என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி காவல் உதவி ஆய்வாளராக மோட்டார் வாகன பிரிவில் பணியாற்றியவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.
    புதுச்சேரி:

    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா, மக்கள் பிரதிநிதிகளையும், பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. இதுவரை பலர் பாதிக்கப்பட்டு கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சிலர் தங்களது உயிரை இழந்துள்ளனர்.

    இந்நிலையில், புதுச்சேரி காவல் உதவி ஆய்வாளராக மோட்டார் வாகன பிரிவில் பணியாற்றியவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.

    புதுச்சேரி காவல் உதவி ஆய்வாளராக மோட்டார் வாகன பிரிவில் பணியாற்றிய சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் எஸ்.ஐ. சரவணன் உயிரிழந்தார்.
    பாகூர் அருகே தாய் இறந்த வேதனையில் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாகூர்:

    பாகூரை அடுத்த மேல் பரிக்கல்பட்டு ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 74). இவருடைய மனைவி சாந்தி. இவர்களுடைய மகன்கள் அருண்குமார் (37), சாம்ராஜ் (33). இதில் அருண்குமார் திருமணமாகி குடும்பத்துடன் உள்ளார். சாம்ராஜுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தாயார் சாந்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துபோனார். தாய் இறந்ததில் இருந்து சாம்ராஜ் சரியாக சாப்பிடாமல் மன வேதனையில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் அப்பகுதியில் உள்ள களத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்தவுடன் அவரது குடும்பத்தினர் விரைந்து சென்று சாம்ராஜை மீட்டு புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சாம்ராஜ் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சபரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாய் இறந்த வேதனையில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    புதுவையில் பள்ளிக் கூடங்களை திறக்க ரங்கசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் நாளை (வியாழக்கிழமை) முதல் பள்ளிக் கூடங்களை திறக்க புதுவை அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் பள்ளிக்கூடங்களை திறக்க முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலகத்தையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் என்ற கொடிய தொற்று நோய் நமது நாட்டில் உள்ள அனைத்து பகுதிகள் மட்டுமில்லாமல் புதுவையிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பிரச்சினையில் இதுவரை சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்க முடியாமல் இந்த அரசாங்கம் இருந்து வருகிறது.

    இந்தநிலையில் புதுவையில் பள்ளிகள் திறப்பது குறித்து அரசானது அவசரமாக முடிவெடுத்துள்ளது. தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் புதுவை அரசு பள்ளிகளை திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது.

    இதனடிப்படையில் பள்ளிக்கு மாணவர்களை அனுப்பினால் அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கல்வி வழிகாட்டுதலை பொறுத்தவரை நமது கல்வித்துறையானது தமிழக கல்வி வாரியத்தை பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது சம்பந்தமாக முடிவு எடுக்கும்போது புதுவை அரசும் முடிவு எடுப்பது நல்லது.

    இந்த அபாயகரமான சூழ் நிலையில் மாணவர்களுக்கு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், மாணவர்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதும் அரசின் கடமையாகும். இதனால் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு யோசித்து முடிவு எடுக்கவேண்டும்.

    தற்போது ஆந்திர மாநிலத்தில் பள்ளிக்கு சென்று வந்த மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனால் ஏனாம் பகுதியில் பள்ளிகளை திறப்பது சாத்தியமில்லை என்று புதுவை சுகாதார அமைச்சர் கூறியதாக தெரிகிறது. எனவே பள்ளிகள் திறப்பதில் மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி புதுவை அரசு செயல்பட வேண்டும்.

    மேலும் இந்திராகாந்தி அரசு பொதுமருத்துவமனையில் போதுமான சுகாதார பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். மருத்துவமனையில் வேலைசெய்து வரும் அனுபவம் வாய்ந்த சுகாதார பணியாளர்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஏற்கனவே பணி செய்துவரும் சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கி பணிநிரந்தரம் செய்யவேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் ரங்கசாமி கூறியுள்ளார்.
    புதுவையில் திட்டமிட்டபடி நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    மத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் புதுவையில் நாளை (வியாழக்கிழமை) முதல் மாணவர்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் விதமாக பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

