என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தனிமையில் வசித்து வந்த பாஸ்கர் சம்பவத்தன்று குடிபோதையில் ஆற்று வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தது விசாரணையில் தெரியவந்தது.
    புதுச்சேரி:

    மரப்பாலத்தில் இருந்து தேங்காய்திட்டுக்கு செல்லும் சாலையில் உள்ள ஆற்று வாய்க்காலில் நேற்று முன்தினம் ஒரு ஆண் பிணம் மிதந்தது. உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்த முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து ஆற்றில் பிணமாக மிதந்தவர் யார்- எந்த ஊர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ஆற்றில் பிணமாக மிதந்தவர் தேங்காய்திட்டு புதுநகரை சேர்ந்த பாஸ்கர் என்ற இளங்கோ (வயது47) என்பது தெரியவந்தது.

    இவருக்கு திருமணமாகி சிவக்குமாரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கூலி தொழிலாளியான பாஸ்கர் மது குடிக்கும் பழக்கத்தால் அவரை விட்டு அவரது மனைவி குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டார்.

    தனிமையில் வசித்து வந்த பாஸ்கர் சம்பவத்தன்று குடிபோதையில் ஆற்று வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுவை ஆட்டுப்பட்டியில் பேனா கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    புதுச்சேரி:

    புதுவை அந்தோணியார் கோவில் அருகே உள்ள ஆட்டுப்பட்டி மெயின் ரோட்டில் நேற்று இரவு ஒரு வாலிபர் நின்று கொண்டு அவ்வழியே செல்லும் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி பேனா கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி கொண்டு இருந்தார்.

    இதுகுறித்த தகவலின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து பேனா கத்தியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த முனியன் என்பவரின் மகன் அரவிந்த் என்ற சக்திவேல் (24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அரவிந்தை போலீசார் கைது செய்தனர்.
    புதுவை மூலக்குளத்தில் மளிகை கடையில் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம், மளிகை பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை மூலகுளம் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் வசித்து வருபவர் பரமேஸ்வரி.

    இவர் தனது வீட்டின் பக்கத்து தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று ஆயுதபூஜை என்பதால் கடையில் பூஜை செய்து விட்டு இரவு மளிகை கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

    இந்த நிலையில் இன்று காலை மளிகை கடை திறந்து இருப்பதாக அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் பரமேஸ்வரிக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பரமேஸ்வரி பதறியடித்துக்கொண்டு தனது கடைக்கு விரைந்து வந்து பார்த்தார்.

    அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த மளிகை பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    கடையில் வைத்து இருந்த ரூ.1 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 50 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட், அரிசி மூட்டைகள் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் திருடப்பட்டிருந்தது.

    இதனையடுத்து பரமேஸ்வரி திருட்டு சம்பவம் குறித்து ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கோட்டக்குப்பத்தில் பெண்ணை மானபங்கம் செய்த சமையல் தொழிலாளியை கைது செய்த போலீசார் அவரை திண்டிவனம் கிளை சிறையில் அடைத்தனர்.
    சேதராப்பட்டு:

    கோட்டக்குப்பத்தை அடுத்த சின்ன முதலியார் சாவடியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி கஸ்தூரி (வயது 38). கட்டிட வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று கஸ்தூரியை அதே பகுதியை சேர்ந்த திருமண மண்டபங்களுக்கு சமையல் செய்யும் தொழிலாளி வினோத் (24) என்பவர் வழிமறித்து அவரை கீழே தள்ளி மானபங்கம் செய்தார்.

    இதுகுறித்து கஸ்தூரி கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரணை நடத்தி வினோத் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து வினோத்தை கைது செய்தார். பின்னர் அவரை திண்டிவனம் கிளை சிறையில் அடைத்தனர்.
    புதுவையில் சுற்றுலா தலங்களான நோணாங்குப்பம் படகு குழாம், சின்ன வீராம்பாட்டினம் கடற்கரை, பாண்டி மெரினா கடற்கரை ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்திருந்தனர்.
    புதுச்சேரி:

    நவராத்திரி பண்டிகையை யொட்டி நாடு முழுவதும் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று முதல் 19-ந் தேதி வரை ஒரு வாரத்துக்கு விடுமுறை உள்ளது. இதனால் அண்டை மாநிலங்களான கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழகத்திலிருந்து சுற்றுலா பயணிகள் புதுவையில் குவிந்துள்ளனர்.

    ஆயுதபூஜை முடிந்தவுடன் நேற்று மாலையிலிருந்து புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. நகர பகுதியில் சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. கடற்கரை சாலையில் அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடற்கரை மணல்பரப்பில் விளையாடியும், குளித்தும் மகிழ்ந்தனர்.

