என் மலர்
விளையாட்டு
- சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெற்றி பெற்றார்.
லக்னோ:
சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, சக நாட்டு வீரர் சனீத் தயானந்த் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-6, 21-16 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத் 21-16, 10-21, 21-12 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரரான ராகௌல் பரத்வாஜை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரியான்ஷு ரஜாவத்தை எதிர்கொள்கிறார்.
- இந்தியாவின் தீப்தி சர்மாவை ரூ.3.20 கோடிக்கு உபி வாரியர்ஸ் எடுத்துள்ளது.
- நியூசிலாந்தின் அமெலியா கெரை ரூ.3 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் எடுத்தது.
புதுடெல்லி:
4-வது மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி வீராங்கனைகள் ஏலம் இன்று டெல்லியில் நடைபெற்றது.
ஏலத்தில் சமீபத்தில் உலகக் கோப்பை போட்டியில் தொடர் நாயகியாக ஜொலித்த இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, வேகப்பந்து வீச்சாளர்கள் கிரந்தி கவுட், ரேணுகா சிங், சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரீசரனி, சினே ராணா ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மெக் லானிங், அலிசா ஹீலி, போபி லிட்ச்பீல்டு, நியூசிலாந்தின் அமெலியா கெர், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட், நடினே டி கிளெர்க், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் உள்ளிட்டோர் அதிக விலை போவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஏலத்தில் அதிகபட்சமாக விலை போன டாப் 5 வீராங்கனைகள் விவரம் வருமாறு:
தீப்தி சர்மா: ரூ.3.20 கோடி- உபி வாரியர்ஸ்
அமெலியா கெர்: ரூ.3 கோடி-மும்பை இந்தியன்ஸ்
ஷிகா பாண்டே: ரூ.2.40 கோடி-உபி வாரியர்ஸ்
சோபி டிவைன்: ரூ.2 கோடி- குஜராத் ஜெயண்ட்ஸ்
மெக் லானிங்: ரூ.1.9 கோடி - உபி வாரியர்ஸ்
- மகளிர் பிரிமீயர் லீக் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி தொடங்குகிறது.
- இந்த தொடர் நவி மும்பை மற்றும் வதோதராவில் நடக்கவுள்ளது.
புதுடெல்லி:
5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது. இந்த தொடருக்கான தேதி மற்றும் போட்டி நடைபெறும் இடங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி மகளிர் பிரிமீயர் லீக் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 5-வரை நடைபெறுகிறது. இந்த தொடர் நவி மும்பை மற்றும் வதோதராவில் நடக்கவுள்ளது.
எப்போதும் பிப்ரவரியில் தொடங்கி மார்ச் மாதத்தில் முடியும் இந்த தொடர் இந்த முறையில் ஜனவரியில் தொடங்கி பிப்ரவரியில் முடிகிறது. பிப்ரவரி 7-ந் தேதி ஆண்களுக்கான உலக கோப்பை டி20 தொடர் நடைபெற உள்ளதால் இந்த மாற்றம் நடந்துள்ளது.
தொடக்கப் போட்டி நவி மும்பையில் உள்ள DY பாட்டீல் மைதானம் நடைபெறுவதாகவும் இறுதிப்போட்டி வதோதராவில் உள்ள BCA மைதானத்தில் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர் என மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
- இவர்களில் இருந்து 23 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட 73 பேர் அணிகளுக்கு தேவைப்படுகிறார்கள்.
புதுடெல்லி:
5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி வீராங்கனைகள் ஏலம் இன்று (வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு டெல்லியில் நடக்கிறது.
ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர் என மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் இருந்து 23 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட 73 பேர் அணிகளுக்கு தேவைப்படுகிறார்கள். ஒரு அணியில் குறைந்தது 15, அதிகபட்சமாக 18 வீராங்கனைகள் இருக்கலாம்.
இந்நிலையில் இந்த தொடருக்கான ஏலத்தில் நட்சத்திர ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலியை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. அடிப்படை விலையாக ரூ.50 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை வாங்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை.
ஜாம்பவான் வீராங்கனையான அவரை எந்த அணியும் ஏலம் எடுக்காதது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அலிசா ஹீலி தலைமையில் ஆஸ்திரேலிய அணி ஆறு முறை உலகக் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.
- நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடவில்லை என்பதை கூற எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
- இந்த முறை அவர்களின் எதிர்பார்ப்புகளை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கவுகாத்தியில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய டெஸ்ட் வரலாற்றில் இது மோசமான தோல்வியாகும். சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவிடம் 0-2 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது. தென்ஆப்பிரிக்கா 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் நாட்டு மக்களிடம் 2-வது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட் மன்னிப்பு கேட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது:-
நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடவில்லை என்பதை கூற எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஒரு அணியாக நாங்கள் எப்போதும் சிறப்பாக செயல்படவும், கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கவும் விரும்புகிறோம்.
இந்த முறை அவர்களின் எதிர்பார்ப்புகளை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். விளையாட்டு உங்களை கற்றுக்கொள்ளவும், மாற்றியமைக்கவும், வளரவும் கற்றுக்கொடுக்கிறது. இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எங்கள் வாழ்வின் மிகப்பெரிய மரியாதை.
ஒரு வலுவான அணியாக கம்பேக் கொடுக்க நாங்கள் கடினமாக உழைப்போம். உங்கள் அசைக்க முடியாத ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி.
என ரிஷப் பண்ட் கூறினார்.
- 14-வது ஜூனியர் உலக கோப்பையை நடத்தும் வாய்ப்பை முதல் முறையாக தமிழ்நாடு பெற்றுள்ளது.
- கடைசியாக 2023-ம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த போட்டியில் ஜெர்மனி கோப்பையை கைப்பற்றியது.
சென்னை:
21 வயதுக்குட்பட்டவருக்கான ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி 1979-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பிரான்சில் நடந்த அந்த போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது.
கடைசியாக 2023-ம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த போட்டியில் ஜெர்மனி கோப்பையை கைப்பற்றியது. இதுவரை 13 போட்டி நடைபெற்றுள்ளது. இதில் ஜெர்மனி 7 முறை பட்டம் வென்று சாதித்துள்ளது. அதற்கு அடுத்தப்படியாக இந்தியா, அர்ஜென்டினா தலா 2 தடவையும், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் தலா ஒரு முறையும் உலக கோப்பையை கைப்பற்றியுள்ளன. 14-வது ஜூனியர் உலக கோப்பையை நடத்தும் வாய்ப்பை முதல் முறையாக தமிழ்நாடு பெற்றுள்ளது.
சென்னை,மதுரையில் நடைபெறும் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி நாளை (28-ந்தேதி) தொடங்குகிறது.
டிசம்பர் 10-ந்தேதி வரை 13 நாட்கள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் மதுரை ரேஸ்கோர்ஸ் ஸ்டேடியத்தில் ஹாக்கி கோலாகலம் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் 24 நாடுகள் பங்கேற்கின்றன. முதல் முறையாக 24 அணிகள் கலந்து கொள்கின்றன. இதுவரை 16 நாடுகள் பங்கேற்றன.மேலும் 8 அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த 24 நாடுகளும் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள நாடுகள் விவரம்:-
குரூப் ஏ: நடப்பு சாம்பியன் ஜெர்மனி, கனடா, தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து.
குரூப் பி : இந்தியா, சுவிட்சர்லாந்து, சிலி, ஓமன்.
குரூப் சி : அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஜப்பான், சீனா.
குரூப் டி : ஸ்பெயின், பெல்ஜியம்,எகிப்து, நமீபியா.
குரூப் இ: நெதர்லாந்து, மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரியா.
குரூப் எப்: ஆஸ்திரேலியா, பிரான்ஸ், தென் கொரியா, வங்காளதேசம்.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகளும், 2-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 2 அணிகள் என 8 நாடுகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
2-வது இடத்தை பிடிக்கும் மற்ற 4 அணிகளும் 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகளும் 9 முதல் 10-வது இடத்துக்கான போட்டியில் மோதும். எஞ்சிய அணிகள் 17 முதல் 24 இடங்களுக்கு மோதும்.
டிசம்பர் 2-ந்தேதி வரை 4 நாட்கள் 'லீக்' ஆட்டங்கள் நடைபெறும். 3-ந்தேதி ஓய்வுநாளாகும். டிசம்பர் 4-ந்தேதியில் இருந்து நாக் அவுட் சுற்று நடைபெறுகிறது.
ரோகித் தலைமையில் இந்திய அணி ஜூனியர் உலக கோப்பையில் சாதிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி முதல் முறையாக 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஜூனியர் உலக கோப்பையை கைப்பற்றியது. அதன்பிறகு சொந்த மண்ணில் 2016-ல் 2-வது தடவையாக உலக கோப்பையை வென்று தற்போது சொந்த மண்ணில் நடைபெறும் போட்டியில் 3-வது தடவையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.