    10, 12-ம் வகுப்புகள் நாளை முதலும், 9,11-ம் வகுப்புகள் வரும் 12-ந் தேதி முதல் செயல்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை தற்போது திறக்கப்போவதில்லை என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வரும் நேரத்தில் புதுவையிலும் பள்ளிகளை திறக்கக்கூடாது என பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

    இதனால் புதுவையில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா? இல்லையா? என்ற குழப்பம் பெற்றோர்களிடையே எழுந்தது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுவிடம் கேட்டபோது, பள்ளிகள் திறப்பது தொடர்பான முடிவில் எந்த மாற்றமும் இல்லை. பள்ளிகளை திறப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது நடந்து வருகிறது என தெரிவித்தார். இதனால் திட்டமிட்டபடி நாளை புதுவையில் பள்ளிகள் திறக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

    முதல் அமைச்சர் நாராயணசாமி மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய கவர்னர் கிரண்பேடியிடம் புதுவை பா.ஜனதா மனு அளிக்க முடிவு செய்துள்ளது.

    புதுச்சேரி:

    உத்தரபிரதேசத்தில் தலித் இளம்பெண் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், புதுவை மாநில மகிளா காங்கிரசார் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

    ஊர்வலத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசும்போது, “புதுவையை தமிழகத்துடன் இணைக்க பா.ஜனதா முயற்சிக்கிறது என்றும், அதனை நாம் ஒருங்கினைந்து முறியடிக்க வேண்டும் என கூறினார்.

    இதற்கு புதுவை பா.ஜனதா முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பொய்யான அவதூறு செய்தியை பரப்பி புதுவையை கலவர பூமியாக மாற்ற நினைக்கிறார் என பா.ஜனதா தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து பா.ஜனதா மாநிலப் பொதுசெயலாளர் ஏம்பலம் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்தியில் ஆளுகின்ற பாரதிய ஜனதா கட்சி அரசு புதுவை மாநிலத்தை தமிழகத்தோடு இணைப்பதற்காக முயற்சி மேற்கொள்வதாக ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி அவதூறை முதல்- அமைச்சர் நாராயணசாமி பரப்பியுள்ளார்.

    முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் அரசு புதுவை மாநிலத்தை தமிழகத்தோடு இணைக்கும் முயற்சி மேற்கொண்ட போது மக்கள் மிகப்பெரிய எழுச்சி போராட்டம் நடத்தி அதை தடுத்து நிறுத்தினார்கள்.

    இந்த நிலையில் மக்கள் மத்தியில் பொய்யான அவதூறு செய்தியை பரப்பி புதுவையை கலவர பூமியாக மாற்ற நினைக்கின்ற புதுவையை ஆளும் முதல்- அமைச்சர் நாராயணசாமி மீது தேச விரோத வழக்கு பதிவு செய்ய மத்திய அரசுக்கு கவர்னர் பரிந்துரை செய்ய நாளை (வியாழக்கிழமை) பாரதீய ஜனதா சார்பில் ஊர்வலமாக சென்று கவர்னரை சந்தித்து மனு தர உள்ளோம்.

    சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் வகையில் தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கு ஏதிராக பேசி வரும் நாராயணசாமி அரசை பதவி நீக்கம் செய்து புதுவை அரசை மத்திய அரசின் கீழ் கொண்டுவந்து புதுவை மக்களையும், சட்ட ஒழுங்கையும் காப்பற்ற வலியுறுத்த உள்ளோம்.

    இவ்வாறு ஏம்பலம் செல்வம் அறிக்கையில் கூறியுள்ளார்.

    நிலுவை சம்பளம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சர் வீட்டை அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் சமூக நலத்துறையின் கீழ் உள்ள அங்கன்வாடியில் 450-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    கடந்த 5 மாதங்களாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், நிலுவை சம்பளம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

    ஆனால், அரசு அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை. இதனால், 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேத்தாஜி நகரில் உள்ள சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமியின் வீட்டை முற்றுகையிட்டனர். வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் போது கடுமையான வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கந்தசாமி உறுதி அளித்ததை தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
    பண்டிகை காலத்தில் இலவச துணிகளுக்கு பதிலாக பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் வழங்கப்படும் என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் ஆதிதிராவிட மக்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சார்பில் பண்டிகை காலங்களில் இலவச துணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தற்போது பண்டிகை காலம் வர உள்ளதால் அவர்களுக்கு இலவச துணிகள் வழங்குவது தொடர்பாக புதுவை அரசு சார்பில் கோப்பு தயாரிக்கப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.

    இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் விழா காலங்களில் மக்களுக்கு இலவச துணி வழங்குவது தொடர்பாக கவர்னர் கிரண்பேடி கடந்த 9.6.2020 அன்று கடிதம் அனுப்பி இருந்தார்.

    வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக தான் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது.

    இதேபோல் கடந்த ஆண்டுகளை போல் பணம் இந்த ஆண்டும் வழங்குவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    இதை கவர்னர் கிரண்பேடி சமூகவலை தளத்தில் பதிவு செய்து உள்ளார். இதுகுறித்துகிரண்பேடி கூறுகையில், ‘வங்கி கணக்கில் பணம் தரப்படும் முறையை மீண்டும் மத்திய அரசு உறுதிபடுத்தி உள்ளது. இது அரசு விதி’ என்று குறிப்பிட்டார்.

    நவம்பர் 1-ந் தேதி நடைபெறும் புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக காரைக்கால் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    காரைக்கால்:

    நவம்பர் 1-ந் தேதி புதுச்சேரி விடுதலை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, கலெக்டர் அர்ஜூன்சர்மா தலைமை தாங்கினார். துணை கலெக்டர்கள் ஆதர்ஷ், பாஸ்கரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரகுநாயகன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கலெக்டர் அர்ஜூன் சர்மா பேசியதாவது:-

    வழக்கம்போல் இந்த ஆண்டும், காரைக்காலில் விடுதலை நாள் விழா கொண்டாடப்படும். இந்தாண்டு கடற்கரை சாலையில் விழா நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக, காவல்துறை அணிவகுப்பு மட்டும் நடைபெறும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அணிவகுப்பு நடைபெறாது. கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது.

    ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் தயார்நிலையில் இருக்கவேண்டும். விழாவிற்கு வரும் தியாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு, குடிநீர் வழங்க, சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்யவேண்டும். விழாவில், கொடியேற்று விழா முடிந்தபிறகு, அமைச்சரால் தியாகிகள் கவுரவிக்கப்படுவார்கள். விழாவில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் முககவசம் அணிந்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுச்சேரியில் சமூக இடைவெளி கடைபிடிக்காத 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அரசின் விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்றால் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இந்த நிலையில் புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் உத்தரவின்பேரில் புதுவை தாசில்தார் ராஜேஷ்கண்ணா மற்றும் அதிகாரிகள் நேற்று காமராஜர் சாலையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பாலாஜி திரையரங்கம் எதிரில் உள்ள 2 பழச்சாறு கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்களுக்கு பழச்சாறுகள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த 2 கடைகளுக்கும் சீல் வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 407 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,682 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 61 ஆயிரத்து 267 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனாவிடம் சிக்கியவர்களின் எண்ணிக்கை 66 லட்சத்து 85 ஆயிரத்து 083 ஆக உயர்ந்தது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் நிகழ்ந்த கொரோனா பலி எண்ணிக்கை 884 ஆகும். இதன்மூலம் மொத்த பலி  எண்ணிக்கையும் 1,03,569 ஆக அதிகரித்து இருக்கிறது.

    தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 19 ஆயிரத்து 023 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 56 லட்சத்து 62 ஆயிரத்து 491 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

    இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 407 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,682ஆக உயர்ந்துள்ளது.
    புதுவை ஜெயிலில் கொலை வழக்கில் கைதாகி அடைக்கப்படும் முதல் யார்டில் நடந்த சோதனையில் 5 மொபைல் போன், பீடி கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை வாழைக்குளத்தில் கடந்த 7-ந் தேதி கதர்வாரிய அதிகாரி கணேசன் படுகொலை செய்யப்பட்டார்.

