search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் அருண்
    X
    கலெக்டர் அருண்

    அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்த தடை- கலெக்டர் எச்சரிக்கை

    புதுவையில் அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது குறைந்து வருவதால் மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. புதுச்சேரியின் பொது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அரசு அலுவலகங்களின் முழு செயல்பாடு மற்றும் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே பொது நடவடிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

    பல்வேறு சங்கங்கள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் போன்றவை மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளை தவறாகப் பயன்படுத்துவதாகவும், சமூக இடைவெளி இல்லாமல் அதிக எண்ணிக்கையில் அரசு அலுவலகங்கள் முன்னால் கூடிவருவதாக எனது கவனத்திற்கு வந்துள்ளது. ஆர்ப்பாட்டம், போராட்டம் என்ற பெயரில், சாலைகளை மறித்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவது கொரோனா கட்டுப்பாட்டை பாதிக்கும்.

    புதுவையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. எனவே போராட்டம் என்ற பெயரில் 5 பேர் அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடக்கூடாது. கவர்னர் மாளிகை, சட்டசபை வளாகம், தலைமை செயலகம், கலெக்டர் அலுவலகம், துணை கலெக்டர் அலுவலகம் ஆகிய அரசு அலுவலகங்கள் முன்பு 500 மீட்டருக்குள் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தக்கூடாது. உத்தரவை மீறி போராட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கலெக்டர் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், ‘உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியின்றி புதுவையில் சாலையோரத்தில் கட்-அவுட், பேனர்கள் வைக்கக்கூடாது. அதனையும் மீறி வைத்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் காவல்துறையுடன் இணைந்து அதனை அகற்றும். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×