என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி நாளை தொடக்கம்: சென்னை, மதுரையில் கோலாகலம்
    X

    ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி நாளை தொடக்கம்: சென்னை, மதுரையில் கோலாகலம்

    • 14-வது ஜூனியர் உலக கோப்பையை நடத்தும் வாய்ப்பை முதல் முறையாக தமிழ்நாடு பெற்றுள்ளது.
    • கடைசியாக 2023-ம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த போட்டியில் ஜெர்மனி கோப்பையை கைப்பற்றியது.

    சென்னை:

    21 வயதுக்குட்பட்டவருக்கான ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி 1979-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பிரான்சில் நடந்த அந்த போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது.

    கடைசியாக 2023-ம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த போட்டியில் ஜெர்மனி கோப்பையை கைப்பற்றியது. இதுவரை 13 போட்டி நடைபெற்றுள்ளது. இதில் ஜெர்மனி 7 முறை பட்டம் வென்று சாதித்துள்ளது. அதற்கு அடுத்தப்படியாக இந்தியா, அர்ஜென்டினா தலா 2 தடவையும், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் தலா ஒரு முறையும் உலக கோப்பையை கைப்பற்றியுள்ளன. 14-வது ஜூனியர் உலக கோப்பையை நடத்தும் வாய்ப்பை முதல் முறையாக தமிழ்நாடு பெற்றுள்ளது.

    சென்னை,மதுரையில் நடைபெறும் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி நாளை (28-ந்தேதி) தொடங்குகிறது.

    டிசம்பர் 10-ந்தேதி வரை 13 நாட்கள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் மதுரை ரேஸ்கோர்ஸ் ஸ்டேடியத்தில் ஹாக்கி கோலாகலம் நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் 24 நாடுகள் பங்கேற்கின்றன. முதல் முறையாக 24 அணிகள் கலந்து கொள்கின்றன. இதுவரை 16 நாடுகள் பங்கேற்றன.மேலும் 8 அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்த 24 நாடுகளும் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள நாடுகள் விவரம்:-

    குரூப் ஏ: நடப்பு சாம்பியன் ஜெர்மனி, கனடா, தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து.

    குரூப் பி : இந்தியா, சுவிட்சர்லாந்து, சிலி, ஓமன்.

    குரூப் சி : அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஜப்பான், சீனா.

    குரூப் டி : ஸ்பெயின், பெல்ஜியம்,எகிப்து, நமீபியா.

    குரூப் இ: நெதர்லாந்து, மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரியா.

    குரூப் எப்: ஆஸ்திரேலியா, பிரான்ஸ், தென் கொரியா, வங்காளதேசம்.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகளும், 2-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 2 அணிகள் என 8 நாடுகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

    2-வது இடத்தை பிடிக்கும் மற்ற 4 அணிகளும் 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகளும் 9 முதல் 10-வது இடத்துக்கான போட்டியில் மோதும். எஞ்சிய அணிகள் 17 முதல் 24 இடங்களுக்கு மோதும்.

    டிசம்பர் 2-ந்தேதி வரை 4 நாட்கள் 'லீக்' ஆட்டங்கள் நடைபெறும். 3-ந்தேதி ஓய்வுநாளாகும். டிசம்பர் 4-ந்தேதியில் இருந்து நாக் அவுட் சுற்று நடைபெறுகிறது.

    ரோகித் தலைமையில் இந்திய அணி ஜூனியர் உலக கோப்பையில் சாதிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி முதல் முறையாக 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஜூனியர் உலக கோப்பையை கைப்பற்றியது. அதன்பிறகு சொந்த மண்ணில் 2016-ல் 2-வது தடவையாக உலக கோப்பையை வென்று தற்போது சொந்த மண்ணில் நடைபெறும் போட்டியில் 3-வது தடவையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    ஜூனியர் உலக கோப்பை போட்டிக்காக சென்னை, மதுரை தயார் நிலையில் உள்ளன. மதுரையில் 5,500 பேரும், சென்னையில் 2 ஆயிரம் பேரும் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு டிக்கெட் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான இணையதளம் அல்லது செயலியில் பதிவு செய்து டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். ஒருநபர் 4 டிக்கெட் வரை பெற்றுக் கொள்ளலாம்.

    இந்தப் போட்டியையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

    ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    Next Story
    ×