    இதனைத் தொடர்ந்து கடந்த 30-ந் தேதி மேட்டுப்பாளையத்தில் முன்னாள் கவுன்சிலர் மாந்தோப்பு சுந்தர், நேற்று முன்தினம் நடிகர் விஜய்சேதுபதி நற்பணி மன்ற தலைவர் மணிகண்டன் ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது கதர்வாரிய அதிகாரி கணேசன் உள்ளிட்ட கொலைக்கான திட்டங்கள் அனைத்தும் ஜெயிலில் உள்ள ரவுடிகள் மூலம் வகுக்கப்பட்டு நடத்தப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து போலீசார் பரிந்துரையின் பேரில் சிறை அதிகாரிகள் நேற்று மாலை கைதிகளின் அறையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கொலை வழக்கில் கைதாகி அடைக்கப்படும் முதல் யார்டில் நடந்த சோதனையில் 5 மொபைல் போன், பீடி கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுகுறித்து சிறை அதிகாரி புகாரின்பேரில் காலாப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறையில் உள்ள கைதிகள் செல்போனில் பேசும் போது சிக்னல் டிராக் மூலம் போலீசார் கண்டுபிடிக்க முடியும் என்பதால் வாட்ஸ்அப் காலில் வெளிநபர்களுடன் பேசியுள்ளனர். இதுகுறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுவையை தமிழகத்தோடு இணைக்க பா.ஜ.க. நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
    புதுச்சேரி:

    உத்தரபிரதேசத்தில் உள்ள ஹத்ராசில் நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நீதி கேட்டு, ஆறுதல் கூறச் சென்ற ராகுல் காந்தி மீது அடக்கு முறையை ஏவிய பா.ஜ.க. அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக புதுவை மாநில மகளிர் காங்கிரஸ் சார்பில் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடந்தது. பழைய பஸ் நிலையத்தில் உள்ள அண்ணாசிலை அருகில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. இதனை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்.

    ஊர்வலத்தில் அமைச்சர் கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், தீப்பாய்ந்தான் மற்றும் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் அண்ணா சாலை, நேருவீதி, மிஷன்வீதி வழியாக தலைமை தபால் நிலையம் அருகே முடிவடைந்தது.

    ஊர்வலத்தின் முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    உத்தரபிரதேச மாநிலத்தில் 19 வயது தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த மாநில அரசு குற்றவாளிகளுக்கு ஆதரவாக உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் சென்றபோது, அவர்களை அந்த மாநில போலீசார் தடுத்து நிறுத்தி கீழே பிடித்து தள்ளினர். மேலும் அவரை கைது செய்தனர்.

    ஆனால் ராகுல்காந்தி 2 நாட்கள் கழித்து மீண்டும் அங்கு சென்று அந்த பெண்ணின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த தைரியம் யாருக்கு வரும். பா.ஜ.க.வினருக்கு வருமா? சுதந்திரத்திற்காக பாடுபட்ட கட்சி காங்கிரஸ்.

    இந்த கட்சிக்கு தான் அடித்தட்டு மக்களின் கஷ்டம் தெரியும். மத்திய பா.ஜ.க. அரசு ஜனநாயகத்தை மதிப்பது இல்லை. நாட்டு மக்களுக்கு பேச்சுரிமை, எழுத்துரிமை கிடையாது. எதற்கெடுத்தாலும் வருமான வரித்துறையினரை ஏவி மிரட்டுகின்றனர். அவர்களின், இது போன்ற செயல்களை முறியடிக்க காங்கிரஸ் கட்சியால், மதச்சார்பற்ற கூட்டணியால் தான் முடியும்.

    நாம் மாநிலத்தில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்தால் அதனை தடுத்து நிறுத்த மத்திய அரசு ஒருவரை புதுவைக்கு அனுப்பி வைத்துள்ளது. மாநிலத்தில் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாமல் வைக்க என்னென்ன செய்ய முடியுமோ அதை கவர்னர் செய்கிறார். அவரது நடவடிக்கையை முறியடித்து கடந்த 4½ ஆண்டுகளாக முதியோர் உதவித்தொகை, ஊனமுற்றோர், விதவைகள் உதவித்தொகை உள்பட பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறோம்.

    மக்களுக்கு இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுத்தால் அதனை தடுத்து நிறுத்துகிறார். புதுவையில் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கி வருகிறோம். இன்சூரன்ஸ் உள்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஆனால் நம் கட்சியினரே நம்மை குறை கூறுகின்றனர். இன்னும் 6 மாத காலத்தில் தேர்தல் வர உள்ளது. நாம் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். அப்போது தான் மதவாத சக்திகளை முறியடிக்க முடியும். புதுவையை தமிழகத்தோடு இணைக்க பா.ஜ.க. நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனை முறியடிக்க, பா.ஜ.க.வை புதுவையை விட்டு விரட்ட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×