என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காரைக்கால் மாவட்ட அறிவியல் நிலையத்தில் மண்புழு உரத்தை அதிகமாக தயாரித்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா வலியுறுத்தினார்.
    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா ஆய்வு மேற்கொண்டார். அவரை வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ரத்தின சபாபதி வரவேற்று, வேளாண் அறிவியல் நிலைய செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

    தொடர்ந்து, தேசிய தோட்டக்கலை இயக்ககத்தின் நிதியுதவியில் நடைபெறும் உயர்ரக நாற்றாங்கால் அமைத்தல், பழத்தோட்டம் அமைத்தல், காளான் வித்து உற்பத்தி மையம், பால் மற்றும் சிப்பிக் காளான் உற்பத்திக் குடில், விவசாயிகளுக்கான பயிற்சி அரங்கம், மண்புழு உரம் தயாரிப்பு ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் அங்குள்ள கால்நடை குடில் களை பார்வையிட்டு அதன் பராமரிப்பு முறை, நாட்டு மாடு ரகங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா அவர்களிடம் கூறுகையில், இயற்கை மண் வளத்தை பாதுகாக்கும் வகையில் மண்புழு உரத்தை அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும். விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப அவற்றை தாராளமாக வழங்க வேண்டும் என்றும், வேளாண் அறிவியல் நிலையத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவதுடன், பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    நிகழ்ச்சியில் வேளாண் அறிவியல் நிலைய கால்நடை மருத்துவர் கோபு, செந்தில், கதிரவன், திவ்யா, உதவி தொழில்நுட்ப வல்லுனர்கள் அனந்தநாராயணன், அந்தோணிதாஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
    காரைக்கால் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்கால்:

    மயிலாடுதுறை குத்தாலம் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 28), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காரைக்காலில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக குத்தாலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். காரைக்கால் அருகே ஓடுதுறை என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த போது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது சாலையையொட்டி உள்ள வீட்டின் சுவரில் அவர் மோதினார். இதில் படுகாயம் அடைந்த அவர் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி சிலம்பரசன் பரிதாபமாக இறந்துபோனார். இது குறித்து திருபட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுவையில் ஆட்டோ டிரைவர் வீடு மீது நாட்டுவெடிகுண்டை வீசிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை சின்னையாபுரம் ரோடு வ.உ.சி. நகர் அக்காசாமி மடத்து வீதியை சேர்ந்தவர் ராஜா (வயது 41). ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் சவாரிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து இருந்தார். இரவில் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றார். நள்ளிரவில் இவரது வீட்டிற்கு வெளியே பயங்கர வெடிச்சத்தம் கேட்டது.

    இதனால் அதிர்ச்சியடைந்த ராஜா மற்றும் அக்கம்பக்கத்தினர் தங்களது வீடுகளை விட்டு வெளியே வந்து பார்த்தனர். அப்போது புகை மண்டலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரம் கழித்து அந்த இடத்தில் நூல் மற்றும் சிறுசிறு கற்கள் சிதறிக்கிடந்தன. வீட்டிற்கு வெளியே இருந்த பானை ஒன்றும் நொறுங்கிக் கிடந்தது.

    இதனால் அங்கு அசம்பாவிதம் நடந்து இருப்பதை அறிந்து இதுகுறித்து அவர்கள் முத்தியால்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அவர்கள் நடத்திய சோதனையில் அங்கு நாட்டு வெடிகுண்டு வெடித்து இருப்பது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. அதாவது, அக்காசாமி மடம் கோவில் பகுதியில் ஆட்டோ டிரைவர் ராஜாவின் சகோதரர் பாலமுருகன் வீடு உள்ளது. அதன் அருகே சிலர் அமர்ந்து மது குடித்து கஞ்சா புகைத்ததாக கூறப்படுகிறது. இதை தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்து பாலமுருகனுடன் அவர்கள் தகராறு செய்துள்ளனர்.

