என் மலர்tooltip icon

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருகே ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி பசும்பொன் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன்.

    இவர் தனது தந்தை இறந்த நிலையில் அவரின் பெயரில் உள்ள காலி இடத்தை தனது பெயரில் மாற்றுவதற்காக பட்டா கோரி வ.புதுப்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் பட்டா வழங்காமல் அவரை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு பணியாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலரான சிவராமலிங்கம் (வயது 51) பட்டா வழங்குவதற்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. அனைத்து சான்றிதழ்களும் சரியாக இருந்தும் பட்டா வழங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டதால் மகேந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத அவர் இது தொடர்பாக விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின்படி ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகள் 3 ஆயிரத்தை வ.புதுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சிவராமலிங்கத்திடம், மகேந்திரன் கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலரை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 2-ம் கட்டமாக 6 கிராமங்களில் அம்மா மினி கிளினிக்குகளை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே சங்கரலிங்கபுரம், ராமலிங்கபுரம் அருப்புக்கோட்டை அருகே குருந்தமடம் ஆகிய கிராமங்களில் அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்து அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொது சுகாதாரத்திற்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வறுமையில் இருப்பவர்கள் எந்த அளவிற்கு வாழ்வாதாரம் இழந்து சிரமப்படுவார்கள் என்பதை எண்ணி அதற்கான திட்டங்களை வழங்கி வருகிறார்.

    கிராமங்களில் உள்ள அடித்தட்டு மக்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வருகிறார். இம்மாவட்டத்தில் முதல் கட்டமாக 20 இடங்களில் அம்மா கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    தற்போது சங்கரலிங்கபுரம், ராமலிங்கபுரம், குறும்படம், செட்டிகுறிச்சி, அருப்புக்கோட்டையில் 3-வது வார்டு, திருச்சுழியில் வெள்ளையாபுரம் என 6 இடங்களில் மினி கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள இடங்களிலும் படிப்படியாக இந்த வசதி செய்து தரப்படும். பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பொங்கல் தொகுப்பு மற்றும் பரிசு தொகை ரூ.2500 வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழக மக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் வாழ வேண்டுமென்பதே ஜெயலலிதாவின் எண்ணமாகும். அதே வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனைத் தொடர்ந்து சிகிச்சை முறைகளை பார்வையிட்ட அமைச்சர் 7 கர்ப்பிணிகளுக்கு அம்மா தாய் சேய் நல பெட்டகங்களையும், 12 கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு நிதியுதவியையும் வழங்கினார்.

    நிகழ்ச்சிகளில் மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் விஜயகுமரன், மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜசேகர், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், தர்மலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சருக்கு கிராம மக்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.
    சாத்தூர் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தூர்:

    சாத்தூர் டவுன் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராஹீம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாத்தூர் அருகே வீரபாண்டியாபுரம் பஸ் ஸ்டாப் பின்புறம் வைத்து மதுபாட்டில் விற்று கொண்டிருந்த சாத்தூரை சேர்ந்த முத்துராஜ் (வயது36) என்பவரிடம் இருந்து 8 மதுபாட்டில்களும், சாத்தூர் நகராட்சி ஆட்டுசந்தை அருகே மதுபாட்டில் விற்ற வெம்பக்கோட்டையை சேர்ந்த ஜெயராமன் (52) அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
    விருதுநகரில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.
    விருதுநகர்:

    விருதுநகர் உள்ளரங்கு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் ராமமூர்த்தி ரோடு, அம்பேத்கர் தெரு, கஸ்தூரிபாய் ரோடு, ரோசல்பட்டி ரோடு, கம்மாபட்டி, சத்தியமூர்த்தி தெரு, பாண்டியன் நகர், பட்டேல் ரோடு, ஏ.ஏ. ரோடு, பேராளி ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி, அழகர் சாமி தெரு, தந்தி மரத்தெரு, சாஸ்திரி நகர், ரெயில்வே பீடர் ரோடு, மெயின் பஜாரில் தெப்பம் வரை, காசுக்கடை தெரு, காந்திபுரம் தெரு ஆகிய பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என என்ஜினியர் அகிலாண்டேஸ்வரி கூறினார். 

