என் மலர்
புதுச்சேரி
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மழை ெபய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. புதுச் சேரியில் நேற்று காலை வழக்கம்போல் வெயில் கொளுத்தியது. மாலையில் மேகங்கள் திரண்டு மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. மாலை 4 மணிக்கு லேசான மழை சாரல் பெய்தது. தொடர்ந்து சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டித்தீர்த்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கடற்கரை சாலை, புஸ்சி வீதி, இந்திராகாந்தி சிலை சதுக்கம், பூமியான்பேட்டை, பாவாணர் நகர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் அந்த பகுதியில் சென்ற வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளித்தபடி சென்றன.
சூறை காற்றுடன் மழை பெய்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மழை ஓய்ந்த பிறகு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.
தொடர்மழையால் புதுச்சேரி காந்தி வீதி, திருவள்ளுவர் சாலை, லாஸ்பேட்டை ஆகிய 3 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.
புதுச்சேரியில் நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 7 செ.மீ. மழை பதிவானது. மாலை நேரத்தில் மழை பெய்ததால் புதுச்சேரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் வெளியே செல்ல முடியாமல் விடுதி அறைகளில் முடங்கி கிடந்தனர்.
திருக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்தது. காற்றுடன் கூடிய மழையால் திருக்கனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.
திருபுவனை:
திருபுவனை அருகே கலித்தீர்த்தாள்குப்பத்தில் தனியார் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் விழுப்புரத்தை சேர்ந்த ஏர்லின் பெரோரா (வயது54). ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு அந்த பள்ளியில் படித்து வந்து 5 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனால் அந்த சிறுமி மனதளவில் பாதிக்கப்பட்டதை அறிந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததை தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் திருபுவனை போலீசில் புகார் செய்தனர்.
அப்போது பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் கலை செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் பிரியா ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் ஏர்லின் பெரோராவை கைது செய்து காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
இதன் பின்னர் ஆசிரியர் ஏர்லின் பெரோரா ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்த நிலையில் நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார்.
அப்போது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் ஏர்லின் பெரோராவுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை தொடர்ந்து திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் குமார வேல் மற்றும் குற்றவியல் போலீசார் ஆசிரியர் ஏர்லின் பெரோராவை மீண்டும் கைது செய்து காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சர் கொரோனா நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50 ஆயிரம் வழங்குவதை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படுகிறது. மத்திய அரசு தனியாக ரூ.50 ஆயிரம் வழங்குகிறது.
புதுவையில் 1,847 பேர் இதுவரை கொரோனாவினால் இறந்துள்ளனர். தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது. 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இதுவரை 7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் முதல்கட்ட தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். 2-வது கட்ட தடுப்பூசியை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போட்டுள்ளனர். உயிரிழப்புகளை தடுக்க அனைவரும் தானாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
புதுவையில் தடுப்பூசி தட்டுப்பாடு என்பது இல்லை. அரசிடம் தேவையான அளவுக்கு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.
இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
பேட்டியின்போது அமைச்சர் லட்சுமிநாராயணன், சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு ஆகியோர் உடனிருந்தனர்.
பாகூர் அருகே கீழ் பரிக்கல்பட்டு புளியஞ்சாலை தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவருக்கு கற்பகம் என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
ஆனந்தனுக்கு மது பழக்கம் இருந்து வந்தது. தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவது வழக்கம்.
இதையடுத்து மது பழக்கத்தை மறப்பதற்காக கற்பகம் தனது கணவரை தனது சொந்த ஊரான பண்ருட்டிக்கு அழைத்து சென்று கடந்த 6 மாதமாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவ்வப்போது ஆனந்தன் தாய் வீட்டுக்கு செல்வது வழக்கம்.
அப்போது ஆனந்தன் மது குடிப்பதற்காக ஓரிரு நாள் அங்கேயே தங்கிவிட்டு அதன் பிறகு பண்ருட்டிக்கு செல்வார்.
அது போல் நேற்று முன்தினம் ஆனந்தன் கீழ்பரிக்கல்பட்டில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார். அங்கு மது குடித்து விட்டு இரவு தனது சகோதரரிடம் பேசி விட்டு தூங்க செல்வதாக கூறி சென்றார்.
இந்த நிலையில் நேற்று காலை ஆனந்தன் வீட்டில் வேட்டியால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து அவரது மனைவி கற்பகம் பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரியில் கொரோனாவால் இறந்த குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக வழிகாட்டுதல்களை உருவாக்கி உள்ளது. இந்த நிவாரணத் தொகையானது மாநில பேரிடர் நிதியில் இருந்து மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் வழங்கும்.