    இதற்கிடையே போலீசார் விரட்டிய சிலரை ராஜா பிடிக்க முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ராஜாவை எச்சரிக்கும் விதமாக அவரது வீடு அருகே அந்த நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த வெடிகுண்டு வீச்சு சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள முத்தியால்பேட்டை போலீசார் வெடிகுண்டு வீசிய மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

    இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து அறிய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் காட்சிகள் ஏதும் பதிவாகி உள்ளதா? என்பது பற்றியும் போலீசார் தீவிரமாக ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
    பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் பாதுகாப்பு விதிகளை கெடுபிடியாக கண்டிப்புடன் பின்பற்றவேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கவர்னர் கிரண்பேடி நாள்தோறும் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். அப்போது அவர் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

    நேற்று அவர் நடத்திய கலந்துரையாடலின்போது வழங்கிய ஆலோசனை வருமாறு: -

    டாக்டர்கள் நாள்தோறும் தங்களது மறுஆய்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் பாதுகாப்புக்காக விதிகளை கெடுபிடியாக கண்டிப்புடன் பின்பற்றவேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் மார்க்கெட்டுகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதை கண்டிப்புடன் அமலாக்க வேண்டும். சண்டே மார்க்கெட் கூடும்போது சிலர் முகக்கவசம் அணிவதில்லை. சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் கடற்கரை சாலையில் மருத்துவ பரிசோதனை குழு அமைக்கப்பட வேண்டும்.

    மேற்கண்ட ஆலோசனைகளை கவர்னர் கிரண்பேடி வழங்கினார்.
    புதுவை மாநில எல்லையில் தமிழக பஸ்கள் நிறுத்தப்படுவதால் மூட்டை முடிச்சுகளை சுமந்து வரும் பயணிகளிடம் ஆட்டோ கட்டணம் அதிகமாக வசூலிப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
    புதுச்சேரி:

    கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு முன் பல்வேறு நிபந்தனைகளுடன் புதுவையில் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அதாவது புதுவை நகர பகுதிகளில் 7 அரசு பஸ்களும், காரைக்காலுக்கு 2 அரசு பஸ்களும் மட்டும் இயக்கப்பட்டன. புதுச்சேரி பகுதிக்குள் மட்டும் பஸ்கள் இயக்க அனுமதி அளித்ததால் தனியார் பஸ் உரிமையாளர்கள் பஸ்களை இயக்க முன்வரவில்லை.

    இதற்கிடையே தமிழகத்தில் கடந்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்து தொடங்கியது. புதுவை வழியாக சிதம்பரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் தமிழக அரசு பஸ்களுக்கு புதுவையின் உள்ளே பணிகளை ஏற்றி, இறக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் இருந்து புதுவைக்கு வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் புதுவை மாநில எல்லையான கோரிமேடு, கனகசெட்டிகுளம், மதகடிப்பட்டு, கன்னியகோவில் வரை வந்து பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன.

    சென்னையில் இருந்து ஒருவர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுவைக்கு வந்தால் கனகசெட்டிகுளம் எல்லையிலும், புறவழிச்சாலை வழியாக வந்தால் கோரிமேடு எல்லையிலும் இறக்கி விடப்படுகிறார். அதன் பின்னர் புதுவைக்குள் வர இங்கு போதுமான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. மாநில எல்லையில் இருந்து புதுவை பஸ்நிலையத்திற்கு ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.

    இதில் கோரிமேடு எல்லையில் இருந்து புதுவை வர பயணி ஒருவருக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை வசூலிக்கப்படுகிறது என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதேபோல் ஒவ்வொரு எல்லையில் இருந்தும் தொலைவுக்கு ஏற்றார் போல் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது கொரோனா காலத்தில் போதுமான வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வரும் பொதுமக்கள் இந்த கட்டண வசூலால் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    தற்போது புதுவையில் 7 அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் சில பஸ்கள் மட்டுமே மாநில எல்லை வரை செல்கிறது. மற்ற பஸ்கள் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே புதுவை பஸ்நிலையத்தில் இருந்து மாநில எல்லைகளுக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    புதுவை அரியாங்குப்பத்தில் ஓய்வு பெற்ற ஜிப்மர் ஊழியரை கழுத்தை அறுத்து படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    அரியாங்குப்பம்:

    புதுச்சேரி அரியாங்குப்பம்-வீராம்பட்டினம் ரோடு காக்காயன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 78). இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் லேப் அட்டெண்டர் ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். ராதா கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இந்த நிலையில் சுப்பிரமணி தனது வீட்டின் மாடியில் தனியாக வசித்து வந்தார். கீழ்தளத்தில் யாரும் வசிக்கவில்லை. நேற்று காலை வழக்கம்போல தனது அப்பாவை பார்ப்பதற்காக சுப்பிரமணியின் மகள் பச்சை வேணி வந்துள்ளார். அப்போது வீடு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது சுப்பிரமணி படுக்கை அறையில் கழுத்து அறுக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தனது குடும்பத்தினருக்கும், அரியாங்குப்பம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தாகோதண்டராமன், அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தனசெல்வம், புருஷோத்தமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டில் இருந்த அலமாரி திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் கலைந்து காணப்பட்டன. மேலும் பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    பின்னர் சுப்பிரமணியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத் தனர். கொலை நடந்த இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.

    இந்த கொலை குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பணத்திற்காக தான் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை கைப்பற்றி அதனை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அரிக்கன்மேடு பகுதியில் திப்புராயப்பேட்டை பகுதியை சேர்ந்த தெய்ப்ளான் என்ற வாலிபரை ரவுடிகள் கடத்தி வந்து அடித்து கொலை செய்தனர். எனவே அரியாங்குப்பம் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். காவல்துறை நடவடிக்கை எடுத்து இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    புதுச்சேரியில் இன்று முதல் 21 இடங்களில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி கலெக்டர் தலைமையில் சாலை பாதுகாப்புக்குழு கூட்டத்தில் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி நகராட்சி, வருவாய், பொதுப்பணித்துறை, மின்துறை, போலீசார் சேர்ந்து குழுவாக சேர்ந்து இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந் தேதி வரை 21 இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ள உள்ளது.

    எனவே சாலையில் உள்ள பேனர்கள், விளம்பர பலகைகள், கடை ஆக்கிரமிப்புகளை தாமாக முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். மேலும் அபராதம் மற்றும் நகராட்சி தொழில் உரிமம் ரத்து போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று கடலூர் சாலை வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சதுக்கம் முதல் மரப்பாலம் வரையும், நாளை (செவ்வாய்க்கிழமை) இந்திராகாந்தி சதுக்கம் முதல் மூலக்குளம் வரையும், நாளை மறுநாள் (புதன்கிழமை) மரப்பாலம் முதல் அரியாங்குப்பம் பாலம் வரை, 15-ந் தேதி இந்திராகாந்தி சதுக்கம் முதல் ராஜீவ்காந்தி சதுக்கம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடக்கிறது.

    16-ந் தேதி புவன்கரே வீதி (நெல்லித்தோப்பு மார்க்கெட் முதல் மரப்பாலம் சந்திப்பு வரை), 17-ந் தேதி வழுதாவூர் சாலை (ராஜீவ்காந்தி சதுக்கம் முதல் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வரை), 19-ந் தேதி அண்ணாசாலை (அண்ணா சதுக்கம் முதல் அஜந்தா சந்திப்பு வரை), 20-ந் தேதி வழுதாவூர் சாலை (இந்திராகாந்தி மருத்துவமனை முதல் மேட்டுப்பாளையம் சிக்னல் வரை), 21-ந் தேதி புஸ்சி வீதி (அண்ணா சிலை முதல் கடற்கரை சாலை வரை).

    22-ந் தேதி வழுதாவூர் சாலை (மேட்டுப்பாளையம் சிக்னல் முதல் குருமாம்பேட் சந்திப்பு வரை), 23-ந் தேதி குயவர்பாளையம் லெனின் வீதி, 24-ந் தேதி தேசிய நெடுஞ்சாலை -66 (ஜிப்மர் மருத்துவமனை முதல் முருகன் தியேட்டர் வரை), 26-ந் தேதி சுப்பையா சதுக்கம், 27-ந் தேதி லாஸ்பேட்டை விமான நிலைய சாலை, 28-ந் தேதி இந்திராகாந்தி சதுக்கம் முதல் சுப்பையா சதுக்கம் வரை, 29-ந் தேதி வள்ளலார் சாலை 45 அடி சாலை, 31-ந் தேதி மகாத்மா காந்தி சாலை, 2-ந் தேதி காமராஜர் சாலை, 3-ந் தேதி உப்பளம் அம்பேத்கர் சாலை, 4-ந் தேதி காமராஜர் சாலை, 5-ந் தேதி 100 அடி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
    புதுவையில் கொரோனா பரிசோதனை உபகரணங்கள் வாங்க ரூ.6 கோடிக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசு கடந்த 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைத்த 28 கோப்புகளுக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரி அரசின் நகர திட்டமிடுதல் அதிகாரி ஸ்ரீதரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் கோப்பு, ஐ.ஆர்.பி.என். துணை கமாண்டன்ட் சுபாஷின் பணியிடை நீக்கம் 90 நாட்களுக்கு நீட்டிப்பு ஆகிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