ஜூனியர் உலக கோப்பை போட்டிக்காக சென்னை, மதுரை தயார் நிலையில் உள்ளன. மதுரையில் 5,500 பேரும், சென்னையில் 2 ஆயிரம் பேரும் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு டிக்கெட் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான இணையதளம் அல்லது செயலியில் பதிவு செய்து டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். ஒருநபர் 4 டிக்கெட் வரை பெற்றுக் கொள்ளலாம்.
இந்தப் போட்டியையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதிய முதல் டெஸ்ட் போட்டி கடந்த 21-ந் தேதி தொடங்கி அடுத்த நாளே முடிவடைந்தது.
- இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி கடந்த 21-ந் தேதி தொடங்கி அடுத்த நாளே முடிவடைந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
பெர்த் மைதானத்தில் இரண்டு நாளில் முடிந்த முதல் டெஸ்ட் போட்டி இதுதான். இதனால் இந்த பிட்ச் பல்வேறு விமர்சங்களுக்கு உள்ளானது.
இதனால் ஐசிசி பிட்ச்-ன் மதிப்பு குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தது. அதன்படி ஆய்வு செய்ததில் பிட்ச் மதிப்பு நன்றாக உள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. இந்த மதிப்பீட்டை போட்டி நடுவர் ரஞ்சன் மதுகல்லே வழங்கினார்.
ஐசிசி பிட்ச் மதிப்பீடு அமைப்பில், பிட்ச்சுகளை 'மிகச் சிறந்தது' (Very Good), 'நல்லது' (Good), 'சராசரி' (Average), 'திருப்திகரமற்றது' (Unsatisfactory) என வகைப்படுத்துகிறது.
இதில் ஐ.சி.சியின் நான்கு வகை பிட்ச் மதிப்பீட்டு முறையின்படி, 'மிகவும் நல்லது' என்பது அவர்களின் மிக உயர்ந்த மதிப்பீடாகும். மேலும் இரண்டு நாள் நடந்த போட்டியின் போது பிட்ச் நல்ல கேரி, வரையறுக்கப்பட்ட சீம், ஸ்விங் மற்றும் சரியான பவுன்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருந்தது என்பதைக் குறிக்கிறது.
- மோசமான தோல்வியால் பயிற்சியாளர் கம்பீர் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.
- தனது எதிர்காலம் குறித்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்யும் என்று நேற்றைய போட்டிக்கு பிறகு அவர் தெரிவித்தார்.
புதுடெல்லி:
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கவுகாத்தியில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய டெஸ்ட் வரலாற்றில் இது மோசமான தோல்வியாகும்.
சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவிடம் 0-2 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது. தென்ஆப்பிரிக்கா 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
இந்த மோசமான தோல்வியால் பயிற்சியாளர் கம்பீர் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். தனது எதிர்காலம் குறித்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்யும் என்று நேற்றைய போட்டிக்கு பிறகு அவர் தெரிவித்தார். இதனால் கம்பீர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வி.வி.எஸ். லட்சுமணன் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில் பயிற்சியாளர் பதவியில் இருந்து கம்பீர் இப்போதைக்கு நீக்கம் இல்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ. நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
இப்போதைய சூழ்நிலையில் கம்பீருக்கு மாற்றாக வேறு யாரும் நியமிக்கப்பட வாய்ப்பு இல்லை. அவர் அணியை மறுசீரமைப்பு செய்தவர். கம்பீரின் ஒப்பந்தம் 2027 உலக கோப்பை வரை இருக்கிறது.
தென்ஆப்பிரிக்க தொடர் முடிந்த பிறகு அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் டெஸ்ட் அணி தேர்வு குறித்து கம்பீரிடம் கேள்வி எழுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கம்பீரை நீக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் குரல் கொடுத்து வருகிறார்கள்.
- ஒரு வருடத்தில் 2-வது முறையாக இந்தியா ஒயிட்வாஷ் ஆகியுள்ளது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணி 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்காமல் வீறுநடை போட்ட அந்த மகத்தான பயணம் கடந்த ஆண்டு அக்டோபர்- நவம்பரில் நியூசிலாந்திடம் 0-3 என்ற கணக்கில் தோற்றதன் மூலம் முடிவுக்கு வந்தது. அடுத்த ஓராண்டுக்குள் 0-2 என தென் ஆப்பிரிக்காவிடம் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.
