என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    திருந்தி வாழ முயன்ற தால் ஆத்திரமடைந்து ரவுடியை அடித்து கொன்ற அவரது கூட்டாளிகள் 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 2 பேருக்கு தொற்று உறுதியானதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
    அரியாங்குப்பம்:

    புதுவை திப்புராயப்பேட்டை ஆரோக்கிய மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் தெய்பிளான் (வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர்கள் சவுந்தரபாண்டியன் (23), தணிகாஷ் (24), கவுசி தாவீது (24). ரவுடிகளான இவர்கள் மீது இரட்டை கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்த நிலையில் தெய்பிளானுக்கு திருமணமானதை தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்து மனைவி, குழந்தைகளுடன் திருந்தி வாழ தொடங்கினார். இதையொட்டி பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார். இதனால் தெய்பிளான் மீது சவுந்தரபாண்டியன் உள்ளிட்ட கூட்டாளிகள் கடும் ஆத்திரமடைந்தனர்.

    சம்பவத்தன்று இரவு தெய்பிளானை தேங்காய்திட்டு துறைமுகத்திற்கு கடத்திச் சென்று சவுந்தரபாண்டியனும், கூட்டாளிகளும் சேர்ந்து கட்டி வைத்து கட்டையால் அடித்து உதைத்து தாக்கினர். இதில் அவருக்கு கை, கால்கள் முறிந்தன. இதையடுத்து தெய்பிளானை அந்த இடத்திலேயே போட்டு விட்டு தப்பிச் சென்று விட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த தெய்பிளானை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்தரபாண்டியன், தணிகாஷ், கவுசி தாவீது உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். இதையடுத்து கொரோனா பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்ததில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனையடுத்து அரியாங்குப்பம் போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதார குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
    புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தவிர்த்து பிற நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 5 ஆயிரத்து 6 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 371 பேருக்கு தொற்று உறுதியானது. 282 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 2 பேர் இறந்துள்ளனர்.

    மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 25 ஆயிரத்து 18 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு லட்சத்து 598 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. 30 ஆயிரத்து 904 பேருக்கு தொற்று உறுதியானது. அவர்களில் 4 ஆயிரத்து 803 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

    1,693 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 3 ஆயிரத்து 110 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 25 ஆயிரத்து 543 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 558 பேர் உயிரிழந்துள்ளனர்.

    புதுவையில் தற்போது உயிரிழப்பு குறைந்துள்ளது. 82.69 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். தற்போது அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்லும் பிற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே அரசு ஆஸ்பத்திரிகளிலும் பிற நோய்களுக்கு முழுமையான சிகிச்சை அளிப்பது தொடர்பாக வருகிற திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பேச உள்ளோம்.

    வீடுகளில் இருந்து சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் டாக்டர்களை நியமிப்பது தொடர்பாகவும் பேச உள்ளோம்.

    மாகியில் தற்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்த வாரம் நானும் முதல்-அமைச்சரும் மாகி செல்ல உள்ளோம்.

    பிற மாநிலங்களில் கொரோனா சிகிச்சையில் ஈடுபடும் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கு தகுந்தவாறு நம்மிடம் நிதிநிலை இல்லை. எனவே அவர்களுக்கு நவம்பர்-1 ந்தேதியோ, ஜனவரி மாதத்திலோ சான்றிதழ் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்பின் நிதி நிலை சரியானால் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுவை மக்களின் உரிமைகளை பாதுகாக்க எந்த தியாகத்துக்கும் தயாராக இருப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுவை மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கிறது. உதாரணமாக புதுவை மாநில பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தர 4 மாதம் காலதாமதப்படுத்தியது. மாநில அரசின் நிதி அதிகாரம் மற்றும் மக்கள் நலத்திட்டங்களிலும் மத்திய அரசு தலையிடுகிறது.