    கொரோனா பரிசோதனைக்கான ரேபிட் ஆண்டிஜன் டெஸ்ட் கிட் 50 ஆயிரம் வாங்க ரூ.2 கோடியே 29 லட்சம் ஒதுக்கீடு, ட்ரூனெட் முறையிலான கொரோனா பரிசோதனைக்கு தேவையான ட்ரூனெட் சிட் 28 ஆயிரம் வாங்க ரூ.3 கோடியே 66 லட்சத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

    மேலும் பாரதியார் பல்கலைக்கூடத்திற்கு மத்திய அரசு நிதி ரூ.2¼ கோடி, புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ரூ. 76 லட்சம் ஒதுக்கீடு செய்து ஆகிய கோப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளார். புதுச்சேரி அரசு அலுவலகங்கள், வங்கிகளுக்கு 2021-ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை பட்டியலுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு துறைகளில் உள்ள மொத்தம் 28 கோப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    சேதராப்பட்டில் மாசு கலந்த குடிநீர் வினியோகத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சேதராப்பட்டு:

    சேதராப்பட்டு பழைய காலனி மக்களுக்கு வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் மாசு கலந்து மஞ்சள் நிறத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான தீப்பாய்ந்தான், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் ஆகியோரிடம் முறையிட்டனர்.

    இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்த நிலையில் நேற்று காலை வழக்கத்தை விட மோசமாக மாசு கலந்த குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த காலனி மக்கள் மாசு கலந்த குடிநீரை பாத்திரங்கள் மற்றும் பாட்டில்களில் பிடித்துக் கொண்டு வந்து அங்குள்ள மந்தைவெளி சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த சேதராப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை அவர்கள் ஏற்க மறுத்து வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் இதற்கு உடனடியாக தீர்வு கண்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர்.

    உடனே போலீசார் ஆணையர் ஆறுமுகத்தை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இதனை ஏற்று மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சுமார் 1 மணிநேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    பாகூர் அருகே விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயியை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    பாகூர்:

    பாகூரை அடுத்த குருவிநத்தம் பெரியார் நகரை சேர்ந்தவர் துரைசாமி (வயது 74). இவர், முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேலை பார்த்து வந்தார். 

    சம்பவத்தன்று வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது துரைசாமியை பாம்பு கடித்தது. இதனால் வாயில் நுரை தள்ளியபடி அவர் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி துரைசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து பாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    முதல்-அமைச்சர் நாராயணசாமி தவறான தகவல்களை சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    பொதுமக்களுக்கு இலவச துணி, அரிசி வழங்குவதை கவர்னர் கிரண்பேடி தடுப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    பயனாளிகளுக்கு நேரடியாக நிதி பரிமாற்றம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை இந்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டு போன்றவை உறுதி செய்துள்ளன. நேரடி பயனாளிகள் பரிமாற்றத்தின் (நிதி) முறை இலவச அரிசி, உதவித்தொகை அல்லது வேறு ஏதேனும் நன்மைகள், சிறப்பு பரிசுகள் போன்றவையாக இருக்கலாம்.

    இந்த கொள்கை நடவடிக்கைக்குப் பின்னர் புதுச்சேரியில் பல கோடி ரூபாய் நேரடியாக லட்சக்கணக்கான ஏழை மக்கள் மற்றும் பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. எந்தவொரு பயனாளிகளிடம் இருந்தும் இந்த நடவடிக்கை குறித்து ஒரு புகார்கூட வரவில்லை. தலைமை செயலாளர் மற்றும் நிதித்துறையினரால் முறையாக ஆராயப்பட்ட செயலகத்தால் அனுப்பப்படும் போதெல்லாம் கவர்னரின் செயலகம் அனைத்து நியாயமான தேவைகளையும் ஆதரித்துள்ளது.

