என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டெல்லியில் இன்று WPL ஏலம்: தீப்தி ஷர்மா, லிட்ச்பீல்டு அதிக விலை போக வாய்ப்பு
    X

    டெல்லியில் இன்று WPL ஏலம்: தீப்தி ஷர்மா, லிட்ச்பீல்டு அதிக விலை போக வாய்ப்பு

    • ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர் என மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
    • ஒவ்வொரு அணியும் ஏலத்தில் ரூ.15 கோடி செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி வீராங்கனைகள் ஏலம் இன்று (வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு டெல்லியில் நடக்கிறது.

    ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர் என மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் இருந்து 23 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட 73 பேர் அணிகளுக்கு தேவைப்படுகிறார்கள். ஒரு அணியில் குறைந்தது 15, அதிகபட்சமாக 18 வீராங்கனைகள் இருக்கலாம்.

    ஒவ்வொரு அணியும் ஏலத்தில் ரூ.15 கோடி செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் தக்கவைத்த வீராங்கனைகளுக்கான ஊதியம் கழிக்கப்படும். ஒரு வீராங்கனையை மட்டுமே தக்க வைத்த உ.பி. வாரியர்சிடம் அதிகபட்சமாக 14½ கோடி கையிருப்பு உள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் ரூ.5.70 கோடி, குஜராத் ஜெயன்ட்ஸ் 9 கோடி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் ரூ.5¾ கோடி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ரூ.6.15 கோடி இருப்பு வைத்துள்ளன.

    ஏலத்தில் சமீபத்தில் உலகக் கோப்பை போட்டியில் தொடர்நாயகியாக ஜொலித்த இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா, வேகப்பந்து வீச்சாளர்கள் கிரந்தி கவுட், ரேணுகா சிங், சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரீசரனி, சினே ராணா ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மெக் லானிங், அலிசா ஹீலி, போபி லிட்ச்பீல்டு, நியூசிலாந்தின் அமெலியா கெர், தென்ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட், நடினே டி கிளெர்க், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் உள்ளிட்டோர் அதிக விலை போக வாய்ப்புள்ளது. தீப்தி ஷர்மாவின் அடிப்படை விலை ரூ.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தக்க வைத்த வீராங்கனைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு அணிக்கும் சிறப்பு சலுகையாக ஆர்.டி.எம். கார்டு வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஏலத்தில், தங்களது முந்தைய அணியில் ஆடிய வீராங்கனைகளை வாங்குவதற்கு ஆர்.டி.எம். கார்டை பயன்படுத்தும் போது முன்னுரிமை அளிக்கப்படும். உ.பி. வாரியர்ஸ் அதிகபட்சமாக 4 ஆர்.டி.எம். கார்டு வைத்துள்ளது. 5 வீராங்கனைகளை முழுமையாக வைத்துக்கொண்ட டெல்லி, மும்பை அணிகளுக்கு ஆர்.டி.எம். இல்லை.

    Next Story
    ×