    மக்களுக்கு இலவச அரிசி, துணி வழங்கவேண்டும் என்றால் கவர்னரின் கடித அடிப்படையில் பணமாகத்தான் கொடுப்போம் என்கிறார்கள். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அடிப்படையில் நிலம் குத்தகை, விற்பனை அதிகாரம் மாநில அரசிடம்தான் உள்ளது. ஆனால் அதிலும் தலையிட்டு காலதாமதப்படுத்துகிறார்கள். மத்திய அரசு நமக்கு தரவேண்டிய நிதியையும் தராமல் இழுத்தடிக்கிறது.

    ஆண்டுதோறும் ரூ.3 ஆயிரம் கோடி மத்திய அரசு வழங்கவேண்டும். ஆனால் ரூ.1,500 கோடிதான் தருகிறது. புதுச்சேரியை மத்திய நிதிக் குழுவிலும் சேர்க்கவில்லை. இந்தி மற்றும் நீட் தேர்வினை திணிக்கிறார்கள். இருமொழி கொள்கை என்றால் அவர்கள் மும்மொழிக் கொள்கை என்கிறார்கள். நமது அதிகாரத்தை படிப்படியாக பறித்து தமிழகத்துடன் இணைக்க முயற்சிக்கிறார்கள். இதைத்தான் நான் கூறினேன்.

    இதை ஒரு சிலர் நான் தேசவிரோதமாக பேசுவதாக கூறுகிறார்கள். என்மீது தேச விரோத வழக்குப்பதிவு செய்யக்கோரி ஊர்வலம் நடத்துகிறார்கள். எதிர்க்கட்சியினர் மீது எதெற்கெடுத்தாலும் மத்திய அரசு தேசவிரோத வழக்குப்போடுவது வாடிக்கையாகி உள்ளது. சி.பி.ஐ., அமலாக்கத் துறையை வைத்து மிரட்டுகிறார்கள். எதிர்க்கட்சியினரை பழிவாங்குவது, மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் மத்திய அரசு முனைப்பாக உள்ளது.

    விவசாயமானது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் 3 விதமான சட்டத்தைபோட்டு மத்திய அரசு தனது அதிகாரத்தை அதில் திணிக்கிறது. அதனால்தான் நான் புதுவையை தமிழகத்தோடு இணைக்க முயற்சி செய்கிறார்கள் என்றேன். ஆனால் என்னை கைது செய்து சிறையில் அடைக்க பா.ஜ.க.வினர் ஊர்வலம் நடத்துகிறார்கள். நான் 2 சட்டை வேட்டியுடன் சிறைக்கு செல்ல தயாராக உள்ளேன். சிறைச் சாலையை நான் ஏற்கனவே பார்த்து உள்ளேன்.

    புதுவை மக்களின் உரிமையை காக்க, பாரம்பரியம் காக்க எந்த தியாகத்துக்கும் தயாராக உள்ளேன். பாரதீய ஜனதாவின் பூச்சாண்டிக்கெல்லாம் பயப்பட மாட்டேன். மாநில உரிமையைப்பற்றி கவலைப்படாமல் எதிர்க்கட்சிகள் தூங்குகின்றன. மத்திய அரசின் நடவடிக்கைகளை வேடிக்கை பார்க்கிறார்கள். மாநில மக்களைப்பற்றி அவர்களுக்கு கவலையில்லை.

    மத்திய அரசின் பல்வேறு தடைகள், கவர்னரின் தொந்தரவை மீறி மேம்பாலத்தை திறந்துள்ளோம். திருக்காஞ்சி மேம்பாலத்தையும் விரைவில் திறப்போம். ரங்கசாமி முடிக்காத பணிகளையும் நாங்கள் முடித்து வருகிறோம். டிசம்பர் மாதம் காமராஜர் மணி மண்டபத்தையும், ஜனவரியில் உப்பனாறு மேம்பாலத்தையும் திறப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுவையில் வேலை கிடைக்காததால் விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை நைனார்மண்டபம் கிழக்கு வாசல் நகரை சேர்ந்தவர் அண்ணாமலை. புதுவை அரசு அச்சகத்தில் பணியாற்றினார். இவர் கடந்த சில ஆண்டுகள் முன்பு இறந்து விட்டார். இவரது மகன் கருணாகரன் (வயது 30). தந்தையின் வேலை கேட்டு முயற்சித்து வந்தார். இவருடன் அவரது தாயார் பத்மாவதி வசித்து வந்தார்.

