search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்புழு உரம்"

    • மண்புழு உரம் தயாரிப்புக்கூடம் அமைக்க சில ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • இயற்கை உரக்குடிலில் அமைக்கப்பட்ட தொட்டிகளில் மக்கும் குப்பையும் நிரப்பப்படவில்லை.

    உடுமலை:

    மத்திய அரசின் தூய்மை இந்தியா மற்றும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் மண்புழு உரம் தயாரிப்புக்கூடம் அமைக்க சில ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.திட்டத்தில் இயற்கை உரம் உற்பத்திக்கு குடில் அமைத்து தயாரிப்பதற்கு தேவையான தொட்டிகள் அமைக்கப்பட்டன.

    கிராமங்களில், தூய்மைக்காவலர்களால் சேகரிக்கப்படும் குப்பையை தரம் பிரித்து மக்கும் கழிவுகளைக்கொண்டு, மக்கும் கழிவுகளை பயன்படுத்தி இயற்கை உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டது.உற்பத்தியாகும் உரத்தை விற்பனை செய்து வருவாயை ஊராட்சி நிதியில் சேர்க்கவும் அரசு உத்தரவிட்டது.இத்தகைய மண்புழு உரம் தயாரிப்புக்கு ஊராட்சிகளில் 90 ஆயிரம் ரூபாய் செலவில் 8 தொட்டிகளுடன் இயற்கை உரக்குடில் அமைக்கப்பட்டது.

    உரம் தயாரிப்பு மற்றும் உரக்குடில் பராமரிப்புக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஆட்களும் நியமிக்கப்பட்டனர். சில மாதங்கள் மட்டுமே இத்திட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்பாட்டில் இருந்தது. பின்னர் மக்கும், மட்காத குப்பையை தரம் பிரிப்பதில் தொய்வு ஏற்பட்டது. இயற்கை உரக்குடிலில் அமைக்கப்பட்ட தொட்டிகளில் மக்கும் குப்பையும் நிரப்பப்படவில்லை. படிப்படியாக இத்திட்டத்தின் செயல்பாடுகள் அனைத்தும் முடங்கின. தற்போது அனைத்து ஊராட்சிகளிலும், இயற்கை உரக்குடில் காட்சிப்பொருளாகவும் சில இடங்களில் பராமரிப்பில்லாமல் மேற்கூரை சுவர்கள் இடிந்தும் வருகின்றன.

    ஊராட்சிகளில் குப்பையை தீ வைத்து எரித்து, சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கவும் மண் புழு உரம் தயாரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தவும் கொண்டு வரப்பட்ட திட்டம் முற்றிலுமாக முடங்கியுள்ளது அனைத்து தரப்பினரையும் வேதனையடைய செய்துள்ளது.

    தூய்மை இந்தியா தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி வீணடிக்கப்பட்டது குறித்து ஊரக வளர்ச்சித்துறையினர் முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பார்த்தீனியத்தின் களைகளை மக்குவதற்காக 45 முதல் 60 நாட்கள் வரை விட வேண்டும்
    • செடியினை சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயன்படுத்தி பார்த்தீனிய செடிகளின் பாதிப்பினை முற்றிலுமாக கட்டுப்படுத்தலாம்.

    உடுமலை:

    பார்த்தீனியத்தை கொண்டு மண்புழு உரம் தயாரித்தல் குறித்து வேளாண் துறை விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

    பூ பூக்கும் முன் தேவையான பார்த்தீனிய களைகளை சேகரித்து அவற்றை 5 முதல் 10 செ.மீ., நீளவாக்கில் சிறிதாக நறுக்கி 10 செ.மீ., சுற்றளவில் கீழிருந்து 5 செ.மீ., உயரத்தில் அவற்றை அடுக்க வேண்டும். இவற்றின் மேல் 10 சதவீதம் மாட்டு சாண கரைசலை கொண்டு சமமாக தெளிக்க வேண்டும். இவற்றை 10 நாட்கள் மக்குவதற்காக விட வேண்டும். 5 நாட்கள் கழித்து 250 முதல் 300 மண் புழுக்களை மக்கிய உரத்தில் விட வேண்டும். மேலும் பார்த்தீனியத்தின் களைகளை மக்குவதற்காக 45 முதல் 60 நாட்கள் வரை விட வேண்டும். பார்த்தீனிய மண்புழு உரத்தை தொழு உரமாக பயன்படுத்தலாம்.

    இதில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகியன அடங்கியுள்ளன. பார்த்தீனிய செடியானது அனைத்து தரப்பு உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதால் இதை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கிய பணியாகும். இச்செடியினை சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயன்படுத்தி பார்த்தீனிய செடிகளின் பாதிப்பினை முற்றிலுமாக கட்டுப்படுத்தலாம்.

    பார்த்தீனிய விழிப்புணர்வு வாரம் இம்மாதம் 16-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது என வேளாண்துறையினர் தெரிவித்தனர். 

    • பொதுநல சங்கத்தினரின் ஒத்துழைப்புடன் சுகாதாரப்பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
    • மண்புழு உரம் கிலோ 10 ரூபாய், இயற்கை உரம் கிலோ 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    அவிநாசி :

    தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சியில் சுத்தம், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற திட்டம் கடந்த மே மாதம் துவங்கப்பட்டது.அதன்படி அந்தந்த பகுதியில் உள்ள தன்னார்வ அமைப்பினர், பொதுநல சங்கத்தினரின் ஒத்துழைப்புடன் சுகாதாரப்பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    அவிநாசி பேரூராட்சி சார்பில் தினமும் 12 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. கைகாட்டிபுதூரில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் குப்பையில் இருந்து இயற்கை மற்றும் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. மண் புழு உரம் கிலோ 10 ரூபாய், இயற்கை உரம், கிலோ 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டன் கணக்கில் வாங்குவோருக்கு விலையில் சலுகையும் வழங்கப்படுகிறது.

    பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், பேரூராட்சி சார்பில் தயாரிக்கப்படும் இயற்கை மற்றும் மண்புழு உரத்தில் கலந்துள்ள தழை, மணி மற்றும் சாம்பல் சத்து குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சான்று பெறப்பட்டுள்ளது. பலரும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். கடந்த 5 நாட்களில் ஒரு டன் உரம் விற்பனையாகியுள்ளது. அரசின், தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் செயல்பாடாக இப்பணி அமைந்துள்ளது என்றனர்.

    ×