    இதேபோல சுற்றுலா தலங்களான நோணாங்குப்பம் படகு குழாம், சின்ன வீராம்பாட்டினம் கடற்கரை, பாண்டி மெரினா கடற்கரை ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்திருந்தனர். விடுதிகள், ஓட்டல்கள் நிரம்பி வழிந்தன.


    புதுவையில் 2-வது தவணை உட்பட 10 லட்சத்து 66 ஆயிரத்து 479 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் 2-வது தவணை உட்பட 10 லட்சத்து 66 ஆயிரத்து 479 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    புதுவையில் நேற்று 3 ஆயிரத்து 256 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    புதிதாக 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 33, காரைக்காலில் 2, மாகியில் 2 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையில் 75, காரைக்காலில் 10, ஏனாமில் 5, மாகியில் 9 பேர் என 99 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 46, காரைக்காலில் 23, மாகியில் 4 பேர் என 73 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 296 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 836 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    புதுவையில் 328, காரைக்காலில் 134, ஏனாமில் 9, மாகியில் 41 பேர் என 512 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    புதுவை மாநிலத்தில் இப்போது 611 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 849 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை உட்பட 10 லட்சத்து 66 ஆயிரத்து 479 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    புதுவையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது.

    வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. பொதுத்தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

    கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தொற்று குறைந்ததால் செப்டம்பர் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் தடுப்பூசி, விழிப்புணர்வு காரணமாக புதுவையில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது.

    தமிழகத்தில் வருகிற நவம்பர் 1-ந் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

    புதுவையை பொறுத்தவரை தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றி வருகின்றனர். இதனால் புதுவையில் பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறை செயலாளர் அசோக்குமார், இயக்குனர் ருத்ரகவுடு ஆகியோருடன் தனது அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

    புதுவையில் பள்ளிகளை திறக்க வேண்டிய அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் நவம்பர் முதல் வாரத்தில் புதுவை விடுதலை நாள், கல்லறை திருநாள், தீபாவளி பண்டிகை அடுத்தடுத்து வருவதால் நவம்பர் 8-ந் தேதி (திங்கட்கிழமை) பள்ளிகளை திறக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. பள்ளிகள் திறப்புக்காக கொரோனா வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட உள்ளது.

    இதைத் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
    கொடநாடு கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று புகழேந்தி வலியுறுத்தி உள்ளார்.
    புதுச்சேரி:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி புதுவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. ஒட்டுமொத்தமாக தோல்வியடைந்து விட்டது. அ.தி.மு.க.வை நினைக்கும்போது வேதனையாக உள்ளது.

    சட்டசபை தேர்தலில் பழனிசாமி பிரசாரம் செய்து தோல்வியடைந்ததுபோல உள்ளாட்சி தேர்தலிலும் தோல்வியடைந்துள்ளது. பழனிசாமி கட்சியை விட்டு போனால்தான் அ.தி.மு.க.வை காப்பாற்ற முடியும். அவரை நீக்காவிட்டால் தமிழகம் முழுவதும் தொண்டர்களின் போராட்டம் வெடிக்கும். அ.தி.மு.க.வுக்கு புதிய தலைமை வேண்டும். சசிகலாவை அரவணைத்து சேர்க்க வேண்டும்.

    கொடநாடு கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். புதுவையில் அ.தி.மு.க. ஜீரோவுக்கு வந்துவிட்டது. இதே நிலை தமிழகத்துக்கும் வரும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    புதுவை அருகே பழிக்குப்பழியாக அரசு ஊழியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    சேதராப்பட்டு:

    புதுவை காமராஜர் நகர் கட்டபொம்மன் வீதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 52).

    இவர் புதுவை கோரிமேடு அருகே உள்ள தமிழக பகுதியான திருநகரில் குடிநீர் தொட்டி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.

    ஆயுத பூஜையையொட்டி நேற்று இரவு மணிவண்ணன் தான் பணிபுரியும் தண்ணீர் தொட்டிக்கு வந்து பூஜையில் பங்கேற்றார். அப்போது ஒரு கும்பல் அவரை சுற்றி வளைத்தது.

    இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மணிவண்ணன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அவரை வழிமறித்த அக்கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டியது.

    அங்கிருந்த ஒரு வீட்டுக்குள் நுழைய முயன்ற மணிவண்ணனை அக்கும்பல் தலையில் பயங்கரமாக வெட்டி சிதைத்தது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அதன்பிறகு அக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

    இதுகுறித்து ஆரோவில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. அருண், இன்ஸ்பெக்டர் அன்பரசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் மணிவண்ணன் உடலை பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மணிவண்ணன் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அங்கு திரண்டு வந்தனர்.