    இந்த நிலையில் தந்தையின் வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கருணாகரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல் மண்ணாடிப்பட்டு தென்னஞ்சாலை வீதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 54). தொழிலாளி. இவர் நேற்று காலை வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து சிறுவனை கொன்று விட்டு, அவனது பாட்டியும் தற்கொலை செய்து கொண்டார்.
    பரங்கிப்பேட்டை:

    கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சின்னூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவமணி. இவரது மனைவி சாந்தி(வயது 46). இவர்களுடைய மகள் பிரதீபாவுக்கும்(26), சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த தேசப்பன் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு விகாஸ்(5) என்ற மகன் இருந்தான்.

    கணவன்-மனைவி இருவரும் சென்னை காசிமேடு பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரதீபா கோபித்துக் கொண்டு தன்னுடைய மகனுடன், சின்னூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்து வசித்து வந்தார்.

    அதன் பிறகு சில மாதங்களில் பிரதீபா தனது தாய் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். பின்னர் அவர் வீடு திரும்பி வரவில்லை என தெரிகிறது. இதனால் கணவரை இழந்த சாந்தி, தனது பேரனை வளர்த்து வந்தார். இதற்கிடையே அவர் போதிய வருமானமின்றி குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் தனது பேரனை கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக தெரிகிறது. அதன்படி சம்பவத்தன்று சாந்தி, சாப்பாட்டில் விஷத்தை கலந்து தனது பேரனுக்கு கொடுத்துள்ளார். பின்னர் அவரும் விஷம் கலந்த சாப்பாட்டை சாப்பிட்டுள்ளார்.

    இதில் ஒருவர் பின் ஒருவர் மயங்கி விழுந்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சாந்தி, கடலூர் அரசு மருத்துவமனையிலும், விகாஸ் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சாந்தியும், விகாசும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள்.
    புதுவையில் அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது குறைந்து வருவதால் மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. புதுச்சேரியின் பொது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அரசு அலுவலகங்களின் முழு செயல்பாடு மற்றும் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே பொது நடவடிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

    பல்வேறு சங்கங்கள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் போன்றவை மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளை தவறாகப் பயன்படுத்துவதாகவும், சமூக இடைவெளி இல்லாமல் அதிக எண்ணிக்கையில் அரசு அலுவலகங்கள் முன்னால் கூடிவருவதாக எனது கவனத்திற்கு வந்துள்ளது. ஆர்ப்பாட்டம், போராட்டம் என்ற பெயரில், சாலைகளை மறித்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவது கொரோனா கட்டுப்பாட்டை பாதிக்கும்.

    புதுவையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. எனவே போராட்டம் என்ற பெயரில் 5 பேர் அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடக்கூடாது. கவர்னர் மாளிகை, சட்டசபை வளாகம், தலைமை செயலகம், கலெக்டர் அலுவலகம், துணை கலெக்டர் அலுவலகம் ஆகிய அரசு அலுவலகங்கள் முன்பு 500 மீட்டருக்குள் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தக்கூடாது. உத்தரவை மீறி போராட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கலெக்டர் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், ‘உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியின்றி புதுவையில் சாலையோரத்தில் கட்-அவுட், பேனர்கள் வைக்கக்கூடாது. அதனையும் மீறி வைத்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் காவல்துறையுடன் இணைந்து அதனை அகற்றும். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி மாநிலத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு நேற்று காலை பள்ளிகள் திறக்கப்பட்டன.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 18-ந்தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகள் உள்பட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பிளஸ்-2 தேர்வுகள் தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் புதுவை மாநிலத்தில் முதல்கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்று புதுவை அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இரு குழுக்களாக பிரித்து வாரத்தில் 3 நாட்கள் மட்டும் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்துவது, பள்ளிகளுக்கு மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். தினமும் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும். வருகைப்பதிவேடு முறை பின்பற்றப்பட மாட்டாது என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. குறிப்பாக ஆளும் காங்கிரசின் கூட்டணி கட்சியான தி.மு.க., எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகியவை எதிர்த்தன. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் பள்ளிகளை திறப்பதிலேயே அரசு குறியாக இருந்தது. இதையடுத்து 6 மாதங்களுக்குப் பிறகு நேற்று காலை பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளான நேற்று 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணிந்து ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். அங்கு அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டனர். பின்னர் அவர்களிடம் இருந்து பெற்றோரின் ஒப்புதல் கடிதங்கள் பெறப்பட்டன. நகரப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் வருகை என்பது 60 முதல் 80 சதவீதம் வரை இருந்தது. கிராமப்புற பள்ளிகளில் இது 40 முதல் 60 சதவீதமாக இருந்தது. குறிப்பாக தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசு பள்ளிகளுக்கு அதிக அளவில் மாணவர்கள் வந்து இருந்தனர். இது அவர்களது ஆர்வத்தை காட்டியது.
    புதுச்சேரி மாநிலத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆர்வமுடன் வந்த மாணவ, மாணவிகள் உடல் வெப்ப பரிசோதனைக்குப் பின் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
    புதுச்சேரி :

    புதுவையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகள் உள்பட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அடுத்தடுத்து மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மட்டும் திறக்கப்படாமல் இருந்து வந்தன. 2020-21 கல்வியாண்டு தொடங்கிய நிலையில் தற்போது மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் மத்திய அரசு அளித்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி புதுவை மாநிலத்தில் முதல்கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்று புதுவை அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இரு குழுக்களாக பிரித்து வாரத்தில் 3 நாட்கள் மட்டும் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்துவது, பள்ளிகளுக்கு மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். தினமும் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும். வருகைப்பதிவேடு முறை பின்பற்றப்பட மாட்டாது என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து 6 மாதங்களுக்குப் பிறகு நேற்று காலை பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளான நேற்று 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணிந்து ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். அங்கு அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டனர். பின்னர் அவர்களிடம் இருந்து பெற்றோரின் ஒப்புதல் கடிதங்கள் பெறப்பட்டன.

    அதன்பின் உடல் வெப்பநிலையை கண்டறியும் கருவி மூலம் பரிசோதித்து விட்டு கிருமிநாசினி வழங்கி அதன்பிறகே வகுப்பறைக்குள் செல்ல மாணவர்களை ஆசிரியர்கள் அனுமதித்தனர். வகுப்பறையில் ஒரு பெஞ்சில் 2 பேர் அமரவைக்கப்பட்டனர். ஒரு பெஞ்சுக்கும் அடுத்த பெஞ்சுக்கும் இடையே போதுமான இடைவெளியும் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    நகரப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் வருகை என்பது 60 முதல் 80 சதவீதம் வரை இருந்தது. கிராமப்புற பள்ளிகளில் இது 40 முதல் 60 சதவீதமாக இருந்தது. குறிப்பாக தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசு பள்ளிகளுக்கு அதிக அளவில் மாணவர்கள் வந்து இருந்தனர். இது அவர்களது ஆர்வத்தை காட்டியது.
    அமைச்சராக இருந்து எதுவும் செய்ய முடியாததற்கு வருந்துகிறேன் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.
    பாகூர்:

    ஆதிங்கப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளியில் புதுச்சேரி அரசு மாவட்ட தொழில் மையம் சார்பில் சுய வேலைவாய்ப்பு-தொழில் முனைவோர் பயிற்சி சம்பந்தமான திறன் மேம்பாட்டு முகாம் நேற்று நடந்தது. முகாமை அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டு சுய தொழில் தொடங்குவதற்கான சலுகைகள், பயிற்சி, வங்கி கடன், மானியங்கள் பெறுவது குறித்து பேசினார். அதனைதொடர்ந்து சுயதொழில் தொடங்குவதற்கு விண்ணப்பங்களும், பயிற்சிகளும் அளிக்கப்பட்டது.

