்-பால் கிரிக்கெட்டின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள குயிண்டன் டி காக், டெஸ்ட் போட்டிக்கான அணியின் கேப்டன் இல்லை என்று ஸ்மித் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்ஆப்பிரிக்கா அணி படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து கிரிக்கெட் வாரியத்தில் மிகப்பெரிய மாற்றங்களை செய்ய முடிவு செய்தது.

    அதன்படி ஸ்மித் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். மார்க் பவுச்சர் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    டு பிளிஸ்சிஸ் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குயிண்டன் டி காக் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    தற்போது ஸ்மித்தின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2022 மார்ச் மாதம் வரை அவர் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டின் தலைவராக இருப்பார்.

    இந்நிலையில் குயிண்டன் டி காக் டெஸ்ட் போட்டிக்கான அணியின் கேப்டனாக நியமிக்கப்படமாட்டார் என ஸ்மித் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘குயிண்டன் டி காக் ஒயிட்-பால் கிரிக்கெட் அணிகளின் கேப்டனாக செயல்படுவார். ஆனால், ஒர்க்லோடு மற்றும் மன திறன் அம்சத்தில் அவரை துடிப்பாக வைத்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். மூன்று வகை கிரிக்கெட்டிலும் கேப்டனாக பணியாற்றுவது மிகவும் சவாலானது, நாங்கள் அவர்மீது சுமையை திணிக்க விரும்பவில்லை என்பதை என்னுடைய தனிப்பட்ட அனுபத்தில் இருந்து நான் தெரிந்து கொண்டது.

    டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் என்று ஒருவர் பெயரை தற்போது குறிப்பிட முடியாது. நிறைய போர் ஒரு தரநிலையில் உள்ளனர்’’ என்றார்.
    ×