மாநில மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் அனைத்து உரிமைக்கோரல்களையும் சமர்ப்பிக்கும் தேவையான விண்ணப்பத்தை தகுந்த ஆவணங்களுடன் சமர்ப்பித்த 30 நாட்களுக்குள் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான விண்ணப்ப வினியோகமும் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக புதுச்சேரி மண்டலத்திற்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் இறப்பு சான்றிதழ் தொடர்பாக கொரோனா இறப்பு கண்டறியும் குழுவும், குறைதீர்க்கும் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவின் உறுப்பினர்களாக கோரிமேடு அரசு மருந்தக தலைவர் ரமேஷ், ஜிப்மர் இணை பேராசிரியர் கவிதா, பேராசிரியர் விவேகானந்தன் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
இதுதொடர்பாக புதுச்சேரி மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் தலைமையில் சப்-கலெக்டர்கள் கந்தசாமி (வடக்கு), ரிஷித்தா குப்தா (தெற்கு), கொரோனா இறப்பு கண்டறியும் குழு உறுப்பினர்கள், சுகாதார மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் நிவாரண தொகை பெறுவதற்கான செயல்முறை, விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் உரிமைக்கோரல்களை தீர்ப்பதற்கான வலுவான மற்றும் எளிமையான நடைமுறை, விண்ணப்பங்கள் சரிபார்ப்பு, இறுதி வினியோகம் பற்றி விவாதிக்கப்பட்டது.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை அந்தந்த தாலுகா அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இறப்பு சான்றிதழ் தொடர்பாக ஏதேனும் குறைகள் இருந்தால் விண்ணப்பதாரர்கள் கோரிமேடு அரசு மருந்தக தலைவர் ரமேஷ் (9443215450), உரிமைகோரல் செயல்முறை தொடர்பான வேறு ஏதேனும் குறைகளுக்கு துணை தாசில்தார் தமிழ்செல்வன் (9442485185) மற்றும் பேரிடம் மேலாண்மை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை புதுச்சேரி மாவட்ட கலெக்டர் பூர்வாகார்க் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தற்போது ஆராய்ச்சியில் உள்ள புதிய கொரோனா தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஜிப்மரில் புதிதாக ஒரு தடுப்பூசி மருத்துவ ஆராய்ச்சி பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு இந்திய அரசின் பயோடெக்னாலஜி துறையின் ஒரு பிரிவான பயோடெக்னாலஜி தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில் தனது மிஷன் கோவிட் சுரக்ஷா திட்டத்தின் மூலம் நிதியுதவி அளிக்கிறது.
தற்போது 6 கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அவசர பயன்பாட்டுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தடுப்பூசிகளை உருவாக்க ஒரு தெளிவான தேவை உள்ளது. இத்தகைய புதிய தடுப்பூசிகள் உலகளாவிய தேவை இடைவெளியை பூர்த்தி செய்ய மட்டுமல்லாமல் அதிக செயல் திறன், குறைவான பக்க விளைவுகள், நீண்ட கால பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் ஒரே ஒரு டோஸ், நாசித்துவாரங்களில் தெளிப்பு அல்லது சொட்டு மருந்து போன்ற மாற்று வழிகள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு போன்ற பல மேம்பட்ட அம்சங்களுக்கும் புதிய தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.
மேலும் எதிர்காலத்தில் கொரோனா ஏற்படுத்தும் வைரசின் மரபணு மாற்றங்களை கொண்ட புதிய வகைகள் வெளிப்படும்போதும் புதிய தடுப்பூசிகள் தேவைப்படலாம். எனவே உலகளவில் புதிய கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. தற்போது 120-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் மருத்துவ ஆராய்ச்சியின் பல்வேறு கட்டங்களில் உள்ளன.
தடுப்பூசிகள் புதிதாக உருவாக்கப்படுவதால் இவை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஜிப்மரில் உள்ள கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி பிரிவு அத்தகைய வளர்ச்சியில் பங்கு வகிக்கும்.
புதிய தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனைகளை விரைவாக நடத்துவதற்கு உதவி செய்ய ஜிப்மரில் உள்ள கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி பிரிவு, புதிய தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனைகளில் பங்கேற்க ஆர்வமுள்ள நபர்களின் தொடர்பு பட்டியலை முன்கூட்டியே தயாரிக்கிறது.
பொதுமக்கள் ஒவ்வொருவரும் புதிய கொரோனா தடுப்பூசிகள் மீதான சோதனைகளில் சேர முன்வந்து நம் நாட்டிற்கும் அதன் குடிமக்களுக்கும் உதவலாம். இதற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது ஏற்கனவே ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட டோஸ் தடுப்பூசிகளை எடுத்துள்ளவர்களும் பங்களிக்க முடியும். ஏனெனில் சில சோதனைகளில் பூஸ்டர் தடுப்பூசிகள் இருக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் இயக்குனர் ராகேஷ் அகர்வால் கூறியுள்ளார்.
