search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    புதுச்சேரி மாநிலத்தில் 6 மாதங்களுக்குப்பின் பள்ளிகள் திறப்பு

    புதுச்சேரி மாநிலத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு நேற்று காலை பள்ளிகள் திறக்கப்பட்டன.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 18-ந்தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகள் உள்பட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பிளஸ்-2 தேர்வுகள் தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் புதுவை மாநிலத்தில் முதல்கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்று புதுவை அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இரு குழுக்களாக பிரித்து வாரத்தில் 3 நாட்கள் மட்டும் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்துவது, பள்ளிகளுக்கு மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். தினமும் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும். வருகைப்பதிவேடு முறை பின்பற்றப்பட மாட்டாது என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. குறிப்பாக ஆளும் காங்கிரசின் கூட்டணி கட்சியான தி.மு.க., எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகியவை எதிர்த்தன. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் பள்ளிகளை திறப்பதிலேயே அரசு குறியாக இருந்தது. இதையடுத்து 6 மாதங்களுக்குப் பிறகு நேற்று காலை பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளான நேற்று 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணிந்து ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். அங்கு அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டனர். பின்னர் அவர்களிடம் இருந்து பெற்றோரின் ஒப்புதல் கடிதங்கள் பெறப்பட்டன. நகரப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் வருகை என்பது 60 முதல் 80 சதவீதம் வரை இருந்தது. கிராமப்புற பள்ளிகளில் இது 40 முதல் 60 சதவீதமாக இருந்தது. குறிப்பாக தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசு பள்ளிகளுக்கு அதிக அளவில் மாணவர்கள் வந்து இருந்தனர். இது அவர்களது ஆர்வத்தை காட்டியது.
    Next Story
    ×