    அதேபோல மல்லாங்கிணறு துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் மல்லாங்கிணறு, வலையங்குளம், நந்தி குண்டு, மேல துலுக்கன்குளம், அழகியநல்லூர், கெப்பிலிங்கம்பட்டி, வில்லிபத்திரி, நாகம்பட்டி, வழுக்கலொட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம்நிறுத்தப்படும் என மின்வாரிய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே இன்று காலை மினி பஸ் கவிழ்ந்த விபத்தில் மில் தொழிலாளர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள செல்லையாபுரம், ரெங்கையன்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் திருச்சுழி, அருப்புக்கோட்டை, பந்தல் குடி பகுதிகளில் உள்ள நூற்பாலைகளில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்களை தினமும் அழைத்துச் செல்ல நூற்பாலைகளில் இருந்து மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று காலை திருச்சுழி பகுதியில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கெண்டு மினி பஸ் புறப்பட்டது. மாயூர்நாதம் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி பஸ்சை ஓட்டினார்.

    திருச்சுழி-கமுதி ரோட்டில் உள்ள பனையூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் மினி பஸ் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    மினி பஸ்சில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர். உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து வந்து பஸ்சில் சிக்கியவர்களை மீட்டனர்.

    இந்த விபத்தில் செல்லையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மில் தொழிலாளிகள் பூசையா (வயது 29), ஸ்ரீகாந்த் (18) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    பஸ்சில் பயணம் செய்த வினிதா (21), பாக்கியசெல்வி (25), காந்திமதி (50), சூரம்மாள் (25), விஜயகாந்த் (30), சத்தியராஜ் (35), மாதவன் (18), சின்னக்காள் (30) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இவர்கள் திருச்சுழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி பகுதிகளில் உள்ள நூற் பாலைகளில் இருந்து இயக்கப்படும் மினி பஸ்கள் சாலை விதிகளை பின்பற்றுவதில்லை என்றும், அதிவேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    எனவே போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து நூற்பாலை மினி பஸ்களை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    சாத்தூர் அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தூர்:

    சாத்தூர் அமீர்பாளையம் மற்றும் பூங்கா பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராஹீம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாத்தூர் பைபாஸ் ரோட்டில் உள்ள நகராட்சி பூங்கா அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 3 நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த வீரபாஸ்கர் (வயது22) , பொன்ராஜ் (30) மற்றும் சாத்தூர் அருகே சடையம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சாவை சாத்தூர் டவுன் போலீசார் பறிமுதல் செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
    சிவகாசி அருகே இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டியை சேர்ந்தவர் சுவர்ணலட்சுமி (வயது 26). இவர் சிவகாசி சேர்மன் அருணாசலம் ரோட்டில் உள்ள ரஜித்பாலாஜியிடம் ரூ.2 லட்சம் முன்பணம் கொடுத்து பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் தனக்கு மேலும் ரூ.1 லட்சம் பணம் வேண்டும் என்று ரஜித்பாலாஜி கேட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.. ஆத்திரம் அடைந்த ரஜித்பாலாஜி, சுவர்ணலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுவர்ண லட்சுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாட்கோ திட்டம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
    விருதுநகர்:

    தாட்கோ திட்டம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நடப்பு வருட அரசாணையில் தாட்கோ மூலம் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.42 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதேபோன்று பயனாளிகளின் தகுதிக்கு ஏற்பவும், தேர்வு செய்யப்படும் திட்டத்திற்கு ஏற்பவும், திட்ட தொகையை வங்கிகள் அதிகப்படுத்தி கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதிகபட்சமாக தாட்கோ மானியம் வழங்குவதற்கு திட்டத்தொகையில் உச்சவரம்பு ரூ.7½ லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டு, அதிகபட்சமாக ரூ.2½ லட்சம் வரை மானியத்துடன் வங்கி கடன் வழங்க பரிந்துரைக்கப்படுகிறது.

    பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தில் நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டு திட்டம், துரித மின் இணைப்பு திட்டம், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத்திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடனுதவியில் ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டம், கலெக்டரின் விருப்புரிமை நிதி, தாட்கோ தலைவரின் விருப்புரிமை ஆகியவற்றின் கீழ் ரூ.50 ஆயிரம் வழங்குதல், இந்திய குடியுரிமைப்பணி தமிழ்நாடு தேர்வாணையத்தின் முதல் தகுதி தேர்வு எழுதுவதற்காக ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்குதல், சட்ட பட்டதாரிகள், பட்டயக்கணக்கர், செலவு கணக்கர், நிறுவனச்செயலர் ஆகியோருக்கு அலுவலகம் அமைக்க ரூ. 50 ஆயிரம் நிதி உதவி ஆகியவை வழங்கப்பட உள்ளது.