    எனவே குறை எங்குள்ளது? வேதனை அடைந்தவர் யார்? எப்போது நிர்வாகம் ஒரு சுத்தமான மற்றும் நேர்மையான சேவையை செய்யும்? முதல்-அமைச்சர் தனது மக்களுக்கு இந்த நன்மை குறித்து திருப்தியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவதற்கு பதிலாக அவருக்கு நன்கு தெரிந்த காரணங்களுக்காக புலம்புகிறார்.

    எந்தவொரு நிதியிழப்பும் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் அனைத்தையும் பெறுகிறார்கள் என்பதில் அவர் மிகவும் நிம்மதியும் நன்றியுணர்வும் கொண்டிருக்கவேண்டும். நேரடி பணபரிமாற்றம் இப்போது அங்கீகரிக்கப்பட்ட மற்றும் முறையான பயன் முறையாகும். இதற்குள் தவறான முடிவுகள் வர வாய்ப்பு இல்லை. இதில் வருவாய் இழப்பு இல்லை. பணம் நேரடியாக ஏழைகளின வங்கிக் கணக்கிற்கு செல்கிறது.

    நடுத்தர தரவு இல்லை. கமிஷன் முகவர்கள் இல்லை. காத்திருக்க தேவையில்லை. எந்த கெடுதலும் இல்லை. எந்த ஊழலும் சம்பந்தப்படவில்லை. யாருடைய பரிந்துரையின்பேரிலும் கொடுக்கவும், எடுக்கவும் முடியாது. எந்த உதவியும் எடுக்கப்படவில்லை அல்லது கொடுக்கப்படவில்லை. சென்னை ஐகோர்ட்டு இந்த முறையைப்பற்றி விளக்கம் கேட்டபோது இந்திய அரசும், கவர்னரின் அலுவலகமும் இந்த கொள்கைகளை ஆதரித்தன. மேலும் அனைத்து செயலாளர்களும் இதை பின்பற்றுகிறார்கள். அதிகாரிகள் அவ்வாறு செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

    இந்திய அரசுக்கு எதிராகவும், கவர்னர் அலுவலகத்துக்கு எதிராகவும் மக்களுக்கு தவறான தகவல்களை வழங்குவதை முதல்-அமைச்சர் நிறுத்த வேண்டும். நீதிமன்றங்கள்கூட நேரடி பணபரிமாற்ற முறைக்கு ஒப்புதல் அளித்துள்ளன என்ற உண்மையை அவர் மக்களுக்கு சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    சண்டே மார்க்கெட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வெங்கடேசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநகரில் சண்டே மார்க்கெட் பிரபலமானது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பல்வேறு விதமான பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக சண்டே மார்க்கெட் மூடப்பட்டது. இதனால் அங்கு வியாபாரம் செய்பவர்கள் வறுமையில் வாடுகின்றனர்.

    இந்தநிலையில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பல கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிக் கூடங்கள்கூட திறக்கப்பட்டுள்ளன. பஸ்கள், டெம்போக்கள் ஓடுகின்றன. திரையரங்குகளும் விரைவில் திறக்கப்பட உள்ளன.

    இதுபோன்ற நிலையில் அடுத்த வேளை உணவுக்கே மிகவும் கஷ்டப்படும் சண்டே மார்க்கெட் தொழிலாளர் களை வாழவைக்க மாநில அரசு உதவிட வேண்டும். ஏனெனில் அவர்கள் வட்டிக்கு பணம் வாங்கி கடை வைத்து பிழைத்து வருகின்றனர். எனவே அரசு சண்டே மார்க்கெட் வியாபாரிகளின் குடும்ப சூழ்நிலையை கருத்தில்கொண்டு அவற்றை முறைப்படுத்தி நடத்த அனுமதிக்கவேண்டும்.

    குறிப்பாக கொரோனா காலம் முடியும்வரை அவர்களை 3 பிரிவுகளாக பிரித்து சமூக இடைவெளியை உறுதி செய்து கடைகளை நடத்த அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் சம்மதத்தோடு மாற்று இடங்களில் சில காலம் மட்டும் கடைகள் நடத்த அனுமதிக்கவேண்டும். புதுவை அரசு அவர்களை உடனடியாக அழைத்து பேசி நல்ல தீர்வை காணவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    ×