இதனால் தலைமை பயிற்சியாளர் கம்பீரை நீக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் குரல் கொடுத்து வருகிறார்கள். கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி இதுவரை 19 டெஸ்டுகளில் விளையாடி 7-ல் வெற்றியும், 10-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது.
இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு பரிசளிப்பு விழா நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவரும் அதில் கலந்து கொண்டனர். அப்போது ரசிகர்கள் கம்பீர் டவுன் டவுன் என கோஷமிட்டனர். அதனை கம்பீர் கண்டுகொள்ளவில்லை.
இதனை பார்த்த இந்திய வீரர் சிராஜ் அப்படியெல்லாம் கோஷமிட வேண்டாம் என்பது போல வாயில் விரல் வைத்து சைகை காட்டினார். தொடர்ந்து அனைவரையும் அமைதி காக்கவும் அவர் வேண்டி கொண்டார். இதில் ஒருவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர் என மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
- ஒவ்வொரு அணியும் ஏலத்தில் ரூ.15 கோடி செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி வீராங்கனைகள் ஏலம் இன்று (வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு டெல்லியில் நடக்கிறது.
ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர் என மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் இருந்து 23 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட 73 பேர் அணிகளுக்கு தேவைப்படுகிறார்கள். ஒரு அணியில் குறைந்தது 15, அதிகபட்சமாக 18 வீராங்கனைகள் இருக்கலாம்.
ஒவ்வொரு அணியும் ஏலத்தில் ரூ.15 கோடி செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் தக்கவைத்த வீராங்கனைகளுக்கான ஊதியம் கழிக்கப்படும். ஒரு வீராங்கனையை மட்டுமே தக்க வைத்த உ.பி. வாரியர்சிடம் அதிகபட்சமாக 14½ கோடி கையிருப்பு உள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் ரூ.5.70 கோடி, குஜராத் ஜெயன்ட்ஸ் 9 கோடி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் ரூ.5¾ கோடி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ரூ.6.15 கோடி இருப்பு வைத்துள்ளன.
ஏலத்தில் சமீபத்தில் உலகக் கோப்பை போட்டியில் தொடர்நாயகியாக ஜொலித்த இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா, வேகப்பந்து வீச்சாளர்கள் கிரந்தி கவுட், ரேணுகா சிங், சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரீசரனி, சினே ராணா ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மெக் லானிங், அலிசா ஹீலி, போபி லிட்ச்பீல்டு, நியூசிலாந்தின் அமெலியா கெர், தென்ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட், நடினே டி கிளெர்க், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் உள்ளிட்டோர் அதிக விலை போக வாய்ப்புள்ளது. தீப்தி ஷர்மாவின் அடிப்படை விலை ரூ.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தக்க வைத்த வீராங்கனைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு அணிக்கும் சிறப்பு சலுகையாக ஆர்.டி.எம். கார்டு வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஏலத்தில், தங்களது முந்தைய அணியில் ஆடிய வீராங்கனைகளை வாங்குவதற்கு ஆர்.டி.எம். கார்டை பயன்படுத்தும் போது முன்னுரிமை அளிக்கப்படும். உ.பி. வாரியர்ஸ் அதிகபட்சமாக 4 ஆர்.டி.எம். கார்டு வைத்துள்ளது. 5 வீராங்கனைகளை முழுமையாக வைத்துக்கொண்ட டெல்லி, மும்பை அணிகளுக்கு ஆர்.டி.எம். இல்லை.
- சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.
லக்னோ:
சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனை ஆகர்ஷி காஷ்யப் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய உன்னதி ஹூடா 21-13, 21-18 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரக்ஷிதா ராம்ராஜ் 21-12, 21-14 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனையான ஷ்ரேயா லீலேவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்றது.
- இந்தத் தொடரில் வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் நடந்தது.
கோவா:
11-வது உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் சீனாவின் வெய் யீ, உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தரோவ் இடையிலான இறுதிச்சுற்றின் முதலாவது ஆட்டம் சமனில் முடிந்தது. இதன் 2-வது ஆட்டமும் சமனில் முடிந்தது.
இந்நிலையில், வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் நடந்தது.
இறுதிப்போட்டியின் டை பிரேக்கரில் சீன வீரர் வெய் யீயை உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.
ஜவோகிர் சிந்தரோவ் தனது 19 வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
ரஷியாவின் ஆந்த்ரே இசிபென்கோ 2-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் யாகுபோவை வீழ்த்தி 3-வது இடம் பிடித்தார்.