    முகாமில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-

    புதுச்சேரி முதல்-அமைச்சர், அமைச்சர்கள் ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்து கொடுத்தால் ஏதாவது ஒரு காரணத்தை கூறி அதை கவர்னரும், உயர் அதிகாரிகளும் நிறுத்தி விடுகின்றனர். எனவே சுயதொழில் தொடங்கி நீங்களே முதலாளியாக மாற அரசு புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதை பயன்படுத்தி மானியத்துடன் கூடிய கடன் பெற்று தொழில் தொடங்க முன்வரவேண்டும்.

    அங்கன்வாடி மையங்களில் 500 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதற்கு சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதை அறிந்த கவர்னர் கிரண்பெடி, அதிகாரிகள் அந்த திட்டத்தை உடனடியாக நிறுத்தி விட்டார்கள். மத்திய அரசு ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வேறு மாநிலத்தில் கூட நமது ரேஷன் கார்டு மூலம் பொருட்கள் வாங்கலாம்.

    ஆனால் மத்திய அரசின் திட்டத்திற்கு முரண்பாடாக புதுச்சேரியில் எந்த பொருளும் வழங்கப்படாமல் கவர்னர் கிரண்பெடி ரேஷன் கடையை மூடச்செய்து விட்டார். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கடவுள் தண்டிக்காமல் விடமாட்டார். அரசு சார்பு நிறுவனங்களில் வேலை இழந்தவர்கள் என்னை கோபமாக பார்க்கிறார்கள். மற்றொரு புறம் வேலை கிடைக்கவில்லை என்று பேசுகிறார்கள். இதனால் ஒரு அமைச்சராக இருந்தும் என்னால் ஒன்றும் செய்ய முடியாமல் இருப்பதை எண்ணி வருந்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 386 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,539 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 லட்சத்தை தாண்டி உள்ளது. மொத்த பாதிப்பு 68,35,656 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 78,524  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 971 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,05,526  ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,539ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி காவல் உதவி ஆய்வாளராக மோட்டார் வாகன பிரிவில் பணியாற்றியவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.
    புதுச்சேரி:

    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா, மக்கள் பிரதிநிதிகளையும், பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. இதுவரை பலர் பாதிக்கப்பட்டு கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சிலர் தங்களது உயிரை இழந்துள்ளனர்.

    இந்நிலையில், புதுச்சேரி காவல் உதவி ஆய்வாளராக மோட்டார் வாகன பிரிவில் பணியாற்றியவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.

    புதுச்சேரி காவல் உதவி ஆய்வாளராக மோட்டார் வாகன பிரிவில் பணியாற்றிய சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் எஸ்.ஐ. சரவணன் உயிரிழந்தார்.
    பாகூர் அருகே தாய் இறந்த வேதனையில் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாகூர்:

    பாகூரை அடுத்த மேல் பரிக்கல்பட்டு ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 74). இவருடைய மனைவி சாந்தி. இவர்களுடைய மகன்கள் அருண்குமார் (37), சாம்ராஜ் (33). இதில் அருண்குமார் திருமணமாகி குடும்பத்துடன் உள்ளார். சாம்ராஜுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தாயார் சாந்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துபோனார். தாய் இறந்ததில் இருந்து சாம்ராஜ் சரியாக சாப்பிடாமல் மன வேதனையில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் அப்பகுதியில் உள்ள களத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்தவுடன் அவரது குடும்பத்தினர் விரைந்து சென்று சாம்ராஜை மீட்டு புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சாம்ராஜ் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சபரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாய் இறந்த வேதனையில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    ×