    மேற்கண்ட அனைத்து திட்டங்களுக்கும் விண்ணப்பதாரர் முகவரி, சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்ட நாள், வழங்கப்படுவதற்கான காரணம் மற்றும் திட்ட அறிக்கை, பட்டா விண்ணப்பதாரர் மின்னஞ்சல் முகவரி ஆகிய ஆவணங்கள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

    தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி இல்லாதவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் தவிர திட்டங்களுக்கு ஏற்றாற்போல தேவைப்படும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களை இணையதளத்தில் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்ட பின்பு விண்ணப்பதாரர்களுக்கு ஒப்புகை ரசீது வழங்கப்படும். இதற்காக விண்ணப்பம் ஒன்றிற்கு பயனாளிகளிடம் இருந்து ரூ.60 கட்டணமாக வசூலிக்கப்படும்.

    விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்தோ, நகலினையோ, கைப்பிரதி விண்ணப்பங்களையோ சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சிவகாசி அருகே மது விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி உட்கோட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை செய்தனர். இதில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அழகர்சாமி (வயது 38), முனியாண்டி (59), முருகன் (33), மாரிமுத்து (52), பழனிமுருகன் (33) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    “திமுக ஆட்சி அமைந்ததும் பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளையும் ஸ்டாலின் தீர்த்து வைப்பார்” என்று கனிமொழி எம்.பி. பேசினார்.
    சிவகாசி:

    தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், அக்கட்சி நாடாளுமன்ற குழு துணை தலைவருமான கனிமொழி எம்.பி. நேற்று சிவகாசியில் நடந்த ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையொட்டி சிவகாசி பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் பட்டாசு உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பட்டாசு தொழில் அதிபர்கள் ராஜசேகர், ஆசைத்தம்பி, அரசன் கணேஷ்குமார், ராஜேஷ், விநாயக மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது பட்டாசு தொழிலை காக்கவும், பட்டாசுகளை வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்யவும், நீரி அமைப்பை கலைக்க மத்திய அரசை வலியுறுத்தவும் கோரிக்கை வைத்தனர்.

    இதற்கு பதில் அளித்து கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முடிவில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது. நாடு முழுவதும் 1 கோடி பேர் பட்டாசு தொழிலை நம்பி இருக்கிறார்கள். சிலர் அவசரமாக எடுத்த முடிவுகளால் இந்த தொழில் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சீனபட்டாசு கள்ளத்தனமாக விற்பனை செய்தபோது அதை தடுக்க நானும் கையெழுத்திட்டேன். பட்டாசு தொழிலுக்கு பிரச்சினை வரும் போதெல்லாம் அதற்கு தீர்வு காண நாடாளுமன்றத்தில் தி.மு.க. குரல் கொடுத்துள்ளது. பசுமை பட்டாசு குறித்து இன்னும் தெளிவான முடிவுகளை நீரி அமைப்பு அறிவிக்கவில்லை.

    பட்டாசு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவேன். தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து பட்டாசு கொண்டு செல்ல ஏற்பாடு செய்வேன். இன்னும் 4 மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட போகிறது. தி.மு.க. ஆட்சி அமைக்கும். அப்போது பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளையும் ஸ்டாலின் தீர்த்து வைப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். திருத்தங்கலில் உள்ள ஒரு மண்டபத்தில் பட்டாசு தொழிலாளர்களுடன் கனிமொழி கலந்துரையாடினார்.

    அப்போது, “கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் அப்போது மக்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் இப்போது பொங்கல் பரிசாக ரூ.2,500 கொடுப்போம் என அறிவித்து இருக்கிறார்கள். இவர்கள் ரூ.20 ஆயிரம் கொடுத்தாலும் இந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற முடியாது” என்று கூறினார்.

    பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    பட்டாசு தொழில் பிரச்சினை குறித்து மத்திய அரசிடம் கூட தமிழக அரசு பேசவில்லை. பட்டாசு தொழிலை பாதுகாக்க மு.க.ஸ்டாலின் தான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். எனது சுற்றுப்பயணத்தின்போது நான் அதிக அளவில் மக்களை சந்தித்து வருகிறேன். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். இந்தியா ஜனநாயக நாடு. இங்கு யார் வேண்டும் என்றாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அதை பற்றி நான் கருத்து சொல்ல முடியாது. யார் கட்சி ஆரம்பித்தாலும் தி.மு.க.வுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. இந்த பகுதியில் ஒரு ரெயில்வே பாலம் அமைக்க 10 வருடமாக இப்பகுதி மக்கள் போராடுகிறார்கள். முதல்-அமைச்சர் அடிக்கல் நாயகனாகத்தான் இருக்கிறார். அவரால் எந்த திட்டமும் கொண்டுவரமுடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சர்க்கரை ரே‌‌ஷன் கார்டுகளை, அரிசி கார்டுகளாக மாற்றுவதற்கான கால அவகாசத்தினை நீட்டித்து தரவேண்டும் என தமிழக அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    தமிழகத்தில் அனைத்து குடும்பத்தினரும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு ரே‌‌ஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

    இதில் அரிசி ரே‌‌ஷன் கார்டுகள் மற்றும் சர்க்கரை ரே‌‌ஷன் கார்டுகள் என தற்போது பயன்பாட்டில் உள்ளது. அரிசி ரே‌‌ஷன் கார்டு பெற்றவர்கள் அனைத்து அத்தியாவசிய பொருட்களை கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.

    மேலும் அரசு வழங்கும் உதவித்தொகையையும் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது.

    சர்க்கரை கார்டு பெற்றவர்கள் அரிசி உள்ளிட்ட இதர அத்தியாவசிய பொருட்களை வாங்க இயலாது. சர்க்கரை மட்டும் கூடுதலாக இவர்களுக்கு வழங்கப்படும். தற்போது தமிழக அரசு பொங்கல் பரிசாக அனைத்து ரே‌‌ஷன் கடைகளுக்கும் ரூ.2,500 வழங்க உத்தரவிட்டுள்ளது.

    இதனுடன் பொங்கல் தொகுப்பு பொருள்களும் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

    இந்தநிலையில் சர்க்கரை கார்டுகளை, அரிசி கார்டுகளாக மாற்றி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பெரும்பாலான சர்க்கரை ரே‌‌ஷன் கார்டுதாரர்கள், தங்கள் ரே‌‌ஷன் கார்டுகளை அரிசி ரே‌‌ஷன் கார்டுகளாக மாற்றுவதற்கு வாய்ப்பில்லாமல் போய் விட்ட நிலையில் அவர்களும் தங்கள் காடுகளை அரிசி ரே‌‌ஷன் கார்டுகள் ஆக மாற்றி பெறுவதற்கு கால அவகாசம் இல்லாத நிலை உள்ளது.

    மேலும் தற்போது பொங்கல் பரிசு அனைத்து ரே‌‌ஷன் கார்டுகளுக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும், இனிவரும் காலங்களில் அரசு வழங்கும் உதவிகளை முழுமையாக பெறுவதற்கு அரிசி ரே‌‌ஷன் கார்டுகள் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டு விட்ட நிலையில் அனைத்து சர்க்கரை ரே‌‌ஷன் கார்டுகளும், அரிசி ரே‌‌ஷன் கார்டுகளாக மாற்றி பெறுவதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.

    எனவே தமிழக அரசு சர்க்கரை ரே‌‌ஷன் கார்டுதாரர்கள் அனைவரும் தங்கள் கார்டுகளை அரிசி ரே‌‌ஷன் கார்டுகள் ஆக மாற்றிக்கொள்ள கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

    ஆன்லைன் மூலமும், நேரடியாகவும், இதற்கான வாய்ப்புகளை தர வேண்டியது அவசியமாகும்.

    சிவகாசி அருகே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த 27 வியாபாரிகளுக்கு ரூ.22 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    சிவகாசி:

    சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருட்களை விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் நகராட்சி நிர்வாகம் தடை விதித்து அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறது.

    அதேபோல விற்பனை செய்பவர்கள் மீதும், பயன்படுத்தும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து அபராதம் வசூலித்து வருகிறது.

    இந்தநிலையில் சிவகாசி நகராட்சி பொறுப்பு ஆணையாளர் முத்துசெல்வம் தலைமையில் சுகாதார அலுவலர் பேச்சிமுத்து, ஆய்வாளர்கள் சிவக்குமார், சுரேஷ்குமார் ஆகியோர், மேற்பார்வையாளர் முத்துராஜ் அடங்கிய குழுவினர் நகரின் பல்வேறு பகுதியில் திடீர் சோதனை செய்தனர்.

    இதில் 27 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதும், பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த வியாபாரிகள் 27 பேரிடம் இருந்து ரூ.22 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    ×