    இதுகுறித்து மணிவண்ணன் மனைவி வள்ளி ஆரோவில் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அப்போது கொலைக்கான காரணம் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. அதன் விவரம் வருமாறு:-

    கடந்த ஆண்டு செப்டம் பர் 30-ந்தேதி புதுவை மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்தில் நடைபயிற்சி சென்ற கோரிமேடு காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சுந்தர் என்கிற மாந்தோப்பு சுந்தர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் தற்போது கொலை செய்யப்பட்ட மணிவண்ணனின் மகன்கள் சுந்தர், வினோத் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

    இவர்களை பழிவாங்க எதிரிகள் நோட்டமிட்டு வந்தனர். இதை அறிந்த இருவரும் தலைமறைவாகி விட்டனர். கடந்த மாதம் 30-ந் தேதி மாந்தோப்பு சுந்தரின் நினைவு நாள் வந்தது.

    அப்போது சுந்தர், வினோத்தை கொலை செய்ய எதிரிகள் திட்டம் தீட்டி இருந்தனர். ஆனால் இருவரும் ஊருக்குள் நுழைய கோரிமேடு போலீசார் தடை உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

    இதனால் எதிரிகளின் திட்டம் தோல்வியில் முடிந்தது. இதனை தொடர்ந்து சுந்தர், வினோத்துக்கு பதிலாக அவர்களது தந்தை மணிவண்ணனை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    மணிவண்ணன் கொலை தொடர்பாக மாந்தோப்பு சுந்தரின் மனைவி செல்வி, அவரது மகன் ஜோஸ்வா மற்றும் மது, பாஸ்கர், ஆனந்தராஜ், சரணன், புத்தர், முருகன் என்ற வெட்டு முருகன் ஆகிய 8 பேர் மீது மணிவண்ணன் மனைவி புகார் அளித்தார்.

    கொலையாளிகளை பிடிக்க சென்னையில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மாந்தோப்பு சுந்தரின் ஆதரவாளர்கள் 3 பேர் போலீசில் சிக்கியதாகவும் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

    மணிவண்ணன் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து புதுவை, தமிழக பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

    புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், சிறப்பு அதிரடிப்படை போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் ஆகியோர் தலைமையில் புதுவை போலீசாரும், கோட்டக்குப்பம், ஆரோவில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    சொந்த ஊர் சென்று வருவதற்கு வசதியாக புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    ஆயுத பூஜையை முன்னிட்டு (வியாழக்கிழமை) அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுவை அரசு பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி, காரைக்கால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விஜயதசமியை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) , நாளை மறுநாள் (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது.
    ஆயுத பூஜையையொட்டி குபேர் மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுத பூஜை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. உழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த நாளில் தொழிலாளர்கள் தங்கள் உபகரணங்களை பூஜையிட்டு வழிபடுவார்கள். அந்த வகையில் வீடுகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் ஆயுத பூஜை உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    இதையொட்டி நேற்று குபேர் மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதாவது கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.200-க்கு விற்ற மல்லிகை தற்போது 700-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ரூ.250 விற்ற முல்லை ரூ.450-க்கும், ரூ.150 விற்ற கனகாம்பரம் ரூ.250-க்கும், ரூ.150-க்கு விற்ற பன்னீர் ரோஜா ரூ.240-க்கும் விற்பனை ஆனது. இன்று (புதன்கிழமை) பூக்கள் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.
    புதுவை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
    புதுச்சேரி:

    புதுவையில் 3 கட்டமாக உள்ளாட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

    புதுச்சேரி நகராட்சிக்கு பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்ட அலுவலகங்களிலும், உழவர்கரை நகராட்சிக்கு காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் அமைக்கப்பட்ட அலுவலகங்களிலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அங்கு தயார் நிலையில் இருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    தேர்தலில் போட்டியிட விரும்பி சிலர் மட்டுமே அலுவலகங்களுக்கு வந்து வேட்புமனுக்களை வாங்கிச் சென்றனர். முக்கிய அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் யாரும் வரவில்லை. அதேபோல் வேட்புமனு தாக்கல் செய்யவும் யாரும் வரவில்லை. இதனால் வேட்புமனு தாக்கல் நடக்கும் இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

    உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளருமான சிவா எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கில் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து மற்றவர்களும் மனுக்கள் வாங்குவதை நிறுத்திக்கொண்டனர்.
    ×