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி, உத்தரபிரதேச மாநிலம் லக்கீம்பூரில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில் மத்திய உள்துறை இணை மந்திரி அஜய்மிஸ்ராவின் மகன் மற்றும் ஆதரவாளர்கள் வாகனத்தை ஏற்றி 4 விவசாயிகளை கொன்றனர்.

புதுவையில் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவையில் 3 நம்பர் லாட்டரி, கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்து பாரம்பரியத்தின் பண்டிகைகளில், நவராத்திரி திருவிழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மகிஷாசுரனுடன் 9 நாட்கள் போரிட்ட அம்பாள், பத்தாவது நாளான தசமியன்று வெற்றி பெற்றார். இந்த ஐதீகத்தின்படி, புரட்டாசி மாதம் 9 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படும். 10-வது நாளான தசமி அன்று விஜயதசமி விழா நடைபெறும்.
இந்த நாட்களில் வீடுகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களையும் சுத்தம் செய்து பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நடத்துவார்கள்.
நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வாக, 9 நாட்களிலும் கலை உணர்வு, பக்தி ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி அரங்கேறும்.
தினமும் காலையும், மாலையும் இந்த கொலுவின் முன்பு கோலமிட்டு, விளக்கேற்றி, மலர்கள், படையலிட்டு வழிபாடு நடைபெறும்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியரின் வழிபாடாக இருக்கிறது. முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், இடையில் உள்ள 3 நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்யப்படுகிறது. நவராத்திரி விரதத்தை மேற்கொள்வோருக்கு விரும்பியது ஈடேறும் என்பதும், முப்பெரும் செல்வங்களான கல்வி, செல்வம், வீரத்தை அடைவார்கள் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது.
நவராத்திரி திருவிழா இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இனி வரும் 9 நாட்கள், அதனைத் தொடர்ந்து விஜயதசமி வழிபாடு என அடுத்த 10 நாட்களும் வீடுகளில் விரதம், கொலு வழிபாடு என்று பக்தி பெருக்கெடுத்து ஓட இருக்கிறது.
புதுவை முன்னாள் முதல்-அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான வைத்திலிங்கம், புதுவை கந்தப்பமுதலியார் வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
வைத்திலிங்கம் எம்.பி.க்கு நேற்று முன்தினம் 71-வது பிறந்தநாள். தனது பிறந்த நாளில் புதுவை காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை மட்டும் அவர் சந்தித்தார்.
இந்த நிலையில் நேற்று அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனையில் வைத்திலிங்கத்துக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது மனைவிக்கும் கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும் சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் குழந்தைகள் சிகிச்சை பிரிவை பார்வையிட்டு டெங்கு மேலாண்மை குறித்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு செய்தார். அப்போது சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு மற்றும் டாக்டர்கள் உடனிருந்தனர்.
ஆய்வுக்கு பின்னர் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்போது மழைக்காலம் தொடங்கி இருப்பதால் கொசுக்களால் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பு இருக்கிறது. சில குழந்தைகள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்க மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தேன். டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளைப் பார்த்தேன். அவர்கள் நலமடைந்து வருகிறார்கள்.
டெங்கு பாதித்த குழந்தைகளுக்காக 6 படுக்கைகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தேவைப்பட்டால் இன்னும் அதிகரிக்கப்படும். அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி முழுவதும் கொசு உற்பத்தியைத் தடுக்க பொதுப்பணி, சுகாதாரம் மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் இணைந்து பணி செய்து வருகின்றனர். குப்பைகள் தேங்கவிடாமல் அகற்றப்பட்டு வருகிறது. அதனையும் கண்காணித்து வருகிறேன். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள் கையிருப்பு உள்ளது.
மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் டெங்கு பரவுவதைத் தடுக்க முடியும். பொதுமக்கள் அனைவரும் தயக்கம் இல்லாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும். இன்னும் 3 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி போட வேண்டியுள்ளது. அப்போது நாம் 100 சதவீதம் இலக்கை அடைய முடியும்.
புதுச்சேரியில் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தை பின்பற்றி தான் நாம் பள்ளிகள் திறக்க முடியும். இருப்பினும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனியாக முன் தயாரிப்பு உள்ளது. அந்த முன்னேற்பாடுகள் முடிந்த பிறகு தான் புதுவையில் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மருத்துவமனையின் வெளியில் பொதுமக்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டார்.






